ஒத்தையா... ரெட்டையா..?



டெல்லியில் பொல்யூஷனைக் கட்டுப்படுத்த புது ரூல் போட்டாச்சு. ஒற்றைப்படை தேதியுள்ள நாட்களில் ஒற்றைப்படை எண்ணுள்ள வண்டிகள் மட்டுமே சாலையில் செல்ல வேண்டும்; இரட்டைப்படை தேதிகளில் இரட்டைப்படை எண்ணுள்ள வண்டிகள் மட்டுமே சாலைகளில் செல்ல வேண்டும். ஒரு ரூல் போட்டா இன்னொரு ரூலைப் பற்றி யோசிக்காமல் இருப்பது ரூல்படி தப்பு. இந்த மாதிரி விநோத ரூல்ஸ் வேறு என்னென்ன போடலாம்? டிப்ஸ்கள் இதோ...

ஏங்க, ரெட்டைப்படையில ஆரம்பிக்கிற ஆறு டிஜிட் நம்பர்ல பில் வந்தா பரிசுக் கூப்பன் தர்றாங்களாம். எங்க அம்மா வீட்டுக்கு ஒரு யூ.எச்.டி டி.வி வாங்கலாமா?புத்தாண்டு விற்பனையில் கையில் பணம் இல்லாமல், கடைகளில் அலைமோதும் கூட்டத்தைக் கட்டுப்படுத்த...

ஒற்றைப்படை ஆண்டு துவங்கும்போது, இரட்டைப்படை நாட்களில் பிறந்தவர்கள் மட்டும்தான் கடைகளில் நுழையலாம். மற்றவர்களுக்கு இரட்டைப்படை ஆண்டில்தான் வாய்ப்பு என ரூல் போடலாம். ஆண்டின் கூட்டுத் தொகையைத்தான் கணக்கில் எடுக்க வேண்டும் என்று வழக்குகள் நீதிமன்றங்களில் குவியும். இதனால், வழக்கறிஞர்களின் வருமானமும் பெருகும்.

இந்த ‘பீப்’க்கு எதிராவும் மகளிர் சங்கம் மூலமா போராட்டம் நடத்திட வேண்டியதுதான்!

ஒரே சமத்தில் ஏகப்பட்ட கால்களால் ஏற்படும் டிரா ஃபிக் ஜாம்தான் கால் டிராப்புக்குக் காரணம் என்று செல்போன் கம்பெனிகள் அலறுவதால், கால்களை கட்டுப்படுத்த...

ஒற்றைப்படை நாட்களில், இரட்டைப்படை எண்களிலிருந்து, இரட்டைப்படை எண்களுக்கு மட்டும்தான் பேச முடியும் என்ற குழப்படி ரூல் போட்டால், ‘ரூல் என்ன சொல்லுது’ என புரியாமல் மக்கள் தலையைப் பிய்த்துக்கொள்ள ஆரம்பிப்பார்கள். அந்த டயத்தில், பேசுவது கொஞ்சமாவது குறையும். ரூல் புரியத் துவங்கியவுடன், அவரவரும் ஒற்றைப்படை, இரட்டைப்படை, மூன்றாம்படை என்று பல எண்களில் செல்போன் நம்பர்களை வாங்கிக் குவிப்பார்கள், இதனால், செல்போன் வியாபாரமும் எகிறும்; செல்போன் கம்பெனிகளின் வியாபாரமும் பெருகும்.

தலைவர் ஏற்கனவே நியூமராலஜிக்காக பேரை மாத்திக்கிட்டுத்தான் தேர்தல்ல நிக்கறார். ‘தோத்துட்டா பேரை மாத்திக்கறேன்’னு அதுல என்ன சவடால்?

தி.நகர், ரங்கநாதன் தெரு போன்ற பகுதிகளில் தினசரி கூட்டத்தை குறைக்க...

தேர்தலில் ஒரு தொகுதியில் ஏகப்பட்ட வேட்பாளர்கள் மனு செய்து, வேட்பாளர் ஜாம் ஏற்படுவதைக் குறைக்க...

வோட்டர் ஐ.டியின் கூட்டுத்தொகை ஒற்றைப்படையில் முடியும் எண்ணுக்குரியவர்கள் 11, 1, 3, 5 மணி போன்ற ஒற்றைப்படை நேரங்களில் மட்டும்தான் இந்தப் பகுதிகளில் நுழைந்து, அடுத்த ஒரு மணி நேரத்தில் வெளியேற வேண்டும். ஒவ்வொருவர் முதுகிலும், அவரவர் நுழைவு நேர ஸ்டிக்கர் ஒட்டப்படும். ஒரு மணி நேரம் முடிந்ததும், ஸ்டிக்கரிலிருந்து பீப் சவுண்டு ஒலித்து, அது போலீஸ் கண்ட்ரோல் ரூமில் எதிரொலிக்கும். ரூல் மீறியவர்களை கைது செய்து ஃபைன் போட சந்து பொந்துகளில் போலீஸ்காரர்கள் மறைந்து நிற்பார்கள். வழக்கம் போல், ரூலை மீறும் எவருக்கும் அரசாங்கத்துக்கு ஃபைன் கட்ட மனசு வராது.   இதனால், மாமூல் வருமானம் பெருகும்.

தொகுதியின் கூட்டு எண்ணையும், வேட்பாளர் பெயரின் கூட்டு எண்ணையும், நியூமராலஜிப்படி கணக்கிட்டு, அதற்கான சர்டிஃபிகேட்டை அரசாங்க அங்கீகாரம் பெற்ற ஜோசியர்கள் வழங்க வேண்டும்.  ஒற்றைப்படை வேட்பாளர்கள்தான், இரட்டைப்படை தொகுதிக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று ரூல்ஸ் போட்டால், வேட்பாளர் ஜாம் குறைந்து, ஜோசியர்களுக்கு வருமானம் பெருகும்.

இது எந்தப் படை நம்பர்னு யாருக்கும் தெரியாது மேம்... தடையில்லாம பேசலாம்!

குடும்பங்களில் சண்டை சச்சரவுகளை குறைக்க...

இதுக்கு ஒற்றைப்படை, இரட்டைப்படையெல்லாம் வேலைக்கு ஆகாதுங்க. மனைவியிடம் வெளிப்படையாய் எதையும் உளறி வைக்கக் கூடாது என்ற அடிப்படை ரூலை கணவர்கள் ஃபாலோ செய்தாலே போதும்!             

எஸ்.ராமன்
ஓவியங்கள்: ஹரன்