நேசிப்பேன் போரிடுவேன் வெறுக்கமாட்டேன்



100 பொருட்கள் வாயிலாக பெண்கள் வரலாறு

பொருள் 10: என் அதிகாரம்


துருக்கியில் உள்ள அனடோலியா என்னும் இடத்தில் அமைந்திருக்கிறது சாடாலுயிக் (Catal Huyuk) என்னும் நகரம். கி.மு. 7000 முதல் 5650 வரை இந்தப் பகுதியில் கிட்டத்தட்ட 5000 பேர் கொண்ட ஒரு மக்கள் குழு செழிப்பாக வாழ்ந்து வந்தது. விவசாயம், விலங்கு வளர்ப்பு, கம்பளி ஆடை உற்பத்தி ஆகியவற்றில் அவர்கள் ஈடுபட்டு வந்தார்கள். நீண்ட பல பயணங்களை மேற்கொண்டு தங்களுக்குத் தேவைப்படும் பொருட்களைப் பெற்று, தங்களிடமிருந்ததை விற்று பண்டமாற்று முறையில் வணிகத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். அபாரமான கலைத்திறனும் அவர்களிடம் இருந்தது. 



மண் வீடுகளில் மக்கள் குடியிருந்தார்கள். தேன்கூடு போல் ஒற்றை அறைகள் மட்டுமே காணப்பட்டன. ஏணி மீதேறி கூரை வழியாக இறங்கி உள்ளே செல்லவேண்டும். உள்ளே ஓர் அடுப்பு இருக்கும். பக்கத்தில் ஒரு சூளை. சுவற்றின் கிழக்கு பகுதியையொட்டி தரைப்பகுதியில் படுப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள இடத்தில் சிவப்பு நிற வண்ணம் பூசப்பட்டிருக்கிறது. அதற்குக் கீழே பெண்கள் புதைக்கப்பட்டிருக்கிறார்கள்.

சில வீடுகளில் குழந்தை களும் உடன் சேர்த்து புதைக்கப்பட்டிருக்கிறார்கள். பெண்களைப் புதைத்த குடியிருப்புகள் பல வழிபாட்டுக்கான இடங்களாக இருந்தன. அப்படி வழிபாட்டுக்காக உருவாக்கப்பட்ட இடங்களில் தனிக் கவனத்துடனும் கலைத்திறனுடனும் தீட்டப்பட்ட சுவரோவியங்கள் காணப்படுகின்றன. அதேபோல், விலையுயர்ந்த பல பொருட்களையும் இறந்துபோன பெண்களுடன் சேர்த்து வழிபாட்டு இடங்களில் புதைத்திருக்கிறார்கள்.

யார் இந்தப் பெண்கள்? அவர்களுடைய உடல்கள் மட்டும் ஏன் மரியாதையுடன் புதைக்கப்பட்டிக்கின்றன? ஏன் பெண்களின் சமாதிகள் மட்டும் வழிபாட்டு இடங்களாக மாற்றப்பட்டன? ஏன் அவர்களுடைய உடல்களோடு மட்டும் விலை மதிப்புமிக்க பொருள்கள் புதைக்கப்பட்டன? ஒரே வரியில் சொல்வதானால் அப்போதைய துருக்கியில் பெண்களே சமூகத்தில் முதன்மையானவர்களாக இருந்தார்கள். ஆண்கள், பெண்களுக்கு அடுத்த நிலையில் இருந்தனர்.

பிற்காலத்தில் ஹசிலார் என்னும் மற்றொரு துருக்கிய பகுதியில் கண்டெடுக்கப்பட்ட புதைப்பொருட்களும் ஓவியங்களும் சிற்பங்களும் பெண்களுக்கு அப்போதைய சமூகம் கொடுத்திருந்த முக்கியத்துவத்தைத் தெளிவாக உணர்த்து கின்றன. தலைப்பின்னலுடன் கூடிய சிறுமி கள், குழுந்தையுடன் காட்சியளிக்கும் பெண்கள், வயதான பாட்டிகள் என்று ஒரு பெண்ணின் அனைத்துப் பருவங்களும் சிலைகளாக வடிக்கப்பட்டிருக்கின்றன.

