அன்பையும் உறவுகளையும் சம்பாதித்துக் கொடுத்த செவிலியர் பணி!



நைட்டிங் கேல்களின் கதை

``இது தாய்மைக்கு நிகரான பணி. இந்தத் துறைக்கு வரும்போதே அதை உணர்ந்திருந்தேன். அந்த புரிதலின் காரணமாக சிகிச்சைக்கு வருகிறவர்களை நோயாளிகளாக மட்டுமே பார்த்ததில்லை.

அவர்களுடைய உறவினர்களில் ஒருத்தியாக அக்கறையுடனே கவனித்திருக்கிறேன். கவனிக்க யாருமற்றவர்களாக இருந்தாலும் இரவு முழுக்க அவர்களுடன் நானும் விழித்திருந்து, அவர்களின் வலியை உணர்ந்திருக்கிறேன்’’ - சொல்லும்போதே சிலாகிக்கிறார் சேலம் அரசு மருத்துவமனையில் செவிலியர் கண்காணிப்பாளராக பணிபுரியும் பிளாசம்.

செவிலியர் பணியில் தான் கடந்து வந்த 35 ஆண்டு காலத்தில் பல்வேறு அனுபவங்கள் கொட்டிக் கிடக்கிறது. ‘‘எனது சொந்த ஊர் அரூர். அப்பா எரிக் ஜான்சன் பொதுப்பணித்துறையில் பணியாற்றினார். 4 பெண்கள், 2 ஆண் குழந்தைகள். என்னுடன் சேர்ந்து 6 பேர். சிறுவயதில் பெரிய கனவுகள் எதுவும் இல்லை. ஒருமுறை அப்பா விபத்தில் காயம் பட்டார். அவர் அதிலிருந்து மீளும் வரை அத்தனை உதவிகளையும் உடனிருந்து செய்ேதன். அப்போதுதான் எதிர்காலத்தில் செவிலியர் ஆக வேண்டும் என்ற எண்ணம் துளிர்த்தது.

சென்னை மருத்துவக் கல்லூரியில் பயிற்சியை முடித்த உடன் வேலை. வேலையில் சேர்ந்த உடன் திருமணம் என வாழ்க்கை பரபரப்பானது. கணவர் ஹென்றி பிரேம் குமாருக்கு தறி பிசினஸ். இரண்டு மகன்கள். காஞ்சிபுரம், அரூர், தர்மபுரி, சென்னை என குடும்பத்தையும், குழந்தைகளையும் விட்டு விட்டு பல ஊர்களுக்கு வேலைக்காக பயணித்தேன். இப்போது சேலத்தில் செவிலியர் மேற்பார்வையாளர் பணியில் தொடர்கிறேன்’’ எனும் பிளாசத்தின் வயது 65. இந்த வயதிலும் தொடர்கிறது அதே சுறுசுறுப்பும், அர்ப்பணிப்பும்.

‘‘அரசு மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில் பணியாற்றிய அனுபவங்கள் எப்போதும் மறக்க முடியாதவை. காயங்களும், கவலையுமாக வரும் நோயாளிகளை மீண்டும் புன்னகையுடன் பார்க்கும்போது கிடைக்கும் ஆனந்தம் வேறு எதிலும் கிடைக்காது. சென்னை கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவ மனையில் இருந்த காலங்களும் இதேபோல் மறக்க முடியாதவையே. வாழ்க்கை முழுவதும் அங்கேயே பணியாற்ற வேண்டும் என்று கூட ஆசைப்பட்டேன். குடும்ப சூழல் காரணமாக பணிமாறுதலில் வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விட்டது.

மனநலம் பாதிக்கப்பட்டவர்களை சிறு குழந்தைகள் போலத்தான் உணர்ந்தோம். சாப்பிட அடம் பிடிப்பவர்களுக்கு உணவு ஊட்டிவிட்டு, மருந்து சாப்பிட வைத்து.. அவர்கள் சொல்லும் கதைகள் கேட்டு, சிகிச்சை முடிந்து வெளியில் செல்லும்போது நன்றிப் பெருக்கில் வழியும் கண்ணீர் துளிகளுக்கு ஈடு இணை இல்லை. அப்போது நமக்குள் ஏற்படும் தாய்மை உணர்வு அனைத்திலும் உன்னதமானது.

ேவறு எந்தப் பணியில் நான் சேர்ந்திருந்தாலும் இத்தனை உறவுகளும், உணர்வுப் பூர்வமான அன்பும் எனக்கு கிடைத்திருக்காது. என் காலம் உள்ளவரை ஒரு செவிலியராக உதவ வேண்டும் என்றே விரும்புகிறேன்.

செவிலியர் பணியில் கற்றுக் கொள்ளும் சகிப்புத் தன்மை நமது தனிப்பட்ட வாழ்வில் சந்திக்கும் பிரச்னைகளையும் ஒன்றும் இல்லாததாக மாற்றிவிடுகிறது. சொந்த வாழ்விலும் புரிதலை மேம்படுத்துகிறது. ஒரு முழு மனுஷியாக... சக மனிதர்களுக்கு பயனுள்ள வகையில் நான் வாழ்ந்தேன் என்ற திருப்தியே இந்தப் பிறவியில் எனக்குக் கிடைத்த பெரும் புண்ணியம்’’ என்கிற அவரது வார்த்தைகளில் நாமும் உணர்கிறோம் ஓர் தாய்மையின் பேரன்பை !

- ஸ்ரீதேவி

பிளாசம்