காற்றில் நடனமாடும் பூக்கள்



தமிழுக்கும் அமுதென்று பேர்

பேசுகின்ற மொழியினிலும் பிறிது மொழியானோம்!

ஒருவர் தன் தேவைக்ேகற்ப, வசதிக்கேற்ப எத்தனை மொழிகளை வேண்டுமென்றாலும் கற்றுக் கொள்ளலாம். இது அவரவர் திறனும் விருப்பமும் சார்ந்ததே. அதற்காக தமது சொந்த ெமாழியை, தாய்மொழியை புறக்கணிப்பதும் தாழ்வாகக் கருதுவதும் அநாகரிகமானது. ஒரு மொழி அதன் சொந்த மக்களால் புறக்கணிக்கப்படும்போது, வேர் அறுபட்ட கொடியினைப் போல சிறிது காலம் பச்சையாகத் தெரிந்துவிட்டு, பின் பட்டுப் போய்விடும் அபாயம் நிகழ வாய்ப்பிருக்கிறது. பிறமொழியில் சரளமாகப் பேசுவதை, எழுதுவதை கௌரவமாக, பெருமையாகக் கருதும் நாம், நம் தாய்மொழியை சரிவர கற்றுக் கொள்ளாது இருப்பதற்காக வெட்கப்படுவதில்லை. ஆங்கிலச் சொற்களை நிறைய நிறைய கலந்து பேசுபவர்களும், ஆங்கிலத்திலேயே பேசுபவர்களுமே புத்திசாலிகள் எல்லாம் தெரிந்தவர்கள் என்பது ஒரு மாயையான அறியாமையே!

நம்மிடம் சொற்கள் இல்லாதபோது பிறமொழிச் சொற்களில் பொருட்களின் பெயரை குறிப்பிடுவதிலாவது ஒரு நியாயம் இருக்கிறது. ஆனால், வலிந்து வாயில் வராதபோதும் தட்டுத்தடுமாறி பிறமொழிச்சொற்களை பெருமைக்காக பயன்படுத்துகிறோம் என்றால், நம் மொழியை நாம் அழிக்கத் தொடங்கி விட்டோம் என்றுதானே பொருள்? இன்றைக்கு ஆங்கிலவழிக் கல்விக் கூடங்களில் பிள்ளைகள் ஓரிரு வார்த்தைகள் தாய்மொழியில் பேசிவிட்டால் தண்டமும் தண்டனையும் என்பது மிகுந்த வேதனை அளிப்பதாக உள்ளது. கல்வியின் பெயரால் அவர்கள் கொள்ளையடிப்பதை விடவும் மிகப்பெரிய அட்டூழியமாக நான் இதைக் கருதுகிறேன்.

ஆங்கிலவழிப் பள்ளியில் மாணவர் இருவரிடையே சண்டை செய்து, ஆசிரியரிடம் முறையிட்டபோது, ‘சார் திஸ் பாய் பீட்டிங் மீ சார்’
என்றானாம் ஒருவன். இன்னொரு மாணவனோ, ‘சார் திஸ் பாய் மண் அள்ளி போட்டிங் மீ சார்’ என்று தமிழ் கலந்து பேசியதற்காக அவன் கூடுதல் தண்டனை பெற்றதை எல்லாம் கேள்விப்படும்போது, தமிழகப் பள்ளிகளில் குழந்தைகள் தம் தாய்மொழியான தமிழில் ஓரிரு வார்த்தைகள் பேசிவிடுவது தண்டனைக்குரிய குற்றமாக்கப்படுவதை எல்லோரும் தொடர விட்டுக் கொண்டும் பொறுத்துக் கொண்டும்தான் இருக்கிறோம் என்பதே வேதனையான உண்மை.

பாடத்தையும் மொழியையும் கற்றுக் கொள்வதற்காக பள்ளிக்கு அனுப்பப்படும் ஒரு குழந்தை முதலில் தனக்குத் தெரிந்த மொழியில்தானே பதில் சொல்ல முடியும்? பிள்ளைகளை முதலில் அவர்களுக்கு தெரிந்த மொழியில், தெரிந்த சொற்களில் பேச அனுமதிக்க வேண்டும் என்ற குழந்தை மன உளவியலைக் கூட அறியாதவர்கள், தங்களை கல்விக் காவலர்களாகவும் கல்வியியல் மேதாவிகளாகவும் பறை சாற்றிக் கொண்டிருப்பது கீழ்த்தரமான மோசடியே!

