ரசனையை வளர்த்துக் கொள்ளுங்கள்!



பெயரைக் கேட்டாலே நமக்குள் இல்லாத துணிச்சல் கூட கொஞ்சம் எட்டிப் பார்க்கும் அளவு துணிச்சலான பத்திரிகையாளர். நாடறிந்த எழுத்தாளர். இயற்பெயர் பங்கஜம்.  படித்தது ஆங்கில இலக்கியம் என்றாலும், தமிழ் இலக்கியத்தில் இடையறாது பங்களிப்பை நிறைவாக நிகழ்த்துபவர். பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக எழுத்தின் மூலம் தார்மீகக் குரல் கொடுப்பவர். வாஸந்தியின் வாத்ஸல்யமான எண்ணங்கள் நமக்காக...

பங்கஜத்தைப் பற்றி?ஒரு மத்திய வகுப்பு பிராமண குடும்பத்தில் பிறந்தேன். தந்தை குடியாத்தம், கோவில்பட்டி போன்ற ஊர்களில்  பஞ்சாலையில் வேலை பார்த்தார். நான் ஆங்கில வழி கல்வி கற்கவேண்டும் என்ற எண்ணத்தில், எனது தாய் என்னை பெங்களூரில் வசித்த தனது பெற்றோர் வீட்டில் கொண்டு விட்டார். 5 வயதிலிருந்து கல்லூரி முடியும் வரை அங்குதான் இருந்தேன். மிகக் கட்டுப்பாடான ஆசாரமான குடும்பம் என்றாலும், பன்முகத் திறமைகளை வளர்த்துக்கொள்ளும் சூழல் இருந்தது.  பாட்டும் பரதமும் ஓவியமும் தையலும் இயல்பாக வாழ்வின் அங்கமாயின. சிறுவயதிலிருந்தே ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலுமே எனக்கு  மிகுந்த ஆர்வமும் எழுதும் திறமையும் இருந்தன.

சென்ற நூற்றாண்டின் இறுக்கம் மிகுந்த சூழ்நிலையில் எழுத வந்தது எப்படிப்பட்ட அனுபவங்களை தந்தது?வாசிப்பில்  மிகவும் தீவிரமாக இருந்த நான் எழுத்துக்கு வந்தது யதேச்சையானது. நான்  எழுதுவதற்கு யாரும் எந்தத் தடையையும் விதிக்கவில்லை. நான் கல்யாணமாகி என் கணவர் வேலை பார்த்த நேபாளம் போன்ற தொலைதூர இடங்களிலிருந்தெல்லாம் எழுதி அனுப்பிய கதைகளை தமிழ் வார இதழ்கள் பிரசுரித்தன. எந்தக் கதையும்  திரும்பி வந்ததாக நினைவு இல்லை. பத்திரிகை ஆசிரியர்கள் அந்த நாட்களில் புதிய எழுத்தை ரசனையுடன் தேர்ந்து ஊக்குவித்தார்கள். எனக்கு எந்த  ஆசிரியரையும் பரிச்சயமில்லை.

சென்னைக்கு வெகு அபூர்வமாகத்தான் செல்வேன்.பத்திரிகைத் துறையில் நீங்கள் சந்தித்த சவால்கள்... எதிர்கொண்ட விதம்? அநேகம்.  பெண் என்ற காரணத்தால்  எனது விமர்சனங்கள் பிடிக்காத அரசியல் தலைவர்கள்  எனது ஆளுமையை தாக்குவார்கள். ‘நடத்தை கெட்டவள்’ என்று விமர்சிப்பார்கள்.  முதலில் அதிர்ச்சியாக இருந்தது. தமிழ்நாட்டுக்கு
வெளியில் வளர்ந்தவள் என்பதால் ஒரு கலாசார அதிர்ச்சி ஏற்பட்டது. மெல்ல பக்குவம்  ஏற்பட்டது. அதை சட்டை செய்யாமல் ஏசலுக்கு பதிலடி கொடுக்காமல் ஒதுங்கி இருந்ததில் வெற்றி கிடைத்தது. எனது நேர்மையை அவர்கள் புரிந்துகொள்ள  ஆரம்பித்தார்கள்.

