அச்சம் என்பது மடமையடா!



போபியா

‘கபாலி’ ரஜினியை எத்தனை பேருக்குத் தெரியுமோ அத்தனை பேருக்கும் இப்போது ராதிகா ஆப்தேவையும் தெரியும். விஷயம் ராதிகா ஆப்தேவின் பிரபலம் பற்றியது அல்ல. அவர் இதற்கு முன்பு நடித்த ‘போபியா’ என்ற இந்தி படம் தொடர்பானது!

வீட்டைவிட்டு வெளியே செல்லவே பயந்து நடுங்கும் Agoraphobia பாதிப்பு கொண்ட பெண்ணாக அதில் ராதிகா ஆப்தே அசத்திஇருப்பார். ஒரு மனநல பிரச்னையின் தீவிரம் இந்த அளவுக்கு இருக்குமா என்று பலரை அதன் மூலம் யோசிக்கவும் வைத்தது அகோராபோபியா. மனநல மருத்துவரான அசோகனிடம் இந்தப் பிரச்னையை  நாம் கவனிக்க வேண்டிய அவசியம் இருக்கிறதா என்று கேட்டோம்…‘‘பயங்களில் நிறைய வகைகள் உண்டு. ஒவ்வொரு பயத்துக்கும் ஒவ்வொரு பெயரும் உண்டு.

மருத்துவ உலகில் இந்த பயங்களை போபியா என்ற பிரிவின் கீழ் வகைப்படுத்துகிறார்கள். அந்த போபியாக்களில் வெளியிடங்களுக்குச் செல்ல பயப்படும் இந்த Agoraphobiaவும் ஒன்று.அகோராபோபியா பிரச்னை கொண்டவர்கள் வீடு மட்டுமே பாதுகாப்பானது என்று நினைப்பார்கள். வெளியிடங்களைப் பற்றி நினைத்தாலே திகில் உண்டாகும்.

கடைத்தெருக்கள், திரையரங்கம் என்று மக்கள் கூடும் இடங்களுக்குச் செல்லவே அச்சப்படுவார்கள். வெட்ட வெளிகளை நினைத்தால் கூட பயப்படுவார்கள். இந்தப் பிரச்னை ஆண்கள், பெண்கள் இருபாலருக்குமே வருகிறது. அதிலும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்களுக்கு இந்த பாதிப்பு அதிகம் ஏற்படுகிறது.

(‘போபியா’ படத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதன் எதிரொலியாகவே அகோராபோபியாவால் ராதிகா ஆப்தே பாதிக்கப்பட்டிருப்பார்.) அதேபோல் பள்ளி செல்ல பயப்படும் குழந்தைகளுக்கு இந்தப் பாதிப்பு இருக்க வாய்ப்பு உண்டு.

அதனால், பள்ளி உள்பட வெளியிடங்களுக்குச் செல்ல அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு மனநல ஆலோசனை தேவை என்பதை பெற்றோர் உணர்ந்து அவர்களைப் பக்குவமாகக் கையாள வேண்டும்’’ என்பவர், அகோராபோபியா உருவாக சில அசாதாரணமான நிகழ்வுகளே காரணம் என்கிறார்.

‘‘கலவரம், இயற்கைச் சீற்றங்களில் பாதிக்கப்பட்டவர்கள், குடும்ப உறவுகளை இழந்தவர்கள், ஆதரவற்றவர்களுக்கு இந்த பாதிப்பு அதிகம் ஏற்படுகிறது. போதை பழக்கமுடையவர்கள், தூக்க மாத்திரைகள் எடுத்துக் கொள்கிறவர்களுக்கும் இந்தப் பிரச்னை ஏற்படலாம். வளர் இளம் பருவத்தில் உடல், மனம் மற்றும் சமூகம் சார்ந்த பிரச்னைகளை சந்திக்கும்போதும் இந்த அபாயம் அதிகமாகிறது.

இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பதற்றம் அதிகரிக்கும்போது Epinephrine என்கிற ரசாயன மூலக்கூறு உடலில் அதிகரிக்கும். அதனால் உடலில் பல மாற்றங்கள் ஏற்படுகிறது. நாடித்துடிப்பு மற்றும் இதயத்துடிப்பு அதிகரிப்பது, அதிகம் வியர்வை ஏற்படுவது, அடிக்கடி மலம், சிறுநீர் கழிக்கும் எண்ணம் ஏற்படுவது, உடல்ரீதியாக பாதிக்கப்படுவோம் என்று அஞ்சுவது, வெளியிடங்களுக்குச் செல்வதை முற்றிலுமாகத் தவிர்ப்பது போன்றவை இந்நோயின் அறிகுறிகள்...’’

இதற்கு சிகிச்சை என்ன ?‘‘அகோராபோபியாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனப்பதற்றத்தைப் போக்குவதற்கான மாத்திரைகள் இருக்கின்றன. அதன்மூலம் ஓரளவு பிரச்னையின் தீவிரத்தைக் கட்டுப்படுத்த முடியும்.

இத்துடன், அவர்களுக்கு நடத்தை மாற்று சிகிச்சை கொடுப்பதும் முக்கியமானது.
வெளியிடங்களில் தங்களுக்கு ஆபத்து வருமோ என்று அச்சப்பட்டுதான் வீட்டுக்குஉள்ளேயே முடங்கிக் கிடப்பார்கள். அவர்கள் பயப்படும் இடங்கள் பற்றி முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்.

ஒரு ஷாப்பிங் மாலுக்கு செல்ல பயந்தால் அதே இடத்துக்கு தைரியம் அளித்து அழைத்துச் செல்ல வேண்டும். ‘நீ பயந்தது போல் இங்கு எந்த அசம்பாவிதங்களும் இல்லை. அதை நீயே நேரடியாகப் பார். உனக்குள் இருந்தது தேவையற்ற பயமே’ என்பதை அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். அதே இடத்தில் அவர்களை அமரவைத்து, ‘நாங்கள் உன்னுடன் இருக்கிறோம்.

என்ன விளைவுகள் வந்தாலும் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்’ என்று அவருடன் இருக்க வேண்டும். இதுபோல, அவர்கள் பயப்படும் இடங்களுக்கு அழைத்துச் சென்று, பயத்தைப் போக்குவதற்கு பழக்கப்படுத்த வேண்டும். அவர்களுக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டதன் காரணம் என்ன என்பதையும் கண்டறிந்து அதற்கேற்ற கவுன்சலிங்கும் கொடுக்க வேண்டும்’’ என்கிறார் அசோகன்.

``அகோராபோபியா பிரச்னை கொண்டவர்கள் வீடு மட்டுமேபாதுகாப்பானது என்று நினைப்பார்கள். வெளியிடங்களைப் பற்றி நினைத்தாலே திகில் உண்டாகும். கடைத்தெருக்கள், திரையரங்கம் என்று மக்கள் கூடும் இடங்களுக்குச் செல்லவே அச்சப்படுவார்கள்...’’

- க.கதிரவன்