அலெர்ட் எப்போதும் அவசியம்!



பெண்ணாலே... பெண்ணாலே...

தான்யா பூரி


நேற்றுதான் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு வந்தவர் போல இருக்கிறார் தான்யா பூரி. 23 வயதாகும் இவர், இந்தியாவின் முக்கியமான துப்பறியும் பெண் நிபுணர்களில் ஒருவர் என்பது ஆச்சரியம் அளிக்கும் தகவல். இவர், டெல்லியில் இயங்கும் `லேடி டிடெக்டிவ்ஸ் இந்தியா’ நிறுவனத்தின் சி.இ.ஓ. இந்தியாவின் மிக இள வயது துப்பறியும் நிபுணர் என்ற பெருமையும் உண்டு இவருக்கு!



அப்பா பல்தேவ் பூரி, டெல்லியில ரொம்பப் பிரபலமான டிடெக்டிவ். டெல்லி யுனிவர்சிட்டியில மீடியா ஸ்டடீஸ் முடிச்சேன். தகவல் தொடர்புலயும் மார்க்கெட்டிங்லயும் என்னோட திறமையை வளர்த்துக்கணும்கிறதுதான் அப்ப ஒரே எண்ணமா இருந்தது. இயல்புலயே நான் ஒரு சாகச விரும்பி. தினம் தினம் வாழ்க்கையில புதுசு புதுசா சுவாரஸ்யங்களை கூட்டணும்னு நினைக்கிறவள். ஒரே வேலையைத் திரும்பத் திரும்பச் செய்யறது எனக்குப் பிடிக்காது.

சின்ன வயசுலேருந்தே நான் கொஞ்சம் துறுதுறு கேரக்டர். என் ஃப்ரெண்ட்ஸ்ல யாருக்கு என்ன பிரச்னைன்னாலும் உடனே தீர்த்து வச்சிடுவேன். ஒரு பேச்சுப் போட்டி விடாமல் கலந்துப்பேன். என் பேச்சுத் திறமையைப் பார்த்து எங்கப்பா, எனக்கொரு ட்ரெயினிங் கொடுத்தார். அதாவது, அவர் கிளையன்ட் மாதிரியும் நான் கம்பெனி ஓனர் மாதிரியும் பேசணும். அப்போ அது விளையாட்டா தெரிஞ்சாலும், இப்ப அதோட அருமை புரியுது.

ஒரு விஷயத்தை, கிளையன்ட்டோட பிரச்னையை எப்படி ஹேண்டில் பண்றேங்கிறதுக்கான அடிப்படை பயிற்சி அது...’’ - தான்யாவின் அறிமுகப் பேச்சு அவரைப் போலவே அத்தனை அழகு! ``சின்ன வயசுலேருந்து அப்பாவோட வேலைகளைப் பார்த்து வளர்ந்திருக்கேன். அப்பல்லாம் நானும் இதே துறைக்கு வருவேன்னு நினைச்சுக்கூடப் பார்த்ததில்லை. இதை விதினு சொல்ல முடியாது. வளர வளர அப்பாவோட வேலை எனக்குள்ள என்னையும் அறியாம ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கணும்.

எத்தனையோ மக்களோட பிரச்னைகளை அப்பா சாதுர்யமா தீர்த்து வைக்கிறதைப் பார்த்திருக்கேன். மீடியா சம்பந்தப்பட்ட படிப்பை படிக்கணும்னு  நினைச்சு சேர்ந்தாலும் ஒரு கட்டத்துல அது எனக்கான வேலையில்லைனு புரிஞ்சது. அப்பாகிட்டயே ஜூனியரா சேர்ந்ததும் அதுதான் எனக்கான உலகம்னு உணர்ந்தேன். அப்புறம் நானே தனியா ஒரு கம்பெனியை நிர்வகிக்கிற அளவுக்கு என் திறமைகளை வளர்த்துக்கிட்டேன்.

நாம செய்யற வேலைங்கிறது வாழ்க்கையில ரொம்ப முக்கியமான விஷயம்ணும், அது கொடுக்கிற நிறைவுதான் உண்மையான சந்தோஷம்ணும் அப்பா அடிக்கடி சொல்வார். அதை இப்ப உணர்ந்திட்டிருக்கேன்...’’ என்கிற தான்யாவுக்கு, முதல் கேஸில் இருந்து, நேற்று கையாண்ட கேஸ் வரை எல்லாமே சுவாரஸ்ய அனுபவங்களைத் தந்தவை!

நான் காலேஜ் படிச்சிட்டிருக்கும்போதே அப்பா அவர்கிட்ட வந்த சில கேஸ்களை என்னை வச்சுப் பண்ண வச்சார். ஒரு அப்பாவுக்கு காலேஜ் படிச்சிட்டிருந்த தன் மகள் மேல சந்தேகம். அவளோட பையிலேருந்து போதை மருந்தை எடுத்திருக்கார். அவளோட தினசரி நடவடிக்கைகளைக் கண்காணிக்க சொல்லி எங்கப்பாகிட்ட வந்தார். எங்கப்பா அந்த கேஸை என்னை ஹேண்டில் பண்ணச் சொன்னார்.

அந்தப் பொண்ணும் டெல்லி யுனிவர்சிட்டியில படிச்சிட்டிருந்தா. அதனால அவளைக் கண்டுபிடிக்கிறதும் ஃபாலோ பண்றதும் எனக்கும் ரொம்ப ஈஸியா இருந்தது. என்னோட கிளாஸ் முடிஞ்சதும் அவளைக் கண்காணிக்கப் போயிடுவேன். பலநாட்கள் அப்படி ஃபாலோ பண்ணினதுல காலேஜுக்கு பின்னாடி சில ஆட்கள்கிட்டருந்து அவ தனக்கான போதை மருந்துகளை ரகசியமா வாங்கி உபயோகிக்கிறது தெரிய வந்தது.

