அப்பா-மகன் உறவு... அத்தனை அழகு!



அற்புதம் நடத்துகிற லைட்டிங்கில் அழகு ததும்புகிறது அந்த ஸ்டில்களில். ஃபெஸ்டிவல் புன்னகையும், அசத்தல் காஸ்டியூமுமாக பின்னியெடுக்கிற ‘லுக்’கில் உதயநிதி ஸ்டாலின்... மேஜிக் கண்கள், மர்மப் புன்னகை எனப் பார்ப்பவரை அடிமைப்படுத்தும் அழகில் எமி ஜாக்ஸன். ‘கெத்து’ படத்தின் பிரத்யேக புகைப்படங்கள் இவை. இதோ பொங்கலுக்கு களமிறங்க ‘கெத்தாக’ ரெடியாகி இருக்கிறார் உதயநிதி.

‘‘முருகதாஸ் ஒரு நாள் கூப்பிட்டு ‘திருக்குமரன் நல்ல ஸ்கிரிப்ட் வச்சிருக்கார். ரொம்ப நல்லா வந்திருக்கு. நீங்க செய்தா நல்லா இருக்கும்னு நம்புறேன்’னு சொன்னார். ‘மான் கராத்தே’ படம் கூட எனக்குத்தான் முதலில் வந்தது. ரொம்ப ஃபேன்டஸியா இருக்கேனு நான் நோ சொல்லிட்டேன். இப்ப பார்த்தால், திருக்குமரன் ஸ்கிரிப்ட்டில் ஆக்‌ஷன் ரொம்ப இருந்தது. காமெடியை சார்ந்தே இருக்கிற எனக்கு இது செட்டாகுமானு தெரியலை.

முருகதாஸ் ஒரு வாரம் ஸ்கிரிப்ட்டில் உட்கார்ந்தார். விஷயங்கள் தெளிவாக ஆரம்பித்தன. ஹாரிஸ் கதை கேட்டுட்டு, ‘ரொம்ப நல்லாயிருக்கு. உங்களுக்கு சரியா வரும்’னு சொன்னார். சத்யராஜ் சாருக்கும் கதை பிடிச்சிருந்தது. ‘கெத்து’னு டைட்டில் அவருக்குப் பிடிச்சுப் போச்சு. போய் விசாரிச்சா, ஒளிப்பதிவாளர் கோபிநாத் இந்த டைட்டிலை பதிவு செய்து வச்சிருந்தார். அதனால் ‘தெறி’ என டைட்டிலை மாத்திக்கறதா இருந்தோம். பதிவு கூட செய்துட்டோம். கடைசியில் கோபிநாத் சாரே எங்களுக்கு ‘கெத்து’ டைட்டிலை மனமுவந்து கொடுத்தார்!’’
‘‘ ‘கெத்து’ன்னா..?’’

‘‘இது சத்யராஜ் சாருக்கான டைட்டில். ஊரில் என்ன பிரச்னைன்னாலும் தானா முன்வந்து நின்னு, பிரச்னைகளை எதிர்கொண்டு தீர்த்து வைப்பார். மகனாகிய நான் எந்தப் பிரச்னைக்கும் போகாம ‘தானுண்டு... தன் வேலையுண்டு’னு இருக்கிறவன். இவங்க ரெண்டு பேரும் சேர்ந்தே ஒரு பிரச்னையில் மாட்டிக்கொள்கிறார்கள். நான் எப்படி அந்தச் சிக்கலில் இருந்து ஃபேமிலியை மீட்டெடுக்கிறேன் என்பதுதான் கதை.

முதன்முறையா ஆக்‌ஷன் த்ரில்லரில் நடிக்கிற அனுபவம் வந்திருக்கு. இதுவரை சிட்டி, கோயிலுக்கு வெளியே, பைக்கில் உட்கார்ந்துக்கிட்டு, பாரில் உட்கார்ந்து என காமெடி பண்ணியாச்சு. அடுத்த கட்டமும் போக வேண்டிய அவசியம் வந்தது. கொஞ்சம் கொஞ்சமாக அனுபவம் சேரும்போது அதை வெளியே காட்டினால்தான் நல்லது!’’‘‘ஆக்‌ஷனில் இறங்கியது எப்படியிருந்தது?’’

‘‘ஆக்‌ஷன் நம்புற மாதிரி இருக்கணும். நான் ஒரே அடி அடித்து 20 பேர் பறக்கிற மாதிரி இருந்தால் தியேட்டரில் சிரித்துவிடுவார்கள். எனக்கு அதில் ஆரம்பத்திலிருந்தே தெளிவு இருந்தது. ‘மெட்ராஸ்’ படம் பார்த்தேன். அதில் ஆக்‌ஷன் ரொம்ப நல்லா இருந்தது. சண்டைன்னா நாம சாதாரணமா வெளியே பார்க்கக் கூடிய சண்டை மாதிரிதான் இருக்கும். அன்பு, அறிவு என்கிற அந்த ரெண்டு மாஸ்டர்களையும் கூப்பிட்டுப் பேசி லைவ்வா ரெண்டு ஃபைட்களை ஷூட் பண்ணினோம். நிஜமாகத் தோற்றமளிக்கும் சண்டைகள் அவை.

