பேச்சே பெரிய ஆயுதம்!



திகில் திருப்பங்கள்

-யாஸ்மின்

கோவையின் முதல் பெண் துப்பறியும் நிபுணர் என்கிற அடையாளத்துடன் கம்பீரமாக வரவேற்கிறார் யாஸ்மின். ஐ.எஸ்.ஒய். வெரிஃபிகேஷன் சர்வீசஸ் என்கிற துப்பறியும் நிறுவனத்தின் உரிமையாளர்!



ஒரு டிடெக்டிவா உங்கக்கிட்ட பேசிட்டிருக்கேங்கிறது எனக்கே ஆச்சரியமாதான் இருக்கு. சின்ன வயசுல என்னோட கனவுகள் வேற... ரொம்ப துடுக்குத்தனமா இருப்பேன். த்ரில்லிங்கான விஷயங்களும் விளையாட்டுகளும் ரொம்பப் பிடிக்கும். கொஞ்சம் வளர்ந்ததும் வக்கீலாகணும்னு ஒரு ஆசை வந்தது. நான் எல்லாரையும் போல இருக்க மாட்டேன். வித்தியாசமா ஏதாவது செய்வேன்’னு சொல்லிக்கிட்டே இருப்பேன். ராஜேஷ்குமார் நாவல்கள் நிறைய படிப்பேன். கல்யாணமாகி 10 வருஷங்கள் கழிச்சுதான் டிடெக்டிவ் ஆயிருக்கேன்.

சொன்னபடியே வித்தியாசமான துறைக்கு வந்துட்டதுல ரொம்பவே சந்தோஷமா இருக்கேன்...’’ - கணீர் குரலும் கனிவான சிரிப்புமாக அறிமுகம் சொல்கிறார் யாஸ்மின். ``சென்னையோட ஒரு பிரபல துப்பறியும் நிபுணரை ஒரு ஃபங்ஷன்ல சந்திச்சேன். அவர்கிட்ட பேசிட்டிருக்கும்போது டிடெக்‌டிவ் துறை பத்தி நான் கேள்விப்பட்ட விஷயங்கள் ரொம்பப் பிடிச்சுப் போச்சு. அவர் கம்பெனியிலயே டிடெக்டிவா வேலைக்கு சேர்ந்தேன். முதல் கேஸை டீல் பண்ண ஆரம்பிச்ச போதே அதுதான் எனக்கான துறைனு தெரிஞ்சிருச்சு. முதல்ல டீம்ல நானும் ஒருத்தியா பண்ணிட்டிருந்த வேலையை ஒரு கட்டத்துல தனியா பண்ண ஆரம்பிச்சேன்.

இதுவரைக்கும் நான் எடுத்த எந்த கேஸும் ேதால்வி அடைஞ்சதில்லைங்கிறதுல  எனக்குப் பெருமை உண்டு’’ என்கிற யாஸ்மின், தனியாக தான் கையாண்ட முதல் வழக்கை நினைவுகூர்கிறார். ரெண்டு பேர் காதலிச்சிட்டிருந்தாங்க. ரெண்டு பேர் வீட்லயுமே சம்மதிச்சிட்டாங்க. ஆனாலும், பையனோட அம்மா, அப்பாவுக்கு பெண்ணோட அம்மா-அப்பா மேல ஏதோ சந்தேகம். ‘அவங்களுக்குள்ள ஏதோ பிரச்னை இருக்கிற மாதிரி தெரியுது... விசாரிங்க’னு சொன்னாங்க. பெண்ணோட அம்மா-அப்பா கொஞ்சம் பெரிய ஆளுங்க. அவ்வளவு ஈஸியா அவங்களை நெருங்கிட முடியாதுங்கிற நிலைமையில, நான் ஒரு பிளான் போட்டேன்.

