வாய்ப்பு வாசல்



யாரும் எந்த வயதிலும் ஆடலாம்... கொண்டாடலாம்!

சின்ன வயதில் சிறகடிக்கிற எத்தனையோ ஆசைகளை காலமும் சூழலும் நிறைவேற்றாமல் போகலாம். பின்னாளில் அந்த ஆசைகளின் மிச்சங்கள் மீண்டும் தலைதூக்கும் போது, காலம் கடந்து அவற்றை நிறைவேற்றிக் கொள்வதில் யாருக்கும் ஒரு தயக்கம் இருக்கவே செய்யும். ஆர்வம் இருப்பவர்களுக்கு ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள வயது ஒரு தடையாக இருப்பதில்லை என்பதை தனது புதுமையான முயற்சியின் மூலம் மக்களுக்குப் புரிய வைத்துக் கொண்டிருக்கிறார் மாலா பரத்!

திறமையும் வசதியும் உள்ளவர்களுக்கான கலைகளில் ஒன்றான பரதத்தை ஆர்வமிருக்கும் எல்லோருக்கும் கொண்டு சேர்க்கிறார் பிரபல பரதக் கலைஞரான மாலா. அதன் ஒரு முயற்சியாக கார்பரேட் அலுவலகங்களில் வேலை பார்க்கிற பெண்களுக்கும் இல்லத்தரசிகளுக்கும் நடனப் பயிற்சிக்கான வகுப்புகள் எடுக்கிறார். தனது ‘ஆத்மாலயா’  அமைப்பின் மூலம் மாலா கையில் எடுத்திருக்கிற இன்னொரு நவீன முயற்சி ‘டான்ஸ் ஹவர் வித் ஆத்மாலயா’.

அதென்ன? அவரது வார்த்தைகளிலேயே கேட்போம்.‘‘சின்ன வயசுல நடனம் கத்துக்கணும்னு ஆசைப்பட்டு, அதுக்கு வாய்ப்பு கிடைக்காத பெண்கள் எத்தனையோ பேர் இருப்பாங்க. இன்னும் சிலரோ கொஞ்ச நாள் கத்துக்கிட்டிருப்பாங்க. பிறகு அதைத் தொடர முடியாமப் போனவங்களா இருப்பாங்க. இந்த ரெண்டு தரப்பினருக்குமே நடனத்தின் மீதான ஈர்ப்பு கொஞ்சமும் குறையாம அப்படியே இருக்கிறதையும் பார்க்கலாம். அந்த மாதிரிப் பெண்களுக்கான ஒரு வாய்ப்புதான் ‘டான்ஸ் ஹவர் வித் ஆத்மாலயா’.

நடன ஆர்வம் உள்ள யாரும் எந்த வயசுலயும் டான்ஸ் பண்ணலாம்கிறதுதான் இதோட கான்செப்ட். வாரம் ஒருநாள் ஒரு மணிநேரம் இவங்களுக்கு டான்ஸ் சொல்லித் தரோம். சென்னையில மட்டுமே ஆத்மாலயாவுக்கு 8 கிளைகள் இருக்கு. ஆர்வமுள்ள யாரும் இதுல சேரலாம். அவங்களுக்கு சின்னச் சின்ன ஸ்டெப்ஸ் மூலமா அவங்களோட உணர்ச்சிகளை வெளியில கொண்டு வரவும் பாசிட்டிவான மனநிலையில இருக்கவும் உதவறோம். மாசத்துக்கு ஒரு சின்ன பாட்டுக்கு டான்ஸ் பண்ணக் கத்துப்பாங்க. கொஞ்ச நாள் டான்ஸ் கிளாஸுக்கு வந்து கத்துக்கிட்டதும், இவங்களுக்கு அடுத்து என்னங்கிற எதிர்பார்ப்பு வந்துடுது. அதனால வெறுமனே கத்துக்கறதோட இல்லாம, இவங்களை ஒரு ஸ்டேஜ்ல ஏத்தி ஆட வைக்கிறோம்.

பார்வையாளர்கள் யார் தெரியுமா? அவங்களோட சொந்தக்காரங்களும் நண்பர்களும்தான். அப்ப அவங்க அடையற சந்தோஷத்தையும் திருப்தியையும் பார்வையாளர்கள் வரிசையில இருக்கிறவங்களோட முகங்கள்ல தெரியற பெருமையையும் பார்க்க கோடி கண்கள் வேணும்...’’ என்கிற மாலா, இரண்டு ஆண்டுகளாக இந்த முயற்சியை தொடர்ந்து கொண்டிருக்கிறார். இந்த ஆண்டு 88 பெண்களை மேடை ஏற்றி ஆட வைத்திருக்கிறார்.

‘‘எனக்கெல்லாம் டான்ஸ் வருமாங்கிறதுலேருந்து இத்தனை வயசுக்குப் பிறகு இதெல்லாம் தேவையாங்கிற கேள்வி வரைக்கும் எங்களை அணுகும் பெண்களுக்குள்ள ஏராளமான தயக்கங்கள் இருக்கிறதைப் பார்க்கறேன். உங்களால நிச்சயம் முடியும்னு நம்பிக்கை கொடுக்கிறதுதான் எங்களோட முதல் பாடம். ஒரு நாள் ஆடிப் பார்த்துட்டாங்கன்னா அவங்களோட எனர்ஜி லெவலும் தன்னம்பிக்கையும் எங்கயோ போயிடுது.