எழுத்தாளர், பத்திரிகையாளர், மொழிபெயர்ப்பாளர், கட்டுரையாளர் மற்றும் அரசியல் ஆய்வாளர்... எதில் உங்களுக்குப் பெருமையும் மகிழ்ச்சியும்?கட்டுரை எழுதுவது லாவகமாக வரும்.
சிறுகதை எழுதுவதுதான் அதிக சிரமம்.  ஆனால்,  திருப்தி அளிக்கும் விதமாக ஒன்றை எழுத முடிந்தால் அது அளிக்கும் நிறைவு  அலாதியானது.பலருக்குப் பிடித்தமான எழுத்தாளர் நீங்கள்.

உங்களுக்குப் பிடித்தமான எழுத்தாளர் யார்?

எல்லா நல்ல எழுத்தையும் ரசிப்பவள் நான்.

உளவியல் சிக்கல்களை எழுத்தில் அழகாகக் கையாண்டிருப்பீர்கள். இந்தப் பக்குவம் ஏற்பட பக்கபலமாக இருந்தது யார்?

கூரிய பார்வையும் மனித நேய அணுகுமுறையுமே அதற்குத் தேவை. என் எழுத்துக்கு யாருமே பக்கபலமாக இருந்ததில்லை.

உங்கள் படைப்புகளில் பரவலாகப் பதிவு செய்திருக்கும் விஷயமாக நீங்கள் கருதுவது?

மனித நேயம்.

செய்தி உலகில் பெண்களின் பங்களிப்பு நிறைவாக இருக்கிறதா?

வடக்கே, குறிப்பாக ஆங்கில இதழ்களில், ஊடகங்களில் நிறைய பெண்கள் சிறப்பாகப் பணியாற்றுகிறார்கள். செய்தி ஊடகங்களில் பணியாற்றும் வேலைகளில் நிலையான காலவரையறை கிடையாது. கண்ட நேரத்தில் கண்ட இடங்களில் வேலைக்குச் செல்ல வேண்டியிருக்கும். அரசியல்வாதிகளை பேட்டி காண வேண்டியிருக்கும். அரசியல் உலகத்தைக் கண்டு  பெற்றோருக்கு உண்மையான கவலை உண்டு. தங்கள் பெண்கள் அதில் அகப்பட்டுக்கொள்ள விரும்ப மாட்டார்கள். தமிழகத்தில் இப்படிப்பட்ட எண்ணங்கள் இருப்பதை நான் உணர்ந்திருக்கிறேன்.  தவிர, மற்ற தொழில் கல்விக்குக் கிடைக்கும் வேலை உத்தரவாதமும் இல்லை.

பெண்ணிய பார்வையில் பின் நவீனத்துவ சிந்தனைகளை எவ்வாறு மதிப்பிடுகிறீர்கள்?

காலம் மாறும்போது, சமூக சிக்கல்களின் பரிமாணங்கள் மாறுகின்றன. நவீன உலகத்தில் சிக்கல்கள் அதிகம். அவை முன்வைக்கும் சவால்களை சமாளிக்கும், எதிர்கொள்ளும் தேவைகள் அதிகம். அமைப்பைக் கட்டுடைக்க வேண்டிய அவசியம் ஏற்படும். சூழலைப் பொறுத்து இலக்கிய இலக்கணங்களும் மாறும்.  பெண்ணிய இலக்கியத்துக்கும் அது பொருந்தும். அது இயல்பாக வரும். எந்த மெனெக்கீடும் அவசியமில்லை.

பெண்களின் படைப்புகளை ஆண் உலகம் எவ்வாறு பார்க்கிறது?

‘பெண் சார்ந்த’, ‘பெண்கள் படைப்பு’ என்று பிரித்துப் பார்க்கும் பார்வையே தவறானது. இது ஆண் சார்ந்த பார்வை. ஆண்கள் தங்கள் மன உணர்வுகளைப் பதிப்பது போலவே பெண்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துகிறார்கள். எழுத்து என்பது ஒன்றுதான். அதில் பாலின பேதம் இல்லை.
 
