மென்பொருளில் மேன்மை!



எல்லாரும் ஐ.டி., ஐ.டி.ன்னு போய் விழுந்தா அந்தத் துறைக்கு மவுசு எப்படிக் கிடைக்கும்?’, ‘அமெரிக்காவுல வேலை இல்லைன்னு நிறைய பேரை திருப்பி அனுப்பிட்டாங்களாம்!’, ‘இப்பல்லாம் சாஃப்ட்வேர் இண்டஸ்ட்ரியில சம்பளம் கம்மியாயிடுச்சாம்’... ஏகப்பட்ட கருத்துகள், விமர்சனங்கள், யூகங்கள்! அத்தனையையும் ஓரம் கட்டிவிட்டு, மென்பொருள் துறையின் முன்னேற்றம் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டேதான் வருகிறது. கம்ப்யூட்டர் பயன்பாடு உலக அளவில் அதிகரித்திருப்பதே காரணம்.

கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங் பிரபலமாகாத காலத்தில் இந்தத் துறையில் அடியெடுத்து வைத்தவர் ஹேமா அருணாச்சலம் மூர்த்தி. சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியர் என்பதையும் தாண்டி, மக்களுக்குப் பயன் தரும் பல மென்பொருட்கள் உருவாக்கத்தில் ஈடுபட்டவர். பல கருத்தரங்குகளிலும் பத்திரிகைகளிலும் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தவர். நூல்கள் வெளியிட்டிருப்பவர்.

‘மேன்தன் அவார்ட்’, ‘ஐ.பி.எம். ஃபேகல்டி அவார்ட்’ உள்ளிட்ட பல விருதுகளுக்கு சொந்தக்காரர். பார்வை மாற்றுத் திறனாளிகள் கம்ப்யூட்டரை பயன்படுத்தும் வண்ணம் ‘இந்தியன் லாங்வேஜ் ஸ்க்ரீன் ரீடர்’ உள்பட பல தொழில்நுட்ப உபகரணங்கள் உருவாக்கத்தில் உதவியவர்... கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங் துறை, அதன் எதிர்காலம், அந்தத் துறைக்கு அவர் வந்த வரலாறு அத்தனையையும் நம்மோடு பகிர்ந்துகொள்கிறார் ஹேமா...

‘‘எங்களுக்கு பூர்வீகம் நாமக்கல். அப்பா ஹைதராபாத் டிஃபென்ஸ் அக்கவுன்ட்ஸ் டிபார்ட்மென்ட்ல அக்கவுன்டன்ட். அதனால நான்  ஹைதராபாத்லதான் வளர்ந்தேன். அப்பா ஒரு முற்போக்குவாதி. எங்க வீட்ல ரம்ஜான், கிறிஸ்துமஸ், பொங்கல்னு எல்லா பண்டிகைகளையும் கொண்டாடுவோம். 48 வயசுல ஹார்ட் அட்டாக்குல அப்பா காலமாகிட்டார். அப்போ எனக்கு 8 வயசு. தங்கைக்கு 3 வயசு. நாங்க அஞ்சு சகோதரிகள். அம்மா அதிகம் படிச்சவங்க இல்லை. அதனாலேயே அப்பாவுக்கு அப்புறம் காம்பன்சேஷன் வேலையும் கிடைக்கலை. அக்காவோட ஸ்காலர்ஷிப், கிடைச்ச பென்ஷனை வச்சுக்கிட்டு எங்களைப் படிக்க வச்சாங்க அம்மா.

பெண் குழந்தைகளா இருந்தாலும் நாங்க நிறைய படிக்கணும்னு ஆசைப்பட்டார் எங்கப்பா. அம்மா தான் அதிகம் படிக்கலைங்கிறதாலேயே எங்களை நல்லா படிக்க வச்சாங்க. ‘நீ நல்லா படிக்கலைன்னா உன்கிட்ட ஏதோ பிரச்னை இருக்கு’ம்பாங்க. நாங்க அஞ்சு பேருமே நல்லா படிச்சோம்… 5 பேருமே பி.ஹெச்டி. முடிச்சிருக்கோம். ரெண்டு பேரு பிசிஸ்க்ஸ்ல… ரெண்டு பேரு பயோகெமிஸ்ட்ரியில… நான் இன்ஜினியரிங்ல.

