நீங்கதான் முதலாளியம்மா!



பரதநாட்டிய உடை

ஷமீம்

தெருவுக்கு நான்கு தையல் கடைகள் இருக்கின்றன. தவிர, அனேக வீடுகளில் தையல் மெஷின் வைத்துக் கொண்டு அவரவர் உடைகளை அவரவரே தைத்துக் கொள்கிறார்கள். போதாத குறைக்கு ‘டிசைனர் வேர்’ என்கிற பெயரில் வித்தியாசமாக தைத்துக் கொடுக்கும் ஸ்பெஷல் கடைகளுக்கும் இன்று பஞ்சமே இல்லை. இந்த நிலையில் தையலைத் தொழிலாக எடுத்துச் செய்ய நினைக்கிற புதுமுகங்களுக்கு வாய்ப்புகள் கிடைப்பது சிரமம்தான்.

சென்னை, ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்த ஷமீம், 12 வருடங்களாக தையல் கலையில் ஈடுபட்டு வருபவர். ஜாக்கெட், பாவாடை, சட்டை, சுடிதார், ஃபிராக் என எல்லா உடைகளையும் தைக்கிற இவர், பரதநாட்டிய உடைகள் தைப்பதில் நிபுணி. போட்டிகளை சமாளிக்க அதுவே தனக்கு கை கொடுப்பதாகச் சொல்கிறார் ஷமீம்.7வது வரைக்கும்தான் படிச்சிருக்கேன். எங்க மதப் பெண்கள் வேலை, படிப்புனு அதிகமா வெளியில போக மாட்டோம். கல்யாணத்துக்கு முன்னாடியே தையல் தெரியும். கல்யாணமாகி வந்தப்ப, புகுந்த வீட்லயும் எல்லாரும் தையல் தெரிஞ்சவங்களா இருந்தாங்க.

என் மாமியார், மயிலாப்பூர்ல உள்ள ஒரு பரதநாட்டிய டிரெஸ் தைக்கிற கடையில வேலை பார்த்தவங்க. அந்த வகையில அவங்களுக்கு டான்ஸ் டிரெஸ் தைக்கத் தெரியும். அவங்கதான் எனக்கும் கத்துக் கொடுத்தாங்க. வழக்கமான டிரெஸ் தைக்கிறதைவிட, பரத நாட்டிய டிரெஸ் தைக்கிறது எனக்கும் ரொம்பப் பிடிச்சிருந்தது.  முதல்ல எங்க வீட்டுக்குப் பக்கத்துல உள்ள டான்ஸ் ஸ்கூல்ல சின்னக் குழந்தைங்களுக்கு தச்சுக் கொடுத்திட்டிருந்தேன். அதைப் பார்த்துட்டு பெரியவங்களும் ேகட்க ஆரம்பிச்சாங்க.

இன்னிக்கு பரதநாட்டிய டிரெஸ் தைக்கிறதுல நான் எக்கச்சக்க பிஸி...’’ என்பவர், ஃபிராக் மாடல், சல்வார் மாடல் மற்றும் அடுக்கு மாடல் பரதநாட்டிய உடைகள் தைப்பதில் எக்ஸ்பர்ட்டாம்.
இந்த மூணும்தான் பெரும்பாலும் எல்லாரும் கேட்கறது. இதைத் தவிர்த்து வேற மாடல் காட்டினாலும் தச்சுத் தருவேன். தையல் மெஷினும் 5 ஆயிரம் ரூபாய் முதலீடும் இருந்தா, இந்த பிசினஸ்ல துணிஞ்சு இறங்கலாம். ஒரு நாளைக்கு 2 டிரெஸ் தைக்கலாம். ஒரு செட் தச்சுக் கொடுக்கவே 1,500 ரூபாய் கூலி வாங்கலாம். 50 சதவிகிதம் லாபம் பார்க்கலாம்...’’ என்கிற ஷமீமிடம், 2 நாள் பயிற்சியில்2 மாடல் பரதநாட்டிய உடை தைக்கக் கற்றுக் கொள்ளக் கட்டணம் 1,500 ரூபாய்.தையல் மெஷினும் 5 ஆயிரம் ரூபாய் முதலீடும் இருந்தா, இந்த பிசினஸ்ல துணிஞ்சு இறங்கலாம்.


