செல்போன் என்னும் மந்திர வஸ்து!



என் எண்ணங்கள்

 - க.ஸ்ரீப்ரியா

‘ஹோம்வொர்க் முடிச்சுட்டேன் அம்மா. ஆங்க்ரிபேர்ட் விளையாடப் போறேன்’ என அம்மாவின் மொபைலை தூக்கிக்கொண்டு ஓடும் 4 வயது வாண்டு முதல், கண்காணாத தேசத்தில் இருக்கும் தன் பேத்தியின் குரலை கண் கலங்க கேட்கும் தாத்தா வரை... ஊடலோடு போகும் கணவனை கூல் செய்ய மெசேஜாக அனுப்பித் தள்ளும் புது மனைவியில் இருந்து, ப்ரொபோஸ் செய்து விட்டு பதிலுக்காக டச் ஸ்க்ரீனையே வெறித்துப் பார்க்கும் காதலன் வரை...



‘என்னடி ப்ரேக் அப்-பா, அவன் போனா உன் உலகமே முடிஞ்சதா? நாங்க இருக்கோம்ல...’ என வாட்ஸ் அப் க்ரூப்பிலோ ஸ்கைப் காலிலோ நட்பால் அரவணைக்கும் தோழமைகள்... எல்லோருக்குமே அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும் கண்கண்ட கடவுள் செல்போன்தான்!

‘அருளில்லாதவருக்கு அவ்வுலகம் இல்லை... செல்லில்லாதவருக்கு இவ்வுலகம் இல்லை’ன்னு ஆகிப்போச்சு நிலைமை. காலேஜுக்கு ஐடி கார்டு மறந்து போனாலும் போவோம்... எடுத்து வரக்கூடாது என ஸ்ட்ரிக்ட் ரூல் இருந்தாலும் செல்போன் கொண்டு போக மறக்கவே மாட்டோம். கிட்டத்தட்ட ஆறாவது விரலாகவே இருக்கிறது செல்போன்.

இரண்டு கைகளில் ஒரு கைக்கு என்ன வேலை வேணாலும் இருக்கலாம்... இன்னொரு கைக்கு நிச்சயம் செல்போன் வீற்றிருக்க வேண்டிய வேலை மட்டுமே. இந்த செல்போனால என்னெல்லாம் நல்லது கெட்டதுன்னு பார்ப்போமா! உங்க மேனேஜர் மேல கடுப்பா? அவர் கேபின் பக்கமா நின்னு,  மொபைலை எடுத்து காதுல வச்சுட்டு, திட்ட நினைக்கறது கொட்ட நினைக்கிறது எல்லாம் கொட்டிடுங்க. மறக்காம போன் சைலன்ட் மோட்ல இருக்கான்னு பார்த்துக்கோங்க. இல்ல உச்சக்கட்ட டெம்போல நீங்க உங்க உணர்ச்சிகளை கொட்டும்போது கஸ்டமர் கேர் கால் வந்து உங்களை உங்க அப்ரைசலை காலி பண்ணிடும்!

முன்னாடிலாம் சும்மா பாடல் வரி முணுமுணுத்தாலே, ‘யார் பெத்த புள்ளயோ தனியா புலம்பிட்டு இருக்கு’ன்னு சொல்வாங்க. இப்போ எல்லா ஆக்‌ஷனோடும் மைக்கேல் ஜாக்சன் மூன்வாக்லயே போனாலும், ‘புள்ள செல்லுல பேசுது’ன்னு ஃப்ரீயா விட்டுடறாங்க! யார்னே தெரியாத அங்கிளோ ஆன்டியோ பஸ்ல பக்கத்துல உட்கார்ந்து மொக்கைப் போட்டுட்டு வராங்களா? மல்டி லெவல் மார்க்கெட்டிங், கடலை போட ட்ரை பண்ற பையன், இன்னபிற தொல்லைகள் எல்லாவற்றுக்கும் சர்வரோக நிவாரணி மொபைல் ஹெட்போன். பாதிப்பேர் காதுல மாட்டிக்கிறது பாட்டு கேட்கிறதுக்கு இல்ல... இப்படி எஸ்கேப் ஆகிறதுக்குத்தான்!

தெரியாத ஊர்  தெரியாத பாஷை பழகாத மனுஷங்கனு சுத்தி இருக்கும் போது நூறு யானை பலம் தர்றது கைல இருக்கிற செல்போன்தான்! ஊத்துக்கோட்டைல இருந்துக்கிட்டே ‘யு.கேல இருக்கேண்டா மச்சான்’னு அளந்து விட வைக்கிறது செல்போன். மறக்காம ஜிபிஎஸ் ஆஃப் பண்ணிடணும்!