அம்மாவுக்கு யாருமே உதவலைன்னாலும் தன் குழந்தைகளை காப்பாத்த முடியும்கிற தைரியம் இருந்தது. கூடப் பிறந்தவங்ககிட்ட கூட உதவி எதிர்பார்க்க மாட்டாங்க. ஹைதராபாத் ‘செயின்ட் ஃபிரான்சிஸ் கான்வென்ட் ஹைஸ்கூல்’ல ஆறாவது வரை படிச்சேன். அம்மாவால ஃபீஸ் கட்ட முடியலை. அதனால ‘சென்ட்ரல் ஸ்கூல்’ல (கேந்திர வித்யாலயா) 11வது வரை படிச்சேன்.

ஒஸ்மானியா யுனிவர்சிட்டியில பி.இ. எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் சேர்ந்தேன். அங்கே குடும்ப வருமானம் ஆயிரம் ரூபாய்க்கு குறைவா இருந்தா, ஒரு செமஸ்டருக்கு 15 ரூபாதான் ஃபீஸ். ஸ்டூடன்ட்ஸ்ல நான் மட்டும்தான் பெண். பஸ் பாஸ் தவிர வேற செலவு இல்லை. லைப்ரரியில புக்ஸ் எடுத்துப் படிப்பேன். பி.இ. முடிச்சதும் பாம்பே டி.ஐ.எஃப்.ஆர். (டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபண்டமென்டல் ரிசர்ச்)ல வேலை கிடைச்சது. அப்புறம் கல்யாணம் ஆச்சு. கனடாவுல மெக்மாஸ்டர் யுனிவர்சிட்டியில‘மாஸ்டர் ஆஃப் இன்ஜினியரிங் (எலெக்ட்ரிக்கல் அண்ட் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங்)’ முடிச்சேன். சென்னை வந்தேன். ஐ.ஐ.டி. சென்னைல ஃபுல் டைம் ரிசர்ச் ஸ்காலரா சேர்ந்தேன். பி.ஹெச்டி. இன்டர்வியூவின் போது அந்த டைரக்டர், ‘உங்க வீட்டுக்காரர் என்ன பண்றார்’னு கேட்டார். ‘தி இன்ஸ்டிடியூட் ஆஃப் மேத்தமெட்டிகல் சயின்சஸ்ல புரொஃபசரா இருக்கார்’னு சொன்னேன். ‘அவர் ஃபிசிக்ஸ்… நீ கம்ப்யூட்டர் சயின்ஸ்.

அப்படின்னா உன் தீசீஸை அவர் எழுத முடியாது’ன்னார். பெண்கள்னா அவங்களால சுயமா எதுவும் செய்ய முடியாதுங்கற எண்ணம்! நான் ஆய்வுக்கு எடுத்துகிட்ட தலைப்பு, ‘அல்கரிதம்ஸ் ஃபார் ப்ராசஸிங் ஃபோரியர் ட்ரான்ஸ்ஃபார்ம் பேஸ் ஆஃப் சிக்னல்ஸ்.’ அது அப்போ ரொம்ப அபூர்வமான களம். இப்போ நிறைய பேர் பண்றாங்க. எளிமையா சொல்லணும்னா கம்ப்யூட்டர்ல தட்டச்சு பண்றோம். அதை மெயிலா அனுப்பறோம்… என்னென்னவோ செய்யறோம். பேசும்
பேச்சொலியை புரிஞ்சுகிட்டு (Speech recognition) கம்ப்யூட்டர் பதில் சொல்றது மாதிரியான ஒரு ஆய்வு. அப்புறம்
ஐ.ஐ.டி.லயே லெக்சரரா ஆனேன்.

இப்போ சில தயாரிப்புகளையும் பண்ணியிருக்கோம். ஒரு விவசாயிக்கு விவசாயம் சம்பந்தமா ஏதோ தகவல் வேணும்னு வச்சுக்குவோம். அவருக்கு ஒரு போன் நம்பரை குடுத்திருப்போம். என்.ஐ.சி. (நேஷனல் இன்ஃபர்மேட்டிக்ஸ் சென்டர்)னு ஒண்ணு இருக்கு. அவங்க இணையதளத்துல ஒவ்வொரு நாள் இரவும் விவசாயப் பொருட்களோட அன்றாட விலை நிலவரத்தை பதிவேத்தி வச்சிடுவாங்க. வெண்டைக்காய் விலை இவ்வளவு, உருளைக்கிழங்கு இவ்வளவு விலைன்னு கம்ப்யூட்டர்ல பதிவு பண்ணியிருப்பாங்க. விவசாயி போன் பண்ணி அந்தத் தகவல்களை தெரிஞ்சுக்கலாம். எல்லா மாவட்டத்துலயும் காய்கறி, தானியங்கள் என்ன விலைக்கு விற்கப்படுதுன்னு செல்போன்லயே தெரிஞ்சுக்கலாம். குரலை புரிஞ்சுக்கிட்டு கம்ப்யூட்டர் சரியான பதிலை சொல்லிடும். அதுக்காக ஒரு சாஃப்ட்வேரை உருவாக்கியிருக்கோம்.

