தாய்மை விற்பனைக்கல்ல!
செய்திகள் வாசிப்பது டாக்டர்
விஷயம் நல்லதாகவே இருந்தாலும், அதையும் தவறாகப் பயன்படுத்துவதற்கென்று சிலர் எப்போதும் இருக்கத்தான் செய்கிறார்கள்.குழந்தைப்பேறு இல்லாதவர்களின் கவலையை நீக்க கண்டுபிடிக்கப்பட்ட ஓர் அற்புத வழிதான் வாடகைத்தாய் முறை. இனி கருத்தரிக்கவே முடியாது, கருவை வளர்த்து குழந்தையைப் பெற்றுக் கொள்ளவே முடியாது என்ற நிலையில் இருப்பவர்களுக்கு வாடகைத் தாய் முறை பலன் தருகிறது. சம்பந்தப்பட்ட பெண் சம்மதிக்கும் பட்சத்தில் இதற்கு சட்டமும் அனுமதி அளிக்கிறது.
 அதற்காகத்தான் வாடகைத்தாய் முறைக்கு ஒப்புக்கொள்ளும் பெண்களின் ஆரோக்கியத்துக்கான உத்தரவாதத்தையும் அரசாங்கம் உறுதிப்படுத்தச் சொல்கிறது. கருவைச் சுமக்கும் காலத்துக்குத் தேவைப்படும் சத்தான உணவுகள், மருந்து, மாத்திரைகள் போன்றவற்றிலும் கவனம் செலுத்த வலியுறுத்துகிறது நம் சட்டம். இத்துடன் வாடகைத்தாய் முறைக்கு ஒப்புக் கொள்ளும் பெண்ணுக்குக் கணிசமான தொகையைக் கொடுக்கும் நடைமுறையும் இருந்து வருகிறது.
ஒருவருக்கொருவர் பரஸ்பர சம்மதத்துடன் செய்துகொள்ளும் இந்த உதவிதான் வியாபாரமாக உருமாறி வருகிறது. ஏழ்மையில் இருக்கும் பல இந்தியப் பெண்களை இதற்காக வெளிநாட்டினர் பயன்படுத்திக் கொள்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துவந்தது. குறிப்பாக, ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் நம் நாட்டின் கிராமப்புறங்களில் இருக்கும் பெண்களையும், பழங்குடியினப் பெண்களையும் பயன்படுத்தி வந்தனர். இந்த முறைகேட்டைத் தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மசோதா ஒன்று சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தற்போது, இந்த வரைவு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவையும் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த மசோதா சட்ட வடிவம் பெற்றால் வெளிநாட்டவர் சுற்றுலா விசாவில் வந்து இந்தியப் பெண்களை வாடகைத் தாயாக பயன்படுத்திக் கொள்வது தடுக்கப்படும். மேலும், வாடகைத் தாய் மூலமாக நடைபெறும் குழந்தைப் பேறுகள் சட்டபூர்வமாக, வெளிப்படைத் தன்மை உடையதாகவும் மாற்றப்படும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.வெளிநாட்டினர் குறிப்பாக, ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் நம் நாட்டின் கிராமப்புறங்களில் இருக்கும் பெண்களையும், பழங்குடியினப் பெண்களையும் வாடகைத் தாய்மைக்காகப் பயன்படுத்தி வந்தனர்.
|