ஒளிச்சேர்க்கையை கண்டவர்



சூரிய ஒளியின் மூலம் உணவு தயாரிக்க தாவரங்களில் நடைபெறும் ஒளிச்சேர்க்கை நிகழ்வின் போது கார்பன் டை ஆக்ஸைடு, குளுக்கோஸாக மாறும் உயிரி வேதியியல் வினையின் சுழற்சியைக் கண்டறிந்தவர் வேதியியல் அறிஞர் மெல்வின் எல்லிஸ் கால்வின். இவர் 1911ம் ஆண்டு ஏப்ரல் 8ம் தேதி அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாணத்தில் உள்ள செயின்ட் பால் நகரில் பிறந்தார். 

பள்ளியில் படிக்கும்போதே இவருக்கு வேதியியல் மற்றும் இயற்பியலில் அதிக ஆர்வம். பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு, மிச்சிகன் சுரங்கத் தொழில்நுட்பக் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு வேதியியல், கனிமவியல், புவி அமைப்பியல், தொல்லுயிர் படிம உயிரியல், சிவில் பொறியியல் ஆகிய பாடங்களைக் கற்றார்.

1931ல் பட்டம் பெற்றார். பிறகு மின்னசோட்டா பல்கலைக்கழகத்தில் வேதியியல் பிரிவில் முனைவர் பட்டம் பெற்றார். அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு ராக்ஃபெல்லர் அறக்கட்டளை மானிய உதவியுடன் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் பல ஆய்வுகளை மேற்கொண்டார். 

ஹாலோஜன்களின் எலக்ட்ரான் நாட்டம்  என்பது குறித்து ஆராய்ந்தார். பின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் வேதியியல் ஆசிரியராகச் சேர்ந்தார். 1947ம் ஆண்டு பேராசிரியராக பதவி உயர்வு பெற்றார். அங்கே மரபியல் மூலக்கூறுகள், கரிமச் சேர்மங்களின் நிறம், இயற்கை மூலக்கூறுகளின் எலெக்ட்ரான் அமைப்பு ஆகியவை குறித்து ஆய்வு செய்தார்.

ஆண்ட்ரூ பென்சன், ஜேம்ஸ் பாஷம் ஆகியவர்களுடன் இணைந்து ஆய்வுகளை மேற்கொண்டார். ஒளிச்சேர்க்கையின்போது தாவரத்துக்குள் கார்பன் பயணிக்கும் பாதையை இந்த மூவர் குழு கண்டறிந்தது. இதற்கு ‘கால்வின் சுழற்சி’ என்று பெயரிடப்பட்டது. ஒளிச்சேர்க்கை குறித்த இந்த ஆராய்ச்சிக்காக இவருக்கு 1961ம் ஆண்டின் வேதியியல் துறைக்கான நோபல் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது.

கால்வின் தனது ஆராய்ச்சிகள் குறித்து 600க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் எழுதியுள்ளார். இவர் 1980ம் ஆண்டு ஓய்வு பெற்றார். அதன்பிறகும் 16 ஆண்டுகள் தன் குழுவினருடன் பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வந்தார். அவரது குழுவினர், கதிரியக்கத் தன்மை கொண்ட கார்பன்-14 ஐசோடோப்பைப் பயன்படுத்தி, காற்று மண்டலத்தில் இருந்து தாவரங்களால் கார்பன் டை ஆக்ஸைடு உறிஞ்சப்படுவதில் தொடங்கி அது கார்போ ஹைட்ரேட்டுகளாக மாற்றப்படுவது வரை கண்டறிந்தனர்.

கால்வின் பல விருதுகள், பதக்கங்கள் பெற்றார். லண்டன் ராயல் சொஸைட்டி இவரை கௌரவமிக்க அறிவியல் உறுப்பினராகத் தேர்ந்தெடுத்தது. வாழ்நாள் முழுவதும் அறிவியல் துறைக்கான பல ஆராய்ச்சிகளில் ஈடுபட்ட மெல்வின் கால்வின், 1997ம் ஆண்டு ஜனவரி 8ம் தேதி மறைந்தார்.

- சி.பரத்