அப்ப சுதந்திர தினம் வந்தது. அதையொட்டி 25 வருஷ கல்யாண வாழ்க்கையை திருப்தியா, நல்லபடியா வாழ்ந்த கணவன்-மனைவியை தேர்ந்தெடுத்து எங்க கம்பெனி சார்பா கவுரவப்படுத்தப் போறோம்னு சொல்லி அவங்களை சந்திச்சேன். ரொம்ப நேரம் பேசிட்டிருந்தேன். அவங்களும் என்கிட்ட ரொம்ப நட்பாகிட்டாங்க. கடைசியில முடிக்கிற நேரம், அவங்க மனசைத் திறந்தாங்க... நீங்க நினைக்கிற மாதிரி நாங்க ஆதர்ச தம்பதியெல்லாம் இல்லை. வெளி வட்டாரத்துக்குத்தான் நாங்க சிறந்த தம்பதி. வீட்டுக்குள்ள எங்களுக்குள்ள புரிதலே இல்லை. கல்யாணமான முதல் 10 வருஷங்கள்தான் சந்தோஷமா இருந்தோம்.

அப்புறம் பிரச்னைதான். அவருக்கு குடி, சீட்டாட்டம், தப்பான சகவாசம்னு நிறைய கெட்டப் பழக்கங்கள். திருத்திடலாம்னு எவ்வளவோ முயற்சி பண்ணியும் முடியலை. தினம் தினம் சண்டை போட்டிருக்கோம். இப்ப ரெண்டு பேருக்கும் பேச்சு வார்த்தைகூட கிடையாது. டைவர்ஸ் பண்ணாம ஒரே வீட்ல இருக்கோம்’னு சொன்னாங்க. நான் எதிர்பார்த்து வந்த தகவல் கிடைச்சிட்ட திருப்தி எனக்கு. பையனோட பெற்றோர்கிட்ட விவரத்தை சொன்னேன். அவங்களுக்கும் உண்மை தெரிஞ்சதுல நிம்மதி.

அதுக்காக அவங்க கல்யாணத்தை நிறுத்திடலை. நல்லபடியா கல்யாணம் பண்ணி வச்சாங்க. ரொம்ப சாமர்த்தியமா அந்த விஷயத்தை ஹேண்டில் பண்ணதுக்காக என்னை பாராட்டினாங்க...’’ சந்தோஷம் பகிர்பவர், ஏராளமான வெற்றிகளை ருசித்த பிறகே தனியாக நிறுவனம் தொடங்கியிருக்கிறார்.

நிறைய அனுபவங்களை கத்துக்கிட்டேன். ஆலமரத்துக்கு கீழே எந்தச் செடியும் வளராதில்லையா? அதனால நான் வெளியில வந்து சொந்தமா டிடெக்டிவ் ஏஜென்சி தொடங்கினேன். தனியா ஒரு நிறுவனத்தை நடத்தறது ஆரம்பத்துல அத்தனை ஈஸியா இல்லை. நான் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவள்கிறதால நிறைய மிரட்டல்கள் வந்தது. அதுக்கு முன்னாடி என் குடும்பத்தாரை சம்மதிக்க வைக்கிறதே பெரிய சவாலா இருந்தது.

நான் இந்தத் துறைக்கு வந்தபோது என் கணவரைத் தவிர, என் வீட்டார் யாருக்கும் நான் இந்த வேலை பார்க்கிறது தெரியாது. தனியா கம்பெனி ஆரம்பிச்சதும் தெரிஞ்சு போச்சு. `பொம்பிளைப் புள்ளைக்கு இது தேவையா? ரிஸ்க் எடுக்கறே... வேணாம்’னாங்க. எதுலதான் ரிஸ்க் இல்லை? ரோடு கிராஸ் பண்றதுலகூட ஒரு ரிஸ்க் இருக்கத்தானே செய்யுது? ரொம்ப கஷ்டப்பட்டு அவங்களை கன்வின்ஸ் பண்ணினேன்...’’ - சவால்களை சந்தித்தவருக்கு, ஒவ்வொரு வழக்குமே திகில்களும் திருப்பங்களும் நிறைந்த அனுபவங்களாம்.

