இன்டர்நெட் கொள்ளையரிடம் இருந்து தப்பிப்பது எப்படி?



கேள்விகள் ஆயிரம்! கேட்பது யாரிடம்?

‘ஆல் இன் ஆல்’ அறிவுராணி


ஃபேஸ்புக்கில் எனது அக்கவுன்ட்டில் இருந்து எனது நட்பு வட்டத்தில் இருப்பவர்களுக்கு நான் அனுப்பாத செய்திகளும் தகவல்களும் படங்களும் பரிமாறப்படுகின்றன. எனக்கே தெரியாமல் யாரோ என் அக்கவுன்ட்டை Hack செய்திருப்பதாகச் சொல்கிறார்கள். எனக்கொன்றும் புரியவில்லை. அதென்ன Hacking?  அதை எப்படி சரிசெய்வது?
- எஸ்.ஸ்ரீவித்யா, மதுரை.



பதில் அளிக்கிறார் காம்கேர் சாஃப்ட்வேர் பிரைவேட் லிமிடெட் CEO கே. புவனேஸ்வரி... நம் இமெயில் முகவரி, ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களின் ஐடி, வெப்சைட்டுகள் போன்றவற்றைப் போலவே போலியை உருவாக்கிக் கொண்டு நாம் இமெயில் அனுப்புவதைப் போல, நாம் கருத்துகளைப் பதிவு செய்வதைப் போல, நாம் வெப்சைட்டுகளில் தகவல்களை வெளிப்படுத்துவதைப் போல செய்து நம் பெயரை கெடுத்துக் கொண்டிருக்கும் போலிகள் இன்டர்நெட்டில் உலா வருவது உங்களில் பலருக்கு தெரிந்திருக்கலாம்.

இவற்றுக்கு Fake, Phishing , Hacking, Spam  என்றெல்லாம் பெயருண்டு. வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டாலும் அவற்றின் அடிப்படை நோக்கம் இன்டர்நெட் பயனாளர்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வந்து தங்கள் இஷ்டப்படி ஆட்டி வைப்பதே! நம்மை அறியாமல் நம் மூலமாகவே அல்லது நமக்குத் தெரியாமல் நம் இமெயில், வங்கி மற்றும் பல ஆன்லைன் அக்கவுன்ட்டுகளின் பாஸ்வேர்டை திருடுவதே ஹேக்கிங் (Hacking) எனப்படுகிறது. இச்செயலை செய்பவர்களுக்கு கேக்கர்ஸ் (Hackers) என்று பெயர்.

ஃபேஸ்புக் அக்கவுன்ட் நம்மைத் தவிர வேறு நபர்களால் லாகின் செய்யப்படுகிறதா? நம் ஃபேஸ்புக் அக்கவுன்ட்டை நம்மைத் தவிர வேறு யாரேனும் திறந்து பார்க்கிறார்கள் என்ற சந்தேகம் வந்தவுடனேயே, அதை உறுதி செய்துகொள்ள கீழ்க்காணும் வழிமுறைகளை பின்பற்றலாம்.

முதலில் நம் ஃபேஸ்புக் அக்கவுன்ட்டில் லாகின் செய்துகொள்ள வேண்டும். பிறகு வெப் பக்கத்தின் வலது மூலையில் உள்ள அம்புக்குறியீட்டை கிளிக் செய்தால் கிடைக்கும் பட்டியலில் இருந்து Settings என்ற விவரத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

இப்போது கிடைக்கும் திரையில் இடது பக்கம் Security என்ற விவரத்தை கிளிக் செய்தால் அதன் தொடர்பான விவரங்கள் வலது பக்கம் வெளிப்படும். அதில் Where you are logged in என்ற விவரத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

உடனடியாக, நம் ஃபேஸ்புக் அக்கவுன்ட்டை நாம் எந்தெந்த கம்ப்யூட்டர்களில், எந்த ஆபரேட்டிங் சிஸ்டத்தில், எந்த நேரத்தில், எந்த நாட்டில் இருந்து லாகின் செய்து பயன்படுத்தி உள்ளோம் என்ற விவரங்களை உள்ளடக்கிய பட்டியல் வெளிப்படும். மேலும் மொபைலில் லாகின் செய்திருந்தாலும் அந்தத் தகவலும் வெளிப்படும். இதில் இருந்து நம்மைத் தவிர வேறு நபர்கள் லாகின் செய்திருந்தால் கண்டுபிடித்து விடலாம்.  வேறு நபர்கள் நம் அக்கவுன்ட்டை பயன்படுத்துகிறார்கள் என்ற சந்தேகம் இருந்தால் ஃபேஸ்புக்கின் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்டை மாற்றிவிட வேண்டும்.



