தனிமையில் பிறந்த இனிமை!



“என்னோட வாழ்க்கையை `போட்டோகிராபிக்கு முன்னால்... போட்டோகிராபிக்கு பின்னால்’னு பிரிச்சா... மிகப்பெரிய வித்தியாசத்தைக் காட்டலாம். கார்ப்பரேட் வேலையில இருக்கேன். அந்த வேலை எனக்குப் பணம், வசதிகள்னு நிறைய விஷயங்களைக் கொடுத்திருக்கு. ஆனாலும், ஒரு பெட்டிக்குள்ள என்னை  நானே சிறை வச்சுக்கிட்ட மாதிரியான உலகம் அது. போட்டோகிராபிங்கிற விஷயம் எனக்கு அறிமுகமான பிறகுதான் வாழ்க்கை எவ்வளவு விசாலமானது, சுவாரஸ்யமானதுங்கிறதை உணர்ந்தேன். என்னோட மன அழுத்தம், ஆற்றாமை, தனிமை உணர்வுனு எல்லாத்தையும் போட்டோகிராபி துடைச்சு எறிஞ்சிடுச்சு....’’ - பளிச்செனப் பேசுகிறார் பத்மாசனி. வளர்ந்து வரும் புகைப்படக் கலைஞர். கல்யாண வைபவம் முதல் கட்டிடக் கலை பிரமாண்டம் வரை இவரது கேமராவில் பதிகிற படங்கள் ஒவ்வொன்றும் கவிதை!

பி.எஸ்சி. கெமிஸ்ட்ரி, எம்.பி.ஏ. முடிச்சிட்டு, ஒரு சயின்டிஃபிக் ரிசர்ச் பப்ளிஷிங் கம்பெனியில சீனியர் புராஜெக்ட் மேனேஜரா வேலை பார்க்கறேன். வேலை விஷயமா 2010ல சீனா போனேன். ரெண்டரை வருஷம் அங்க இருந்தபோது, எனக்கு நிறைய சைனீஸ் தோழிகள் அறிமுகமானாங்க. அவங்கள்ல சில்வியாங்கிற போட்டோகிராபரும் ஒருத்தர். அவங்க கைப்பட எடுத்த போட்டோவை எனக்கு பரிசா கொடுத்தப்ப, அதுல தெரிஞ்ச உயிரோட்டம் என்னை ரொம்பவே பாதிச்சது. அதுக்கு முன்னாடி வரை போட்டோகிராபின்னா உள்ளதை உள்ளபடி எடுக்கிறதுனு மட்டும்தான் எனக்குத் தெரியும்.

சில்வியாவோட படங்கள்  உண்மையான புகைப்படக் கலைன்னா என்னனு எனக்கு அறிமுகப்படுத்தினது. புது நாடு, புது மக்கள், புது மொழினு அந்தச் சூழல் எனக்குள்ள ஒரு தனிமையை ஏற்படுத்தியிருந்தது. நானும், என் மகளும் மட்டும்தான் அங்கே இருந்தோம். தனிமையிலேருந்து தப்பிக்க நானும் என்னோட மொபைல்லயும், கையில இருந்த சின்ன கேமராவுலயும் போட்டோ எடுக்க ஆரம்பிச்சேன். அதையெல்லாம் சில்வியா கிட்ட காட்டினப்ப, அவங்க எனக்குள்ள புகைப்படத் திறமை இருக்கிறதாகவும், என்னோட பார்வை வித்தியாசமா இருக்கிறதாகவும் சொல்லி, டி.எஸ்.எல்.ஆர். கேமரா வாங்கி புரொஃபஷனலா போட்டோ எடுக்க ஊக்கப்படுத்தினாங்க. அவங்களோட பாராட்டுகள் எனக்கு பெரிய உற்சாகத்தைக் கொடுத்தது. டி.எஸ்.எல்.ஆர். கேமரா வாங்கினேன். எனக்குப் பிடிச்சதை எல்லாம் எடுக்க ஆரம்பிச்சேன்.

சென்னை வந்ததும், நான் எடுத்த படங்களை ஃபேஸ்புக்ல போட்டேன். அது மூலமா எனக்கு போட்டோகிராபர் ரமணிதரன் ராமசுவாமி அறிமுகமானார். ‘போட்டோகிராபி சொசைட்டி ஆஃப் மெட்ராஸ்’ல என்னை சேர்த்து விட்டதோட, எனக்கு முறைப்படி போட்டோகிராபியும் கத்துக் கொடுத்தார்.  ஹம்பி, தாராசுரம் கோயில்களோட கட்டிடக் கலையையும், பண்டிபூர் மாதிரியான இடங்கள்ல வைல்ட் லைஃபையும் எடுத்துக்கிட்டிருந்தேன். என் குருவோட சேர்ந்து சில இவென்ட்ஸுக்கு போய் படங்கள் எடுத்திருக்கேன். ‘இனி நீ தனியாவே எடுக்கலாம்... அந்தளவுக்கு உனக்குத் திறமை இருக்கு’னு சொல்லி, அவர்தான் என்னை வெட்டிங் போட்டோகிராபி பண்ண என்கரேஜ் பண்ணினார்.