‘ஊருக்கு வந்தா வீட்டுப்பக்கம் வந்துட்டுதான் போகணும்’னு இருந்த விருந்தோம்பலை, பக்கத்து வீட்டுக்காரரே ஆனாலும், ஒரு போன் பண்ணிட்டு தான் காலிங் பெல் அடிக்கணும்னு ஆக்கினதும் செல்போன்தான்! ஆண்பிள்ளைன்னா கார் பொம்மை, பெண்பிள்ளைன்னா பார்பி பொம்மைங்கிறது எல்லாம் செல்போன் வர்றதுக்கு முன்னாடி. இப்ப பாலின பேதமில்லா எல்லா குட்டீஸுக்கும் ப்ளே பார்ட்னர் செல்போன்தான்!

‘அப்பா, அம்மா இன்னிக்கும் உப்புமாதான் செய்யப் போறாங்களாம்... நீ ஆபீஸ்லயே சாப்பிட்டுட்டு வந்துடு’ என  அப்பாவுக்கு மொபைலில் சொல்லி ரகசிய சி.ஐ.டி. ஏஜென்டாக செயல்படுகின்றன சில குட்டிப்பிசாசுகள்! தாலாட்டுப் பாடல்கள் எல்லாம் வழக்கொழிந்து செல்போன் ரிங்டோனிலும் எஃப்.எம். ரேடியோ பாட்டிலுமே தூங்குகின்றன நம் குழந்தைகள்.

எல்லாமே விரல் நுனியில இருக்கிறதால் லவ் மேக்கிங் ப்ரேக்கிங் எல்லாமே ஈசியாதான் இருக்கு! ஓவரா ஏத்தி விட்டு ப்ரொபோஸ் பண்ணவோ, ப்ரேக் அப் பண்ணவோ வைக்கிறதும், நம்ம கைல இருக்கிற மொபைல்ங்கிற வஸ்துதான்! வாரத்துக்கு ஒரு கடுதாசி, எப்போதாவது எஸ்டிடி பூத்தில் இருந்து ஒரு போன், அதுவும் இரவில் - அப்போதுதான் சார்ஜ் கம்மி என்றிருந்த உறவுகளை விரல் நுனியில் சந்திக்க வைத்தது செல்போன். விரல் நுனியில்தானே எல்லா உறவும் என்கிற அலட்சியம். மறுபடி முயற்சிக்கும் போது சப்ஸ்க்ரைபர் நாட் ரீச்சபிள்!

டெக்னாலஜி நம்ம நேரத்தை  மிச்சப்படுத்த வந்ததாம்... ஒவ்வொண்ணு கண்டுபிடிக்கும்போதும் சொல்றாங்க.  அந்த டெக்னாலஜிதான் நம்ம நேரத்தை தின்னுட்டு இருக்கு. அது நிச்சயம்  டெக்னாலஜி தப்பில்லதான். கீப் காம்... ஏன்னா, நமக்கு செல்லுலதான் சனின்னு கொஞ்சம் தெளிஞ்சவங்க புரிஞ்சு இருப்பாங்க!

தாலாட்டுப் பாடல்கள் எல்லாம் வழக்கொழிந்து செல்போன் ரிங்டோனிலும் எஃப்.எம். ரேடியோ பாட்டிலுமே தூங்குகின்றன நம் குழந்தைகள்.

நினைவுகள்... நிஜங்கள்...

* பள்ளியில் ஒவ்வொரு நாளும் மழைப்பொழுதை எதிர்பார்த்த மனது இப்போதைய மழைப்பொழுதுகளில் பள்ளி நினைவுகளை அசை போடுகிறது ஏக்கத்தோடு.

* நினைவு தெரிந்த நாளில் இருந்து உனக்காக பிரார்த்தித்து இருக்கிறேன் நட்டநடு இரவிலும் உன் ஞாபகம் வந்து கண்விழித்துத் தவித்திருக்கிறேன் யார் என்னிடம் பேச வந்தாலும் அவர்கள் உன்னைப் பற்றிதான் பேச வருகிறார்களோ என்று நழுவியிருக்கிறேன் என்னை தவிக்க விட்ட போதெல்லாம் உன்னை சபித்திருக்கிறேன் ஏதோ ஒரு தருணத்தில் பிரிந்து விட்டோம் நாம் இருவரும் இப்போது என் மகள் தவித்துக் கொண்டிருக்கிறாள் உன்னை நினைத்து அவளுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கிறேன் என் தேர்வு முடிவுகளை அசைபோட்டபடி.

* சப்தங்களே பிடிக்காது எனக்கு நான் இருக்கும்போது வீட்டில் மிக்ஸி இரையக்கூடாது டி.வியில் ஷகீரா அலறக்கூடாது லொடலொட ஃபேன் சத்தம் கூடாது பாலிதீன் கவர் ஓசை கூட கூடாது ஆனாலும், ரசிக்கச் செய்கிறது எதிர் வீட்டுக் குழந்தையின் அழுகை ஆலாபனை.

* மனக்குளத்தில் போகிற போக்கில் எறிந்து விட்டுப் போகிறார்கள் சிறுக்கூழாங்கல்லை நீந்திக் கிடக்கின்ற நோக்கமில்லா எண்ண மீன்களை கலைத்துவிட்டு சிறிதும் பெரிதுமான வளையங்களாக எண்ண அலைகள் வியாபிக்கின்றன மனம் எங்கும்...