மகிழ்ச்சி!
மனம் மலரட்டும்
மகிழ்ச்சி...ரஜினி என்கிற வசீகரத்தால் இப்போது உலகம் முழுவதும் உச்சரிக்கப்படும் வார்த்தை. நம் ஆரோக்கியமான வாழ்க்கைக்கும் அதுவே இப்போது அவசியமானதும் கூட !‘உணவுமுறை, உடற்பயிற்சிகள், நல்ல தூக்கம் எப்படி முக்கியமோ... நோய் வந்துவிட்டால் மருந்து, மாத்திரைகள், சிகிச்சைகள் எப்படி முக்கியமோ...
 அதே அளவுக்கு மகிழ்ச்சியும் ஆரோக்கியமான வாழ்க்கைக்குத் தேவை. அந்த அளவுக்கு உடல்நலம், மனநலம் இரண்டிலும் அதீத செல்வாக்கு செலுத்தும் திறன் கொண்டது மகிழ்ச்சி. இந்த உண்மை அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது’ என்கிறார் வாழ்க்கைமுறை மேம்பாட்டு நிபுணர் கௌசல்யா நாதன்.
ஊடகங்களின் வளர்ச்சியால் ஆரோக்கியமாக இருப்பதற்கான வழிகள் இன்று நமக்குத் தெரிந்திருக்கிறது. உடல் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பழக்கமும்ஏற்பட்டு வருகிறது. இந்த விழிப்புணர்வு வரவேற்கப்பட வேண்டியது. இவற்றுடன் மன ஆரோக்கியம், குடும்பத்தினரின் ஆரோக்கியம், Spritual health என்று சொல்கிற ஆன்மிக ரீதியான வளர்ச்சி போன்றவற்றிலும் மக்கள் கவனம் செலுத்த வேண்டும்.
 காரணம், இவையெல்லாம் சேர்ந்து ஒரு சீரான அளவில் செயல்படுவதுதான் ஆரோக்கியம். உலக சுகாதார நிறுவனம் ஆரோக்கியம் என்று இந்த அளவுகோலின்படிதான் வரையறுக்கிறது. அதாவது, ஒருவர் நோயில்லாமல் வாழ்வது மட்டுமே ஆரோக்கியம் இல்லை. மன ரீதியாகவும் ஒருவர் அமைதியானவராக இருக்க வேண்டும் என்பதையே WHO வலியுறுத்துகிறது. இதனால்தான் Health and Happiness என்ற வார்த்தையே பிரபலமாக இருக்கிறது.
நோய்களின் ஆரம்பப்புள்ளிMental conditioning என்கிற மன ரீதியான பக்குவம், தெளிவு என்பது எல்லோரிடமும் இருக்க வேண்டிய அடிப்படையான ஒரு விஷயம். மனம் ஏதேனும் ஒருவகையில் பாதிக்கப்பட்டால்தான் பதற்றம், கோபம், போட்டி, பொறாமை, எதிர்மறை எண்ணங்கள், மற்றவர்களைக் குறைகூறுவது என்று சிக்கலான நிலையை நோக்கிச் செல்கிறோம். பெரும்பாலான நோய்கள் மனதில்தான் ஆரம்பமாகிறது என்பதும் ஓர் ஆச்சரியமான அறிவியல் உண்மை.
நாம் அறிந்தோ, அறியாமலோ நம் சுற்றுப்புறத்தின் ஒவ்வொரு நிகழ்வையும் மனம் கிரகித்துக் கொண்டே இருக்கிறது. உதாரணத்துக்கு, ஒரு கல்யாணத்துக்குச் செல்கிறோம். அங்கு ஒருவரின் புடவையைப் பார்த்து ‘நல்லாருக்கே’ என்று ஆச்சரியப்படலாம். இல்லாவிட்டால், அதுபோன்ற புடவை நமக்கு இல்லையே என்ற ஏக்கம் வரலாம்.
இதுபோன்ற சின்னச் சின்ன விஷயங்கள் சுற்றுப்புறத்தில் இருந்து அன்றாடம் மனதில் பதிந்துகொண்டே இருக்கிறது. பதிவாகும் இந்த எண்ணங்களை பக்குவம் இல்லாமல் அப்படியே செயல்படுத்தினால் அதுதான் பிரச்னையாக உருமாறுகிறது. ஆரோக்கியமான வாழ்க்கைக்கு இடையூறு ஏற்படுவதற்கும், நோய்கள் உண்டாவதற்கும் அடிப்படையான காரணமும் இதுதான். பாதிப்புகள் ஒன்றா... இரண்டா?