ஃபேஸ்புக் அக்கவுன்ட் ஹேக் செய்யப்பட்டுவிட்டால் என்ன செய்வது? நம் ஃபேஸ்புக் அக்கவுன்ட்டில் நம் யூசர் நேம், பாஸ்வேர்ட் கொடுத்து லாகின் செய்ய முற்படும்போது நம் அக்கவுன்ட்டுக்குள் செல்லாமல் மக்கர் செய்தால் நம் அக்கவுன்ட் ஹேக் ஆகிவிட்டது என்று பொருள். ஹேக்கரிடம் இருந்து நம் அக்கவுன்ட்டை மீட்பது எப்படி என்று பார்ப்போம். முதலில் www.facebook.com என்ற வெப்சைட் முகவரியை பிரவுசரின் அட்ரஸ் பாரில் டைப் செய்து,  நம் யூசர் நேம், பாஸ்வேர்டை டைப் செய்து லாகின் செய்ய முயற்சிப்போம்.

இப்போது கிடைக்கும் Find my Account என்ற தலைப்பிலான திரையில் நம் இமெயில் முகவரி, ஃபேஸ்புக்கில் பயன்படுத்தி உள்ள மொபைல் எண், யூசர் நேம், முழு பெயர் இவற்றில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி நம் ஃபேஸ்புக் அக்கவுன்ட்டை கண்டறிய வேண்டும்.

லாக் இன் ஆகாவிட்டால் https://www.facebook.com/hacked என்ற முகவரியை டைப் செய்து அந்த வெப் பக்கத்தை வெளிப்படுத்திக்கொள்ள வேண்டும். இதில் ‘My Account is compromised’ என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.

இப்போது கிடைக்கும் Log in to Facebook என்ற தலைப்பிலான திரையில் நம் ஃபேஸ்புக் இமெயில் முகவரிக்கு நாம் பயன்படுத்தி வந்த பாஸ்வேர்டை டைப் செய்ய வேண்டும். பிறகு Continue பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.

இப்போது கிடைக்கும் Change your Password என்ற தலைப்பிலான திரையில் புதிதாக ஒரு பாஸ்வேர்டை டைப் செய்துகொள்ள வேண்டும். பிறகு அடுத்தடுத்த திரைகள் தானாகவே தோன்றி சில பாதுகாப்பு செட்டிங்குகளை செய்ய வலியுறுத்தும். விருப்பப்பட்டால் செய்துகொள்ளலாம் அல்லது Skip என்ற பட்டனை கிளிக் செய்து கொண்டே வந்தால் இறுதியில் நம் ஃபேஸ்புக்கின் நியூஸ் ஃபீட் பகுதியோ, டைம்லைனோ வெளிப்படும்.

பிரவுசிங் சென்டர்களிலும், பொது இடங்களில் உள்ள கம்ப்யூட்டர்களிலும் இன்டர்நெட்டைப் பயன்படுத்தாமல் தவிர்க்கலாம். பிரவுசிங் சென்டர்களில் தான் நம் யூசர் நேம், பாஸ்வேர்ட் போன்ற விவரங்கள் திருட்டுப் போக வாய்ப்புள்ளது. பிரவுசிங் சென்டருக்கு வருகின்ற வாடிக்கையாளர்களில் ஒரு சிலர் கீலாக்கர் போன்ற சாஃப்ட்வேர்களை இன்ஸ்டால் செய்து வைத்திருக்கலாம் அல்லது வைரஸ் காரணமாக அவ்வகை சாஃப்ட்வேர்கள் தானாகவே அந்த கம்ப்யூட்டர்களில் இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கலாம்.

ஸ்பைவேர் சாஃப்ட்வேர்களும், வைரஸ் சாஃப்ட்வேர்களும் நம்மை வேவு பார்த்துக் கொண்டே இருக்கும். அவை, பல நேரங்களில் பிரவுசிங் சென்டரில் இருந்து நாம் வீடு வந்து சேருவதற்குள், நம் பாஸ்வேர்ட்களையும், பிற தகவல்களையும் அபேஸ் செய்து கொண்டு போய்விடும்.

