வார நாட்களில் லேடி ஜேம்ஸ்பாண்ட் வார இறுதியில் லேடி நம்மாழ்வார்!



உணர்வுகள்... உண்மைகள்

-மாலதி


முன்னல்லாம் மகனுக்கோ, மகளுக்கோ கல்யாணம் நிச்சயம் பண்றதுக்கு முன்னாடி, அவங்களுக்குப் பார்த்த பெண்ணோ, பையனோ சரியானவங்கதானானு டிடெக்டிவ்ஸ் மூலமா விசாரிப்பாங்க பெற்றோர். இன்னிக்கு பையனும் பெண்ணுமே நேரடியா எங்கக்கிட்ட வந்து அவங்க கல்யாணம் பண்ணப் போறவங்களைப் பத்தி விசாரிக்கச் ெசால்லிக் கேட்கற அளவுக்கு காலம் மாறியிருக்கு. அது நல்ல மாற்றம்தான். ஆனா, கல்யாணமானவங்களோட உறவுகள் குறித்து புலனாய்வு செய்யச் சொல்லி எங்கக்கிட்ட வர்ற வழக்குகள்தான் இன்னிக்கு அதிகம்... ரொம்ப வருத்தமான மாற்றம் இது...’’ - ஆற்றாமையும் ஆதங்கமும் கலந்த குரலில் ஆரம்பிக்கிறார் ஏ.எம்.மாலதி. சென்னையின் பிரபல துப்பறியும் நிபுணர்!



கடந்த பத்தாண்டுகளில் துப்பறியும் துறை பற்றிய விழிப்புணர்வு அதிகரித்திருப்பது போலவே, துப்பறியக் கேட்டு வருகிற வழக்குகளின் தன்மையும் மாறிவிட்டதைக் குறிப்பிடுகிற மாலதி, அடிப்படையில் ஒரு இன்ஜினியர். ஒரு சொத்து வழக்கு சம்பந்தமா டிடெக்டிவ் ஏஜென்சியில புகார் கொடுக்கப் போனேன். அது என் கணவர் அருள்மணிமாறனோட டிடெக்டிவ் ஏஜென்சி. அந்தப் பிரச்னை சரியானதும், எனக்கும் அந்தத் துறையில ஒரு ஆர்வம் ஏற்பட்டது.

அவங்களுக்கும் ஒரு பெண் டிடெக்டிவ் தேவையா இருந்தாங்க. அப்படியே அந்த கம்பெனியிலயே டிடெக்டிவா சேர்ந்துட்டேன். அப்புறம் அருண்மணிமாறனையே கல்யாணம் பண்ணிக்கிட்டு, அந்தத் துறையையே எனக்கான அடையாளமாக்கிக்கிட்டேன்...’’ என்கிற மாலதி, இப்போது மாலதி விமன்ஸ் டிடெக்டிவ் ஏஜென்சி என்கிற பெயரில் தனி துப்பறியும் நிறுவனமே நடத்துகிறார்.

``94ம் வருஷம்... எனக்கு பொண்ணு பிறந்து சரியா 22வது நாள்... காணாமப் போன தன்னோட மகளைக் கண்டுபிடிச்சுத் தரச் சொல்லி ஒரு டாக்டர் என்கிட்ட வந்தார். அந்தப் பெண் பேர் ஆர்த்தி. என் மகள் பேரும் ஆர்த்தி. ஏதோ ஒரு உந்துதல்ல கைக்குழந்தையை பக்கத்துவீட்டுக்காரங்கக்கிட்ட பார்த்துக்க சொல்லிட்டு அந்த கேஸை துப்பறிய கிளம்பிட்டேன்.

