ஜீன்ஸ் - ரிவிட்!



ஜீன்ஸ் எப்படிக் கண்டுபிடிக்கப்பட்டது?
- ஆர்.மகேஷ், 10ம் வகுப்பு, எஸ்.பி.ஓ.ஏ பள்ளி, சென்னை.

ஆஸ்கார் லெவி ஸ்ட்ராஸ் என்பவர் 1849ல் கலிஃபோர்னியாவுக்கு வந்தார். சுரங்கத்தில் தங்கம் தோண்டும் பணி பரபரப்பாக நடைபெற்ற காலம் அது. சுரங்கத் தொழிலாளிகளின் ட்ரவுஸர்கள் வெகு சீக்கிரமே கிழிந்து விடுவதை அவர் கவனித்தார். உறுதியான ஒரு துணியில் பேண்ட் தைத்துக் கொடுத்தால்தான் இவர்களுக்குச் சரிப்படும் என கருதினார்.

டென்ட் அமைக்கப் பயன்படும் கேன்வாஸ் துணியின் மீதத்தைக் கொண்டு ஒரு பேண்ட் தைத்தார். சுரங்கத் தொழிலாளர்களுக்கு அது பிடித்துப் போய் விடவே, ஆர்டர்கள் குவிந்தன. பிரான்ஸிலிருந்து நீம் என்றழைக்கப்படும் கனத்த துணியை வாங்கித் தைத்தார். அதுவே ‘டெனிம்’ என்று பெயர் மாற்றம் அடைந்து உலகெங்கும் பரவியது.

1896 வரை ப்ளூ ஜீன்ஸ் என்றே அழைக்கப்பட்டாலும், அவை ப்ளூ மற்றும் ப்ரவுன் நிறங்களிலேயே தயாராயின. லெவி ஜீன்ஸ்களில் இப்போது காணப்படும் ரிவிட்களும் அப்போது கிடையாது.ரிவிட்கள் உங்களுக்குப் பிடிக்குமென்றால் அல்கலி ஐக் என்ற கவனக்குறைவுள்ள சுரங்கத் தொழிலாளிக்கே நன்றி சொல்ல வேண்டும். அல்கலி சுரங்கத் தொழிலுக்கான உபகரணங்களை ஜீன்ஸ் பாக்கெட்டுகளில் வைத்துவிடுவார்.

அதனால் பாக்கெட்கள் அடிக்கடி கிழிந்து போகும். கிழிந்த பாக்கெட்களை தைத்துத் தைத்து சலிப்பான டெய்லர் என்ன செய்தார் தெரியுமா? அல்கலியை ஒரு கொல்லரிடம் அழைத்துப் போனார். பாக்கெட்களில் ரிவிட் அடித்துவிடும் படி வேடிக்கையாகச் சொன்னார். ‘அடடே... இது ரொம்ப நல்லாயிருக்கே’ என்று அதைப் பார்த்து வியந்த லெவி ஸ்ட்ராஸ் எல்லா ஜீன்ஸ்களிலும் ரிவிட் அடிக்கத் தொடங்கி விட்டார்!

பாறைகளில் ஊசி போல கூர்மையாகத் தொங்கிக் கொண்டிருப்பதை ஒரு படத்தில் பார்த்தேன். அப்படிப்பட்ட பாறை எங்கு உள்ளது?
- எஸ்.கிருஷ்ணா, 9ம் வகுப்பு, மகரிஷி வித்யா மந்திர், தஞ்சாவூர்.

நியூ மெக்சிகோவிலுள்ள கார்ல்ஸ்பாத் குகையில், நீங்கள் பார்த்தது போன்ற நிறைய தொங்கூசிப் பாறைகள் காணப்படுகின்றன. சொட்டும் நீரினால் கால்சியம் கார்பனேட் திரவம் சேகரமாவதால், இப்பாறைகள் தோன்றுகின்றன. தரையிலிருந்தும் இப்பாறை வளரும். மேலிருந்து ஒன்றும், கீழிருந்து ஒன்றும் வளர்ந்து முத்தமிடத் துடிப்பது போன்ற அமைப்புகள் இதில் பிரபலம். காலப்போக்கில், முத்தத்துக்குப் பிறகு ஈருடல் கலந்து ஒன்றாகி விடும்!