ஃபேஸ்புக் ஸ்பெஷல்



சனிக்கிழமைகள் அற்புதமானவை!

-வித்யா விஜயராகவன்


சனிக்கிழமை இரவுகள் கொண்டாட்டமயமானவை. ஹேங் ஓவர் பிரச்னைகளிலிருந்து தப்பிக்க ஆண்கள் பெரும்பாலும் வெள்ளி, சனிக்கிழமைகளில்தான் குடிப்பார்கள். அதென்னவோ சனிக்கிழமைகளில் நாங்கள் எங்கு சென்றாலும் அங்கு ஒரு டாஸ்மாக்கை நிச்சயம் காண்போம்.



சொல்லப்போனால் ஊர் முழுக்க எங்கு சென்றாலும் நீக்கமற நிறைந்திருக்கும் ஒரே கடை டாஸ்மாக்தான். கார் செல்லும் வழி, பேருந்து நிறுத்தம், நடந்து சென்ற வழி என எல்லாவற்றையும் வழியிலிருக்கும் டாஸ்மாக்குகளைக் கொண்டுதான் நினைவில் நிறுத்துவோம். செவ்வாய்க்கிழமை அன்று செமஸ்டர், அதுவும் ‘டிகிரி ஸ்டாப்பிங் பேப்பர்’ எனப்படும் digital signal processingல். புத்தகம் வைத்திருந்தவளிடம் வாங்கி ஒரு கடையில் ஜெராக்ஸ் எடுக்கக் கொடுத்திருந்தோம்.

காலையில் அதே வழியில் புரண்டு கொண்டேதான் சென்றோம். இரவு வரும்போது அந்த வழியில் பேருந்து கூட செல்ல முடியாத நிலை. டாஸ்மாக் வாடிக்கையாளர்கள் கூட்டம் ரோட்டில் கால்வாசிக்கு நீண்டிருந்தது. டாஸ்மாக்கை பார்த்தால் எங்களுக்குள் ஒரு பழக்கம். ‘கம்முன்னு இங்க வாங்கி குடிச்சுட்டு ரோட்ல பொரண்டுடறலாமா?’ என ஒருத்தி கேட்க (இதைக் கேட்பவள் நான் மட்டும்தான்!), ‘இல்லடா... படத்துல காட்றாங்கல்ல... டாஸ்மாக்ல கூலிங்காவே கிடைக்காதுன்னு.

அப்றம் எப்டி’ என்பாள் இன்னொருத்தி. ‘ஆமா நமக்கு கூலிங்தான் முக்கியம்’ என்றவாறு பக்கத்தில் இருக்கும் பேக்கரிக்கு சென்று ஒரே ஒரு கூலிங்கான ஸ்ப்ரைட் வாங்கி எல்லாரும் குடித்து ஆசுவாசப்படுத்திக் கொள்வோம். புரூக்ஃபீல்ட் போன்ற மால்களில் இரவு ஒன்பது பத்துவாக்கில் சென்றால் கும்பல் கும்பலாக ஆண் பட்டாம்பூச்சிகள் கருப்பு பைகளை டாஸ்மாக் எலைட்டிலிருந்து கொண்டு போவதைக் காணலாம். அவர்களிலும் சில அப்பாவி பட்டாம்பூச்சிகள் ‘என்னா மச்சி இங்க ஃப்ரீசர்லாம் இல்லயாமா?’ என செய்வதறியாது திகைத்துக் கொண்டு புலம்பிக் கொண்டிருப்பார்கள்.

