மீள்வது எப்படி?
மது... மயக்கம் என்ன?
துப்பாக்கிக் குண்டுகளை விட கொடூரமானது மொடாக் குடியின் பின் விளைவுகள்!
குடியின் காரணமாக ஏற்படும் உடல் ரீதியான பிரச்னைகளுக்கு மட்டுமே வேறுவழியில்லாமல் சிகிச்சை எடுத்துக்கொள்வது அப்பழக்கத்தினரின் இயல்பு. அப்பிரச்னைகளுக்கு மூல காரணமாக குடி இருப்பது பற்றி அவர்கள் ஒருபோதும் கவலைப்படுவதில்லை.
 தற்காலிக நிவாரணம் கிட்டினாலே மன நிறைவு அடைந்து, குடிக்கிற பணியை தொடரச் சென்று விடுவார்கள். இப்படிப்பட்டவர்கள் பூரணமாக மதுவை மறக்க என்னதான் வழி?மதுப்பழக்க மாயையிலிருந்து விடுபட 3 நிலைகள் உள்ளதாக மனவியல் நிபுணர்கள் வரையறுத்துள்ளனர்.
1. மது காரணமாக சிக்கல்கள் ஏற்படுகின்றன என்பதை ஒப்புக்கொள்ளுதல். 2. மது அருந்துவதை உறுதியாகக் குறைத்தல் மற்றும் முழுமையாக கைவிடுதல். 3. மது அருந்தாமலே வாழ்க்கையை தொடர்தல்.
 மதுவினால் பிரச்னைதான் என்று அவரே ஒப்புக்கொள்வதை நல்ல விஷயமாகக் கருதி, குடும்பத்தினரும் நண்பர்களும் ஒத்துழைப்பு நல்க வேண்டும். அவர்களிடம் கோபம் கொள்வது எந்த விதத்திலும் பலனளிக்காது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.
குடியைப் பற்றியே எப்போதும் பேசிக்கொண்டே இராமல், அவரது வேலை, உடல்நலம் பற்றி உரையாடலாம். அதோடு, சிறிது சிறிதாக குடியினால் குடும்பத்துக்கும் ஆரோக்கியத்துக்கும் பணிக்கும் ஏற்படக்கூடிய தடுமாற்றங்களை புரிய வைக்க வேண்டும். தனது பிரச்னையை புரிந்துகொள்கிறவர்களால் மட்டுமே, அப்பழக்கத்திலிருந்து மீள முடியும்.
அது புரியாமலே இருக்கிறவர்களுக்கு மது மீட்பு சிகிச்சை அளித்தால் கூட பலன் கிட்டுவது சந்தேகமே. உடல்நலம், மனைவி, குழந்தைகளுடன் குதூகலமான வாழ்வு, பொருளாதார ரீதியாக வலுப்படுதல் போன்ற காரணங்கள் அவருக்கு ஊக்கம் அளிக்கக்கூடும்.
எல்லை எது?பிரச்னையை புரிந்துகொண்டு, அதிலிருந்து மீண்டு வர வேண்டும் என்கிற மனநிலைக்கு வருகிறவர்கள் அடுத்து ஒரு முடிவெடுக்க வேண்டும். முழுமையாக நிறுத்துவது அல்லது உடல்நலத்துக்குப் பாதகம் இல்லாத நிலை என்கிற எல்லைக்குள் மது எடுத்துக் கொள்ளத் தொடங்குவது. இதை தீர்மானிப்பது எளிதான செயல் அல்ல.
எனினும் மொடாக்குடியில் இருக்கிற ஒருவர், நிலைமையை உணர்ந்து, அதை கட்டுக்குள் கொண்டு வருவது கூட நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும் முதல் படியே. இப்போதைய உடல்நலம், எவ்வளவு காலமாக மதுப்பழக்கம், குடும்பம் மற்றும் புறச்சூழல் ஆகிய காரணிகளைக் கொண்டு இதை முடிவெடுக்கத் தூண்டலாம்.
அவர் மது அருந்துவதை படிப்படியாகக் குறைப்பதாகக் கூறினால் என்ன செய்ய வேண்டும்? ஒரு நாளில் மது அருந்தும் முறை... எத்தனை தடவைகள், எவ்வளவு? இதை ஒரு குறிப்பேட்டில் தேதி, நேரம் வாரியாக பதிவு செய்யும்படி கூறுங்கள்.
தினமும் மது அருந்துபவராக இருக்கிறவர் எனில், அதை வாரம் 2-3 முறை என மாற்றும்படி கூறுங்கள்.ஒரேநாளில் அதிக அளவோ, ஒரு முறைக்கு அதிகமாகவோ (காலை, மதியம், இரவு என...) குடிக்க வேண்டாம் என வலியுறுத்துங்கள். இதே காலகட்டத்தில் போதை அளிக்காத தரமான வேறுவகை மது பானங்களுக்கு (நல்ல ஒயின் போன்றவை) மாறச் செய்யுங்கள். இதிலும் அளவு முக்கியம்.
