நாற்பதில் தொடங்குவது நல்லதா?
அறிந்ததும் அறியாததும்
ஆரோக்கியத்தின் அருமையை நோய் வருகிறவரை நாம் உணர்வதில்லை. அதிலும் 40 வயது தொடங்கும் போதுதான் உடற்பயிற்சி, உணவுமுறை பற்றியெல்லாம் விசாரிக்க ஆரம்பிக்கிறோம். உணவுமுறையில் கூட ஓர் ஒழுங்கைக் கற்றுக் கொண்டுவிடலாம்.
 ஆனால், உடற்பயிற்சி பற்றிய குழப்பங்கள் எளிதில் தீராதவை. 40 வயது வரை எந்த உடற்பயிற்சியும் செய்யாத ஒருவர், அதன்பின் உடற்பயிற்சியைத் தொடங்கலாமா? - நம் சந்தேகத்துக்கு பதிலளிக்கிறார் உடற்பயிற்சி நிபுணர் ஜெயக்குமார்.
“உடற்பயிற்சி பற்றிய எண்ணம் ஒருவருக்கு வருவது நிச்சயம் வரவேற்க வேண்டியதுதான். அதற்கு வயது வரம்பு எதுவும் பிரச்னையில்லை. சில விஷயங்களைக் கவனித்துத் தொடங்கினால் போதும். ஒருவருடைய உடல் உழைப்பின் தன்மை, வாழ்வியல் நடைமுறை போன்றவற்றை முதலில் ஆராய வேண்டும்.
அதன்பிறகு ரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் மூட்டுப் பிரச்னைகளுக்கான சோதனைகளை மருத்துவரிடம் செய்துகொள்ள வேண்டும். இதயத்துடிப்பின் விகிதம், பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் பரிசோதனை, ஹார்மோன் சமநிலை போன்றவை பற்றியும் தெளிவாகத் தெரிந்துகொள்வது நல்லது. அப்போதுதான் இந்த திடீர் உடற்பயிற்சியால் எதிர்காலத்தில் எந்த பக்கவிளைவுகளும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள முடியும்.
அதனால் நாற்பது வயதுக்குப் பிறகு உடற்பயிற்சி செய்ய நினைக்கிறவர்களுக்கு மருத்துவ அறிக்கை என்பது மிகவும் அவசியம். அதேபோல சரியான உடற்பயிற்சி நிலையத்தைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதும் முக்கியம். வீட்டிலேயே தனியாக உடற்பயிற்சி செய்யலாமா, ஜிம்முக்கு போகலாமா என்ற குழப்பமும் சிலருக்கு இருக்கும்.
பலருடன் சேர்ந்து ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும்போது இன்னும் உத்வேகம் ஏற்பட வாய்ப்பு உண்டு. இந்த விஷயத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.உடற்பயிற்சியை இதுபோல் முறைப்படி தொடங்கினால் முதல் மூன்று மாதங்களிலேயே ரத்த அழுத்தம், நீரிழிவு போன்றவை கட்டுப்பட ஆரம்பிக்கும். இதயநோய் பிரச்னைகள் வருவதற்கான வாய்ப்புகளும் குறையும். ஆரோக்கியமான வாழ்க்கை கிடைப்பதுடன் உங்கள் தோற்றத்திலும் புதுப்பொலிவு ஏற்பட்டு தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்!”
- உஷா நாராயணன்
|