அறிதல் அவசியம்
சுகர் ஸ்மார்ட்
உணவே மருந்தாக இல்லாவிட்டால் மருந்தே உணவாகி விடும்!
மருத்துவமனைக்கோ, ஆய்வுக்கூடத்துக்கோ செல்ல வேண்டிய அவசியமில்லை. நினைத்த நேரத்தில் இருக்கும் இடத்தில் சில நொடிகளில் நம் ரத்த சர்க்கரை அளவை அறிய உதவும் ஓர் எளிய கருவி. அது ப்ளட் குளுக்கோஸ் மீட்டர்!
 அனைத்து மருந்துக்கடைகளிலும் ஆயிரம் ரூபாய் முதல் கிடைக்கிற இந்த மீட்டர் நீரிழிவாளர்களுக்கு தொடர்ந்து பல ஆண்டுகள் உதவக்கூடிய உற்ற நண்பன். குறிப்பிட்ட உணவைச் சாப்பிட்ட சில மணி நேரங்களிலோ, குறிப்பிட்ட செயல்பாட்டுக்குப் பிறகோ நமது ரத்த சர்க்கரை அளவு எப்படி மாற்றம் கண்டிருக்கிறது என்பதை அறியலாம். அதற்கேற்ப நம் திட்டமிடலைத் தொடரலாம்.
 அன்றாட ஆரோக்கியத்தை அறிந்து பராமரிக்க உதவுகிற இந்த மீட்டர், நீண்ட கால குழப்பங்களைத் தவிர்க்க உதவும் என்பதில் சந்தேகமே இல்லை. குளுக்கோஸ் மீட்டர் அல்லது குளுக்கோ மீட்டர் என்று அழைக்கப்படுகிற இந்தச் சிறிய உபகரணம் எங்கும் எடுத்துச் செல்லும் வகையில் அளவிலும் சிறியதே.இப்படி நமக்கு நாமே சர்க்கரை அளவை பரிசோதித்துக் கொள்ளும் முறையை SMBG என்கிறோம். அதாவது Self-Monitoring of Blood Glucose.
இம்முறையை வழக்கத்தில் கொண்டு வருகிற நீரிழிவாளர்களின் HbA1c அளவானது, இதைப் பின்பற்றாதவர்களைவிட 0.4 சதவிகிதம் குறைந்து காணப்படுவதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.பயன்கள் பல...
* சுயசோதனையை பழக்கமாக்குவதன் மூலம், சர்க்கரை அளவு அதிகமானாலோ, குறைந்தாலோ உடனுக்குடன் அறிந்து, அதற்கேற்ப உணவு மற்றும் உடற்பயிற்சிகளில் கூடுதல் கவனம் செலுத்த முடியும். நம் உடலில் என்ன நடக்கிறது என்பதை அறியாமலே காத்திருந்து, 3-4 மாதங்களுக்குப் பிறகு மருத்துவமனை அல்லது ஆய்வுக் கூடத்தில் பரிசோதித்து, அதன்பின் அதிர்ச்சி அடைவதை விட சுய சோதனை முறை பன்மடங்கு பயன் தரக்கூடியது.
* எந்த உணவு சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்கிறது என்பதையும் எளிதில் அறிந்து, அதையும் தவிர்த்துவிட முடியும்.
* வெவ்வேறு விதமான உடற்பயிற்சிகளில் ஈடுபடும்போது, சர்க்கரை அளவு குறையுமானால், அதையும் அறிந்து, அதற்கேற்ப மாற்றம் செய்துகொள்ள முடியும்.
* சுயசோதனை முடிவுகளின் பட்டியல் மருத்துவர்களுக்கும் மேம்பட்ட சிகிச்சை அளிக்க உதவும்.
* இன்சுலின் பயன்படுத்துகிறவர்களுக்கு அதிக அளவில் உதவும்.
* பாதுகாப்பான டிரைவிங், பயணம் போன்ற செயல்பாடுகளுக்கு சுயசோதனை முடிவுகள் இன்றியமையாதவை.
* வேறு ஏதேனும் நோய் ஏற்பட்டால், அதனால் உண்டாகும் ரத்த சர்க்கரை மாற்றங்களை அறிய முடியும்.
* மருந்துகள் மற்றும் வாழ்க்கைமுறை மாற்றங்கள் வாயிலாக ரத்த சர்க்கரையை எந்த அளவு குறைக்க முடிகிறது என்றும் உணர முடியும்.