நீரிழிவுக்காரர்களுக்கான இன்ஸ்டன்ட் உணவுகள்

கீதா

வீட்டுக்கு வீடு பெரியவர்கள் இருக்கிறார்களோ இல்லையோ, இன்று எல்லா வீடுகளிலும் நிச்சயம் ஒரு நீரிழிவுக்காரர் இருக்கிறார். டீன் ஏஜிலேயே ஆரம்பிக்கிறது நீரிழிவு. இந்தப் பிரச்னையைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதில் உணவுப்பழக்கத்துக்கு மிக முக்கிய பங்குண்டு. ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்காத படியான உணவுகளை உட்கொள்
வதன் மூலம் நீரிழிவை ஆபத்தான கட்டம் தொடாமல் பார்த்துக் கொள்ள முடியும். ஆனாலும் அதற்கெல்லாம் யாருக்கு நேரமிருக்கிறது?

இன்ஸ்டன்ட் உணவுகள் பிரபலமாகி வருகிற இந்தக் காலக்கட்டத்தில் நீரிழிவுக்காரர்களுக்கும் அப்படி சிலதை தயார் செய்து கொள்ளலாம் என்கிறார் சென்னை, கோயம்பேட்டைச் சேர்ந்த கீதா. நீரிழிவுக்காரர்களுக்கான இன்ஸ்டன்ட் உணவு மிக்ஸ் தயாரித்து விற்பதில் பிஸி இவர்.பி.எஸ்சி., பி.எட் படிச்சிட்டு கல்ஃப்ல வேலை பார்த்திட்டிருந்தேன்.  3 வருஷங்களுக்கு முன்னாடி இந்தியா வந்தோம். டயட் சம்பந்தமான பயிற்சி வகுப்புகள், செமினார் எங்கே நடந்தாலும் ஆர்வத்தின் அடிப்படையில போய் கலந்துப்பேன். அப்படித்தான் ஒருமுறை நீரிழிவுக்காரர்களுக்கான உணவுத் தயாரிப்பு பத்தின வகுப்புக்கும் போனேன். எங்க வீட்லயும் என் அப்பாவுக்கும் கணவருக்கும் நீரிழிவு இருந்ததால அந்த வகுப்பு எனக்கு உபயோகமா இருந்தது. எந்த மாதிரி உணவுகள்ல நார்ச்சத்து அதிகம், எதுல கிளைசெமிக் இண்ெடக்ஸ் கம்மினு பார்த்துப் பார்த்து சமைச்சேன்.

அவங்களுக்கும் பிடிச்சதோட இல்லாம, சர்க்கரை அளவும் கட்டுப்பாட்டுக்குள்ள வந்ததை ஃபீல் பண்ணினாங்க. வீட்டுக்கு வர்றவங்கக்கிட்ட இதைப் பத்தியெல்லாம் பேசிக்கிட்டிருக்கிறப்ப, அவங்கவங்க வீட்ல உள்ள டயாபட்டிக் ஆட்களுக்கு கஞ்சி மாவும், தோசை மிக்ஸும் வேணும்னு ஆர்டர் கொடுக்க ஆரம்பிச்சாங்க. இன்னிக்கு நீரிழிவு உள்ளவங்க மட்டுமில்லாம, எப்ப வேணா நீரிழிவு வரலாம்னு பயப்படறவங்களும், அதை வராமத் தடுக்கணும்னு நினைக்கிறவங்களும்கூட இந்த உணவுகளுக்கு மாறிட்டிருக்காங்க....’’ என்கிற கீதா, ராகி கஞ்சி மிக்ஸ், சோயாவும் ஓட்ஸும் கலந்த தோசை மிக்ஸ், நார்ச்சத்து மிகுந்த சிறுதானிய ேதாசை மிக்ஸ், வெந்தயம் கலந்த தோசை மிக்ஸ், சம்பா ரவை அடை மிக்ஸ், கம்பில் செய்கிற தளிதீத் என ஏகப்பட்ட அயிட்டங்களை தயாரிக்கிறார்.

கம்பையும் கேழ்வரகையும் ஊற வச்சு அரைக்கிறதும் சமைக்கிறதும் எல்லாருக்கும் சாத்தியமில்லை. அதே நேரம் கடைகள்ல ரெடிமேடா கிடைக்கிற ரெடிமிக்ஸ்ல வெரைட்டியும் இருக்கிறதில்லை. நீரிழிவு இருக்கிறவங்க ஆரோக்கியமாகவும் அதே நேரம் வாய்க்கு ருசியாகவும் சாப்பிடணும்கிற எண்ணத்துலதான் இத்தனை வெரைட்டி தயாரிக்கிறேன். வெறும் 2 ஆயிரம் முதலீட்டுல யார் வேணாலும் இந்த பிசினஸை ஆரம்பிச்சு செய்யலாம். பாதிக்குப் பாதி லாபம் நிச்சயம்’’ என்கிறவரிடம், ஒரே நாள் பயிற்சியில் நீரிழிவுக்காரர்களுக்கான 10 வகையான இன்ஸ்டன்ட் மிக்ஸ் கற்றுக் கொள்ளக் கட்டணம் 750 ரூபாய்.