இன்றைக்கு தாய்மொழியில்கூட எழுதப் படிக்கப் பயிலாத மக்களும் ஆங்கிலச் சொற்களை நிறைத்து பேச்சில் பயன்படுத்தும்போது சிலவேளைகளில் மாறுபட்டப் பொருளில் அது நகைச்சுவையாகி விடுகிறது. ஒரு பொது இடத்தில் வரிசையில் நின்ற இருவரிடையே தகராறு ஏற்பட்டபோது அதில் ஒருவர், ‘Come out i will kill you’ என்றார். மற்றவருக்கு ஆங்கிலம் தெரியாது என்பதால். ‘பேசிக்கிட்டு இருக்கும்போதே என்னக் கிள்ளிபுடுவேங்கிறான் பாருங்க... இவன் கிள்ளுற வரைக்கும் என் கையி என்ன பூப்பறிச்சிக்கிட்டா இருக்கும். நானும் நல்லா நறுக்கு நறுக்குன்னு கிள்ளுவேன்’ என மற்றவர்களிடம் நியாயம் பேசினார்.

ஒரு பெண்மணி தன் மகனை பள்ளிக்கு அழைத்து வந்து விட்டுவிட்டு ஆசிரியையிடம், ‘டெய்லி என் பையனுக்கு நான்தான் செயின் போட்டு அனுப்புறேன்’ என்றதும், ‘செயினெல்லாம் போட்டு அனுப்பாதீங்கம்மா’ என்றதற்கு, ‘இல்ல மேடம்... டைரிய எடுத்து வச்சிக்கிட்டு செயின் போட்டாத்தான் ஸ்கூலுக்கே வர்றேங்கிறான்’ என அவர் கூறியதும்தான் தெரிந்து கொண்டிருக்கிறார், பள்ளி நாட்குறிப்பில்கையொப்பமிட்டு (Sign) அனுப்புவதைத்தான் ‘செயின்’ போட்டு அனுப்புவதாகச் சொல்கிறார் என்பதை.

வேறு சிலரோ, ‘நாங்க பள்ளிக்கூடம் போகும் போதெல்லாம் இப்புடி இல்ல, இப்ப உள்ள புள்ைளங்களுக்குத்தான் டெய்லி ஸ்நேக்ஸ் கொடுத்து அனுப்ப வேண்டியிருக்கு’ என்பார்கள். ஸ்நாக்ஸ் (தின்பண்டம்) என்பதைத்தான் ஸ்நேக்ஸ் (பாம்பு) என தவறிச் சொல்கிறார்கள் என்பதை புரிந்துகொண்டு, சிரித்து விடாமல் இவற்றை எல்லாம் கேட்டுக்கொண்டிருக்க வேண்டும்.

இன்னும் சிலரோ ரத்த அழுத்தத்தை ‘ப்ளெஷ்ஷர் ஏறிட்டு’ என்றும் மேட்சிங் பிளவுஸ் என்பதற்கு பதிலாக ‘மேய்ச்சல் பிளவுஸ்’ என்றும் நான் முன்பு
உறுப்பினராக (Member)ஆக இருந்தேன் என சொல்வதற்கு பதில் ‘நானும்தான் எத்தனையோ வருஷமா நம்பரா இருந்தேன்’ என்றும் ஆங்கிலம் கலந்து நகைச்சுவை மிளிர, அவர்கள் பேசுவதைச் சொல்லிக் கொண்டே போகலாம்!

அறிவு என்பது வேறு... மொழியறிவு என்பது வேறு என்ற பாகுபாட்டை அறியாதிருப்பதும் கூட அதீதமான ஆங்கில மோகத்துக்கான காரணங்களில் ஒன்று. தம் மொழியின் பிரதிநிதியாக தானே நின்று ‘மெல்லத் தமிழ் இனிச்சாகும் - அந்த மேற்கு மொழிகள் புவிமிசை ஓங்கும் என்றந்தப் பேதை உரைத்தான் - இந்த வசை எனக்கெய்திடலாமோ’ என பாரதி துடிதுடித்ததை நாம் மறக்கலாகுமா?

நாம் சிந்திக்கும் முறை, நடந்து கொள்ளும் விதம், செயல்கள் இவற்றால் மட்டுமே நமது நற்பண்பும் அறிவும் ஆளுமையும் மிளிருமே தவிர, வேறு ஒரு மொழியை அம்மொழியை அறியாதவர்களிடம் பேசி தன்னைப் பெரிய ஆளாகக் காட்டிக் கொள்வதால் அல்ல. இதனால் அவர்களிடமிருந்து அந்நியப்பட்டுப் போவதற்குத்தான் அதிக வாய்ப்பிருக்கிறது.