அந்த டாக்டரோட மகளும் மருத்துவம் படிச்சிட்டிருந்தா. அவளுக்கு ஒரு காதல். அந்தக் காதலன் அண்ணா யுனிவர்சிட்டியில படிச்சிட்டிருந்தான். வீட்ல காதலை ஏத்துக்க மாட்டாங்கங்கற பயத்துல அந்தப் பெண் காதலன் இருக்கிற இடத்துக்கே போய், அங்கேயே ஒரு ஹாஸ்டல்ல பதுங்கிட்டா. அந்த லேடீஸ் ஹாஸ்டலுக்குள்ள அத்தனை சீக்கிரம் யாரும்  போயிட முடியாது. ரொம்பக் கஷ்டப்பட்டு உள்ளே போய் அவளைக் கண்டுபிடிச்சுப் பேசினேன்.

அவங்கப்பாவோட கவலையை எடுத்துச் சொன்னேன். வீட்டுக்கு வரலைன்னாலும் பரவாயில்லை. ஆனா, அந்த ஹாஸ்டல்ல பதுங்கியிருக்கிறது ரொம்பத் தப்புனு ரொம்ப நேரம் போராடி அவளை கன்வின்ஸ் பண்ணி, வெளியில கூட்டிட்டு வந்தேன். அப்புறம் ரெண்டு பேர் வீட்டு சம்மதத்தோட அவங்க கல்யாணம் பண்ணிக்கிட்டு, இன்னிக்கு சந்தோஷமா வாழ்ந்திட்டிருக்காங்க.

அதுக்கப்புறம் நிறைய நிறைய கேஸ்... என்னை பார்த்து கேஸ் கொடுக்கணும்கிற பெண்கள், ஏதோ ஒரு கோயிலுக்கோ, கடைக்கோ வரச் சொல்வாங்க. அவங்க ஒரு டிடெக்டிவ் ஏஜென்சியை தேடி வந்து கேஸ் கொடுக்கிறதையும், அங்க உள்ள ஆண் துப்பறியும் நிபுணர்கள்கிட்ட பேசறதையும் தர்மசங்கடமா ஃபீல் பண்ணினாங்க. தவிர ஒவ்வொரு இடத்துக்கா போறதுல எனக்கும் நேரம் விரயமானது.

அப்பதான் பெண்களுக்கான பிரத்யேக டிடெக்‌டிவ் ஏஜென்சி ஆரம்பிக்கிற ஐடியா வந்தது. 2001ல அப்படியொரு ஏஜென்சியை ஆரம்பிச்சேன். பெண்களுக்காக, ஒரு பெண்ணால நடத்தப்படற ஏஜென்சினு தெரிஞ்சதும் எக்கச்சக்கமான வழக்குகள் வர ஆரம்பிச்சது. ஒரு காலத்துல டிடெக்டிவ்னா யாரு... அவங்களோட வேலை என்னனு புரிய வைக்கிறதே பெரிய சவாலா இருந்தது. காலம் மாற மாற, மக்களோட பார்வையும் மாற ஆரம்பிச்சது.

டிடெக்டிவ் மூலமா எந்த ஒரு பிரச்னையையும் அணுகறதை பாதுகாப்பா உணர ஆரம்பிச்சாங்க.  பெண்கள் தங்களோட பிரச்னைகளை பெண் டிடெக்டிவ் கிட்ட சொல்ல வர்றது போக, ஆண்களுமே கொஞ்சம் அந்தரங்கமான பிரச்னைகளுக்கு லேடி டிடெக்டிவ் வேணும்னு கேட்டு வர்ற நிலை இன்னிக்கு உருவாகியிருக்கு...’’ என்கிறார் மாலதி.