நீரிழிவு இருக்கிறவங்க ஆரோக்கியமாகவும் அதே நேரம் வாய்க்கு ருசியாகவும் சாப்பிடணும்கிற எண்ணத்துலதான் இத்தனை வெரைட்டி...

நைட் டிரெஸ்

ஷியாமளா

இரவில் மட்டுமே அணிகிற நைட்டி, இப்போது 24 மணி நேரமும் அணிகிற உடையாகிவிட்டது. வீட்டில் இருக்கிற போது அணியக்கூடிய வசதியான உடை அது என்பதில் சந்தேகமில்லை. ஆனாலும், அது எல்லோருக்கும் பொருத்தமாக இருப்பதில்லை. பேன்ட், சட்டை மாடலில் அணிகிற நைட் டிரெஸ்ஸும் பலரின் விருப்பமான உடையாகிக் கொண்டிருக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, ஆண்கள், பெண்கள் என எல்லோருக்கும் ஏற்றபடி இந்த மாடல் நைட் டிரெஸ் கிடைக்கிறது.

விதம் விதமான நைட் டிரெஸ் தைப்பதில் நிபுணியாக இருக்கிறார் சென்னை நீலாங்கரையைச் சேர்ந்த ஷியாமளா.பிளஸ் டூ படிச்சிருக்கேன். சின்ன வயசுலேருந்து தைக்கிறேன். வீட்லருந்தே பிளவுஸ், சுடிதார் எல்லாம் தச்சுக் கொடுத்திட்டிருக்கேன். ஒரு கஸ்டமர் நைட்டி தைப்பீங்களானு கேட்டாங்க. தச்சுக் கொடுத்தேன். அது அவங்களுக்கு ரொம்பப் பிடிச்சுப் போனதால, தொடர்ந்து ஆர்டர் கொடுத்தாங்க. அப்புறம் ஒருநாள் பேன்ட் ஷர்ட் மாடல்ல நைட் டிரெஸ் வேணும்னு கேட்டாங்க. அதுவும் தச்சுக் கொடுத்தேன். அதைப் பார்த்துட்டு மத்தவங்களும் கேட்டாங்க.

கடைகள்ல ரெடிமேடா கிடைக்கிற நைட் டிரெஸ் பெரும்பாலும் அளவு சரியா இருக்கிறதில்லை.  மட்டமான துணியில தச்சிருப்பாங்க. ஒரு முறை தண்ணியில போட்டதும் சுருங்கிடும். சாயம் போயிடும். தையல் விட்டுடும். பெண்களுக்கு அவங்க உடல்வாகுக்கு ஏத்தபடி சரியான அளவுல நைட் டிரெஸ் கிடைக்கிறதே இல்லை. அப்படி எந்தக் குறைகளும் இல்லாம நான் தச்சுக் கொடுக்கறேன். காலர் வச்ச மாடல், காலர் இல்லாதது, லேஸ் வச்சது, முக்கால் பேன்ட் மாடல்னு நிறைய இருக்கு. எல், எக்ஸ்எல், டபுள் எக்ஸ் எல் அளவுகளும் தைக்கிறேன். எலாஸ்டிக் இல்லாம கயிறு வச்சுத் தச்சுக் கொடுக்கறதால ரொம்ப நாள் வரும்’’ என்கிற ஷியாமளா, வெறும் 1,000 ரூபாய் முதலீட்டில் நைட் டிரெஸ் தைக்கிற பிசினஸில் இறங்க தைரியம் தருகிறார்.

மூணேகால் மீட்டர் துணியில ஒரு செட் தைக்கலாம். சாதாரண துணியா இருந்தா 250 ரூபாய்க்கு விற்கலாம். துணியோட தரத்தைப் பொறுத்து விலையும் வித்தியாசப்படும். வீட்டு வேலைகளை எல்லாம் முடிச்சிட்டு உட்கார்ந்தாலும் ஒருநாளைக்கு 2 செட் தைக்கலாம். வருஷம் முழுக்க ஆர்டர் இருக்கும்’’ என்கிறவரிடம் 2 நாள் பயிற்சியில் 3 மாடல் நைட் டிரெஸ் தைக்கக் கற்றுக் கொள்ளக் கட்டணம் 750 ரூபாய்.

வெறும் 1,000 ரூபாய் முதலீட்டில் நைட் டிரெஸ் தைக்கிற பிசினஸில் இறங்கலாம்!

- ஆர்.வைதேகி

படங்கள்: ஆர்.கோபால்