பாம்புக்கடிக்கு மருந்தாகிறது குதிரையின் ரத்தம்!
கண்டுபிடிப்பு
உலகிலேயே பாம்புக் கடியால் அதிகம்பேர் உயிர் இழப்பது இந்தியாவில்தான். தமிழகத்திலும் பாம்புக் கடியால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பாம்புக் கடிக்கான மருந்து தட்டுப்பாடே இதற்கு காரணம் எனக் கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது சென்னையில் உள்ள கிங் இன்ஸ்டிட்யூட் இதற்கான மருந்து தயாரிப்பில் புதிய வழியைத் தொடங்கி உள்ளது. அதுவும் குதிரையின் மூலம் என்ற தகவல் கேள்விப்பட்டு கிங் இன்ஸ்டிடியூட் இயக்குனரும் மருத்துவருமான ப.குணசேகரனிடம் பேசினோம்.
 ‘‘பாம்புகளில் நல்ல பாம்பு, கட்டுவிரியன், கண்ணாடி விரியன், சுருட்டை, சாரை, தண்ணீர் பாம்பு, கொம்பேறி மூக்கன், மலைப்பாம்பு, கருநாகம் என ஏராளமான வகைகள் உள்ளன. இவற்றில் மனிதனைக் கொல்லக்கூடிய விஷம் கொண்டவைகளில் நல்ல பாம்பு, கண்ணாடி விரியன், கட்டு விரியன், சுருட்டை ஆகிய 4 வகை பாம்புகள் குறிப்பிடத்தக்கவை.
பாம்பின் விஷக்கடிக்கு மருந்து தயாரிக்கும் முயற்சியில் இருக்கிறோம். பாம்பின் விஷத்தை சேகரித்து ஒன்றாக கலந்து குதிரையின் உடலில் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தப்பட்டிருக்கும் விஷத்துக்கு எதிர் மருந்தை (Antibodies) குதிரையின் உடல் தானாகவே உற்பத்தி செய்துகொள்ளும்.
விஷ முறிவு (Anti-venom) திரவம் குதிரையின் உடலில் உற்பத்தி செய்யப்பட்டவுடன் குதிரையின் எடையில் ஒரு சதவிகிதம் என்ற கணக்கில் ரத்தம் எடுக்கப்படும். இந்த ரத்தத்தைப் பகுப்பாய்வு செய்து விஷத்தை முறிக்கும் மருந்து பலகட்ட ஆய்வுக்குப் பின்னர் தயாரிக்கப்படும்.
விஷ முறிவு திரவம் பிரித்தெடுக்கப்பட்ட பின் ரத்தம் குதிரையின் உடலில் உடனடியாக செலுத்தப்பட்டுவிடும். எனவே, குதிரைக்கு எந்த வகையிலும் ரத்த இழப்பு ஏற்படாது. உலக அளவில் எல்லா இடங்களிலும் விஷமுறிவு மருந்து தயாரிக்க இந்த முறைதான் பின்பற்றப்படுகிறது’’ என்கிறார்.
- தோ.திருத்துவராஜ் படம் : ஏ.டி.தமிழ்வாணன்
|