மதுவை அப்படியே Raw ஆக ஒருபோதும் குடிக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கச் செய்யுங்கள். தண்ணீர் அல்லது சோடா கலந்து நீண்ட நேரம் எடுத்து மெல்ல மெல்ல மடக்கு மடக்காகப் பருகச் சொல்லுங்கள்.பகலில் ஒருபோதும் மதுவை நாடுவதில்லை என உறுதி எடுக்கச் சொல்லுங்கள்.
குடிப்பதற்கு முன் கொஞ்சம் சாப்பிடவும் செய்யுங்கள். தாகம் தணிக்க பியர் அருந்துவது சிலரது பழக்கம். இது மிகத் தவறான விஷயம். தாகத்துக்கு தண்ணீர் அல்லது இயற்கை பானங்களே நல்லது.
பியர் உள்பட மதுபானங்கள் அனைத்தும் உடலில் வறட்சியையே உருவாக்கும். பார் செல்வதைத் தவிர்க்க வேண்டும். மதுப்பழக்கம் உடைய நண்பர்களோடு நேரம் செலவழிப்பதைக் குறைக்க வேண்டும்.எல்லை தாண்டிய நிலையில்..?
இனி ஒருபோதும் மது அருந்துவதில்லை என முடிவெடுக்க வேண்டிய கட்டாயம் சிலருக்கு உண்டு. குறிப்பாக...மஞ்சள் காமாலை உள்பட மதுப்பழக்கம் காரணமாக கடுமையான நோய்களால் தாக்கப்பட்டிருத்தல். ஒன்றுக்கு மேற்பட்ட முறைகள் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்ட பிறகும் மதுவைத் தொடர்ந்தால் மரணமே எஞ்சும்.
வீட்டில், வெளியில், தொழிலகம் அல்லது அலுவலகத்தில் கட்டுப்படுத்த முடியாதபடி கடுஞ்சொற்களைப் பயன்படுத்துதல், வன்முறைகளில் ஈடுபடுதல், குடும்பத்தினருக்கு மனக்காயம் அல்லது உடற்காயம் ஏற்படுத்துதல்.... இந்த அளவு நிலைமை முற்றிய நபர்களுக்கு படிப்படியாக குறைத்தல் என்பது தீர்வல்ல. உடனடியாக முழுமையாக மதுவை தீண்டாமையே ஒரே வழி.
ஒவ்வொரு புத்தாண்டு தினத்திலோ, பிறந்த தினத்திலோ மதுவை விடுகிறேன் என உறுதிமொழி எடுத்து, சிலபல நாட்களுக்குப் பிறகு மீண்டும் தொடர்வது சிலரது வழக்கம். இவர்களுக்கும் படிப்படி வழிமுறை வழிகாட்டாது. ஒட்டுமொத்தமாக ஒரேநாளில் நிறுத்துவது ஒன்றே இவர்களைக் காப்பாற்றும்.குடும்பம் மற்றும் நட்புகளிடம்...
மதுப்பழக்கத்தை கைவிட விரும்புகிற நபர் குடும்பத்தினர் (குழந்தைகள் உள்பட) மற்றும் நண்பர்களிடம் தனது குறிக்கோளைக் கூறிவிட வேண்டும். அவர்களின் ஒத்துழைப்பு நிச்சயம் கிடைக்கும். அவர்களால் கண்காணிக்கப்படுவது எளிது என்பதால், மதுவுக்கு மீண்டும் அடிமையாவதையும் தவிர்க்கலாம்.
மொடாக்குடி நிலையில் இருக்கிறவர்கள் சட்டென ஒரேநாளில் பழக்கத்தைக் கைவிடுவது பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். ஆனால், பயம் கொள்ள வேண்டாம். மது நிறுத்த பின்விளைவுகளை நிச்சயம் சமாளிக்க முடியும்!
ஒன்றுக்கு மேற்பட்ட முறைகள் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்ட பிறகும் மதுவைத் தொடர்ந்தால் மரணமே எஞ்சும்.மதுப்பழக்கத்தை கைவிட விரும்புகிற நபர் குடும்பத்தினர் (குழந்தைகள் உள்பட) மற்றும் நண்பர்களிடம் தனது குறிக்கோளைக் கூறிவிட வேண்டும்.
அதிர்ச்சி டேட்டா
67.5 சதவிகித ஆல்கஹால் கொண்ட ஸ்ட்ராங் பியர் விற்பனையில் உள்ளது. நல்லவேளையாக இந்தியாவில் அல்ல!31 சதவிகித ராக் பாடகர்களின் மரணத்தில் மது சம்பந்தப்பட்டிருக்கிறது.
(தகவல்களைப் பருகுவோம்!)
டாக்டர் ஷாம்
|