சருமப் புற்றுநோயை சமாளிக்க தடுப்பூசி ரெடி!



உடலின் மிகப் பெரிய உறுப்பு, தோல். இது உடலின் உள்ளுறுப்புகளை ஒரு போர்வை போல் போர்த்திப் பாதுகாக்கிறது. வெயில், மழை, கிருமி என்று எதுவும் உடலைப் பாதிக்காமல் பார்த்துக்கொள்கிறது.

வியர்வை மூலம் உப்புக் கழிவுகளை வெளியேற்றி உடலின் வெப்பத்தைச் சமப்படுத்துகிறது. தொடு உணர்வைத் தருகிறது. சூரிய ஒளியிலிருந்து ‘வைட்டமின் டி’யைத் தயாரித்துக் கொடுக்கிறது.

சராசரியாக 2 மில்லி மீட்டர் தடிமன் கொண்ட தோலின் மேல் பகுதிக்கு எபிடெர்மிஸ் என்று பெயர். இது கெரட்டின் செல்களால் ஆனது. இங்கேதான் நம் தோலுக்கு நிறம் தருகின்ற மெலனின் நிறமிகள் உள்ளன.

இந்த நிறமிகளின் எண்ணிக்கை மிக அதிகம் என்றால், கறுப்பு நிறம்; கொஞ்சம் குறைவாக இருந்தால் மாநிறம்; மிகவும் குறைவாக இருந்தால் சிவப்பு நிறம். ஆப்ரிக்கருக்குக் கறுப்புத் தோல், இந்தியருக்கு மாநிறத் தோல், ஐரோப்பியர்களுக்கு வெள்ளைத் தோல் அமைவது இப்படித்தான்.

தோலின் அடிப்பகுதியான ஹைப்போடெர்மிஸில் தொடங்கி, நடுத்தோல் டெர்மிஸ் வழியாக எபிடெர்மிஸுக்கு வந்து சேருகிறது வியர்வைச் சுரப்பி. இதுதான் நம் உடலுக்குள் இருக்கும் ஏர்கூலர். வெயில் அதிகரிக்கும்போதெல்லாம் வியர்வையை அதிகமாகச் சுரக்கச் செய்து உடல்கழிவுகளை வெளியேற்றுவது இதன் வேலை.

வியர்வை ஆவியாவதற்குத் தேவையான வெப்பத்தைத் தோலிலிருந்து எடுத்துக் கொள்வதால், உடல்சூடு குறைந்து சமநிலை அடைகிறது. டெர்மிஸ் பகுதியில் இருக்கிற கொலாஜென், எலாஸ்டின் எனும் புரதப் பொருள்கள் தோலை மிருதுவாக்கி மீள் தன்மையைத் தருகின்றன.

தோலிலுள்ள எண்ணெய் சுரப்பிகள் ‘சீபம்’ எனும் கொழுப்பைச் சுரப்பதால்தான் தோல் பளபளப்பாக இருக்கிறது. இதுமட்டும் சுரக்காவிட்டால் தோல் வறண்டு போகும்; வெயில் காலத்தில் பாளம் பாளமாக வெடித்துவிடும்.

உடலின் மொத்த எடையில் சுமார் 15 சதவீதமே உள்ள தோலில் இத்தனைச் சிறப்பம்சங்கள் இருப்பதுபோல், தோலுக்கு ஏற்படும் பிரச்னைகளும் ஏராளம்தான். வியர்க்குரு, தேமல், சிரங்கு, வேனல் கட்டி, சோரியாசிஸ், தொழுநோய், புற்றுநோய் என நீண்ட பட்டியலே போடலாம்!

இவற்றில் மிகவும் மோசமானது ‘மெலனோமா’ எனும் தோல் புற்றுநோய். கடுமையான சூரிய ஒளி தோலைத் தாக்கும்போது அதிலுள்ள புற ஊதாக்கதிர்கள் தோலில் உள்ள மரபணுக்களை சேதப்படுத்துவதால் இது ஏற்படுகிறது. பரம்பரை காரணமாகவும் இது வரக்கூடும். உடலில் மச்சத்தின் எண்ணிக்கை 100க்கும் அதிகமாக இருப்பவருக்குத் தோல் புற்றுநோய் வர வாய்ப்புண்டு.

இது தோலில் தனியாகவும் வரலாம்; அல்லது ஏற்கனவே இருந்த மச்சத்திலும் வரலாம். மச்சம் நிறம் மாறுவது இதன் ஆரம்ப அறிகுறி. அடுத்து அதன் வடிவம், அளவு மாறும். அரிப்பு, தடிப்பு, வலி ஏற்படும்.

இந்த அறிகுறிகள் தெரிந்தால் உடனே மருத்துவரிடம் காண்பித்து ஆலோசனை பெற வேண்டும். ஏனெனில், தோல் புற்றுநோயை ஆரம்ப நிலையில் கண்டறிந்து விட்டால் குணப்படுத்துவது எளிது.