அடுத்து இன்டர்நெட்டில் இருந்து ஏதேனும் டவுன்லோட் செய்தால் மிக மிக கவனமாக இருக்க வேண்டும். அவற்றில் வைரஸ் இருக்கலாம் அல்லது ஸ்பைவேர்கள் இருக்கலாம்.

இன்டர்நெட்டில் ஏராளமான ஸ்பைவேர் சாஃப்ட்வேர்கள் உள்ளன. அவை நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் வெப்சைட்டுகளையே வேவு பார்த்துக் கொண்டிருக்கும். நாம் அசந்திருக்கும் போது நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் வெப்சைட்டின் பெயரைப் போலவே ஒரு வெப்சைட்டை வெளிப்படுத்தி, திரும்பவும் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்டை டைப் செய்யச் சொல்லி வலியுறுத்தும். நாம் அதை உண்மை என்று நம்பி டைப் செய்தால் நம் பாஸ்வேர்டை தெரிந்து கொண்டு, நம் அக்கவுன்ட்டை முடக்கி விடும். வங்கி பாஸ்வேர்டாக இருக்கும் பட்சத்தில் பணத்தை சுருட்டி விடும் அபாயம் உண்டு. எனவே பயன்படுத்தாத போது வெப்சைட்டு களில் இருந்து சைன் அவுட் செய்து கொண்டு வெளியே வந்து விட வேண்டும். இல்லை என்றால் ஸ்பைவேர்களால் நம் அக்கவுன்ட்டுகளும், தகவல்களும் வேவு பார்க்கப்பட்டு திருடப்பட 100 சதவிகித வாய்ப்புகள் உண்டு.

Keylogger  என்ற ஒரு மென்பொருள் உள்ளது. இது மிக மிக அபாயகரமான மென் பொருளாகும். இதன் மூலம் நாம் டைப் செய்யும் ஒரு எழுத்து விடாமல் அத்தனையையும் நாம் அறியாமல் படிக்க முடியும். அதாவது, காப்பி செய்து வைத்துக் கொள்ளும். எனவே நாம் டைப் செய்கின்ற யூசர்நேம், பாஸ்வேர்ட் போன்றவற்றை அப்படியே காப்பி செய்து தன் இமெயிலுக்கு அனுப்பி வைத்துக் கொள்ளும் திறன் வாய்ந்தவை அந்த சாஃப்ட்வேர்கள்.

அதை வைத்து உடனடியாகவோ அல்லது சில நாட்கள் கழித்தோ நம் தகவல்களையும், பணத்தையும் திருடி எடுத்துச் செல்வர். இவ்வகை சாஃப்ட்வேர்கள் அழையா விருந்தாளியாக நாம் இன்டர்நெட்டில் இருந்து ஏதேனும் டவுன்லோட் செய்யும் போதோ அல்லது ஸ்பைவேர் சாஃப்ட்வேர்கள் மூலமாகவோ நம் கண்களுக்குப் புலப்படாமல் நம் கம்ப்யூட்டரில் வந்தமர்ந்து கொள்ளும். அவை நம் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் ஆகி இருப்பதே நம் கண்களுக்குத் தெரியாது.

பிரவுசிங் சென்டரில் நாம் பயன்படுத்துகின்ற வெப்சைட்டுகள் ஒவ்வொன்றில் இருந்தும் சைன் அவுட் செய்து கொண்டு வெளியே வர வேண்டும். மேலும் History, Cookies   போன்ற அனைத்தையும் டெலிட் செய்து விட்டு வரவேண்டும். இல்லை என்றால் நமக்குப் பின் வரும் வாடிக்கையாளர்கள் நாம் பயன்படுத்திய வெப்சைட்டுகளை பார்வையிடலாம்;

தகவல்கள் மற்றும் பாஸ்வேர்ட்களை திருடிச் செல்லலாம். ஸ்பைவேர் மற்றும் வைரஸ் சாஃப்ட்வேர்கள் கூட History, Cookies  போன்ற இடங்களில் உள்ள விவரங்களை வேவு பார்த்து தகவல்களைத் திருட வாய்ப்புண்டு. History, Cookies  போன்ற இடங்களில் சேகரிக்கப்பட்ட விவரங்களை டெலிட் செய்யும் வசதி நாம் பயன்படுத்துகின்ற பிரவுசர் சாஃப்ட்வேர்களிலேயே இருக்கும்.

இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் ஒரு மெனுவில் இருக்கும். கூகுள் குரோமில் வேறொரு மெனுவில் இருக்கும். ஃபையர்ஃபாக்ஸில் மற்றொரு மெனுவில் இருக்கும். எங்கிருக்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டும். தெரிந்து கொண்டு  விட்டால் அவற்றைப் பயன்படுத்துவது மிக சுலபம்.

நம் கம்ப்யூட்டரில் நன்றாக செயல்படக் கூடிய ஆன்டி வைரஸ் சாஃப்ட்வேர்களின் ஒரிஜினல் வெர்ஷனை இன்ஸ்டால் செய்து அப்டேட் செய்து கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் வைரஸ்களில் இருந்து நம் கம்ப்யூட்டரை காப்பாற்றிக் கொள்ள முடியும்.

‘உங்கள் கம்ப்யூட்டரில் வைரஸ் வந்துள்ளது. இலவசமாக நாங்கள் ஆன்டி வைரஸ் சாஃப்ட்வேர்களை உங்களுக்கு அளிக்கிறோம்’ என்று சொல்லிக் கொண்டு ஒருசில வெப்சைட்டுகள் இமெயில் அனுப்பும். அவை உங்கள் கம்ப்யூட்டரில் வைரஸ் இருப்பதைப் போல வைரஸ்களின் பெயர்களை பட்டியலிட்டுக் காண்பிக்கும். ஒருசில கம்ப்யூட்டரின் வேகத்தைக் குறைக்கச் செய்யும்;

இன்னும் சில கம்ப்யூட்டரை ஹேங் ஆக்கும்; பலமுறை தானாகவே ரீஸ்டார்ட் செய்ய வைக்கும். எனவே இலவசம் என்று சொல்லிக் கொண்டு வரும் எந்த சாஃப்ட்வேரையும் சபலப்பட்டு இன்ஸ்டால் செய்து விடாதீர்கள். செய்து விட்டால் அவ்வளவுதான் இன்டர்நெட்டில் நீங்கள் பயன்படுத்துகின்ற அத்தனை அக்கவுன்ட்டுகளும் அவர்கள் வசம்தான் என்பதை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

நம் கம்ப்யூட்டரில் வேர்ட் டாக்குமென்ட்டாகவோ அல்லது பிற சாஃப்ட்வேர்களிலோ வங்கி மற்றும் பிற அக்கவுன்ட்டுகளின் பாஸ்வேர்ட் விவரங்களை டைப் செய்து பாதுகாக்க வேண்டாம். குறிப்பாக இமெயிலில் நம் இன்பாக்ஸில் கூட சேகரித்து வைக்காமல் இருப்பது நல்லது. ஏனெனில் ஹேக்கர்ஸ் மூலம் நம் இமெயில் முகவரி திருடப்பட்டால் நம் இமெயில்களில் உள்ள பாஸ்வேர்ட் விவரங்கள் அடங்கிய மெயிலை அவர்கள் பார்த்து விட வாய்ப்புள்ளது. அடுத்து என்ன...அந்த பாஸ்வேர்ட்களை பயன்படுத்தி நம் அக்கவுன்ட்டுகளை முடக்குவதும், வங்கி அக்கவுன்ட்டில் பணத்தை திருடுவதும் தான் அவர்களின் வேலையாக இருக்கும் என்பதை சொல்லவும் வேண்டுமோ?

இமெயில் பார்ப்பதற்கென்று நாம் பயன்படுத்துகின்ற பாஸ்வேர்ட்களை, பிற அக்கவுன்ட்டுகளுக்கு (ஃபேஸ்புக், ட்விட்டர், ப்ளாக்...) பயன்படுத்தக் கூடாது. ஏன், ஒன்றுக்கும் மேற்பட்ட இமெயில்களை வைத்திருப்போர் ஒரே பாஸ்வேர்டை எல்லா இமெயில் முகவரிக்கும் வைத்துக் கொள்ளக் கூடாது.

ஏனெனில் ஒரு பாஸ்வேர்ட் தொலைந்து போனால் (திருட்டுப் போனால்) அதை வைத்துக் கொண்டு எல்லா அக்கவுன்ட்டுகளும் முடக்கப்படலாம் அல்லவா? எனவே இமெயில் பார்ப்பதற்கென்று வைத்திருக்கும் இமெயில் முகவரியை எல்லா அக்கவுன்ட்டுகளுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், பாஸ்வேர்டை புதிதாக உருவாக்கிக் கொள்ள வேண்டும்.