சீனாவும் பன்றியும்



சில சுவாரஸ்யங்கள்

சீனர்களுக்கு பாம்புதான் ரொம்பப் பிடிக்கும் என்று சொன்னதெல்லாம் அந்தக் காலம். இப்போது அவர்கள் அதிகம் விரும்புவது பன்றி இறைச்சியைத்தான். இது என்ன புதுக்கதை என்கிறீர்களா?

இதுகுறித்த சுவாரஸ்ய டேட்டா உங்களுக்காக.... சீனாவில் 35 ஆண்டுகளுக்கு முன் பன்றிகளுக்குக்கான பொற்காலம் துவங்கியது. இன்று சீனாவில் பன்றி இறைச்சியை வைத்து ஆண்டுக்கு 500 மில்லியன் டன் அளவுக்கு பல வகையான உணவுகளை செய்து சாப்பிடுகிறார்கள்.

பன்றியின் தலை முதல் வால் வரை எல்லாமே சீனர்களின் விருப்ப மெனு பட்டியலில். அதிலும் பன்றியின் மூளை மருந்து என்கிறார்கள் சீனர்கள். ஆக, சீனர்களிடையே பன்றி மூளைக்கு ஏக டிமாண்ட். 

பன்றியை காட்டு விலங்கிலிருந்து வீட்டு விலங்காக்கிய பெருமை சீனர்களையே சேரும். கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் ஹான் வம்சத்தினர் பன்றியை அதிகம் யன்படுத்தி இருக்கிறார்கள். அவர்களின் சமாதிகளில் இருக்கும் பன்றி பொம்மைகள் அதை உறுதிப்படுத்துவதாக சொல்கிறார்கள் ஆய்வாளர்கள்.

ஒரு காலத்தில் நினைவு நாட்கள் மற்றும் பண்டிகை காலங்களில்தான்  பன்றிகள் பலி கொடுக்கப்பட்டு விருந்துகள் நடந்தன. அந்த வகையில் வருடத்திற்கு 3-4 தடவை பன்றி இறைச்சி சாப்பிட்டவர்கள் இன்று தினமும் 3 வேளையும் பன்றி இறைச்சி சாப்பிடும் அளவுக்கு அதில் அதிக நாட்டம் கொண்டுள்ளார்கள்.

சீனர்களின் வருட காலண்டரில் ஒன்பதாவது மாதம் ஒன்பதாவது நாள், முதிர்ந்து உதிர்ந்து போன முன்னோர்களின் தினமாக அனுசரிக்கப்படுகிறது. அன்று பன்றி வெட்டி, பிரார்த்தனை செய்து, இறுதியில் அதனை விருந்தாக்கி  உண்கின்றனர்.

இன்று சீனாவில் 1000 முதல் லட்சக்கணக்கில் பன்றி வளர்த்து விற்பனை செய்யும் பண்ணைகள் உருவாகி விட்டன. பன்றிப் பண்ணை முதலாளிகள்  எல்லாம் சொகுசு கார்களில் வலம் வருகிறார்கள். ஒரு பிரபல பன்றி வளர்ப்பு மாமிச நிறுவனம் அமெரிக்காவின் ஸ்மித் ஃபீல்ட் புட்ஸ் என்ற நிறுவனத்தை வாங்கி அதன் பண்ணைகளில் பன்றிகளை வளர்க்க ஆரம்பித்துள்ளது.

2007ல் திடீரென சீன பன்றிகளை ‘ப்ளூ ஏர் பிக்’ என்ற நோய் தாக்கியது. இதனால் 45 மில்லியன் பன்றிகள் பாதிக்கப்பட்டு இறந்தன. இதனால் பன்றி இறைச்சிக்கு கடும் டிமாண்ட் ஏற்பட்டது. உடனே நாடு முழுவதும் குளிர்பதன வசதியுடன் கிடங்குகள் அமைத்து பன்றி மாமிசம் சேமிக்கப்பட்டன. அதன் மூலம் தட்டுப்பாடுகள் வராமல் தடுத்தார்கள்.

கொள்ளை நோய்களால் பன்றிகள் பாதிக்கப்படாமல் இருக்க, தற்போது பன்றிகளுக்கு ஆன்டிபயாடிக் தடுப்பு ஊசிகள் மற்றும் அது சார்ந்த மருந்துகள் உணவுடன் சேர்த்து தரப்படுகின்றன.பன்றிகளின் முக்கிய உணவுசோளம் மற்றும் சோயா. ஒரு கட்டத்தில் சோயாவுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது.

உடனே பிரேசில் மற்றும் அர்ஜென்டினா போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டன. இதனால் ருசி கண்ட இந்த நாடுகள் உடனே ஏராளமான காடுகளை அழித்து, வயல்களாக்கி, அதில் சோயாவை பயிரிட்டு ஏற்றுமதி செய்து வருகின்றன.

 இன்று ஆண்டுதோறும்  சீனாவுக்கு அர்ஜென்டினா 8 மில்லியன் டன் சோயாவும், பிரேசில் 25 மில்லியன் டன் சோயாவும் ஏற்றுமதி செய்கின்றன. பன்றிப் பண்ணைகள் அமைக்க, தாராளமாய் கடன் வழங்குகிறது சீனா.

பன்றி உற்பத்தியைப் பெருக்க  பழைய கடன்களைத் தள்ளுபடி செய்கிறார்கள். சீனாவுக்கு இன்று பொருளாதார முன்னேற்றம் மற்றும் தளர்வுக்கு பன்றியே ஒரு காரணமாகி விட்டதால் ‘National Price Index’ அங்கு இன்று National Pig Index’ என அழைக்கப்படும் அளவுக்கு பன்றிகள் விசேஷம்.

சீன வருடங்களில் ‘பன்றி’க்கும் ஒரு இடம் உண்டு. பன்றி ஆண்டில் பிறப்பவர்கள் தளரா உழைப்பும் தயாள குணமும் அக்கறையும் கொண்டவர்களாக இருப்பார்கள் என்பது நம்பிக்கை. அதுமட்டுமல்ல... பன்றிகளின் இறைச்சி சாப்பிட்டால், உடல் வலுவாகும், அழகு வளமை கூடும் என்ற நம்பிக்கை சீனர்களிடம் உள்ளது.

- ராஜிராதா, பெங்களூரு.