பேசும் போதே குரல் மாறுவது ஏன்?



எனக்குப் பேசிக்கொண்டிருக்கும்போதே திடீரென கீச்சுக்குரல் வந்து விடும். தொண்டையைக் கணைத்த பிறகுதான் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பும். இதுபோன்று குரல் மாறுவது ஏன்?
- பி.சங்கீதா, திருச்சி.

ஐயம் தீர்க்கிறார் காது. மூக்கு தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர் நிராஜ் ஜோஷி. ‘‘தொண்டைக்குள் இருக்கும் குரல் பெட்டி (voice box) மூலம்தான் நாம் பேசுகிறோம். V வடிவத்தில் இருக்கும் குரல் பெட்டியானது சுவாசிக்கும்போது திறந்த நிலையிலும் பேசும்போது மூடியும் இருக்கும்.

பேசிக்கொண்டிருக்கும்போது திடீரென குரல் மாறுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. வேகமாக பேசிக்கொண்டிருக்கும்போதே சுவாசிக்க நேரும்போது குரல் மாறும். சளிப்பிரச்னை காரணமாகவும் குரல் மாறும். வாயில் மூச்சு விடும்போது தொண்டை காய்ந்துவிடும். அப்போது அதை ஈரமாக்குவதற்காக சளி உற்பத்தியாவதாலும் குரல் மாறலாம்.

அதிகம் கத்துவது குரல் பெட்டியை பாதிக்கும். செரிமானப் பிரச்னை காரணமான ஏப்பம், வாயுத்தொந்தரவாலும் குரல் மாறும். எல்லாவற்றையும்போல் குரல் பெட்டியையும் முறையாகப் பராமரிக்க வேண்டும். மூக்கின் வழியாகத்தான் சுவாசிக்க வேண்டுமே தவிர வாய் வழியாக சுவாசிக்கக்கூடாது. அதிக ஒலி அளவிலும் பேசக் கூடாது மிகக்குறைந்த ஒலி அளவிலும் பேசக் கூடாது.

வெந்நீரில் வாரம் ஒருமுறை ஆவிபிடிப்பது குரல் பெட்டிக்கு நல்லது. குரல் மாற்றம் என்பது பிரச்னையாகவே மாறி விட்டால் மருந்து மாத்திரைகள், அறுவை சிகிச்சை மற்றும் ஸ்பீச் தெரபி ஆகியவற்றின் மூலம் சரி செய்யலாம்.’’

- சாருமதி