தோல் புற்றுநோயைக் கணிப்பதற்கு தோல் பயாப்சி, சி.டி. ஸ்கேன், பெட்ஸ்கேன் எடுத்துப் பார்ப்பது வழக்கம். பொதுவாக பயாப்சி பரிசோதனையின் முடிவு தெரிவதற்கு ஒரு வாரம் ஆகிவிடும். இந்த தாமதத்தைத் தவிர்க்க இப்போது புதிய ஸ்கேன் கருவி ஒன்றை அமெரிக்காவில் கண்டுபிடித்துள்ளனர். 

‘மெலாஃபைன்ட் ஆப்டிகல் ஸ்கேனர்’ என்று அதற்குப் பெயர். நியூயார்க்கில் உள்ள மேலா சயின்சஸ் நிறுவனம் இதை உருவாக்கியுள்ளது. இது மின்காந்த அலைகளைப் பயன்படுத்தி தோலின் பகுதிகளைப் படம் பிடிக்கிறது. ஏற்கனவே இதில் பதித்து வைத்துள்ள டிஜிட்டல் படங்களுடன் இவற்றை ஒப்பிட்டுப் பார்த்து, புற்றுநோய் உள்ளதா, இல்லையா என்பதை உடனே தெரிவித்து விடுகிறது.

மெலனோமா இருக்குமோ எனச் சந்தேகம் வந்தவர்களுக்கு முதலில் இந்தப் பரிசோதனையைச் செய்து அது இருப்பது உறுதியானவர்களுக்கு மட்டும் பயாப்சி மற்றும் பிற பரிசோதனைகளைச் செய்வதற்கு இது வழி கொடுக்கிறது. இதனால் தேவையில்லாத பரிசோதனைகளும் பணச்செலவும் குறையும். இப்படி பல நன்மைகள் கிடைப்பதால் மருத்துவத்துறையில் இதற்கு வரவேற்பு அதிகமாகி வருகிறது.

பொதுவாக மருந்து மற்றும் எக்ஸ் கதிர்வீச்சு மூலம் புற்றுக்கட்டியை அடியோடு அழிப்பது; அல்லது அறுவை சிகிச்சை மூலம் கட்டியை அகற்றுவது என்பதுதான் இதுவரை இருந்த சிகிச்சை முறை. ஆனால் உடலின் நோய்த் தடுப்பாற்றல் மண்டலத்தைத் தூண்டுவதன் மூலம் எவ்வித பக்க விளைவுகளும் ஏற்படாமல் புற்றுக்கட்டியைக் கரைக்க முடியும் எனும் புதிய வழியை வாஷிங்டன் மருத்துவப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்தக் குழுவின் தலைவர் ஜெரால்டு லினேட். ‘‘மெலனோமா ஏற்பட்டிருந்த மூன்று நோயாளிகளுக்குத் தனித்தனியாகத் தடுப்பூசியைத் தயாரித்தோம். அவர்கள் உடலில் இருந்த புற்றுக்கட்டியிலிருந்து புரத மூலக்கூறுகளைப் பிரித்தெடுத்து இந்தத் தடுப்பூசி தயாரிக்கப்பட்டது. இதை அவர்கள் உடலுக்குள் செலுத்தியதும் ரத்த அணுக்களில் உள்ள டி அணுக்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

டி அணுக்களுக்குக் ‘கொல்லும் அணுக்கள்’ என்று ஒரு சிறப்புப் பெயரே உண்டு. அதன்படி இவை மெலனோமா புற்றுசெல்களை அழித்து ஒரு வாரத்தில் புற்றுக்கட்டி இருந்த இடம் தெரியாமல் செய்துவிட்டது. இச்சிகிச்சை பெற்ற மூன்று பேரும்  இப்போது ஆரோக்கியமாக உள்ளனர்.இத்தடுப்பூசி மற்ற தடுப்பூசிகளிலிமிருந்து வேறுபட்டது. பொதுவாக ஒரு நோய்க்குத் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டால் அந்த நோயுள்ள அனைவருக்கும் அதே தடுப்பூசியைப் போட்டு நோயைக் குணப்படுத்துவோம்.

ஆனால் நாங்கள் கண்டுபிடித்துள்ள புதிய முறைப்படி, ஒவ்வொரு நோயாளியின் புற்றுக் கட்டியிலிருந்தும் தனித்தனியாகப் புரதத்தை எடுத்து இது தயாரிக்கப்படுகிறது. எனவே, ஒருவருக்குத்  தயாரிக்கப்பட்ட தடுப்பூசி அவருக்கு மட்டுமே பலன் தரும்; அடுத்தவருக்குப் பயன்படாது.

இந்த ஆராய்ச்சியை இன்னும் மேம்படுத்தி, குடல், நுரையீரல், சிறுநீர்ப்பை ஆகியவற்றில் ஏற்படும் புற்றுநோய்களையும் குணப்படுத்த வழி கண்டுபிடிக்க உள்ளோம்’’ என்கிறார் ஜெரால்டு.சபாஷ்!

(இன்னும் இருக்கு)

டாக்டர் கு.கணேசன்