துப்பறியும் நிபுணர்னா தைரியமா மட்டும் இருந்தா போதாது. உணர்ச்சிவசப்படாதவங்களாகவும் இருக்கணும். கிளையண்ட்கிட்ட எப்படி நடந்துக்கணும்னு தெரிஞ்சிருக்கணும். அவங்களுக்கு நம்ம மேல நம்பிக்கை வரணும். அப்பதான் அவங்களை நெருங்க முடியும்...’’ என்பவர், தான் கையாள்கிற வழக்குகளுக்காக விதம் விதமான அரிதாரம் பூசவும் தயங்குவதில்லையாம். கல்லூரி மாணவி, பூ விற்கிற பெண், டீச்சர், நர்ஸ் என இவரது விதம் விதமான கெட்டப் லிஸ்ட் நீளமானது.

தனது துப்பறியும் வேலையானது இந்தியாவில் மட்டுமின்றி, துபாய், மலேசியா என நாடுகள் தாண்டியும் விரிந்திருப்பதாகச் சொல்கிறார். எங்க டீம்ல 60க்கும் மேலானவங்க வேலை பார்க்கிறாங்க. அவங்கள்ல 15 பேர் பெண்கள். பெரும்பாலும் பகுதி நேரமா இந்த வேலையைச் செய்யறவங்க எங்களுக்கு அதிகம். அதுலயும் காலேஜ் ஸ்டூடன்ட்ஸ் எண்ணிக்கை ரொம்பவே அதிகம்...’’ என்பவர் அவர்களை வைத்தே செய்து முடித்த ஒரு வழக்கையும் இதற்கு உதாரணமாகக் காட்டுகிறார்.

``ஒரு அப்பா தன் மகனைப் பத்தின வழக்கோட என்கிட்ட வந்தார். ரொம்ப நல்லா படிக்கிற, பழகற அவன், கடந்த 6 மாசமா தனிமை விரும்பியா மாறிட்டதா சொன்னார். எப்போதும் தனியா பொழுதைக் கழிக்கிறதாகவும், பைக், போன்... இப்படி காஸ்ட்லியான அயிட்டங்களை கேட்டு அடம் பிடிக்கிறதாகவும், தினம் ராத்திரி ரொம்ப லேட்டா தூங்கறதாகவும் சொன்னார். அந்த மகனை நாங்க கண்காணிச்சதுல அவனுக்கொரு காதல் இருக்கிறது தெரிஞ்சது.

‘அந்தப் பெண் ரொம்பப் பணக்கார வீட்டைச் சேர்ந்தவள் போல... அவளுக்கு சமமா தன் அந்தஸ்தையும் காட்டிக்கத்தான் இப்படிப் பண்றான் போல’னு முதல்ல நினைச்சோம். அவங்களை தொடர்ந்து கண்காணிச்சதுல அந்தப் பெண்ணுக்கு போதைப் பழக்கம் இருக்கிறதும், அவ மூலமா இவனுக்கும் அந்தப் பழக்கம் வந்திருக்கிறதும் தெரிஞ்சது. அப்புறம் அந்தப் பையனுக்கு கவுன்சலிங் கொடுத்தோம்.போதையிலேருந்து மீட்டோம்.

ஆனா, இப்படி சில பேர், மறுபடி அதே தவறை அடுத்தவங்களுக்குத் தெரியாம தொடர்ந்து செய்யறதுக்கு திருந்திட்ட மாதிரி நடிக்கிறதையும் நாங்க பார்த்திருக்கோம். அதே மாதிரி அந்தப் பையனும் திருந்திட்டதா நடிச்சு, மறுபடி அதே தப்பை பண்ணிட்டிருந்தான். அப்புறம் மறுபடி கவுன்சலிங் கொடுத்து, வேற காலேஜுக்கு மாத்தினோம். அந்தப் பெண்ணைப் பத்தி காலேஜ் நிர்வாகத்துக்குத் தெரியப்படுத்தி, அவங்க மூலமா அவளோட பெற்றோருக்குத் தகவல் சொல்ல வச்சோம்.