விளைகிற பொருட்களை விவசாயி அரசாங்கத்துக்கு வித்தா நல்ல விலை கிடைக்கும். ஆனா, விக்க முடியறதில்லை. விளைபொருள் நல்லா இல்லை, அது சரியில்லைன்னு எத்தனையோ காரணங்களை சொல்லி கழிச்சுக் கட்டிடுவாங்க. அதனாலேயே தனியார் நிறுவனங்களுக்கு விக்க வேண்டியிருக்கு. அதுக்கு பொருட்களின் விலையை தெரிஞ்சுக்க வேண்டிய அவசியம் விவசாயிக்கு இருக்கு. இந்தியாவுல அஃபீஷியல் லாங்க்வேஜா இருக்கற 22 மொழிகள்ல 6 மொழிகளில் இந்த சாஃப்ட்வேரை உருவாக்கியிருக்கோம். என்ன… 

ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி (ஸ்லாங்) பேசுவாங்க. அதையெல்லாம் கம்ப்யூட்டருக்கு புரிய வைக்கணும். அதான் பெரிய பிரச்னை!
நான் படிக்கிற காலத்துல கம்ப்யூட்டர் சயின்ஸ்-இன்ஜினியரிங்குக்கு தனியா சப்ஜெக்ட் கிடையாது. கனடாவுல படிச்ச போதுதான் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் அறிமுகமானது. டி.ஐ.எஃப்.ஆர்ல வேலை பார்த்ததால எனக்கு சயின்டிஸ்ட் ஆகணும்னு ஆசை. அதுக்காகத்தான் சென்னைக்கு வந்தேன்... கிடைக்கலை. கிராபிக்ஸ் படிச்சேன். ஏதாவது உபயோகமான சாஃப்ட்வேர் பண்ணணுங்கிற ஆர்வம் இருந்தது. ஐ.ஐ.டி.யில பி.ஹெச்டி.ல சேர்ந்தேன். அப்போ 7 பேர் இன்டர்வியூவுக்கு போயிருந்தோம். எனக்கு நல்ல கைடு கிடைச்சார். ஃபீல்டுல நல்ல எக்ஸ்பர்ட். ஆனா, அவருக்குள்ள ஆணாதிக்கச் சிந்தனையும் இருந்தது. என் பி.ஹெச்டி.க்கு அப்புறம் யு.எஸ்.ல ஒரு ரிசர்ச்சுல சேர அவர் ஒரு பரிந்துரை கடிதம் கொடுக்கணும். அதுல தாறுமாறா எழுதிட்டார். நான் நேரடியா இன்டர்
வியூவுக்கு போய் செலக்ட் ஆனேன். அப்போ என் குழந்தைக்கு ரெண்டரை வயசு. அவளையும் கூட்டிக்கிட்டு அமெரிக்காவுக்கு போனேன். அங்கே எனக்கு சர்வதேச அங்கீகாரமும் கிடைச்சது.

அமெரிக்காவுலயும் அந்தப் பிரச்னை இருந்தது. ‘பெண்ணா… அதுவும் குழந்தையோடயா... அவ்வளவுதான்’னு. ஆனா, நான் வேலை பண்றதை பார்த்துட்டு, ‘இங்கேயே நீங்க ஏன் ஒரு வேலைக்கு முயற்சி பண்ணக் கூடாது’ன்னு கேட்க ஆரம்பிச்சுட்டாங்க. என் கணவர் அமெரிக்கா வர விரும்பலை. அதனாலேயே சென்னைக்கு வந்துட்டேன்.

