மாலை நேரத்து மயக்கம் : விமர்சனம்



புதுசாய் திருமணம் செய்துகொண்ட தம்பதி... ஆசை ஆசையாய் கல்யாணம் செய்து கொண்ட கணவன்... அவனை வெறுத்து ஒதுக்கும் மனைவி... தொடர்ந்து முளைக்கும் சிக்கல்கள், உளவியல் துயரங்கள் இவையே நடப்புக் காலத்து ‘மாலை நேரத்து மயக்கம்’.தான் கேன்சரில் வாடியிருந்தாலும் அருமையாக வளர்த்த மகள் காதலில் தோல்வியுற்று கலங்கிப் போக, ஆறுதல் அளிக்கிறார் அம்மா. துளியும் பொருத்தமில்லாத மன அமைப்புகள் கூடிய ஒருவனுக்கே கட்டி வைக்க நேர்கிற அடுத்தடுத்த காட்சிகள் எல்லாமே கலகலப்பு. கொஞ்சம் திமிரும், பரந்த போக்கும் கொண்ட வாமிகா கதாபாத்திரத்திற்கு ஏற்ற தேர்வு... அறிமுக இயக்குநர் கீதாஞ்சலி செல்வராகவனுக்கு நல்வரவு!

தாம்பத்யத்திற்கு தவிக்கும் பையனாக பாலகிருஷ்ணா கோலா, அச்சு அசல் பாவங்களில் பின்னுகிறார். ஆவலாக உதடுகளைக் கடித்துக்கொண்டே புது மனைவி வாமிகாவை அவர் திரும்பித் திரும்பிப் பார்க்கும் தவிப்பு... அடடா! பெண் வாசனையே அறியாத பையனின் எல்லா ஏக்கங்களையும் அந்த நீள முகத்தில் வடித்தெடுக்கும் பாங்கில் ‘இது முதல் படம்தானா’ என்றே வியக்க வைக்கிறார். மனைவிக்கு இருக்கிற பாய் ஃபிரண்ட்ஸ்களை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிக்கும் பாங்கும், அதை மென்று தின்று சகஜ வாழ்க்கைக்குத் திரும்புவதும் இயல்பு.

கொஞ்சம் கொஞ்சமாக வாமிகாவை தன் வழிக்குக் கொண்டு வரும் பாலகிருஷ்ணா, கடைசி நேரத்தில் பேலன்ஸ் தவறுவது படத்தின் அதிரடி திருப்பம். வாமிகாவின் முதல் காதலனும் அவர் வழியில் வர, அடுத்தடுத்து செல்வராகவன் ஸ்கிரிப்ட் வேகமெடுக்கப் பார்க்கிறது.
சம்மதம் இல்லாது சீண்டியது கணவனே ஆனாலும் கொதித்து எழும்போது வாமிகா அப்படியே புதுமைப் பெண் ரகம். ‘‘இரண்டு வருஷம் பரிதவிக்க விட்டால் என்ன செய்வேன்’’ என பாலகிருஷ்ணா சமாதானப்படுத்தும் உரையாடலில் நாகரிகம் உட்கார்ந்துகொள்கிறது.

மகனை சந்தோஷ முகமாய் பார்க்க முடியாமல் தவிக்கும் அப்பா அழகம்பெருமாள், ‘‘உன்னை மாதிரி ஃபிகர் அவனுக்குக் கிடைச்சா உன் காலடியிலேயே கிடப்பாண்டி!’’ எனச் சொல்லும் நவீன மாமியார், வீட்டை விட்டு வெளியேறும் சிநேகிதிக்கு தங்க இடம் கொடுத்து - பரிவாய் வார்த்தை சொல்லும் சிநேகிதன்... என யாவரும் நலம்.

ஆனாலும், கணவன் - மனைவி பிரிவுக்கு, அதுவும் அத்தனை வருட பிரிவுக்கு தக்க காரணங்கள் இல்லாதது ஆயாசம். எங்கேயும் பிரச்னையைக் கொண்டு போகாமல் தாம்பத்ய வாழ்வை இவ்வளவு சிக்கலாக்குவார்களா இருவரும்? அடுத்தடுத்து சம்பவங்களோ திருப்பங்களோ இல்லாமல் இரண்டு பேரும் முகத்தைத் திருப்பிக்கொண்டே இருப்பது பொறுமையை செமத்தியாகச் சோதிக்கிறது. இரண்டு வருடம் மனைவியைத் தொடாமல் சைவம் காக்கும் கணவன், ஒரே ஒருநாள் உணர்ச்சி வசப்படு கிறான். அவனைப் போய் க்ளைமேக்ஸில் ‘அவசரப்பட்டுட்டியேடா’ என நாயகி கேட்பது காமெடி. இப்படி ஒவ்வொரு இடத்திலும் அவ்வப்போது தவறுகிறது செல்வராகவனின் திரைக்கதை.

அறிமுக அம்ரித்தின் இசையில் இரண்டு பாடல்கள் கேட்க வைக்கிறது. ‘மெத் மெத்’ என சூழ்நிலையைத் தீண்டும் அருமையான பின்னணி... சூப்பர் அம்ரித்! தங்கு தடையில்லாத நீரோட்டமான ஒளிப்பதிவுக்கு அறிமுகம் தர்.புது இயக்குநர், முற்றிலும் எல்லா வகையிலும் புதுமுகங்கள் என்ற அளவில் வேண்டுமானால் இந்த ‘மாலை நேரத்தின் மயக்கத்’துக்கு மயங்கலாம்.

- குங்குமம் விமர்சனக் குழு