பாரம்பரியத்தின் பெருமை கட்டைக்கூத்து!



சல்சா, ஜைவ், ஹிப்ஹாப், எட்செட்ரா எட்செட்ராவை எல்லாம் அறிந்த இந்தத் தலைமுறைக் குழந்தைகளுக்கு கூத்து என்கிற வார்த்தைக்கு அர்த்தம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பாரம்பரியக் கலைகளில் முக்கிய இடம் வகித்த கட்டைக்கூத்துக்கு மரியாதையையும் மறுமலர்ச்சியையும் உருவாக்கும் முயற்சியை தைரியமாகக் கையில் எடுத்திருக்கிறார் ஹேமலதா. கிரியேட்டிவ் ஆர்ட் தெரபிஸ்ட் என தன்னை அறிமுகம் செய்து கொள்கிற இவர், இசை, நடனம் உள்ளிட்ட கலைகளின் மூலம் குழந்தைகள், பெரியவர்கள், சிறப்புக் குழந்தைகள், புற்றுநோயாளிகள், திருநங்கைகள் என எல்லோருக்கும் கவுன்சலிங் அளிப்பவர்!

கட்டைக்கூத்தைப் பற்றிய விழிப்புணர்வை உருவாக்கும் நோக்கத்தில், சென்னையில் 10 நாட்கள் பயிற்சிப் பட்டறையை வெற்றிகரமாக நடத்தியிருக்கிறார் இவர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, சமுதாயத்தின் அனைத்து மட்டங்களைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்ட இந்தப் பட்டறை மக்களுக்குப் பல புதிய தகவல்களை சொல்லியிருப்பதையும் பெருமையுடன் பகிர்கிறார் ஹேமலதா.அடிப்படையில நான் ஒரு நடனக்கலைஞர்.

5 வயசுலேருந்து டான்ஸ் பண்றேன். நடன அசைவுகளை வச்சு, குழந்தைங்கள்லேருந்து பெரியவங்க வரை எல்லாருக்கும் கவுன்சலிங் பண்றதை கடந்த சில வருஷங்களா பண்ணிட்டிருக்கேன். இதுக்கான `4S Within’னு ஒரு அமைப்பு வச்சிருக்கேன். என்னோட துறைக்காகவும் நான் கொடுக்கிற தெரபிக்காகவும் நான்  நிறைய ஒர்க்‌ஷாப் போவேன். நிறைய பயணம் பண்ணுவேன். நிறைய நிறைய கலைஞர்களை சந்திப்பேன். வேற வேற மாநிலங்கள்லேருந்தும், நாடுகள்லேருந்தும் வரும் கலைஞர்களைப் பத்தி டெல்லியில உள்ள `கதி’ங்கிற அமைப்பு தகவல் கொடுப்பாங்க. அந்தக் கலைஞர்களை வச்சு சென்னையில நிறைய ஒர்க்‌ஷாப் பண்ணியிருக்கேன். அப்படித்தான் ஒருமுறை ஹானாவை சந்திச்சேன். ‘ஹானா எம்.டி.ப்ரூயின்’கிறது அவங்களோட முழுப்பெயர்.