இப்பவும் ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வேலை பார்க்கறேன். பெண்களுக்கு உரிய மரியாதையோ, அங்கீகாரமோ இங்கே இல்லைன்னுதான் சொல்லணும். எல்லா நிறுவனங்கள்லயுமே இப்படித்தான். ‘டீன்’னா ஆம்பளையாத்தான் இருப்பாங்க. ஒரு ஹெச்.ஓ.டி.யா ஒரு பெண் வர்றதுங்கறதே இங்கே கஷ்டம். பெண்கள்கிட்டயும் பிரச்னை இருக்கு. ஐ.ஐ.டி.ல ரிசர்ச் பண்ற பெண்களுக்கு 6 மாசம் மெட்டர்னிட்டி லீவ் குடுப்பாங்க. அதுக்கு மேல எடுத்துக்காதீங்கன்னு சொல்வேன். ஒரு வருஷம் லீவ் எடுத்துடுவாங்க. அதனாலயே அவங்க செய்யற ஆராய்ச்சியை வேற யாருக்காவது கொடுக்க வேண்டியதாயிடும். நான் என் குழந்தையையே கிரஷ்ல விட்டுட்டுத்தான் வேலைக்கும் ஆய்வுக்கும் போனேன். நானும் என் கணவரும் எப்படியோ அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு குழந்தையைப் பார்த்துக்கிட்டோம்.

ஆய்வு, ஆராய்ச்சி பண்ணணும்னா இப்படியெல்லாம் குடும்பத்துல அட்ஜஸ்ட்மென்ட் வேணும். வீட்ல ஆயிரம் பிரச்னை இருக்கும். அதை வீட்லயே விட்டுட்டு வந்துடணும். ஆபீஸ்ல இருக்கற போது மனசு அலைபாய்ஞ்சுதுன்னா ரிசர்ச்சே பண்ண முடியாது. கல்யாணம் ஆன புதுசுல என் கணவருக்கு  டீ கூட போடத் தெரியாது. இப்போ நல்லா சமைக்கறார்… வீட்டை நல்லாவே பார்த்துக்கறார்! ஆணும் பெண்ணும் எல்லா வேலைகளையும் பகிர்ந்துக்கிட்டாதான் சாதிக்க முடியும். பல பெண்களுக்கு இதை எப்படி சாத்தியமாக்கறதுன்னு தெரியறதில்லை. ‘நான் லேட்டா வீட்டுக்குப் போக முடியாது’ம்பாங்க. பெண்களுக்கு மனசுல பயம் இருந்தா எல்லாமே அதுக்கேத்தபடி நடக்கும். பயம் கூடாது. வண்டி ஓட்டக் கத்துக்கணும், தனியா எங்கே வேணாலும் போய் வர்றதுக்கு தைரியம் வரணும். பெண்கள் தங்கள் பலவீனத்தை காட்டினா, அதை ஆண்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்குவாங்க.

2006ல ஐ.ஐ.டி.யில புரொஃபசர் ஆனேன். நிறைய ஆய்வுகள் செஞ்சிருக்கேன்… செஞ்சுக்கிட்டு இருக்கேன். 2004ல ஒரு புராஜெக்ட் பண்ணினோம்... மறக்கவே முடியாதது. அப்போ யார்கிட்டயாவது ‘எது வரை படிச்சிருக்கீங்க’ன்னு கேட்டா ‘பத்தாவது’ம்பாங்க. இங்கிலீஷ்லயும் மேத்ஸ்லயும் ஃபெயில் ஆகியிருப்பாங்க. இதுக்கு ஏதாவது பண்ணணும்னு தோணிச்சு. இங்கிலீஷ்ல அவங்களை பாஸ் பண்ண வைக்கறதுக்காகவே இன்டர்நெட் மூலமா பாடம் சொல்லிக் குடுத்தோம். திருவள்ளூர் மாவட்டத்துல ஒரு கிராமத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு சொல்லிக் குடுத்து நிறைய மாணவர்களை பாஸ் பண்ண வச்சோம். ஒரு பிரைவேட் கம்பெனியோட சேர்ந்து, இதுக்காகவே ஒரு சாஃப்ட்வேர் தயார் செஞ்சு சொல்லிக் கொடுத்தோம். அதுக்கப்புறம் தமிழ் தவிர மற்ற எல்லா பாடங்களையும் இன்டர்நெட்ல போட்டோம். ஒரு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த பையன் திருவள்ளூர் மாவட்டத்துல ஃபர்ஸ்ட்டா வந்தான். ரொம்ப நிறைவைக் கொடுத்த வேலை அது. எதிர்பாராதவிதமா அதைத் தொடர முடியலை...

