செல்லப் பிராணிகளுடன் தூங்கலாமா?
தேவை அதிக கவனம்
டென்ஷன் மிகுந்த வாழ்க்கையில் செல்லப் பிராணிகளுடன் விளையாடுவது மகிழ்ச்சியானது என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. வெளிவேஷம் போடும் மனிதர்களைவிட செல்லப் பிராணிகளின் அன்பு மேலானது என்பதிலும் சந்தேகமில்லைதான்.
 ‘அதற்காக அவற்றுடன் அளவு கடந்து அன்னியோன்யமாக இருப்பது நம் ஆரோக்கியத்துக்கு உகந்தது இல்லை’ என்கிறார் பொதுநல மருத்துவரான நிரஞ்சனா தேவி. குறிப்பாக, செல்லப் பிராணிகளுடன் தூங்குவதைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காக அவர் சொல்லும் காரணங்கள் யோசிக்க வைப்பவை.
‘‘கிளி, புறா, நாய், பூனை, முயல் என பலவகை செல்லப் பிராணிகளை வளர்க்கும் பழக்கம் இப்போது அதிகமாகி வருகிறது. இவற்றுடன் விளையாடுவதைத் தவிர்க்க முடியாது. ஆனால், நோய்த்தொற்று ஏற்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளது என்பதால் கவனமாக இருக்க வேண்டும். முக்கியமாக, சோப்பு போட்டு கைகழுவிவிட வேண்டும் என்பதை எப்போதும் கூறுகிறோம். விளையாடுவதிலேயே கவனமாக இருக்க வேண்டும் என்கிறபோது அவற்றுடன் தூங்குகிற பழக்கம் எந்த அளவுக்கு கவனிக்க வேண்டிய விஷயம் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
கிளி, புறா போன்ற செல்லப் பிராணிகளால் தொற்று, அலர்ஜி, நோய்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் குறைவு. இந்தப் பறவையினங்களுடன் உணவு தரும் நேரம் மற்றும் அவற்றின் கூண்டுகளைச் சுத்தப்படுத்தும் நேரத்தில்தான் நேரத்தைச் செலவழிப்போம். ஆனால் நாய், பூனை போன்றவற்றுடன்தான் தூங்கும் பழக்கம் சிலருக்கு இருக்கிறது. இந்தப் பழக்கத்தால் நமது உடல்நலத்துக்குப் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.
உதாரணமாக, நாயின் தோல்பகுதியில் முடிகளுக்கு இடையே Tick என்ற ஒட்டுண்ணி இருக்கும். வழக்கமாக இதைஉண்ணி என்று கூறுவார்கள். இந்த ஒட்டுண்ணியால் சரும அலர்ஜி வரும். வளர்ப்புப் பிராணிகளின் சிறுநீர், மலம், தண்ணீரிலோ, உணவிலோ கலந்தால் தட்டைப்புழுக்கள் நமக்கும் பரவலாம். வீட்டுக்குள் உதிரும் இவற்றின் முடியும் தொற்றை உண்டாக்கலாம். பூனையின் உடலில் உள்ள Toxoplasmosis என்ற வைரஸ் கருப்பைக்குப் பரவினால் தாய்மையடையும் திறனே குறையலாம்.
அதனால், பெண்கள் இன்னும் கவனமாக இருக்க வேண்டும். அதேபோல, வீட்டுக்குள்ளேயே பாதுகாப்பாக வளரும் நாய்குட்டிதானே என்றும் சிலர் கவனக்குறைவாக இருப்பார்கள். வெளியே சென்று வரும் நேரத்தில் ரேபீஸ் வைரஸால் தாக்கப்பட்டிருந்தால் அது இன்னும் கவலைக்குரியது.
ஆகவே, செல்லப் பிராணிகளை அவற்றுக்கான பிரத்யேக இடங்களில் தங்க வைத்தல், கால்நடை மருத்துவர் அறிவுரைப்படி தடுப்பு மருந்துகள் போடுதல் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெச்சரிக்கையாக செய்து வர வேண்டும். ரேபீஸ் என்ற வெறிநாய்க்கடியால் பாதிக்கப்பட்டால் காப்பாற்றுவதே கடினமாகிவிடும். அதனால் மிகுந்த எச்சரிக்கையுடனே செல்லப் பிராணிகளுடன் விளையாட வேண்டும்.
தூங்குவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். தடுப்பு மருந்துகள் குறிப்பிட்ட காலம்வரைதான் வேலை செய்யும் என்பதால் சீரான இடைவெளியில் தடுப்பு மருந்துகளைப் போட்டு வருவதிலும் கவனமாக இருக்க வேண்டும்.’’
- விஜயகுமார் படம்: ஏ.டி.தமிழ்வாணன்
|