மனதில் மகிழ்ச்சி தொலையும்போதுதான் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது, நீரிழிவு வருகிறது, உணர்ச்சிகளின் கொந்தளிப்பால் Emotional eating என்கிற அதிகமாக சாப்பிடுகிற பழக்கம் உருவாகிறது. அதைத் தொடர்ந்து பருமன் ஏற்படுகிறது. இதேபோல ஹார்மோன் குளறுபடிகள், தூக்கமின்மை என்று ஒருவர் நோயாளியாக மாறுவதன் ஆரம்பப்புள்ளி மகிழ்ச்சி தொலைவதுதான். நாம் மகிழ்ச்சியாக இல்லாதபோது நம்மைச் சுற்றியிருப்பவர்களையும் அந்த எதிர்மறைச் சூழல் பாதிக்கும்.
அதனால், மனப்பக்குவம் என்பது முழுமையான ஆரோக்கியத்துக்கு மிகவும் அத்தியாவசியம். இந்த உண்மை பலருக்கும் தெரிவதில்லை. அதனால் மன ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் செயல்களைச் செய்ய வேண்டும். இந்த மனநல பாதிப்பை நம்மை நாமே கவனிப்பதன்மூலம் புரிந்துகொள்ள முடியும்.
எப்போது நம்மை அறியாமல் மற்றவர்களைப் பார்க்கும்போது ஒரு பொறாமை உணர்வு ஏற்படுகிறதோ அப்போதே நாம் மன அளவில் சரியாக இல்லை என்பதை உணர்ந்துகொள்ளலாம். மனம் தொந்தரவுக்கு ஆளாகியிருக்கும் இந்த நிலையையே Psychosomatic disorder என்கிறார்கள்.தீர்வு தெரிந்ததுதான் இந்தப் பிரச்னைக்கான தீர்வு நம் எல்லோருக்குமே தெரிந்ததுதான்.
யோகாசனங்கள், தியானம், மூச்சுப்பயிற்சி, புத்தகங்கள் வாசிப்பது, அதிகாலையில் எழுவது, நம்மை நாமே ஆராய்ந்து பார்ப்பது, இசை கேட்பது, இயற்கையோடு இயைந்து இருப்பது போன்றவை இவற்றில் முக்கியமானவை. நல்ல விஷயங்களையே பார்ப்பது, நல்ல விஷயங்களையே கேட்பது, நல்ல விஷயங்களையே சிந்திப்பது என்று பாசிட்டிவான விஷயங்களால் நம் மனதை நிரப்புவதும் இதில் முக்கியம்.
இவையெல்லாம்தான் ஆரோக்கியமான வாழ்க்கையை நோக்கி நாம் பயணிப்பதற்கு உதவி செய்யும். கொஞ்சம் உங்களையும் கவனியுங்கள் இன்னொரு முக்கியமான விஷயம்... சுய அக்கறை. தன் குடும்பத்தின் நலத்தில் அக்கறை செலுத்துகிற குணம் எல்லோருக்கும் உண்டு.
ஆனால், தன்னைத் தானே கவனித்துக் கொள்கிற பழக்கம் எல்லோரிடமும் இல்லை. குறிப்பாகப் பெண்கள் தங்கள் குடும்பத்தினரின் ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறை செலுத்துவார்கள். தன்னை கவனித்துக் கொள்ள மாட்டார்கள். தன்னை கவனித்துக் கொள்வதே குடும்பத்துக்குச் செய்கிற பெரிய பங்களிப்பு என்பதைப் பலர் உணர்வதில்லை.
குடும்பத்தில் யாராவது ஒருவருக்கு உடல்நலக் குறைவு என்றால், அந்தப் பாதிப்பு மொத்த குடும்பத்திலும் எதிரொலிக்கும் என்பதையும் மறந்துவிடுகிறார்கள். அதனால், தன்னைத்தானே கவனித்துக் கொள்வதில் அக்கறை செலுத்த வேண்டும். அப்போதுதான் தங்களுக்கென்று நேரத்தை ஒதுக்கி உணவுமுறை, உடற்பயிற்சி என்று வாழ்க்கைமுறையை ஒழுங்குக்குள் கொண்டு வருவார்கள். யூனிபார்ம் சரியாக இருக்கிறதா ?