ஐ.டி. துறையில நிறைய வேலைகள் இருக்கு. ஆனா, நல்ல வருவாய் கிடைக்க அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் போன்ற இடங்களைச் சார்ந்திருக்க வேண்டிய அவசியத்துல இருக்கோம். அது நிறுத்தப்பட்டுதுன்னா உள்நாட்டு வளர்ச்சி இங்கே பாதிக்கப்படத்தான் செய்யும். ஆனா, நம்ம நாட்லயே இந்தத் துறைக்கான நிறைய வேலைகள் இருக்கு.  இங்கே நிறைய பெண்கள் எம்.பி.ஏ. பண்றாங்க. அட்மின், ஹெச்.ஆர்.னு வேலை பார்க்கறாங்க. ஆனா, இன்ஜினியரிங் படிச்சுட்டு எம்.பி.ஏ. பண்றவங்க ரொம்ப கம்மி. நாங்க படிச்சப்போ ஆயிரம் மாணவர்களுக்கு 10 பெண்கள் படிச்சோம். இப்போ 50 சதவிகிதம் பெண்கள் இன்ஜினியரிங் படிக்கறாங்க. இன்ஜினியரிங் அதிக செலவான படிப்புன்னு சிலர் நினைக்கறாங்க.

6 லட்சம், 11 லட்சம்னு பணம் குடுத்து சீட்டு வாங்கறதுக்கு பதிலாக, பி.எஸ்சி. படிச்சுட்டு, அதுக்கப்புறம் டிப்ளமோ மாதிரி ஏதாவது கம்ப்யூட்டர் கோர்ஸ் படிக்கலாம். வேலை கிடைக்கும். ஆனா, பி.எஸ்சி. கோர்ஸை நல்லா, தெளிவா படிக்கணும். சில பெரிய நிறுவனங்கள் இப்படி படிச்சவங்களை வேலைக்கு எடுத்துக்கிட்டு, அவங்களே ட்ரெயினிங்கும் குடுக்கறாங்க. இயற்பியல், வேதியியல், கணக்கு பாடங்களை நல்லா படிச்சவங்களுக்கு கம்ப்யூட்டர் சயின்ஸ் எளிதாக இருக்கும். நம் நாட்டிலேயே சோலார், எலெக்ட்ரிக்கல், விவசாயம்னு மென்பொருள் தொடர்பான பல வேலைகள் இருக்கு. நல்ல எதிர்காலம் நிச்சயம்.
ஆதார் அட்டையையே எடுத்துக்குவோமே... இங்கே 100 கோடிக்கும் மேல மக்கள் தொகை. எல்லாருக்கும் இன்னும் ஆதார் கொடுக்க முடியலை. இப்படி நிறைய வேலைகள் இருக்கு. இப்போ கம்ப்யூட்டர்ல நிறைய சர்டிஃபிகேட் கோர்ஸஸ் வர ஆரம்பிச்சுடுச்சு. அதுல அடிப்படையை கத்துக்கலாம். அரசாங்கத்துலயே டி.ஆர்.டி.ஓ., இஸ்ரோ போன்ற இடங்கள்ல நிறைய வேலை இருக்கு. வர மாட்டேங்கறாங்க. ஆரம்பத்துல அவ்வளவு சம்பளம் கிடைக்காதுன்னு காரணம் சொல்றாங்க.

ஆனா, நீண்ட காலத்துக்கு பயன்தரக் கூடிய வேலைகள் அவை. வாய்ப்புகளும் சவால்களும் நிறைஞ்ச துறை இது. பெண்கள் வேலையில் திறமையை வளர்த்துக்கணும். எதுக்கும் ஆண்களை சார்ந்து இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் அது முன்னேற்றத்தை தடை செஞ்சுடும். நிறைய பெண்கள் பி.டெக். படிக்கறாங்க. கல்யாணம் பண்ணிக்கிட்டு செட்டில் ஆகி, காணாமலும் போயிடறாங்க. குடும்பம், குழந்தைகள்னு சுருங்கிடாம மேல வர பெண்கள் முயற்சி செய்யணும். ஒரு புரொஃபஷன்னா அதுக்கான கஷ்டம் இருக்கத்தான் செய்யும். கஷ்டப்பட்டுதான் ஆகணும்...’’ - தெளிவாகச் சொல்கிறார் ஹேமா.  

நிறைய பெண்கள் பி.டெக். படிக்கறாங்க. கல்யாணம் பண்ணிக்கிட்டு செட்டில் ஆகி, காணாமலும் போயிடறாங்க.

கல்யாணம் ஆன புதுசுல என் கணவருக்கு டீ கூட போடத் தெரியாது. இப்போ நல்லா சமைக்கறார்… வீட்டை நல்லாவே  பார்த்துக்கறார். ஆணும் பெண்ணும் எல்லா வேலைகளையும் பகிர்ந்துக்கிட்டாதான்  சாதிக்க முடியும்!

- பாலு சத்யா

படங்கள்: பரணி