``முன்ன எப்பவும் இல்லாத அளவுக்கு திருமணத்துக்குப் பிறகான தகாத உறவுகள் இன்னிக்கு அதிகமாகியிருக்கு. கணவன் வீடு பெருக்கலை... சமைக்கலைனு சின்னச் சின்ன காரணங்களைச் சொல்லி டைவர்ஸ் வரைக்கும் போறாங்க இன்றைய பெண்கள். வேலைகளைப் பகிர்ந்துக்கணும்கிறதைக் கூட ரெண்டு பேரும் பேசி, சமாதானமா தீர்த்துக்க முடியும்னு அவங்க நினைக்கிறதில்லை. இது ஒரு பக்கம்னா, பெற்றோரோட சுயநலம் இன்னொரு காரணம். இன்னிக்கு பெண்கள் சர்வசாதாரணமா மாசம் லட்ச ரூபாய் சம்பாதிக்கிறாங்க.

மகளோட சம்பாத்தியத்துல சொகுசான ஒரு வாழ்க்கைக்குப் பழகற பெற்றோர், அவளோட கல்யாணத்துக்குப் பிறகு அந்த சம்பளம் இல்லாம, சொகுசுகள் இல்லாம வாழத் தயாரா இல்லை. மகள் கல்யாணமாகிப் போயிட்டாலும், அவளை மறுபடி தம் பக்கம் இழுத்துக்கிறதுக்கான சந்தர்ப்பத்தை எதிர்நோக்கிக் காத்திட்டிருக்காங்க. கணவனோட சின்ன சண்டைனு கேள்விப்பட்டாலும் மகளுக்கு அட்வைஸ் பண்ணி, அட்ஜஸ்ட் பண்ணி வாழக் கத்துக் கொடுக்காம, ‘அவன் வேண்டாம்... விட்டுட்டு வந்துடு... நாங்க பார்த்துக்கறோம்’னு தூண்டி விடறாங்க. கணவனைத் தூக்கிப் போடறதும், இன்னொரு ஆண்கூட உறவு வச்சுக்கிறதும் அவங்களுக்கு சாதாரணமா இருக்கு.

‘கேஸ் வந்ததா... காசு வாங்கினோமா’னு நினைக்க என்னால முடியாது. பெரும்பாலும் நான் டிடெக்டிவ்ங்கிறதை மீறி, என்னோட கிளையன்ட்ஸ்கிட்ட பேசி, அவங்களை சேர்த்து வைக்கவும் முயற்சிகள் எடுப்பேன். நான் இதை வெறும் பணம் பண்ற துறையா பார்க்கலை. உணர்வுகள் சம்பந்தப்பட்ட துறையாதான் பார்க்கறேன்...’’ - உண்மையாகவும் உணர்ச்சிப்பூர்வமாகவும் சொல்கிறார்.

தன்னால் எல்லா வழக்குகளையும் வெற்றிகரமாக முடித்துக் கொடுத்துவிட முடியும் என்கிற அதிமேதாவித் தனம் இவரிடம் இல்லை. கேஸ் எடுத்துக்கிட்டு வர்ற கிளையன்ட் கிட்ட பேசிட்டிருக்கும் போதே அதை முடிக்க முடியுமா முடியாதானு தெரிஞ்சிடும். முடியாதுன்னா அந்த நிமிஷமே அவங்கக்கிட்ட சொல்லிடுவேன். சிலதை முயற்சி பண்ணி மட்டும் பார்க்க முடியும். காணாமப் போறவங்களைக் கண்டுபிடிச்சுத் தரச் சொல்லி வர்ற வழக்குகள் பெரும்பாலும் இந்த ரகம்தான்.

சமீபத்துல ஒரு வயசான தம்பதி வந்தாங்க. அவங்களோட மகனுக்கும் மருமகளுக்கும் பிரச்னை வந்து ரொம்ப காலம் முன்னாடியே பிரிஞ்சிட்டாங்களாம். மகனுக்கு மனநலம் சரியில்லாமப் போயிடுச்சாம். மருமகள் எங்க இருக்காங்கனு தெரியலை. 6 வயசுல தங்களோட பேத்தியை பார்த்ததுதான். 10, 12 வருஷங்கள் ஆன நிலையில அந்தப் பேத்தியைக் கண்டுபிடிச்சுத் தரச் சொல்லி வந்தாங்க. எவ்வளவு பணம் வேணாலும் தரத் தயாரா இருக்கிறதா சொன்னாங்க.

