`பல்’ நோக்கு சிகிச்சைகள்!



ஸ்மைல் ப்ளீஸ்

‘‘பற்களில் பல்வேறு பிரச்னைகள் வருவதுண்டு. அந்தந்த பிரச்னைக்கு தகுந்தவாறு சிறப்பு துறைகள் பல் மருத்துவத்திலும் இருக்கிறது. பெரும்பாலான பொதுமக்களுக்கு பல் சிகிச்சையின் சிறப்பு துறைகள் தெரிவது இல்லை. 

அந்தந்த துறை நிபுணர்களை அணுகுவதன் மூலம் தேவையான சிகிச்சை  பெற முடியும். பொது மருத்துவத்தில் உள்ள பிரிவுகள் போலவே பல் மருத்துவத்திலும் ஒன்பது பிரிவுகள் உள்ளன. இவற்றில் முக்கியமான 3 சிகிச்சைகளைப் பற்றித் தெரிந்துகொண்டால்கூட போதும்’’ என்கிறார் பல் மருத்துவரான சக்திவேல் ராஜேந்திரன்.

வேர் சிசிச்சை (Endodontist)பற்குழி, பற்சிதைவு, பல்சொத்தை போன்றவை வந்தால் நாம் அதை பல் சிமென்ட் என்ற ஃபில்லிங் மூலம் சரி செய்யலாம். ஆனால், அதே பற்சிதைவு ஆழமாக பற்களின் வேர் பகுதியை பாதிக்குமானால் அதற்கு வேர் சிகிச்சை தான் செய்ய வேண்டும். பல் வேர்சிகிச்சை செய்வதற்கு அதிநவீன தொழிநுட்பங்கள் வந்துவிட்டன. லேசர், அல்ட்ராசோனிக் போன்ற கருவிகளை கொண்டு துல்லியமாக பல் வேர்களில் தாக்கியுள்ள கிருமிகளை அகற்றி, பாதிக்கப்பட்ட பற்களை சரி செய்ய முடியும்.

செயற்கை பல் மருத்துவம் (Prosthodontist)பலர் வேர் சிகிச்சையை முழுமையாக மேற்கொள்ளாமல் பல்லை அகற்றிவிடுவர். அவ்வாறு பல்லை அகற்றிவிட்டால் செயற்கை பல்லை மீண்டும் அதே இடத்தில் பொருத்து வது மிகவும் அவசியம். பல ஆண்டுகளுக்கு முன்பு  எளிதில் நீக்கக்கூடிய பல் செட்  எனப்படும் செயற்கை பற்களை பொருத்தி வந்தனர்.

அதன்பிறகு, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு  நிலையான செயற்கை பற்கள்  பொருத்தப்பட்டன. ஆனால், அவை  அருகிலுள்ள பற்களின் துணையால் பொருத்தப்படுவதால் அருகிலுள்ள பற்களும் நலிவடையும் சிக்கல் இருந்தது. தற்போது உள்வைப்பு (Implant) என்னும் அதிநவீன சிகிச்சை வந்துள்ளது. இந்த நவீன இம்பிளான்ட் சிகிச்சை முறையில், இயற்கை பற்களைப் போலவே நம் தாடையில் பொருத்தப்படுவதால் அருகிலுள்ள பற்கள் நலிவடையாது. நம் இயற்கை பற்களைப் போலவே எல்லாப் பொருட்களையும் எளிதாக உண்ண முடியும்.

குழந்தைகள் பல் மருத்துவம் (Pedodontists)பால் பற்களின் முக்கியத்துவம் நம்மில் பலருக்கு தெரிவதில்லை. பெரும்பாலான மக்கள் விழப்போகும் பால் பற்களுக்கு எதற்கு  முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். குழந்தைகளின் பால் பற்கள் மூலமாகத்தான் அவர்களின் நிரந்தரப் பற்களின் வடிவம் மற்றும் சுகாதாரம் அமைகிறது. அதனால் நிரந்தரப் பற்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவம், பால் பற்களுக்கும் கொடுக்கப்பட வேண்டும்.

பொதுவாக இனிப்புகள், சாக்லேட்டுகள் அதிகம் சாப்பிடும் குழந்தைகளுக்கு பற்குழிகள், பற்சிதைவுகள் ஏற்படும். இவற்றை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும். விரல்சூப்பும் குழந்தைகளுக்கு மேல்வரிசைப் பற்கள் கோணலாகவோ, சற்று தூக்கியோ வளர ஆரம்பிக்கும் இவர்களுக்கு அந்தப் பழக்கத்தை மாற்றுவதன் மூலம் ஆரம்ப நிலையில் சரி செய்யலாம்.

 இல்லாவிட்டால் முன் பற்கள் தூக்கலாக மாறி முக அழகை கெடுத்துவிடும். இந்த 3 துறைகளையுமே மக்கள் தெரிந்துவைத்துக் கொள்வது நல்லது என்பதை மீண்டும் வலியுறுத்துகிறார் மருத்துவர் சக்திவேல்.

நவீன இம்பிளான்ட் சிகிச்சை முறையில், இயற்கை பற்களைப் போலவே நம் தாடையில் பொருத்தப்படுவதால் அருகிலுள்ள பற்கள் நலிவடையாது. நம் இயற்கை பற்களைப் போலவே எல்லாப் பொருட்களையும் எளிதாக உண்ண முடியும்.

- உஷா