எனக்காக விக்ராந்த் ரொம்பவும் உழைத்தார். இத்தனைக்கும் அவருக்கு இது நெகட்டிவ் ரோல். நான் போன் செய்து பேசியதுமே, ‘அண்ணா, கதை கூட கேட்க மாட்டேன். கடைசியில் ஒரு டம்மி வில்லனா, மொக்கை வில்லனா மட்டும் ஆக்கிடாதீங்க!’ என்றார். ‘நெகட்டிவ் ரோல் பவர்ஃபுல்லா இருந்தால்தான், அதை எதிர்கொள்கிற பாஸிட்டிவ் ஹீரோ கேரக்டர் ஒர்க் அவுட் ஆகும். உன் கேரக்டர் மொக்கை ஆகிட்டா, என் கேரக்டரும் மொக்கை ஆகிடும்’ என்று சொன்னேன். அவருக்கு இந்தப் படம் நல்ல வரவு. பாதிக்கு மேல் அவரே ஹீரோ மாதிரி தெரிவார்!’’
‘‘சத்யராஜ் இந்த ப்ராஜெக்ட்டில் வந்தது எப்படி?’’

‘‘அப்பா - மகன் உறவு இருக்கே... அதுல எத்தனை அழகு, எத்தனை அர்த்தம் இருக்கு! ஒவ்வொருத்தர் வாழ்க்கைக்கும் உருவம் கொடுக்கிற உறவு இது. ரெண்டு பேருக்கும் தலைமுறை இடைவெளி இல்லாட்டா அதை விட ஜாலியான ஆத்மார்த்தமான உறவு கிடையாது. ஷூட்டிங் ஸ்பாட்டில் அவரோடு அமர்ந்து பேசுவதே பேரனுபவம். அவ்வளவு விஷயங்களைப் பகிர்ந்துகொள்வார்.

சிவாஜி, மணிவண்ணன், கவுண்டமணி என அந்தக் கால திரை அனுபவங்கள் போய்க்கொண்டே இருக்கும். ஒரு வாரம் இரவு எட்டு மணிக்கு ஆரம்பித்து, காலை 4 மணிக்கு முடிகிற மாதிரி கொடைக்கானலில் ரன்னிங் ரேஸ் படமாக்க வேண்டியிருந்தது. எங்களால் ரெண்டு நாள் கூட தாக்குப் பிடிக்க முடியலை. அவர் அசராமல் ஓடி, மானிட்டரில் உட்கார்ந்து சரியா வந்திருக்கிறதா எனப் பார்ப்பார். நம்மையே கிண்டல் அடிச்சிட்டிருப்பார். அது நமக்கு ஐந்து நிமிஷம் கழிச்சுத்தான் தெரியும். அவர் ‘பாகுபலி’ மேக்கிங் பற்றி விவரிக்கும்போது, கேட்பவர்கள் எல்லாம், அந்தப் படம் பார்ப்பது போலவே உணர்வார்கள்!’’

‘‘எமி முதல் தடவையா உங்களுக்கு ஜோடி...’’‘‘ஏற்கனவே ‘இதயம் முரளி’ என ஒரு படத்தில் நடிப்பதாக முடிவு செய்து போட்டோ ஷூட் எல்லாம் முடிந்துவிட்டது. அதனுடைய பெரிய பட்ஜெட் பார்த்துவிட்டு கொஞ்சம் தள்ளி வைத்தோம். அதற்குப் பிறகு இதில் ‘நந்தினி’னு ஒரு கேரக்டரில் பொருத்தமா வருகிறார். அசாம், மேகாலயாவின் சிரபுஞ்சி என இந்தியாவின் உயரமான இடங்களுக்குச் செல்லும்போதெல்லாம் அலுப்பே தெரியாமல் அவ்வளவு இயல்பாக இருந்தார்.

இங்கே மாதிரி பெரிய ஹோட்டல்கள் அங்கே கிடையாது. எந்த சௌகரியமும் பார்க்காமல், அவர் நடித்துக் கொடுத்தது ரொம்ப நல்ல தன்மை. இப்பொழுதெல்லாம் அவர் தமிழை வேகமாக கற்றுக்கொள்கிறார். நானும் கருணாவும், அவரைப் பற்றி பேசிக்கொண்டு இருந்தோம். சற்று தூரத்திலிருந்து அதைக் கேட்டவர், ‘என்ன பேசுறீங்க என்னைப் பத்தி’ என்றவுடன் அதிர்ந்துவிட்டோம். ஒளிப்பதிவாளர் சுகுமார் பிரத்யேகமாக பாடல் காட்சிகளில் அசத்தியிருக்கிறார்.

பார்த்தவர்கள் அதை பெயின்டிங் மாதிரி என்கிறார்கள். அதன் பெருமை முழுக்க சுகுமாருக்கே. பாடல்களில் ஹாரிஸ் முன்பு போலவே அழகாகப் போட்டிருக்கிறார். ‘தில்லுமுல்லு’, ‘வடை பஜ்ஜி’ பாடல்கள் அருமையா வந்திருக்கு. இதுவரைக்கும்  சினிமாவில் பார்த்திராத அருமையான இடங்களை ஒளிப்பதிவாளர் சுகுமார் கண்டுபிடித்துக் கொடுத்தார். வித்தியாசம் காட்டியிருக்கும் ‘கெத்து’வை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்ற பெரிய நம்பிக்கையில் காத்திருக்கிறேன். அதற்கான அடையாளங்களும் படத்தில் இருப்பதுதான் மகிழ்ச்சி!’’

- நா.கதிர்வேலன்