தங்களோட சொத்துகளை ஒரே பேத்திகிட்ட கொடுக்கணும்கிற தவிப்பு அவங்களுக்கு. ஆனாலும், மகன், மருமகள், பேத்தினு யாரைப் பத்தியும் எந்தக் குறிப்பும் இல்லாத நிலையில பணத்துக்கு ஆசைப்பட்டு அவங்களுக்கு தவறான நம்பிக்கை கொடுக்க எனக்கு விருப்பமில்லை. இன்னிக்கு இருக்கிற வாழ்க்கைச் சூழல்ல அடுத்த வீட்ல இருக்கிறவங்களையே நமக்கு யார்னு தெரியறதில்லை.

நிதர்சனத்தை எடுத்துச் சொன்னேன். பெரிய எதிர்பார்ப்புகளை வளர்த்துக்க வேண்டாம். முடிஞ்சா சந்தோஷம். கண்டு பிடிக்க முடியாமப் போகவும் அதிக வாய்ப்புகள் உண்டுனு சொல்லித்தான் அந்த வழக்கை இப்ப எடுத்துப் பண்ணிட்டிருக்கேன்’’ - யதார்த்தமாகப் பேசுகிற மாலதி ஏராளமான மிரட்டல்களை சந்தித்தவர்... சந்தித்துக் கொண்டிருப்பவர்!

``ஒவ்வொரு கேஸ்லயும் ஒரு கிளையன்ட் கிடைக்கிறாங்கன்னா, கூடவே இலவச இணைப்பா ஒரு எதிரியையும் நான் சம்பாதிக்கிறேன். அடியாள் வச்சு மிரட்டறதுகூட நடக்கும். நல்லவேளையா எனக்கு என் கணவரும் இதே துறையில இருக்கிறது பெரிய பாதுகாப்பு. அவரைப் பத்தித் தெரிஞ்சவங்க மிரட்ட மாட்டாங்க. தெரியாம மிரட்டினாலும் நெருங்கி வரும்போது நான் யார்னு தெரிஞ்சிட்டா பயந்து பின்வாங்கிடுவாங்க...’’ - சிரித்தபடி சொல்பவருக்கு இன்னொரு முகமும் உண்டு. இவர் இயற்கை வேளாண்ைமயில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிற விவசாயி!

``நகரத்துக்கு வெளியில ஒரு பகுதியில ஆர்கானிக் விவசாயம் பண்ணிட்டிருக்கேன். டிடெக்டிவ் துறையோட கொஞ்சமும் ஒட்டாத துறை அது. ஒரு டிடெக்டிவா எனக்கு ஸ்ட்ரெஸ் வரும் போதெல்லாம் அதுலேருந்து என்னை மீட்டெடுக்கிறது அந்த விவசாயம்தான். டிடெக்டிவ் வேலைங்கிறது வாடிக்கையாளர்களுக்கானது. விவசாயம் எனக்கானது...’’ என்கிறவர் வார நாட்களில் லேடி ஜேம்ஸ்பாண்ட் என்றால் வார இறுதியில் லேடி நம்மாழ்வார்!

ஒருகாலத்துல டிடெக்டிவ்னா யாரு... அவங்களோட வேலை என்னனு புரிய வைக்கிறதே பெரிய சவாலா இருந்தது. காலம் மாற மாற, மக்களோட பார்வையும் மாற ஆரம்பிச்சது.

ஒவ்வொரு கேஸ்லயும் ஒரு கிளையன்ட்  கிடைக்கிறாங்கன்னா, கூடவே இலவச இணைப்பா ஒரு எதிரியையும் நான் சம்பாதிக்கிறேன்.
அடியாள் வச்சு மிரட்டறதுகூட நடக்கும்.

படங்கள்: ஆர்.கோபால்