மே தினம்! ஒரு போராட்டத்தின் நெடுங்கதை



மே முதல் தேதி தொழிலாளர் தினமாக சர்வதேச அளவில் கொண்டாடப்படுகிறது. அதன் நெடிய போராட்ட வரலாறு இங்கே துளித் துளியாய்...

பத்தொன்பதாம் நூற்றாண்டில் தொழில்புரட்சி உலகின் இயக்கத்தை புரட்டிப் போட்டது. தொழிலாளர்கள் என்ற இனமே அப்போதுதான் பெரிய குழுவாகத் தோன்றியது. நகரங்களை நோக்கிய மக்களின் இடம் பெயர்தலும் நிகழ்ந்தது.

ஆரம்ப காலத் தொழிற்சாலைகளில் 14 மணி நேரம், 16 மணி நேரம், 18 மணி நேரம் வேலை பார்ப்பது சர்வ சாதாரணமாக இருந்தது. ‘விடிந்தால் தொடங்கி அடைந்தால் முடியும்’ என்ற பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நிலவிய வேலை நேர முறைக்கு தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தார்கள்.

அமெரிக்காவில் 1820-1830, 1830-1840 ஆண்டுகளில் நடந்த வேலை நிறுத்தங்களின்போது தொழிலாளர்கள் வேலை நேரத்தை 10 மணி நேரமாகக் குறைக்க வேண்டும் என்று கோரிக்கைகளை எழுப்பினார்கள்.

உலகின் முதல் தொழிற்சங்கமாகக் கருதப்படும் அமெரிக்காவின் பிலடெல்பியா இயந்திரத் தொழிலாளர் சங்கம், பத்து மணி நேர வேலைக்காக 1827ம் ஆண்டில் பிலடெல்பியாவில் வேலை நிறுத்தத்தை நடத்தியது.இங்கிலாந்தில் ஆரம்பிக்கப்பட்ட முதல் தொழிற்சங்கத்திற்கு பிலடெல்பியா தொழிற்சங்கம் இரண்டு ஆண்டு காலம் முற்பட்டது.

1837ம் ஆண்டில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி காரணமாக அன்றைய அமெரிக்க அரசு நாளொன்றுக்கு பத்து மணி நேர வேலைதான் என்பதைப் பிரகடனம் செய்தது.
எட்டு மணி நேர வேலை, எட்டு மணி நேரப் பொழுதுபோக்கு, எட்டு மணி நேர ஓய்வு என்ற கோரிக்கை 1856ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

அமெரிக்காவில் 1884ம் ஆண்டில் நடந்த எட்டு மணி நேர வேலை இயக்கமே மே தினம் அனுசரிப்பதற்கு நேரடியாக வழிவகுத்தது.அமெரிக்கத் தொழிலாளர் சம்மேளனத்தின் நான்காவது மாநாடு 1884ம் ஆண்டு அக்டோபர் மாதம் 7ம் நாளன்று நடைபெற்றது. ‘1886ம் ஆண்டு மே மாதம் முதல் தேதி முதல் எட்டு மணி நேரம்தான் தொழிலாளர்களின் சட்டபூர்வமான வேலை நேரமாக இருக்க வேண்டும்’ என அந்த மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றியது.

1886ம் ஆண்டு மே முதல் நாள் சிகாகோ நகரத்தில் ஒரு மாபெரும் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. சிகாகோ நகரத்துத் தொழிலாளர்கள் இயக்கத்தின் அறைகூவலுக்கு இணங்க தொழிலாளர்கள் வேலைக்கு செல்லாமல் வேலை நிறுத்தம் செய்தார்கள்.

மே மாதம் மூன்றாம் தேதியன்று சிகாகோ மக்கார்மிக் உழுபடைக் கருவி தொழிற்சாலையின் தொழிலாளர்கள் நடத்திய கூட்டத்தைப் போலீசார் மிருகத்தனமாகத் தாக்கியதையும் அதன் காரணமாக ஆறு பேர் இறந்ததையும் பலர் காயமடைந்ததையும் கண்டனம் செய்வதற்காக மே 4ம் நாளன்று சிகாகோ ஹே மார்க்கெட் என்ற இடத்தில் தொழிலாளர்களின் பொதுக்கூட்டம் நடந்தது.

அமைதியாக நடந்த அந்தக் கூட்டம் முடியும் தறுவாயில் போலீஸார் அங்கு கூடியிருந்த தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தத் தொடங்கினார்கள். கூட்டத்துக்குள் வெடிகுண்டு வீசப்பட்டது. அதன் காரணமாக ஒரு போலீஸ் அதிகாரி கொல்லப்பட்டார். போலீஸ் - தொழிலாளர் மோதலில் ஏழு போலீஸ்காரர்களும் நான்கு தொழிலாளர்களும் இறந்தனர். சிகாகோ நகரத்து போராட்டத்தை முன் நின்று நடத்திய தலைவர்கள் கைதானார்கள். பார்சன்ஸ் ஸ்பைஸ், பிஷக், ஏஞ்சல் முதலியவர்கள் தூக்கு தண்டனை் பெற்றார்கள்.

அமெரிக்க தொழிற்சங்க சம்மேளனம் 1888ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் செயின்ட் லூயிஸில் நடத்திய மாநாட்டில் ‘1890ம் ஆண்டு மே மாதம் முதல் நாளன்று தொழிலாளர்களின் வேலை நேரத்தை எட்டு மணி நேரமாகக் குறைக்க வேண்டும்’ என்ற கோரிக்கைக்காக இயக்கம் தொடங்க தீர்மானித்தது.அகில உலகத் தொழிலாளர்களின் ஸ்தாபனம் 1889ம் ஆண்டு ஜூலை 14ம் நாளன்று பாரீஸில் கூடி, அதே மே தினத்தையே சர்வதேச தொழிலாளர் ஆர்ப்பாட்ட தினமாக தீர்மானித்தது.

1890ம் ஆண்டில் மே தினம் பல ஐரோப்பிய நாடுகளிலும் கொண்டாடப்பட்டது. ஜெர்மன் நாட்டுத் தொழில் நகரங்களிலெல்லாம் மே தினக் கொண்டாட்டம் நடந்தது. அமெரிக்காவில் சிகாகோவிலும் நியூயார்க்கிலும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.ரஷ்ய புரட்சி இயக்கம் மே தினத்தைப் பெரிய அளவில் பயன்படுத்திக் கொண்டது. 1900ம் ஆண்டு நவம்பர் மாதம், கார்கோவில் மே தினங்கள் என்ற நூலை லெனின் எழுதினார்.

உலகெங்கிலும் மே தினம் அனுசரிப்பதற்கான அடித்தளத்தை அமெரிக்கத் தொழிலாளர்கள்தான் ஏற்படுத்தினர். ஆனால் அந்த அமெரிக்காவிலும் கனடாவிலும் மே தினம் அரசு சார்பாக அனுசரிக்கப்படுவதில்லை.தொழிலாளர் உரிமை முழக்க நாளான மே தினம் இந்தியாவிலேயே முதன்முதலாக சென்னை மாநகரில்தான் அனுசரிக்கப்பட்டது. மே தினம் கொண்டாட வழிவகை செய்து உரையாற்றியவர் ம.சிங்காரவேலர் ஆவார்.

- க.ரவீந்திரன், ஈரோடு.