இப்ப எங்கக்குழுவுல இருக்கிறவங்கள்ல டாக்டர்ஸ், வக்கீல், பிசினஸ் உமன், ஹோம் மேக்கர்னு எல்லாத் தரப்புப் பெண்களும் உண்டு. குறைஞ்சது 25 வயசுலேருந்து அதிகபட்சமா 77  வயசு பாட்டி வரைக்கும் ஆர்வமா ஆடறாங்க.  சின்னக்  குழந்தைங்களை டான்ஸ் கிளாஸுக்கு அனுப்பறதுல நிறைய பிராக்டிகல் சிரமங்கள் இருக்கு. அவங்களுக்கு ஒரு நாள் மூடு இருக்கும். ஒரு நாளைக்கு இருக்காது. இவங்களைப் பொறுத்தவரைக்கும் எல்லாருமே தன்னால டான்ஸ் பண்ண முடியும்கிறதை நிரூபிச்சுக் காட்டணும்கிற லட்சியத்தோட வராங்க. ஒருநாள்கூட கிளாஸை கட் பண்ணாம வர்றதைப் பார்க்கிறப்ப ஆச்சரியமா இருக்கு...’’ என வியக்க வைக்கிறார். அவர் அடுத்து சொல்கிற தகவல் அதைவிட ஆச்சரியம்.

‘‘முதல்ல தன் மகளை என்கிட்ட டான்ஸ் கிளாஸ்ல சேர்த்துவிட வந்தாங்க ஒரு அம்மா. அப்புறம் பேத்தியை சேர்க்க வந்தாங்க. அவங்க ரெண்டு பேரும் ஆடறதைப் பார்த்துட்டு அவங்களுக்கும் ஆசை வரவே, இப்ப அவங்களும் என்னோட ஸ்டூடன்ட். நடனத்தின் மீதான காதல்ங்கிறது எந்த வயசுக்காரங்களுக்கும் பொதுவானதுங்கிறதுக்கு இதைவிட அழகான உதாரணம் தேவையா என்ன?’’ என்கிறார்.

‘‘ஹோம் மேக்கரோ... வேலையில இருக்கிறவங்களோ... வீடு, வேலைனு எல்லாத்தையும் பேலன்ஸ் பண்ணிட்டு, வாரம் ஒரு நாள் சிலமணி நேரத்தை டான்ஸ் ஆடறதுக்கு ஒதுக்கிட்டு முன்வர்றதுங்கிறது சாதாரண காரியமில்லை. இந்த விஷயத்துல சம்பந்தப்பட்ட பெண்களோட குடும்ப நபர்களும் ரொம்பவே ஒத்துழைக்கிறாங்க. டான்ஸ் பண்ணணும்கிறதுதான் ஆரம்பத்துல அவங்களோட எண்ணமா இருக்கு. கத்துக்க ஆரம்பிச்சதும், அதை ரொம்பவே சிரமமா ஃபீல்
பண்றவங்களும் இருக்காங்க. கார் ஓட்டும் போது எப்படி ஒரே நேரத்துல கியரும் போடணும்...

ஆக்சிலேட்டரையும் கன்ட்ரோல் பண்ணணும், பிரேக்கையும் பிடிக்கணும், ரியர்வியூ மிரரையும் பார்க்கணுமோ... அதே மாதிரிதான் டான்ஸும். பல
விஷயங்களை ஒரே நேரத்துல செய்யணும். அந்தத் தடுமாற்றமெல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான். இங்க வந்து ஆடறதுல யாரும் புெராஃப ஷனல் டான்ஸர்ஸ் இல்லை. ஒருத்தரை ஒருத்தர் பார்த்து, அவங்களால ஆட முடியறபோது நம்மால ஏன் முடியாதுனு தனக்குள்ளேயே ஒரு நம்பிக்கையை ஏற்படுத்திக்கிறாங்க. சில நாள் பயிற்சியிலயே அவங்க ரொம்பப் பிரமாதமா டான்ஸ் பண்ணக் கத்துக்கிறாங்க. ஆனா, அதைத் தாண்டி, அவங்க ஒவ்வொருத்தருக்குள்ளயும் அசாத்தியமான தன்னம்பிக்கையைப் பார்க்கறேன்.

வாழ்க்கையை சந்தோஷமா கொண்டு போற கலைக்கு இந்த டான்ஸ் ஒரு கருவியா பயன்படறதைப் பார்க்கறேன். ஒவ்வொருத்தரும் சந்தோஷமான மனுஷிகளா மாறிடறதையும் உணர முடியுது. ஒரு பெண் சந்தோஷமா இருந்தா, அவளோட குடும்பமும் அவளைச் சார்ந்த சமூகமும் சந்தோஷமா மாறிடும். அடுத்தவங்களோட உணர்வுகளைப் புரிஞ்சு அனுசரிச்சு நடந்துக்க முடியும். உறவுகளை ஆரோக்கியமா வச்சுக்க முடியும். டான்ஸ் மூலமா இவ்வளவும் சாத்தியமானு கேட்கற வங்களுக்கு என்னோட ஒரே பதில் - வாங்க... வந்து ஆடிப் பாருங்க!’’

வாழ்க்கையை சந்தோஷமா கொண்டு போற கலைக்கு டான்ஸ் ஒரு கருவியா பயன்படுது!

மகளை டான்ஸ் கிளாஸ்ல  சேர்த்துவிட வந்தாங்க ஒரு அம்மா. அப்புறம் பேத்தியை சேர்க்க  வந்தாங்க. அவங்க ரெண்டு பேரும் ஆடறதைப் பார்த்துட்டு
அவங்களுக்கும் ஆசை வரவே, இப்ப அவங்களும் என்னோட ஸ்டூடன்ட்!