பெருங்கட்டுங்கிற ஊர்ல ‘கட்டைக்கூத்து சங்கம்’ நடத்தற ராஜகோபாலோட மனைவி அவங்க. கட்டைக்கூத்து பத்தி நிறைய ஆய்வுகள் செய்திருக்காங்கனு தெரிய வந்தது. அவங்களோட பேசிட்டிருந்தப்ப, அந்தக் கலையைப் பத்தின ஆர்வம் அதிகரிச்சதோட இல்லாம, அதைக் கத்துக்கணும்கிற எண்ணமும் வந்தது. நானும் இதுவரைக்கும் எத்தனையோ வகையான நடனங்களை, கலைகளைப் பார்த்திருக்கேன். கட்டைக்கூத்துல உள்ள அழகியலை வேற எதுலயும் பார்க்கலை. ஹானா மூலமா அவங்களோட சங்கத்துலேருந்து சில கலைஞர்களை வரவழைச்சோம். பத்து நாள் ஒர்க்‌ஷாப் நடத்தறதா அறிவிச்சோம்.  கூத்தா... அதைக் கத்துக்கிட்டு எங்கக் குழந்தைங்க என்ன பண்ணப் போறாங்க’ன்னும், `அதுல என்ன இருக்கு’ன்னும் கேட்ட பெற்றோர்தான் அதிகம். நம்ம கலாசாரத்துக்குக் கொஞ்சமும் சம்பந்தமில்லாத ஏதேதோ கலைகளைக் குழந்தைங்களுக்கு அறிமுகப்படுத்தத் தயாரா இருந்த அவங்களுக்கு, நம்ம பாரம்பரியம் பேசற கட்டைக்கூத்துக் கலையைப் பத்தின விழிப்புணர்வை ஏற்படுத்த விருப்பமில்லாதது வருத்தத்தைக் கொடுத்தது.

என்னோட ஆர்ட் தெரபியில கட்டைக்கூத்தை சேர்க்கிறதுல  கூடுதல் பெருமையா ஃபீல் பண்றேன். காரணம்... இந்தக் கலையில உள்ள நல்ல அம்சங்கள்...  பரதநாட்டியம் உள்பட பல நடனங்களுக்கும் தேவைப்படற கறாரான உடல் அசைவுகள் இதுக்குத் தேவையில்லை. யாருக்கு எப்படி வருதோ அப்படி ஆடலாம். அதுக்கப்புறம் அவங்களுக்குனு ஒரு ஸ்டைல் உருவாகிடும். குழந்தைங்களுக்கு இந்தக் கலையை ஏன் அறிமுகப்படுத்தணும்னு கேட்கறவங்களுக்கு சொல்றதுக்கு நிறைய இருக்கு. இதுல குழந்தைங்களுக்கு ரொம்பப் பிடிச்ச ஸ்டோரி டெல்லிங் இருக்கு. குழுவா இணைஞ்சு ஈடுபடற ஒரு கலைங்கிறதால ஒற்றுமை உணர்வு வளரும். உடல், மனம், உணர்வுகள்னு மூணையும் ஒருங்கிணைக்கிற கலை. கோபமோ, வருத்தமோ, ஏமாற்றமோ, பயமோ எந்த உணர்ச்சிகளையும் வெளிப்படையா சொல்லத் தெரியாத குழந்தைங்களை இந்தக் கலை மூலமா உணர்ச்சிகளை வெளிப்படுத்த வைக்க முடியும்.`ஆடி முடிச்சதும் என் கோபமெல்லாம் நீங்கி, மனசு லேசா ஆன மாதிரி இருக்கு’னு குழந்தையால சொல்ல முடியாதுன்னாலும், அந்த மாற்றத்தை அவங்கக்கிட்ட நாம கண்கூடா பார்க்க முடியும். சுருக்கமா சொன்னா மனசுக்கும் உடம்புக்கும் நல்லது பண்ற இந்தக் கலையை குழந்தைங்க மட்டுமில்லாம எல்லாருமே  தெரிஞ்சுக்கலாம்...’’ அவசியம் உணர்த்தி முடிக்கிறார் ஹேமலதா.