எத்தனை முறை? இத்தனை முறை சுயசோதனை செய்துகொள்ள வேண்டும் என பொதுவான வரையறை இல்லை. தனிநபரின் உடல்நிலை மற்றும் வாழ்க்கைமுறைக்கு ஏற்ப, மருத்துவர் உதவியோடு இதைத் திட்டமிடலாம்.
* டைப் 1 இன்சுலின் நீரிழிவாளர்கள் தினமுமே பல முறை (மருத்துவர் அறிவுறுத்தலின் படி) பரிசோதித்து பதிவு செய்தல் அவசியம்.
* டைப் 2 இன்சுலின் நீரிழிவாளர்கள் தினமுமோ, வாரத்தில் குறைந்தபட்சம் 4 முறையோ பரிசோதிக்க வேண்டும்.
* டைப் 2 மாத்திரை நீரிழிவாளர்கள் கட்டுப்பாட்டில் இல்லாத நிலையில் தினமும் அல்லது வாரம் 2-4 முறையோ அவசியம் சோதிக்க வேண்டும்.
* டைப் 2 மாத்திரை நீரிழிவாளர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும்போது வாரம் ஒருமுறை பரிசோதித்தாலே போதுமானது.
எப்போது?
* பெரும்பாலானோர் துயில் கலைந்தவுடன் ஃபாஸ்டிங் சோதனை செய்துகொள்ளவே விரும்புகின்றனர்.
* உணவுத் திட்டமிடலுக்காகச் செய்யும் சோதனை எனில், உணவுக்கு முன், உணவுக்கு 2 மணி நேரம் கழித்து என இரு சோதனைகள் செய்ய வேண்டும்.
* உடற்பயிற்சித் திட்டமிடலுக்கும் இதுபோல முன்பு, பின்பு என இருவேளை திட்டமிடலாம்.
* உடல்நலம் குன்றியோ, மன அழுத்தத்துடனோ காணப்பட்டால், ரத்த சர்க்கரையை பரிசோதிக்கலாம். இதுபோன்ற சூழல்களில் அளவு எகிறியே காணப்படும்.எப்படி?
குளுக்கோமீட்டர் பயன்படுத்தி ரத்த சர்க்கரை அளவைக் கண்காணிப்பது மிக எளிதே. இக்கருவியை வாங்கும்போதே, இதற்கான விளக்கம் (டெமோ) அளிக்கப்படும். இக்கருவியுடன் அளிக்கப்படும் கையேட்டிலும் முழுவிவரங்களும் இருக்கும். இக்கருவியை வழக்கமாகப் பயன்படுத்துவதே கருவிக்கும் நல்லது. நீரிழிவாளர்களுக்கும் நல்லது.
* எப்போதோ ஒருமுறை பயன்படுத்திவிட்டு, நீண்ட இடைவெளி விட்டுவிட்டால், இக்கருவிக்கான டெஸ்ட் ஸ்டிரிப்புகள் பயனற்றுப்போகும். ஆகவே, குளுக்கோமீட்டர் பயன்படுத்துவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
* பரிசோதனைக்கு முன் கைகளைக் கழுவி, நன்கு உலர்த்திக் கொள்ளுங்கள்.
* பரிசோதிப்பதோடு கடமை முடிந்ததாகக் கருத வேண்டாம். தேதி, நேரம், எதற்கு முன்/பின் என்பதையும் மறக்காமல் குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள். பெரும்பாலான மீட்டர்களில் தானாகவே பதிவு செய்துகொள்ளும் மெமரி வசதி உண்டு. இந்த அளவுகளை மருத்துவரிடம் அவசியம் காட்ட வேண்டும்.
ஸ்வீட் அல்ல... ஷாக் டேட்டாஒவ்வொரு 6 வினாடிக்கும் உலகில் ஒருவர் நீரிழிவுச் சிக்கல்கள் காரணமாக உயிர் இழக்கிறார். எப்போதோ ஒருமுறை பயன்படுத்திவிட்டு, நீண்ட இடைவெளி விட்டுவிட்டால், குளுக்கோ மீட்டர் டெஸ்ட்ஸ்டிரிப்புகள் பயனற்றுப்போகும்.
( கட்டுப்படுவோம்… கட்டுப்படுத்துவோம் ! )
தாஸ்
|