இப்ப அந்தப் பையன் முழுசா எல்லாத்துலேருந்தும் வெளியில வந்துட்டான். இந்த கேஸ்ல எங்களுக்கு தகவல்களைத் திரட்டித் தந்து அவங்க ரெண்டு பேர்கூடவும் நெருங்கிப் பழகி, எல்லாத்தையும் கண்டுபிடிக்க உதவினவங்க காலேஜ் ஸ்டூடன்ட்ஸும் டீச்சர்ஸும்தான். இது மாதிரி அந்தந்த கேஸை பொறுத்து எங்களுக்கான ஆட்களை நாங்க ஏற்பாடு செய்து, கண்டுபிடிப்போம்...’’ என்கிற யாஸ்மினுக்கு வழக்குகளைக் கையாளும் போது மிரட்டல்களுள் வருவது சர்வசாதாரணம்.

அடிப்படையிலயே நான் கொஞ்சம் தைரியமான பெண். தவிர, எனக்கு கராத்தேவும் வர்மக்கலையும் தெரியும்கிறதால பிரச்னை இல்லை. எல்லாத்தையும் விட முக்கியமா பேச்சு சாமர்த்தியம்தான் மிகப்பெரிய ஆயுதம்னு நினைக்கிறேன். அதை வச்சு எந்த சூழலையும் ெஜயிச்சிடலாம்...’’ என்பவர், எதிராளி தரப்பில் தங்கள் கழுத்தில் கத்தியே வைக்கப்பட்டாலும் ரகசியங்களைக் கசிய விடமாட்டோம் என உறுதியும் அளிக்கிறார்.            

வெளிநாடுகளுக்கு வேலை தேடிப் போற பலருக்கும் வேலையில போய் சேரும்வரை அந்தக் கம்பெனியை பத்தியோ, அந்த வேலையோட பின்னணி பத்தியோ தெரியறதில்லை. தெரியாமப் போய் மாட்டிக்கிறாங்க.

பொம்பிளைப் புள்ளைக்கு இது தேவையா? ரிஸ்க் எடுக்கறே... வேணாம்’னாங்க. எதுலதான் ரிஸ்க் இல்லை? ரோடு கிராஸ்  பண்றதுலகூட ஒரு ரிஸ்க் இருக்கத்தானே செய்யுது?

கல்லூரி மாணவி, பூ விற்கிற பெண், டீச்சர், நர்ஸ் என இவரது விதம் விதமான கெட்டப் லிஸ்ட் நீளமானது!

யாஸ்மினின் எதிர்காலத் திட்டங்களில் ஒன்று டிரஸ்ட் தொடங்குவது. ``வெளிநாடுகளுக்கு வேலை தேடிப் போற பலருக்கும் வேலையில போய் சேரும்வரை அந்தக் கம்பெனியை பத்தியோ, அந்த வேலையோட பின்னணி பத்தியோ தெரியறதில்லை. தெரியாமப் போய் மாட்டிக்கிறாங்க.

அப்படிப்பட்டவங்களுக்கு அவங்க வேலை சம்பந்தமான தகவல்களை சரிபார்த்து, பாதுகாப்பானதுதானாங்கிறதை உறுதி செய்யற வேலைகளை இலவசமா செய்யறதுக்காக ஒரு டிரஸ்ட் ஆரம்பிக்கிற எண்ணம் இருக்கு. அவங்க வேலையில சேர்ந்த பிறகும் அவங்ககூட எங்களுக்கு தொடர்பு இருந்துட்டே இருக்கும். ஏதாவது பிரச்னைன்னா உடனே நாங்க பார்த்துப்போம். இது நிறைய பேரோட குடும்பங்களைக் காப்பாத்தும்...’’ - நல்ல சேதியுடன் நம்பிக்கை தருகிறார் யாஸ்மின்.