பெண் உடல் சார்ந்து பெண் எழுத்தாளர்கள் எழுதும் கதைகள், கவிதைகள் கடும் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டு வருவதை எவ்வாறு பார்க்கிறீர்கள்?ஆண்கள் எழுதுவதில்லையா? மிக மிக ஆபாசமான எழுத்து ஆண்களாலேயே எழுதப்படுகின்றன. அவையெல்லாம் ஏன் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்படுவதில்லை? பெண்கள் தங்கள் சுயம் உணர்ந்து எழுத ஆரம்பித்திருக்கிறார்கள். அதில் அசூயைப்படுவதில் ஏதும் அர்த்தமில்லை. அதை  பெண்கள் சட்டை செய்யக்கூடாது. அதற்கு மல்லுக்கட்டிக்கொண்டு சண்டை  போடுவதில் அர்த்தமில்லை. என்னை கேட்டால், இரண்டு வகை எழுத்துதான் உண்டு. நல்ல எழுத்து. மோசமான எழுத்து. மிக மோசமாக எழுதும் ஆண்கள் இருக்கிறார்கள்.  அற்புதமாக எழுதும் பெண்கள் இருக்கிறார்கள்.

புதிதாக எழுத வரும் இளம் பெண்களுக்கு நீங்கள் எந்தெந்த நூல்களை பரிந்துரைப்பீர்கள்?

கைக்குக் கிடைத்ததைெயல்லாம் படிக்க வேண்டும். சொந்த ரசனையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
 
4உலகத் தமிழர்களின் மொழிவளர்ச்சி மற்றும் பற்று... இவற்றுக்கு தமிழ் இலக்கியங்கள் உறுதுணையாக இருக்கின்றனவா?

இன்றைய  தலைமுறைக்கு எந்த அளவுக்்கு தாய் மொழி ஈர்ப்பு இருக்கும் என்று சொல்வதற்கில்லை. மொழி என்பது தகவல் பரிமாற்றத் துக்கே இன்று பயன்படுகிறது. அவர்களுக்கு  உதவக்கூடிய மொழியையே அவர்கள் தேர்ந்தெடுப்பார்கள்.

இன்றைய எழுத்துலக தலைமுறையோடு தொடர்பில் இருக்கிறீர்களா?

இருக்கிறது சிலருடன். மிக ஆற்றல் மிக்கவர்களாக இருக்கிறார்கள். மகிழ்ச்சியாக இருக்கிறது. 

பயணம்... சில வார்த்தைகள்?

பல நாடுகளுக்குப் பயணம் செய்திருக்கிறேன். ஒவ்வொரு பயணமும் ஒரு பாடம். இந்தப் புவியின் அற்புதங்கள் கணக்கிலடங்காதவை எனும் பிரமிப்பு கூடுகிறது.

குங்குமம் தோழிகளுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது?

 ஏற்றத்தாழ்வு இல்லாத வாழ்க்கை இல்லை. சவால்கள் இல்லாத வரலாறு இருந்ததாக கேள்விப்பட்டதில்லை. அதனால் சுய பச்சாதாபம் விடுத்து தீர்க்கமான பார்வையுடன், விவேகத்துடன், துணிச்சலுடன் பிரச்னைகளை அன்றாட முரண்களை எதிர்கொண்டால் மகிழ்ச்சியுடன் இருக்கலாம். எக்காரணம் கொண்டும் சுய கௌரவத்தையும் நேர்மையையும் சமரசம் செய்து கொள்ளலாகாது.

என்னை கேட்டால், இரண்டு வகை எழுத்துதான் உண்டு. நல்ல எழுத்து. மோசமான எழுத்து.

சுய பச்சாதாபம் விடுத்து தீர்க்கமான பார்வையுடன், விவேகத்துடன், துணிச்சலுடன் பிரச்னைகளை அன்றாட முரண்களை எதிர்கொண்டால் மகிழ்ச்சியுடன் இருக்கலாம்.

வாஸந்தி...

40 நாவல்கள், 15 குறுநாவல்கள், 6 சிறுகதைத் தொகுப்புகள் எழுதி இருக்கிறார். பஞ்சாபி சாகித்ய அகாடமி விருது உள்பட 8 விருதுகள் பெற்றிருக்கிறார்.
இவரது சிறுகதைத் தொகுப்பு ‘The guilty and other stories’ என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. ‘Long silence’ என்ற நூலை ‘மௌனத்தின் குரல்’ என்ற பெயரில் தமிழாக்கம்
செய்திருக்கிறார். ‘Cut-outs, caste and cine stars’ என்கிற இவரது ஆங்கில நூல் குறிப்பிடத்தக்க சமகால ஆவணம்.

தொகுப்பு: தேவி மோகன்