அவரைத் தொடர்கிறார் கட்டைக்கூத்துக் கலைஞர் தமிழரசி.கட்டைக்கூத்து பெண் கலைஞர்களிலேயே இளவயதுச் சாதனையாளர். 21 வயதில் இவரது பேச்சிலும் கலையிலும் அத்தனை தீர்க்கம்!அப்போ எனக்கு 8 வயசு. காஞ்சிபுரத்துலேருந்து 25 கி.மீ. தூரத்துல உள்ள பெருங்கட்டூர்ல ‘கட்டைக்கூத்து சங்கம்’னு ஒரு ஸ்கூல் நடத்தற ராஜகோபால் ஐயாவும் எங்கப்பாவும் நண்பர்கள். அந்த ஸ்கூல்ல என்னை சேர்த்துப் படிக்க வைக்க முடிவு பண்ணினார் அப்பா. கூத்து படிக்கிறதுக்காகத்தான்னு அப்போ எங்கப்பா சொல்லலை. அந்த வயசுல கூத்துன்னா என்னன்னு எனக்கும் புரியலை. காலையில 7:30 மணிக்கு பள்ளிக்கூடம் போய் படிக்கணும். மதியம் 1:30 மணியிலேருந்து 5 மணி வரைக்கும் கூத்து பழகணும். முதல்ல புரியாம ஆட ஆம்பிச்சாலும், போகப் போக எனக்கு அந்தக் கலை மேல ஒரு ஈர்ப்பு வந்திருச்சு....’’ அறிமுகம் சொல்கிறார் தமிழரசி.

ஒரே இடத்துல இருந்தபடி ஆடறதாலயும், கட்டையால செய்த அணிகலன்களை அணிஞ்சுக்கிட்டு ஆடறதாலயும் கட்டைக்கூத்துனு பேர் வந்திருக்கணும்.  கல்யாண முருங்கைனு ஒரு மரத்துலதான் கிரீடம், புஜம், மார்பதக்கம்னு அணிகலன்கள் செய்வாங்க. அதுதான் கனமில்லாம இருக்கும். ஆரம்ப காலத்துல இந்தக் கூத்துல பொம்பிளைங்க இல்லை. பொம்பிளைங்க வேஷங்களையும் ஆண்களேதான் செய்திருக்காங்க. எங்க குரு ராஜகோபால் ஐயாதான் இந்தக் கூத்துல பெண்களை முதல்ல அறிமுகம் செய்தார். இன்னும் சொல்லப் போனா எங்க சங்கத்துல முழுக்க முழுக்க பெண்களே ஆடற பிரத்யேக குழுவே இருக்கு...’’ பெருமையாகச் சொல்பவர், இந்தக் கலையில் பெண்கள் அதிகம் இல்லாததன் பின்னணியும் பகிர்கிறார்.

பெரும்பாலும் கூத்துன்னா ராத்திரியில ஆரம்பிச்சு விடியற்காலை வரைக்கும் போகும். நிறைய பேரோட பேசிப் பழகணும். நிறைய இடங்களுக்குப் போக வேண்டியிருக்கும். பாதுகாப்பான அரங்கத்துல ஆடற கலையில்லை இது. பொதுவெளியில ஆடணும். இதெல்லாம் பொண்ணுங்களுக்குப் பாதுகாப்பானதில்லைனு பல பெற்றோர் நினைக்கிறாங்க. கூத்தாடற பொண்ணுங்களுக்கு அத்தனை சீக்கிரம் கல்யாணமாகாதுங்கிற பயமும் ஒரு காரணம்.

5 வருஷத்துக்கு முன்னாடி பொண்ணுங்க இந்தக் கூத்தை ஆடக்கூடாதுனு நிறைய பெற்றோர் எதிர்ப்பு தெரிவிச்சாங்க. அதுல என் அம்மா அப்பாவும் அடக்கம். ஆனா, இதுல ஊறிப் போன எனக்கு அத்தனை ஈஸியா இந்தக் கலையை உதற முடியலை. தினமும் மணிக்கணக்குல பயிற்சி பண்ணணும். ஒரு கதையைக் கத்துக்கணும்னா 3 மாசமாகும். வெறும் டான்ஸ் மட்டுமில்லை... பாடணும்... வசனம் பேசி, ஆடணும்... நடிக்கணும்... மூச்சை எப்படி உள்ளே இழுத்து விடணும், எப்ப வெளியே விடணுங்கிற வரைக்கும் எல்லாத்துக்கும் பயிற்சிகள் உண்டு. கிட்டத்தட்ட 13 வருஷங்கள் இதையெல்லாம் கத்துக்கிட்ட எனக்கு திடீர்னு விட்டுடுனு சொன்னதை ஏத்துக்க முடியலை. அம்மா, அப்பாகிட்ட பேசிப் புரிய வச்சேன். எல்லாப் பொண்ணுங்களுக்கும் இது முடியறதில்லை...’’ என்கிறார் வருத்தமான குரலில்.

