ஆன்மிகம்



புவனேஸ்வரி மாமி

‘வெயில், வெயில்’னு வியர்த்து வழிய வேதனைப்பட்டது போதும்னு இயற்கை நாலஞ்சு நாட்களுக்கு சரியான மழையை அனுப்பி நம்மையும் ஊரையும் கொஞ்சம் குளிரவெச்சுது இல்லையா? அதுக்காக இயற்கைக்கு நன்றி சொல்வோம். இந்த இதழில் சில அடியார்களையும் அறிஞ்சுப்போம், சரியா?



நமிநந்தியார் - ஜூன் 8

திருவாரூர் பக்கம் ஏமப்பேறூர்ல உதிச்சவர் நமிநந்தியார். தியாகராஜர் கோயில்ல நெய் விளக்கேற்றி, மூலவர் சந்நதிக்குள் ஒளிபரப்பும் கைங்கரியத்தைச் செய்துவந்தார். இதுக்காக ஊர் மக்களிடம் நெய்யை யாசகமாகப் பெறுவார். அப்படி வேற்று மதத்தவர் ஒருத்தர்கிட்ட கேட்டபோது, அவர், ‘உன் சிவன் கையிலதான் அக்னி இருக்கே, அவருக்கு வேற விளக்கு எதுக்கு’னு கேட்டு கேலி பண்ணினாங்க. அதுகேட்டு அடிகள் வருந்தினார்.

உடனே, அசரீரியா இறைவன் ஆறுதல் சொன்னார்: ‘கமலாலய திருக்குளத்தின் நீரை முகந்து விளக்கில் வார்த்து தீபம் ஏற்றுவாயாக.’ அப்படியே அடிகள் செய்ய, அந்தக் கோயில்ல மூலவர் சந்நதியில் மட்டுமல்ல... எல்லா விளக்குகளுமே ஒளிர்ந்து மகிழ்ந்தன. அடிகளோட பக்தி மேன்மையை எல்லாரும் புரிஞ்சுகிட்டு சிலிர்த்துப் போனாங்க. வாழ்நாள் முழுவதும் சிவத் தொண்டு புரிந்த நமிநந்தி அடிகள், இந்தத் தேதியில கயிலாயம் சேர்ந்தார்.

பட்டீஸ்வரம் முத்துப்பந்தல் விழா - ஜூன் 15

கும்பகோணத்துக்கு அருகே இருக்கு பட்டீஸ்வரம். இங்கே கோயில் கொண்டிருக்கற துர்க்கை ரொம்பவும் பிரபலம். இதே கோயில்ல மூலவரான தேனுபுரீஸ்வரர், தெய்வப் பசுவான காமதேனுவால் வழிபடப்பட்டவர். உமையம்மை புகட்டிய ஞானப்பால் அருந்தி தெய்வக் குழந்தையாகவே வளர்ந்த சம்பந்தர், ஒவ்வொரு சிவத்தலமாக தரிசித்துக் கொண்டு வந்தபோது பட்டீஸ்வரத்துக்கும் வந்தார். கோடை வெயில் சுட்டெரிக்கும் அந்த நாள்ல அவரோட பாதங்கள் பாதிக்கப்படக்கூடாதுங்கறதுக்காக வழிநெடுக முத்துகளால் ஆன அடர்ந்த பந்தலை உருவாக்கினார் இறைவன். இந்த நிகழ்ச்சியை இந்தத் தேதியில இந்தக் கோயில்ல பாவனையா நடத்திக் காட்டறாங்க.

சேக்கிழார் - ஜூன் 9

அறுபத்து மூன்று நாயன்மார்களோட வாழ்க்கை வரலாற்றை ‘பெரிய புராண’மாகத் தந்த பெரியவரின் முக்தி நாள் இன்று. இந்த பக்திமிகு வரலாற்றுத் தொகுதியில மொத்தம் 4 ஆயிரத்து 523 பாடல்கள் இருக்கு. சென்னையை அடுத்த குன்றத்தூர்ல அவதரிச்ச இவரோட இந்த அரிய படைப்பை ‘திருத்தொண்டர் புராணம்’னு சொல்வாங்க. இரண்டாம் குலோத்துங்க சோழ மன்னனின் காலத்தை நினைவூட்டற பொக்கிஷம் இந்த நூல்!

பெரியாழ்வார் - ஜூன் 16

இறைவனையே ‘பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம்’ ஆண்டுகள் வாழுமாறு வாழ்த்தியவர் பெரியாழ்வார். தன் நந்தவனத்தின் துளசி மாடத்துக்குக் கீழே கண்டெடுத்த ஆண்டாளை எடுத்து வளர்த்து, ரங்கம் அரங்கனுக்கே மணமுடித்துத் தந்து, யாருக்குப் பல்லாண்டு பாடினாரோ, அந்தப் பெருமாளுக்கே இவர் மாமனாரானதுதான் அதிசயம்! வில்லிபுத்தூர்ல அவதரிச்சு அங்கே கோயில் கொண்டிருக்கும் வடபத்ர சாயி பெருமாளுக்கு தினமும் மலர் சேவை செய்து வந்தவர் இவர்.

அந்த சேவைக்கு மகளான கோதையும் உதவி செய்தபோதுதான், அவனுக்கு அர்ப்பணிக்க வேண்டிய பூமாலையைத் தான் சூடி அவள் அழகு பார்த்துக்கொண்டதையும், அவள் அந்தப் பெருமாள் மீது காதல் கொண்டிருப்பதையும் உணர்ந்தார். ஒரு மானிடப் பிறவி மஹாவிஷ்ணுவை மணக்க முடியுமான்னு அவர் திகைச்சு நின்னபோதுதான் ரங்கத்து அரங்கன் அவர் கனவில் வந்து அவளைத் தானே மணப்பதாக அறிவித்தான்!  இவரோட அவதார நாள் இன்னைக்கு!

அருணகிரிநாதர் - ஜூன் 20

சந்தங்கள் நிறைந்த திருப்புகழ் பாடல்களை இயற்றிய அருணகிரிநாதரின் முக்தி நாள் இன்று. வாலிப வயதில் காமத்தில் மூழ்கி, அதுதான் வாழ்க்கைனு நினைச்ச அவருக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துக் காத்தவர் அவரோட மூத்த சகோதரி. அந்த அதிர்ச்சி தாங்காமல் பிறந்து, வாழ்ந்து வந்த திருவண்ணாமலையில், அருணாசலேஸ்வரர் கோயில் கோபுரம் மேலேறி தற்கொலை செய்துகொள்ள குதிச்சார். பரம்பரை தெய்வமான முருகன் அவரைத் தாங்கிக் காப்பாற்றினார்.

அப்போது முருகன் அருளால் பிறந்ததுதான் ‘முத்தைத் தரு பத்தித் திருநகை...’னு தொடங்கற பாடல். அடுத்தடுத்து திருவகுப்பு, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, கந்தர் அந்தாதி, வேல் விருத்தம், மயில் விருத்தம், சேவல் விருத்தம்னு 6 ஆயிரம் பாடல்களை முருகன் பேரில் இயற்றினார். இதிலே ஆயிரத்து 600 பாடல்கள் மட்டுமே நமக்குக் கிடைச்சிருக்கு.