வெட்டிங் போட்டோகிராபியை நான் பணம் பண்ற ஒரு விஷயமா மட்டும் பார்க்கலை. ரெண்டு பேரோட வாழ்க்கையில முக்கியமான தருணங்களைப் பதிவு பண்ற அந்த அனுபவம் விலை மதிக்க முடியாதது. 60 வயசுக்குப் பிறகும் அவங்களோட பேரக்குழந்தைகளோட அந்தப் படங்களை அவங்களால கூச்சம் இல்லாம ரசிக்க முடியணும்... பழைய நினைவுகள் பசுமையா நினைவுக்கு வரணும்... அது அவங்களுக்கு சந்தோஷத்தைத் தரணும்கிற எண்ணத்துலதான் வெட்டிங் போட்டோகிராபி பண்றேன். காசு பார்க்கச் செய்யற கமர்ஷியல் போட்டோகிராபி ஒரு பக்கம் இருந்தாலும், என்னோட ஆத்ம திருப்திக்காக, சமுதாயத்துக்கு ஏதாவது நல்லது செய்யறதுக்காகவும் இந்தக் கலையைப் பயன்படுத்தணும்னு நினைச்சேன். கேமராவும் கையுமா நான் அலைஞ்ச பல இடங்கள்லயும் குழந்தைத் தொழிலாளர்களை ஏராளமா சந்திச்சேன். அது என் மனசை ரொம்பக் கஷ்டப்படுத்தினது. படிக்க வேண்டிய வயசுல, படிக்க வசதியில்லாம, சாப்பாட்டுக்காக வேலை பார்க்கிற அந்த அவலத்தைப் பதிவு பண்ண ஆரம்பிச்சேன். எங்க வீட்டுக்குப் பக்கத்துல ஏழு வயசுலயும் மூணு வயசுலயும் ரெண்டு பெண் குழந்தைகள். ரொம்ப நாளா அவங்களை கவனிச்சேன்.

அவங்களோட அம்மாவும் வேலைக்குப் போறாங்க. ஆனா, அவங்க உடம்புக்கு முடியாதவங்க. அந்த 7 வயசுக் குழந்தை காலையில எழுந்ததும் வீட்டு வேலைக்குப் போறா. அப்புறம்
டீக்கடையில வேலை செய்யறா. மறுபடி சாயந்திரம் வீடு, கடைனு ராத்திரி வரைக்கும் வேலை பார்த்து, அந்தக் காசுல தன் 3 வயசு தங்கச்சியைப் படிக்க வைக்கிறா. தனக்குக் கிடைக்காத படிப்பு தன் தங்கைக்காவது கிடைக்கட்டும்னு நினைச்ச அந்தப் பெருந்தன்மை பெரிய விஷயமா இருந்தது. அதுலேருந்து எங்கெல்லாம் குழந்தைத் தொழிலாளர்களைப் பார்க்கறேனோ அவங்களை எல்லாம் படங்கள் எடுத்து டாகுமென்ட் பண்ண ஆரம்பிச்சிருக்கேன். ஏதாவது ஒரு வழியில அந்தப் படங்கள், அந்தக் குழந்தைங்களோட வாழ்க்கையில ஒரு விடியலை ஏற்படுத்தினா போதும்...’’ என்கிற பத்மாசனி, தனக்கு மனநிறைவைக் கொடுத்த ஒரு போட்டோ செஷன் பற்றியும் பேசுகிறார்.

வாரா வாரம் போட்டோ வாக் போவோம். குமுளினு ஒரு கிராமத்தைக் கடந்தப்ப, ஒரு பெரிய மரத்தடியில நிறைய குழந்தைங்க விளையாடிக்கிட்டிருந்தாங்க. அவங்களை போட்டோ எடுக்கலாம்னு கேமராவை எடுத்ததுமே, ரெண்டு பெண் குழந்தைகள் அவ்வளவு மனமகிழ்ச்சியோட, மலர்ச்சியோட போஸ் கொடுத்தாங்க. அந்தக் கணம் அவங்க முகத்துல நான் பார்த்த அந்த சந்தோஷம், பணம், புகழ்னு எதுக்கும் ஈடாகாதது. அதே போல என்னோட சொந்த ஊர் பெருங்குளத்துல மாயக்கூத்தர் கோயில் இருக்கு. அந்த பெருமாள் கோயிலைச் சுத்திதான் நான் வளர்ந்திருக்கேன்.

இப்ப போட்டோகிராபரானதும், அந்தக் கோயில்ல நடக்கிற எல்லா விசேஷங்கள், திருவிழாக்களுக்கும் நான்தான் படங்கள் எடுக்கறேன். அது ரொம்ப பெருமையா இருக்கு...’’ - கனிவாகச் சொல்பவருக்கு, கூடிய விரைவில் முழுநேர புகைப்படக் கலைஞராக உருவெடுப்பதே லட்சியம்.கார்ப்பரேட் வேலைங்கிற பெட்டிக்குள்ளருந்து என்னை முழுமையா விடுவிச்சுக்கிட்டு, எனக்கு சுதந்திரத்தையும் சந்தோஷத்தையும் நிறைவையும் கொடுக்கிற புகைப்படக் கலைக்குள்ள இன்னும் தீவிரமா ஈடுபடப் போறேன்...’’ என்கிறார் தீர்க்கமாக!

அந்தக் கணம் அவங்க முகத்துல நான் பார்த்த அந்த சந்தோஷம், பணம், புகழ்னு எதுக்கும் ஈடாகாதது.

60 வயசுக்குப் பிறகும் அவங்களோட  பேரக்குழந்தைகளோட அந்தப் படங்களை அவங்களால கூச்சம் இல்லாம ரசிக்க  முடியணும்... பழைய நினைவுகள் பசுமையா நினைவுக்கு வரணும்... அது அவங்களுக்கு  சந்தோஷத்தைத் தரணும்...

- ஆர்.வைதேகி