கட்டைக்கூத்துக் கலை நிகழ்ச்சிக்காக இங்கிலாந்து, ஸ்விட்சர்லாந்து என வெளிநாடுகளுக்கும் சென்று வந்திருக்கிறார் தமிழரசி.தியேட்டர் பத்திப் படிக்க வெளிநாடு போனேன். அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, நானே மேக்கப் போட்டு, கூத்து பத்தின ஒர்க்‌ஷாப் நடத்தினேன். நம்மூர்ல கட்டைக்கூத்துன்னா என்னனு தெரிய மாட்டேங்குது. ஆனா, வெளிநாட்டுக்காரங்களுக்கு தெரியுது. அதை ஆர்வமா ரசிக்கிறாங்க. கத்துக்கறாங்க...’’ - இன்பமும் துன்பமும் கலந்து சொல்கிறார்.இரண்டு வேடங்கள் கட்டி ஆடுவதிலும் நிபுணி தமிழரசி!

மெயின் கேரக்டர் பண்றவங்க 5 மணி நேரம் மேடையில இருக்கணும். வேற எங்கேயும் நகர முடியாது. அதனால பெரும்பாலும் அவங்க ரெண்டு வேஷம் கட்ட மாட்டாங்க. ஆனா, நான் என் தனிப்பட்ட விருப்பத்துல ரெண்டு வேஷம் கட்டியிருக்கேன். அந்த அனுபவம் ரொம்ப சவாலானதா இருக்கும். ஒரு வேஷத்துக்கு மேக்கப் போடவே கிட்டத்தட்ட 2 மணி நேரம் ஆகும். அதை ஆடி முடிச்சிட்டு, இன்னொரு கேரக்டருக்கு தயாராகணும். பிடிச்ச விஷயத்தைச் செய்றபோது சிரமம் தெரியறதில்லை...’’ என்பவருக்கு கர்ண மோட்சத்தில் கர்ணன் மற்றும் அவரது மனைவி பொன்னுருவி வேடங்களை ஏற்க பெரும் ஆசையாம்.

கூத்துக் கலைஞர்களுக்கு 6 மாசம்தான் வேலை. மீதி 6 மாசம் மழை, குளிர் காலம்னு நிகழ்ச்சிகள் இருக்காது. அந்த நேரத்துல புதுக் கூத்துக்கான கதைகளைக் கத்துக்கவும்
 பயிற்சி எடுத்துக்கவும் செலவழிப்போம். எனக்குத் தெரிஞ்சு இத்தனை வருஷங்கள்ல நான் எந்தப் பிரச்னைகளையும் சந்திச்சதில்லை. நாம எப்படி நடந்துக்கறோம்கிறதையும் இருக்கிற இடத்தையும் பொறுத்தது பாதுகாப்பு...’’ பெண்களுக்கான பொது அறிவுரை சொல்லி முடிக்கிறார் தமிழரசி.                    

நம்ம கலாசாரத்துக்குக் கொஞ்சமும்  சம்பந்தமில்லாத ஏதேதோ கலைகளைக் குழந்தைங்களுக்கு அறிமுகப்படுத்தத் தயாரா  இருந்த பெற்றோருக்கு, நம்ம பாரம்பரியம் பேசற கட்டைக்கூத்துக் கலையைப் பத்தின  விழிப்புணர்வை ஏற்படுத்த விருப்பமில்லாதது வருத்தத்தைக் கொடுத்தது.

கூத்துக் கலைஞர்களுக்கு 6 மாசம்தான்  வேலை. மீதி 6 மாசம் மழை, குளிர் காலம்னு நிகழ்ச்சிகள் இருக்காது. அந்த  நேரத்துல புதுக் கூத்துக்கான கதைகளைக் கத்துக்கவும் பயிற்சி  எடுத்துக்கவும் செலவழிப்போம்...