இன்று உடல் பருமனால் ஏற்படுகிற பிரச்னைகள் பெரிதாகிக் கொண்டிருக்கிறது. உடற்பயிற்சி செய்யாமல் சோம்பேறித்தனமாக இருப்பது புகைப்பிடிக்கும் பழக்கத்துக்கு இணையானது என்று அறிவியலாளர்கள் கூறி வருகிறார்கள். அதனால், உடல்ரீதியாக செயல் பாடுகளை அதிகமாக்கிக் கொள்ள வேண்டும். உடல் எடையை எப்போதும் கவனத்தில் கொள்ள வேண்டும். இதை பள்ளிப் பருவத்திலேயே கண்காணிக்க வேண்டும். ஒரு குழந்தைக்கு யூனிபார்ம் தைக்கும்போது, அந்த கல்வி ஆண்டு முழுவதும் அது சரியானதாக இருக்க வேண்டும்.
கல்விஆண்டின் இடையிலேயே அளவு போதாமல் பெரிய அளவு யூனிபார்ம் தேவைப்பட்டால் குழந்தை பருமனாகிக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம். நீங்கள் உடனடியாக ஒரு குழந்தைகள் நல மருத்துவரைப் பார்க்க வேண்டியது அவசியம் என்றும் அர்த்தம்.அறிவது வேறு... உணர்வது வேறு !‘உணவே மருந்து...
மருந்தே உணவு’ என்பது எல்லோரும் அறிந்ததுதான். இங்கு முக்கியமான விஷயத்தையும் கவனிக்க வேண்டும். அறிவது வேறு; உணர்வது வேறு. உணவே மருந்து என்பதை நாம் அறிந்திருக்கிறோம். ஆனால், உணரவில்லை.
நோய் வரும்முன்னரே அதைத் தடுக்க வேண்டும் என்ற எச்சரிக்கை நம்மிடம் இருப்பது இல்லை. நோய் வந்தபிறகுதான் உணவுக்கட்டுப்பாடு பற்றிப் பேசுகிறோம். உடற்பயிற்சிகள் பற்றி விசாரிக்கிறோம். இந்த உணர்வு நம்மிடம் ஏற்பட்டுவிட்டால் மகிழ்ச்சியான வாழ்க்கை நமக்குக் கிடைத்துவிடும். மனதில் மகிழ்ச்சி இருந்தால் ஆரோக்கியம் தானாகவே நம்மைப் பின் தொடரும் !
ரஜினி சொல்லும் மகிழ்ச்சி !
‘மகிழ்ச்சி’ என்ற வார்த்தையை டிரெண்டாக்கிய ரஜினியின் பார்வையில் மகிழ்ச்சி என்பது என்ன ? ஒரு தொலைக்காட்சி பேட்டியில் அவர் கூறியது....‘சந்தோஷத்தை வாடகைக்கு வாங்கலாம்; விலைக்கு வாங்க முடியாது’ என்று வைரமுத்து கூறுவதுபோல உலகத்தில் நாம் பார்க்கும், ஆசைப்படும் விஷயங்கள் எல்லாமே தற்காலிக மகிழ்ச்சியைத்தான் தரும். பணம், புகழ், சூப்பர் ஸ்டார் பட்டம் என்பதெல்லாம் மகிழ்ச்சிதான்.
ஆனால், அவையெல்லாமே தற்காலிகமானவையே. நிரந்தரமான மகிழ்ச்சி என்பது நம் மனதுக்குள் நாமே திருப்தியாக, சந்தோஷமாக உணர்வதுதான். அதனால், சந்தோஷத்தை வெளியில் தேடாதீர்கள். உள்ளுக்குள் தேடுங்கள்.‘இந்த விஷயம் கிடைத்தால்தான் நிம்மதி’ என்று ஏதாவது ஒன்றை நினைத்து கவலைப்படும் பழக்கம் பலருக்கும் இருக்கிறது. அவர்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். சில விஷயங்கள் கிடைக்காதவரைதான் அதை நினைத்து ஏங்கிக் கொண்டிருப்போம். கிடைத்த பிறகு அந்த சந்தோஷம் கொஞ்ச நாட்களில் காணாமல் போய்விடும்.
அதனால், ஆசைப்பட்டது கிடைக்கவில்லையே என்று வருத்தப்பட வேண்டியதில்லை. சில விஷயங்கள் கிடைக்காமல் இருப்பதே மகிழ்ச்சி!மனதில் மகிழ்ச்சி தொலையும் போது தான் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது, நீரிழிவு வருகிறது, உணர்ச்சிகளின் கொந்தளிப்பால் Emotional eating என்கிற அதிகமாக சாப்பிடுகிற பழக்கம் உருவாகிறது. அதைத் தொடர்ந்து பருமன் ஏற்படுகிறது. ஒருவர் நோயாளியாக மாறுவதன் ஆரம்பப்புள்ளி மகிழ்ச்சி தொலைவதுதான்.
- ஞானதேசிகன் படம் : ஆர்.கோபால்
|