வெங்காயம்



பழைய சாதத்துக்குத் தொட்டுக் கொள்வதில் ஆரம்பித்து, வேறு காய்கறிகளே இல்லாதபோது கை கொடுப்பது வரை சமையலறையின் ‘சகலகலா வல்லி’ என்றால் அது வெங்காயம்தான். அரிசி, பருப்பு இல்லாமல் கூட ஒருவரால் சமைத்துவிட முடியும். வெங்காயம் இல்லாவிட்டால் வேலையே ஓடாது என்கிற அளவுக்கு அது அன்றாட சமையலில் அத்தனை முக்கியமானது!

சமையலுக்கு ருசியும் மணமும் சேர்த்து ஆரோக்கியத்திலும் அக்கறை காட்டும் வெங்காயத்தின் பெருமைகளைப் பேசுகிறார் சஞ்சீவனம் குழுமத்தைச் சேர்ந்த மருத்துவ அதிகாரி யாழினி. அத்துடன் வெங்காயத்தை வைத்து ஆரோக்கியமான மூன்று உணவுகளையும் செய்து காட்டுகிறார்.காய்கறிகளிலேயே தினமும் அதிகமாகப் பயன்படுத்தப்படுவது வெங்காயம்தான். ஆண்டு முழுவதும் தாராளமாக கிடைக்கக்கூடியது. வெங்காயத்தில் சிறிய வெங்காயம், பெரிய வெங்காயம் என்று இரண்டு வகைகள் இருக்கின்றன.

‘சின்ன வெங்காயம்’, ‘சாம்பார் வெங்காயம்’, ‘சின்ன உள்ளி’ என்றெல்லாம் அழைக்கப்படும் வெங்காயத்துக்கு தென் தமிழகத்தில் இன்னும் ஒரு பெயருண்டு... ‘ஈருள்ளி’. நாம்  ‘சின்ன வெங்காயம்’ என்கிறோம்.அதில் புரதம்,கார்போஹைட்ரேட், கொழுப்பு, நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின்-பி, வைட்டமின்-சி ஆகியன உள்ளன.100 கிராம் வெங்காயத்தில் 51 கலோரி கிட்டுகிறது.

வெங்காயத்துக்கு பல நோய்களைக் குணப்படுத்தும் ஆற்றல் உண்டு. முறையாக உணவில் சேர்த்துக் கொண்டால்,

பித்தத்தை குறைக்கும், திரிதோஷத்தை சமப்படுத்தும்.
சிறுநீர் நன்றாக பிரியும்.
மலத்தை வெளியேற்றும்.
ரத்தம் விருத்தியாகும்.
உணவு நன்றாக செரிமானம் ஆகும்.
மூளைக் கோளாறுகளுக்கு நல்லது.
நரம்புத் தளர்ச்சிக்கு முக்கிய மருந்து.

வெங்காயத்தை மருத்துவ ரீதியாக உபயோகிக்கும் முறை

நெஞ்சுவலிக்கு ஐந்தாறு வெங்காயங்களை வதக்கிச் சாப்பிட வேண்டும். உடனே நெஞ்சுவலி நீங்கும். இதய நோய்க்காரர்கள் வெங்காயத்தை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தால் ரத்தத்தில் கொலஸ்ட்ராலின் அளவு அதிகமாகாது. இதயம் எப்போதும் சீராக செயல்படும், உடல்பருமன் குறையும். சின்ன வெங்காய சாற்றுடன் சுத்தமான தேன் கலந்து ஒரு மண்டலம் உட்கொண்டால் இதய நோய்கள் குணமாகும்.

ரத்தசோகையால் பாதிக்கப்பட்டவர்கள் தின மும் வெங்காயத்தை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.குளிர் காலத்தில் ஜலதோஷம், மார்புச்சளி போன்ற தொல்லை ஏற்படுவதுண்டு. ஒரு டேபிள் ஸ்பூன் வெங்காயச்சாறு, ஒரு மேஜைக்கரண்டி தேன் ஆகியவற்றைக் கலந்து, நான்கைந்து நாட்கள் அருந்தினால் நோய் குணமாகும்.

சிறுவயது வழுக்கைக்கு வெங்காயத்தை அரைத்து மேற்பூச்சாக வழுக்கை உள்ள இடத் தில் பூசி வந்தால் முடி முளைக்கும்.காலராவை வெங்காயத்தின் மூலமே குணப்படுத்தி விடலாம். ஐம்பது கிராம் வெள்ளை நிற வெங்காயத்தை உரித்து அதனுடன் பத்து மிளகைச் சேர்த்து வைத்து இடிக்க வேண்டும். நன்றாக இடித்து எடுத்துச் சிறிதளவு சர்க்கரையைச் சேர்த்துக் கலந்து காலரா நோயால் பாதிக்கப்பட்டவர் சாப்பிட வேண்டும். அந்தக் கலவை அவருடைய தாகத்தைத் தணிக்கும். இதே போல் நான்கைந்து முறை சாப்பிட்டால் காலரா நோய் குணமாகும்.

