அதிசய கல்மீன்



வியக்க வைக்கும் திகில் தகவல்கள்

உலகிலேயே அதிக விஷம் உள்ள மீன் எது தெரியுமா?

*‘Stone fish’ எனப்படும் ‘கல் மீன்’தான். ஆழ்கடலில் ஆராய்ச்சி செய்வோருக்கும் முத்துக் குளிப்போ்ருக்கும் சிம்மசொப்பனமாக விளங்கும் கல் மீன் பற்றிய திகில் தகவல்கள்:
 
*பழுப்பு அல்லது சாம்பல் நிறத்தில் பார்ப்பதற்கு கல் போன்றே கரடுமுரடாகத் தோற்றமளிக்கும் இந்த மீன், ஆங்காங்கே சிவப்பு, மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிற
தீற்றல்களுடன் காணப்படும்.
 
*14 முதல் 20 அங்குலம் நீளம் வரை வளரும் இம்மீன்கள் இரண்டே கால் கிலோ எடை வரை இருக்கும். கல் மீனில் ஐந்து இனங்கள் உண்டு.
 
*இந்திய, பசிபிக் பெருங்கடல்களிலும் சில ஆறுகளிலும் இந்த அதிசய மீன் வாழும். பவளப்பாறைகளும் ஆழ்கடல் பாறைகளுமே இதன் தங்குமிடம் ஆகும். தனியாகவோ, கூட்டமாகவோ வசிக்கும்.
 
*இந்த விநோத மீனின் முதுகுப்புறத் துடுப்பு, பதிமூன்று முட்களாக உருமாறி உள்ளது. ஆபத்து நேரங்களில் இந்த முட்கள் பெரிதாகி விடும்.
 
*இடுப்புப் பகுதியில் இரண்டு முட்களும் பின்பகுதியில் மூன்று முட்களும் காணப்படும். ஆனால், இம்முட்கள் தோலுக்குள் மறைந்திருக்கும்.
 
*கல், பாறைகளிடையே இருந்தால், அதன் தோற்றம் நம் கண்களை ஏமாற்றி விடும். நீச்சலடிப்பவர்கள் தெரியாத்தனமாக கல் மீனை மிதித்து விட்டால், அதோ கதிதான்.
 
*மீன் குத்திய இரண்டு மணி நேரத்துக்குள்ளாக மருத்துவரிடம் செல்ல வேண்டும். இல்லாவிட்டால், கடுமையான வலி, திசு அழுகல், முடக்குவாதம் ஏற்பட்டு உயிர் பிரிந்து விடும்.
 
*இது போன்ற விஷ மீன்களிடம் இருந்து தப்பிக்க, முக்குளிப்பவர்கள் கனத்த அடிப்பாக
முடைய ஷூக்களை அணிந்து, பாதங்களை மெல்லப் பதித்து நடப்பதுதான் ஒரே வழி ஆகும்.
 
*ஒவ்வொரு முள்ளுக்கு அடியிலும் சுரப்பிகள் அமைந்திருக்கும். அந்த சுரப்பிகளில் அழுத்தம் ஏற்படும்போது, (யாராவது அதை மிதித்தால், மற்ற மீன்கள் தாக்கினால்) விஷம் வெளியேறும்.
 
*அழுத்தத்திற்குத் தகுந்தாற்போல் விஷத்தின் அளவும் இருக்கும். நன்றாக அழுத்தி மிதித்தால், நிறைய விஷம் ஏறும். காலியாகும் விஷப் பைகள் இரண்டு வாரங்களில் மீண்டும் நிரம்பி விடும்.
 
*கல் மீன் ஒரு ஊனுண்ணி. பல வகை சிறிய மீன்களையும், இறால் மீன்களையும் உண்ணும். இரை வரும் வரை பொறுமையாகக் காத்திருக்கும். அருகில் வந்து விட்டால், வாயைத் திறந்து சட்டென்று விழுங்கி விடும். வெறும் 0.015 நொடியில் மொத்த தாக்குதலும் நடந்தேறி விடும்.
 
*இம்மீன் மிக மெதுவாகவே நீந்தும். நீருக்கு வெளியே வந்தாலும், 24 மணி நேரம் உயிர் வாழக் கூடிய வல்லமை பெற்றது இது. தண்ணீரைத் துப்பும் விநோத குணமும் இதனிடம் உண்டு.
 
*மகா வெள்ளை சுறா, புலிச் சுறா ஆகிய பெரிய சுறா மீன்களும், திருக்கை மீன்களும் கல் மீனைத் தின்று ஏப்பம் விட்டு விடும்.
 
*கல் மீன் லட்சக்கணக்கில் நீருக்குள் முட்டையிடும். பொரிித்து வரும் குஞ்சுகளை மற்ற மீன்கள் தின்று விடும். சொற்ப எண்ணிக்கை மீன்கள் மட்டுமே வளர்ந்து பெரிதாகும்.
 
*இதன் ஆயுள் 5 முதல் 10 வருடங்கள் ஆகும்.
 
*மீன்காட்சிச் சாலைகளில் கல் மீன் முக்கிய காட்சிப் பொருளாக மாறி விட்டது. இதன் விநோத தோற்றத்திற்காக பலரும் இதை வீடுகளில் விரும்பி வளர்க்கின்
றனர்.
 
*சீனா, ஜப்பான் போன்ற ஆசிய நாடுகளில் இம்மீன், ருசியான உணவாக உண்ணப்படுகிறது. வேக வைக்கும்போது, இதன் விஷத்தன்மை நீங்கி விடுமாம்.

- ஹெச்.தஸ்மிலா,கீழக்கரை.