முதுமையின் குரல்!



இதிகாச காலத்திலிருந்து இன்று வரை ‘முதுமை’ என்பது பெரும் சாபம். பிள்ளைகளாலும் மற்றவர்களாலும் ஓரம் கட்டப்படுவதற்காகவே மனிதர்களுக்கு இயற்கை கொடுத்திருக்கும் வரம்! என்றோ ஒரு நாள் தங்களுக்கும் முதுமை வரும் என்று தெரிந்திருந்தும் முதியவர்களை ‘யூஸ் அண்ட் த்ரோ’ கப் போலவே கசக்கித் தூக்கி எறிகிறது இளைய தலைமுறை. ‘எங்களையும் மனிதப் பிறவியா நடத்துங்களேன்!’ ‘உங்களைப் பெத்து வளர்த்ததைத் தவிர நாங்க என்ன பாவம் செஞ்சோம்?’... ஒவ்வொரு வினாடியும் உலகில் எங்கோ ஓர் இடத்தில் வயதானவரின் குரல் கதறியபடி இருக்கிறது. அப்படிப்பட்ட முதியவர்களின் குரலாக ஓங்கி ஒலித்து, பார்ப்பவர்களின் ஈரக்குலையைப் பிடித்து உலுக்கிப் போட்டிருக்கிறது சமீபத்தில் அரங்கேறிய சென்னை கலைக்குழுவின் ‘கூக்குரல்’ நாடகம்.

மகாபாரதம் தொடங்கி மதுராவில் விதவைப் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி வரை சின்னச் சின்னக் கதைகளாக விரிகிறது நாடகம்... 

குருஷேத்திர போர் முடிகிறது. பாண்டவர்களால் கைவிடப்பட்ட வயதான திருதராஷ்டிரன் வனத்தில் மூண்ட தீக்குள் புகுந்து உயிர்விடத் துணிகிறான்.
தொலைக்காட்சி பெண் நிருபர் ஒருவரும் கேமராமேனும் ஒரு முதிய நாடகக் கலைஞரைத் தேடி வருகிறார்கள். அவரின் மகனும் மருமகளும் ‘எந்த ஊரில் இருக்கிறாரோ, எங்களுக்குத் தெரியாது’ என்கிறார்கள். அவரோ பெற்ற மகனாலேயே விரட்டியடிக்கப்பட்டு, பிச்சைக்காரராக, இரவு நேரத்தில் சுடுகாட்டில் தஞ்சம் புகுபவராக வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறார்.

முதியோர் இல்லத்தில் ஆய்வு ஒன்றுக் காக முதியவர்களை பேட்டி காண வருகிறாள் ஒரு மாணவி. முதியவர்களின் துயரம் தோய்ந்த வாழ்க்கை, வேதனைக் குரலாக மாணவியின் ஆய்வில் பதிவாகிறது. தந்தை இறந்துவிட்டார் என்று தெரிந்ததுமே அவருடைய உடைமைகளுக்கும் பணத்துக்கும் அடித்துக் கொள்ளும் பிள்ளைகளின் பேராசையைச் சொல்
கிறது ‘கல்யாணராமன்’ என்கிற முதியவரின் கதை. உயிர் பெற்ற அவரோ உங்கள் சங்காத்தமே வேண்டாம் என்று உறவை அறுத்துக் கொண்டு வெளியேறுகிறார்.

சிறுவயதில் மகனுக்கு குருவியை அறிமுகப்படுத்திய தந்தை… முதுமையில் அதே குருவியைக் காட்டி என்ன என்று கேட்டால் எரிச்சல்படுகிறான் மகன். பழைய சம்பவத்தை அப்பா நினைவுகூர துடித்துப் போகிறான். மத்திய பிரதேசத்தில் இருக்கும் மதுரா கிருஷ்ணர் உதித்த தலம். அங்கே உயிரை விட்டால் புண்ணியம் கிடைக்கும் என்பதற்காகவே குவிகிறார்கள் விதவைப் பெண்கள். இறந்த பின் செய்யப்படும் சடங்குகளோ செலவு பிடிப்பவை... ஒரு முதிய விதவை இறக்க, அவளுக்கு இறுதிச் சடங்கு நடக்கிறது. உடலைத் தூக்கிச் செல்கிறார்கள். அதை தகனம் செய்யாமல், துண்டு துண்டாக வெட்டி, கோணிப் பைக்குள் திணித்து ஆற்றில் வீசுகிறார்கள். இதைப் பார்த்துவிடுகிறாள் சக தோழி. மற்ற விதவைகளிடம் வந்து சொல்கிறாள்... அழுகிறாள். ‘கௌரவமா சாகத்தானே இங்கே வந்தோம்… அதைக் கூட அனுமதிக்க மாட்டீங்களாடா பாவிகளா!’ என்கிற கதறல் எழுகிறது.

நாடகத்தை எழுதி, இயக்கியிருப்பவர் பிரளயன். தேர்ந்த காட்சியமைப்பு, அழுத்தம் திருத்தமான வசனங்கள். எளிய நடன அசைவுகள். உருக்கமான பாடல்கள். நடிகர்களின் பிசிறு தட்டாத நடிப்பு. வயதில் முதிர்ந்தோரை அன்போடும் அக்கறையோடும் பாதுகாக்க வேண்டிய அவசியத்தை வலிக்க வலிக்கச் சொல்கிறது ‘கூக்குரல்.’

மகாபாரதம் தொடங்கி மதுராவில் விதவைப் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி வரை சின்னச் சின்னக் கதைகளாக விரிகிறது. 

- பாலு சத்யா
 
படங்கள்: கிஷோர் ராஜ்