பசு மோரில் வெங்காயச்சாறு கலந்து பருகி வந்தால் சூட்டினால் ஏற்படும் வயிற்றுக்கடுப்பு குணமாகும்.சின்ன வெங்காயத்தை காலைவேளையில் மென்று தின்று நீராகாரமும் பருகி வந்தால் நன்கு உழைக்கும் ஆற்றல் கிடைக்கும்.சளித் தொந்தரவு அதிகமாக இருந்தால் சற்று அதிகமாக வெங்காயத்தை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். நான்கைந்து நாட்களில் சளித்தொல்லை நீங்கி விடும்.வெங்காயத்தின் மூலம் ரத்தமூலத்தையும் குணப்படுத்தலாம். 50 கிராம் வெங்காயத்தை வாங்கி உரித்து சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். ஒரு கிண்ணத்தில் இரண்டு கப் தண்ணீரை ஊற்றி அதில் சர்க்கரையைபோட்டுக் கலக்கி வெங்காயத் துண்டுகளைப் போடுங்கள்.

வெங்காயத் துண்டுகள் நன்கு ஊறியதும் நீரை வடிகட்டி எடுத்து வைத்துக் கொண்டு காலையிலும்  மாலையிலும் அருந்த வேண்டும். இவ்வாறு தொடர்ந்து பதினைந்து முதல் இருபது நாட்கள் வரை அருந்தி வந்தால் போதும். இதன் மூலம் ரத்தமூலம் எளிதில் குணமாகி விடும்.காது இரைச்சல், காது வலி போன்றவற்றைப் போக்கும் சக்தி வெங்காயத்துக்கு உண்டு. வெங்காயச் சாறில் சில துளிகளைக் காதில் விட்டுக் கொண்டால் காது இரைச்சல், காது வலி போன்றவை நீங்கி விடும். வெங்காயச் சாற்றை அப்படியே காதில் விடலாம். அல்லது லேசாக சூடாக்கியும் விடலாம்.

இதைப் பச்சையாக காலை வேளையில் உட்கொள்ள வேண்டும். இவ்விதமாக தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பக்கவாத ேநாய்கள் வராது.தினமும் உணவில் தாராளமாக வெங்காயம் சேர்த்துக் கொள்பவர்களுக்கு தலைவலி, முழங்கால் வலி போன்றவை ஏற்படுவதில்லை.  பார்வை மங்குவதில்லை.நரம்புத் தளர்ச்சியை போக்குவதிலும் சின்ன வெங்காயம் நல்ல மருந்தாகும்.சர்க்கரை நோயால் துன்பப்படுபவர்கள் உருண்டைப் பாகற்காயை வாங்கி வந்து சுத்தம் செய்து அவற்றுடன் அதே அளவு சின்ன வெங்காயத்தையும் சேர்த்துக் கல்லுரலில் இட்டு நன்கு இடித்து நல்ல சுத்தமான வெள்ளைத் துணியில் இட்டுச் சாறு பிழிந்து அதே அளவு சுத்தமான தேனையும் கலந்து உட்கொண்டால் விரைவில் குணம் பெறுவார்கள்.

உடல் சூட்டைத் தணிக்கும் சின்ன வெங்காயம் மூலச்சூட்டையும் தணிக்கும் நல்ல மருந்தாகும்.சின்ன வெங்காயத்திலிருந்து கிளம்பும் ஒருவித நெடியைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து சின்ன வெங்காயத்தைக் காலை வேளையில் சாப்பிட்டு வந்தால் சிறுநீரகம் சம்பந்தமாக கவலைப்பட வேண்டியதில்லை.

வெங்காயத்தை தோல் உரிக்கும் போது அல்லது வெட்டும் போது அதிலிருந்து ெவளிப்படும் volatile oil கண்ணில் பட்டுக் கண்ணீர் வெளிவரும். இவ்விதம் கண்ணீர் வெளிவருவதன் மூலம், கண்களிலுள்ள மாசு நீங்கி விடும். ஆக, கண்களைச் சுத்தம் செய்வதற்குச் சின்ன வெங்காயத்தை உரிக்க வேண்டும். இவ்விதம் அடிக்கடி உரிப்பதன் மூலம் வெளிப்படும் நீரால் கண்கள் நன்கு தெளிவடையும்.

வெங்காயச்சாறு சாப்பிடுபவர்களுக்கு ஓர் எச்சரிக்கை. அதற்கு உடலை கிளர்ச்சியூட்டக்கூடிய சக்தி இருக்கிறது. ஆகையால், அதை அளவுடன் அருந்த வேண்டும்.
சமீபத்தில் பார்சிலோனா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் வெங்காயத்தின் தன்மை மற்றும் பயன்கள் குறித்து நடத்திய ஆய்வில், ‘பச்சையாக உட்கொள்ளப்படும் வெங்காயம் மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை விரைவாக அதிகளவில் தூண்டுகிறது’ என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.வெங்காயத்தை அதிக அளவில் உட்கொண்டு நோய் இல்லாமல் வாழ்வோம்.