நம் தாய்மொழியான தமிழ், தமிழாசிரியர்களின் மொழியாகவும்  தமிழ் இயக்கங்களின் மொழியாகவும் அரசியல் கட்சிகளின் மொழியாகவும் கதை கவிதைக்கான மொழியாகவும் மட்டும் இன்று சுருக்கப்பட்டிருப்பதை ஆயிரம் பெருமைக்குரிய செம்மொழியான தமிழ்மொழியின் துயரமான காலகட்டம் என்றே நான் குறிப்பிடுவேன். தமிழ் நம் மொழி, மக்கள் மொழி என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

மணிலாவிலிருந்து வந்ததால் தொடக்கத்தில் ‘மணிலாக்கொட்டை’ என்றழைக்கப்பட்டாலும், விவசாயிகள் தமிழில் அதற்கு வேர்க்கடலை என்ற காரணப்பெயர் சூட்டியது எவ்வளவு பொருத்தமாகவும் பொருள் நிறைந்ததாகவும் இருக்கிறது. சென்ற நூற்றாண்டு வரை ஒரு விவசாயியோ தச்சரோ தான் கையாண்ட பொருட்களை அதன் பண்புக்கேற்ப பெயரிட்டு அழைத்து, மொழியையும் பண்பையும் காப்பாற்றிக் கொண்டிருந்த நிலை... இன்று முற்றிலும் மாறி அவர்களிடம் இருந்தும் தமிழ் அகற்றப்பட்டு அல்லது பொருட்களுக்கான தமிழ்ப்பெயர்கள் மறக்கடிக்கப்பட்டு, அனைத்துப் பொருட்களின் பெயர்களையும் ஆங்கிலத்திலேயே குறிப்பிடுகிறார்கள்.

தாய்மொழி என்பது சிந்தனை... எண்ணம். அதை மறுப்பதன் வழியாக நாம் பிள்ளையின் சிந்தனையையும் எண்ணத்தையும் மறக்கிறோம் என்பதால்தான், மகாத்மா காந்தி உள்பட அனைவரும் தாய்மொழி வழிக்கல்வியை வலியுறுத்திச் சொல்கிறார்கள். பிறமொழி வழிக்கல்வியைப் பயில் பவர்கள் அம்மொழியை நன்கு பேசி எழுதி மனனம் செய்து மருத்துவராகவோ, பொறியாளராகவோ மாறி பொருள் ஈட்ட முடியுமே தவிர, கண்டுபிடிப்பாளர்களாகவும் சிந்தனையாளர்களாகவும் உருவாவது அரிது என்பதே கல்வியாளர்களின் ஒருமித்த கருத்து.

அதிகார பலமிக்கவர்களோடு எளிய மக்கள் அச்சமின்றி உரையாடக்கூடிய வலுவைத் தரக்கூடியது கல்வி. இன்றோ வருவாய் நோக்கில் வெட்டி சாய்க்கப்பட்ட பச்சை மரத்திலிருந்து மரப்பாச்சிப் பொம்மைகள் செய்து, வண்ணந்தீட்டி அளவுக்கேற்ப விலை நிர்ணயம் செய்து விற்கப்படும் வியாபாரமாக ஆனதற்கு முக்கியப் பொறுப்பேற்க வேண்டியது அரசாங்கமே!

தமிழில் கல்வி கற்றாலும் வேலைவாய்ப்புகள் ஏராளம் உண்டு என்கிற நிலையை ஏற்படுத்தி தமிழை வெறும் இலக்கிய மொழியாக மட்டும் புகழ்ந்து கொண்டிருக்காமல் வணிக மொழியாகவும் தொழில் மொழியாகவும் உயர்த்த வேண்டும். வெறும் ஆர்வம் மட்டுமே போதாது என்பதை தமிழ்ச் சமூகமே உணர்ந்து செயல்பட்டால்தான் செந்தமிழ் நாடெனும் போதினிலே மெய்யாகவே எப்போதுமே இன்பத்தேன் வந்து பாயும் நம் காதினிலே!

நம் தாய்மொழியான தமிழ், தமிழாசிரியர்களின் மொழியாகவும்  தமிழ் இயக்கங்களின் மொழியாகவும் அரசியல் கட்சிகளின் மொழியாகவும் கதை கவிதைக்கான
மொழியாகவும் மட்டுமே இன்று சுருக்கப்பட்டிருப்பது ஆயிரம் பெருமைக்குரிய செம்மொழியான தமிழ்மொழியின் துயரமான காலகட்டம்...

மணிலாவிலிருந்து வந்ததால் தொடக்கத்தில் ‘மணிலாக்கொட்டை’ என்றழைக்கப்பட்டாலும், விவசாயிகள்தமிழில் அதற்கு வேர்க்கடலை என்ற காரணப்பெயர் சூட்டியது எவ்வளவு பொருத்தமாகவும் பொருள் நிறைந்ததாகவும்இருக்கிறது.

(மீண்டும் பேசலாம்!)