பார்த்தால் நெக்கலாக சிரிப்பு வரும். சரி, நமக்கெதற்கு வம்பு என விட்டுவிடுவோம். வெளியில் வந்து இறங்கியதும் முதலில் கவனிப்பது... எல்லா ரோடுகளிலும் தெருக்களிலும் முட்டுச்சந்துகளிலும் மூத்திர சந்துகளிலும் மொடாக்குடி குடித்து விட்டு ஒருவர் ரோட்டில் கிடப்பார். லுங்கி அவிழ்ந்திருக்கும். சில நேரம் அருகிலேயே வாந்தி எடுத்திருப்பார் அல்லது வாந்தி மேலேயே படுத்திருப்பார். ஈக்கள் சுற்றி மொய்த்துக் கொண்டிருக்கும்.

கால்களில் சேறும் மண்ணும் அப்பியிருக்கும். சில வேளை அவர் மனைவி வந்து, ‘ஏந்திரிய்யா... என்னை புடிச்ச சனியனே... எந்திரிச்சு தொல’ என்று கெஞ்சிக் கொண்டிருப்பார். அருகில் அவர்களின் மகனும் மகளும் நின்று பார்த்துக் கொண்டிருப்பார்கள். சில ‘டாஸ்மாக்’குகளில் இரவு 8க்கு மேல் மெதுவாக வாழைப்பழம் விற்கும் பாட்டி, பூக்கார கிழவி, கட்டிட வேலை செய்யும் அம்மா என உடல் உழைப்பைச் சார்ந்த ஜீவிதம் கொண்டிருப்பவர்கள் நைசாக கூட்டத்தினுள்ளே புகுந்து வேண்டுவதை வாங்கி ஜாக்கெட்டுக்குள்ளும் இடுப்பில் செருகியிருக்கும் சுருக்குப்பைகளுக்குள்ளும் போட்டு வைத்துவிட்டு எதுவும் நடக்காதது போல சாதாரணமாக புகையிலையை மென்று காறி உமிழ்ந்து கொண்டே நடப்பார்கள்.

புகையிலை சுண்ணாம்புக்கான சுருக்குப்பை தனியாக இருக்கும். அவர்கள் அடிக்கடி வரும் கடையென்பதால் அங்கு வரும் சக குடிமகன்களும் இவர்களை பெரிய கலாசார சீர்கேடுகளாகப் பார்க்காமல் ‘நம்ம காம்ரேட்’ என்னும் பெருமிதத்தோடு பார்ப்பார்கள். பலர் வசதியாக இவர்களை ஏறெடுத்தும் பார்க்காமல் கடப்பார்கள். சிலர் கையில் பாட்டிலை வைத்துக்கொண்டே ‘கெழ்ழ்ழ்வி குட்க்கிது பாரு’ என்று சொல்லிக் கொண்டிருப்பார்கள்.

டாஸ்மாக் அருகில் இருக்கும் பேருந்து நிறுத்தமென்றால் நிச்சயமாக அங்கு இருக்கையிருந்தாலும் அமர முடியாது. ஒன்று வாந்தியெடுத்து வைத்திருப்பார்கள். இல்லையெனில் குடித்துவிட்டு அங்கேயே சுகமாக படுத்துறங்குவார்கள். இத்தனை வகையான குடிகளையும் குடிகாரர்களையும் பார்த்து ரசித்துக்கொண்டு சனிக்கிழமைதான் எத்தனை கொண்டாட்டமயமானது என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதுதான் வீட்டிலிருந்து அழைப்பு வரும்... ‘மணி என்னாச்சு? இன்னிக்கு வீட்டுக்கு வரியா இல்லையா?’

சனிக்கிழமைகள் அற்புதமானவை. அவை குடிப்பவர்களுக்கு மட்டுமல்ல... குடிப்பவர்களை தூரத்தில் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டு பொழுதைக் கழிப்பவர்களுக்கும் சொந்தமானவை!

‘‘அவர் மனைவி வந்து, ‘ஏந்திரிய்யா... என்னை புடிச்ச சனியனே... எந்திரிச்சு தொல’ என்று கெஞ்சிக் கொண்டிருப்பார். அருகில் அவர்களின் மகனும் மகளும் நின்று பார்த்துக் கொண்டிருப்பார்கள்.’’