‘நங்காயம் நன்மையுற நாளும் உணவினிலே
வெங்காயம் சேர்த்தல் விரும்பு’ - குறள்.

வெங்காயத் தீயல்

என்னென்ன தேவை?

வெங்காயம் - 500 கிராம்,
தேங்காய் - 2,
தேங்காய் எண்ணெய் - 100 மி.லி.,
பச்சை மிளகாய் - 20 கிராம்,
இஞ்சி - 10 கிராம்,
எலுமிச்சை - 2,
மிளகுத்தூள் - 10 கிராம்,
வெல்லம்- 100 கிராம்,
கறிவேப்பிலை - 10 கிராம்,
உப்பு - தேவையான அளவு.

எப்படிச் ெசய்வது?

கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும், அதில் துருவிய தேங்காயை பொன்னிறமாகும் வரை வதக்கி அரைத்துக்கொள்ளவும்.சிறிதளவு தண்ணீரில் வெல்லத்தை நன்கு கரைத்து, கொதிக்க வைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.வெங்காயத்தின் தோலை உரித்தெடுத்து சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். கடாயில் தேங்காய் எண்ணெயை ஊற்றி சூடாக்கவும்.அதில் பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். வெங்காயத்தை நன்கு வதக்கிய பிறகு இத்துடன் மிளகுத் தூள், கொதித்து கரைத்து வடிகட்டிய வெல்லப் பாகு, எலுமிச்சைச் சாறு  மற்றும் உப்பு சேர்த்து நன்கு அரைக்கவும். பிறகு அரைத்த கலவையின் மீது கொத்தமல்லி இலையை தூவிப் பரிமாறவும்.

சின்ன வெங்காய குருமா

என்னென்ன தேவை?

சின்ன வெங்காயம் - 200 கிராம்,
பெரிய வெங்காயம் - 200 கிராம்,
தக்காளி - 50 கிராம்,
பச்சை மிளகாய் - 20 கிராம்,
இஞ்சி-பூண்டு விழுது - 20 கிராம்,
தேங்காய் - 2,
கடலை எண்ணெய் - 50 மி.லி.
கொத்தமல்லி தூள் - 5 கிராம்,
மஞ்சள் தூள் - 5 கிராம்,
நெய் - 10 மி.லி,
முந்திரி - 30 கிராம்,
முழு கரம் மசாலா-3 கிராம்,
கொத்தமல்லி - 50 கிராம்,
கறிவேப்பிலை - சிறிதளவு,
உப்பு - தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

சின்ன வெங்காயத்தின் தோலை உரித்தெடுத்து, இத்துடன் தேங்காய்  மற்றும் முந்திரியை சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.கடாயில் சிறிது எண்ணெயை ஊற்றி அதில் கரம் மசாலா, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.  இத்துடன் இஞ்சி-பூண்டு விழுது, தக்காளி, மஞ்சள் தூள், கொத்தமல்லி தூள் சேர்க்கவும். சிறிதளவு தண்ணீர் சேர்த்து முழுமையாக வேக வைக்கவும். இந்தக் கலவையுடன் அரைத்து வைத்த விழுதைச் சேர்த்து நன்கு கிளறவும். இதில் ெநய், உப்பு சேர்க்கவும். அதன் மேல் கொத்தமல்லி இலை, வறுத்த கறிவேப்பிலை தூவிப் பரிமாறவும்.

சின்ன வெங்காய புலாவ்

என்னென்ன தேவை?

சின்ன வெங்காயம் - 200 கிராம்,
பாசுமதி அரிசி - 200 கிராம்,
முந்திரி - 10 கிராம்,
முழு கரம் மசாலா - 2 கிராம்,
சீரகம் - 5 கிராம்,
நெய் - 5 மி.லி.
மிளகுத் தூள் - 2 கிராம்,
கொத்தமல்லி இலை - 5 கிராம்,
புதினா இலை - 5 கிராம்,
உப்பு - தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

பாசுமதி அரிசியை தனியே வேகவைக்கவும். கடாயை சூடாக்கி நெய் ஊற்றி, அதில்  கரம் மசாலா, முந்திரி, சீரகம் சேர்க்கவும்.இத்துடன் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.  நன்கு வதக்கிய பின்பு புதினா மற்றும் கொத்தமல்லி இலை சேர்க்கவும்.இத்துடன் வேகவைத்த அரிசி, மிளகுத் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு  சேர்த்து நன்கு கிளறவும்.இதை சிறிது நேரம் வேக வைக்கவும்.இதன் மேல் புதினா இலை, வறுத்த வெங்காயம் தூவி சூடாகப் பரிமாறவும்.

கொலஸ்ட்ராலை குறைக்கும் சக்தி வெங்காயத்துக்கு உண்டு.

எழுத்து வடிவம்: ஆர்.கெளசல்யா

படங்கள்: ஆர்.கோபால்