அதை புகைப்பட ஆதாரங்களோட அவங்கப்பாவுக்குக் கொடுத்தோம். பிற்காலத்துல நான் டிடெக்டிவ் ஆகணும்னு விரும்பி, இந்தத் துறைக்குள்ள வந்து, சொந்த கம்பெனி ஆரம்பிச்சு நடத்தற அளவுக்கு எனக்கு தைரியத்தைக் கொடுத்ததுல அந்த முதல் அனுபவத்துக்குப் பெரிய பங்குண்டு.’’ அப்பா இந்தத் துறையில் ஏற்கனவே சம்பாதித்து வைத்திருந்த பெயரும் புகழும் தனக்கு மிகப்பெரிய பிளஸ்சாக அமைந்ததாகச் சொல்கிறார் தான்யா.

ஆனாலும், இந்தத் துறையில வாடிக்கையாளர்களை அத்தனை சீக்கிரம் திருப்திப்படுத்திட முடியாது. அவங்களுக்கு நம்ம மேல நம்பிக்கையையும் நட்பையும் ஏற்படுத்தறதுதான் பெரிய சவால். வாடிக்கையாளர்களோட ரகசியங்களைக் காப்பாத்தறதுலயும் அவங்களுக்கு உண்மையா இருக்கிறதுலயும் கவனமா இருக்கிற டீம் அமைஞ்சிட்டா, அந்த சவாலை சுலபமா எதிர்கொள்ளலாம்...’’ என்கிறார்.

திருட்டு, காணாமல் போனவர்களைக் கண்டுபிடிப்பது, வேலையில் சேர்வதற்கு முன்பும் சேர்ந்த பிறகுமான ஆய்வுகள், நிதி மோசடிகள், வெளிநாட்டில் வேலையில் சேர்வோருக்கான துப்பறிதல் என தான்யாவின் நிறுவனம் கையாளாத விஷயங்களே இல்லை. அவற்றில் திருமணத்துக்கு முன்பும் திருமணத்துக்குப் பிறகுமான தன் துணையின் கேரக்டரை சரிபார்க்கக் கேட்டு வருகிற வழக்குகளே எக்கச்சக்கம் என்கிறார் அவர்.

முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது பெண் துப்பறியும் நிபுணர்களுக்கான வரவேற்பும் தேவையும் அதிகரித்திருப்பதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறார் இவர். ``இந்தியாவுல உள்ள அத்தனை மாநிலங்கள்லயும் எங்களோட டீம் இருக்கு. ஆண்களும் பெண்களும் துப்பறியும் நிபுணர்களா இருக்காங்க. சில வழக்குகளுக்கு முழுக்க பெண்கள் டீம்தான் வேணும்னு கேட்கறவங்களுக்கு அப்படியே ஏற்பாடு செய்து கொடுப்பேன்.

பெண்கள் எப்போதுமே அடுத்தவங்களோட உணர்வுகளுக்கு மதிப்பளிக்கிறவங்க. அடுத்தவங்க பிரச்னைகளை தங்களோட பிரச்னைகளா பார்க்கிறவங்க. அதனால ஒரு ஆண் டிடெக்டிவ்கிட்ட ஒரு வழக்கைக் கொடுக்கிறதைவிட, ஒரு பெண் டிடெக்டிவ்கிட்ட கொடுத்தா, இன்னும் உணர்வுப்பூர்வமா அதை அணுகி, தீர்த்து வைப்பாங்கன்ற எண்ணம் மக்களுக்குப் பரவலா இருக்கு.

பொதுவா பெண்கள்கிட்ட ரகசியம் தங்காதுனு ெசால்வாங்க. அதெல்லாம் சும்மா... இந்தத் துறையில இருக்கிற பெண்கள், எப்படிக் கேட்டாலும் தான் ஹேண்டில் பண்ற வாடிக்கையாளரோட பிரச்னையைப் பத்தி யார்கிட்டவும் மூச்சு விட மாட்டாங்க. நெருங்கின சொந்தக்காரங்கக்கிட்டயோ, நண்பர்கள்கிட்டயோகூட பகிர்ந்துக்க முடியாத எத்தனையோ சென்சிட்டிவான விஷயங்களைக்கூட எங்கக்கிட்ட மனசு விட்டுப் பகிர்ந்துப்பாங்க.

பெண்களா இருக்கிறதுல இது ஒரு வசதி...’’ என்கிறவர் எல்லோருக்கும் நச்சென ஒரு மெசேஜ் சொல்கிறார். உண்மைங்கிறது ஒண்ணுதான். இன்னிக்கு உங்களைப் பத்திரமா பார்த்துக்கோங்க. இந்த நிமிஷத்தைக் கோட்டைவிட்டுட்டு, பின்னாடி வருத்தப்படாதீங்க... அலெர்ட்டா இருக்க வேண்டியது எப்போதும் அவசியம்...’’                 

பொதுவா பெண்கள்கிட்ட ரகசியம் தங்காதுனு  ெசால்வாங்க. அதெல்லாம் சும்மா... இந்தத் துறையில இருக்கிற பெண்கள்,  எப்படிக் கேட்டாலும் யார்கிட்டவும் மூச்சு விட மாட்டாங்க!