செக்கோஸ்லாவாகியா, தெற்கு போலந்து, மேற்கு உக்ரேன் உள்ளிட்ட பழங்கால ஐரோப்பிய நகரங்களில் நடத்தப்பட்ட புதைப்பொருள் ஆய்வுகள் இதே காலகட்டத்தில் இங்கெல்லாம் பெண்கள் செல்வாக்குடன் இருந்ததைச் சுட்டிக்காட்டுகின்றன. இங்கும் பெண்களைப் பிரதானப்படுத்தும் ஓவியங்களும் சிற்பங்களும் காணப்படுகின்றன. இங்கும் பெண்கள் புதைக்கப்பட்ட இடங்கள் சிறப்பான முறையில் அலங்கரிக்கப்பட்டிருந்தன. இங்கும் பெண்கள் வழிபாட்டுக்குரியவர்களே. பெண்களின் தனி ஓவியங்கள், விலங்குகளுடன் காணப்படும் பெண்கள், பாம்பு அல்லது பட்டாம்பூச்சியுடன் காணப்படும் பெண்கள் ஆகிய ஓவியங்கள் இங்கெல்லாம் காணப்படுகின்றன.

பாம்பு, பட்டாம்பூச்சி ஆகியவை மறுபிறப்பின் பிம்பங்களாகப் பார்க்கப்பட்டன. பெண்களையும் அவர்கள் அவ்வாறே கண்டிருக்கிறார்கள். ஒரு புழு எப்படி பட்டாம்பூச்சியாக மாறுகிறதோ அப்படியே பெண்ணும் மதிக்கத்தக்க ஓர் உயிராக வளர்கிறாள். பாம்பு தன் சட்டையை உரிப்பதைப் போல் பெண் தன் வாழ்வைப் புதிதாக கட்டமைத்துக்கொள்கிறாள்.

அப்போதைய சமூகம் இப்படித்தான் கருதியிருக்கவேண்டும் என்கிறார்கள் மேற்படி சிற்பங்களையும் ஓவியங்களையும் ஆராய்ந்த ஆய்வாளர்கள். சில பெண்கள் மட்டும் ஏன் வழிபடத்தக்கவர்களாக மாறினார்கள் என்பதற்கு அவர்கள் அளிக்கும் விடை, குறிப்பிட்ட அந்தப் பெண்கள் பூசாரிகளாக இருந்திருக்கவேண்டும் என்பதுதான். சயீர் என்னும் ஆப்பிரிக்கப் பகுதியில் (இன்று காங்கோ) வசித்த புட்டி என்னும் பழங்குடிக் குழுவின் வாழ்வியலை ஆராய்ந்த மானுடவியலாளர்கள் அவர்களிடையே நிலவிய ஒரு விசித்திரமான வழக்கத்தைப் பதிவு செய்திருக்கிறார்கள். 

ஒரு குழந்தை பிறந்து இரண்டு ஆண்டுகள் கழிந்த பிறகு, தாய் தனது குழந்தையை அதன் தந்தையிடம் ஒப்படைப்பார். தந்தை அந்தக் குழந்தையை வாங்கி மடியில் வைத்துக்கொள்வார். பிறகு தன் மார்போடு சேர்த்து அந்தக் குழந்தையை அணைத்துக்கொள்வார். பசியில் வாடும் குழந்தை பால் தேடி தந்தையின் மார்பை ஆராயத் தொடங்கும். அங்கு பால் கிடைக்காது என்பது தெரிந்ததும் ‘எமா’ என்று பெருங்குரல் எடுத்து அழ ஆரம்பிக்கும். எமா என்றால் அம்மா.  உடனே தந்தை தன்னுடன் வைத்திருக்கும் வேறு உணவை எடுத்து குழந்தைக்குப் புகட்ட ஆரம்பிப்பார். அப்படிச் செய்யும் ஒவ்வொருமுறையும் ‘எபா’ ‘எபா’ என்று அவர் சொல்வார்.

தாய் மட்டுமல்ல, தந்தையும் முக்கியம் என்பதை ஒரு குழந்தைக்கு உணர்த்துவதற்காகவே இந்த ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டிருக்கவேண்டும். பசி என்றால் தாய் மட்டுமல்ல, தந்தையும் கவனித்துக்கொள்வார்; ஒரு தாயால் மட்டுமல்ல, ஒரு தந்தையாலும்கூட அன்பாக இருக்கமுடியும் என்பதை அந்தக் குழந்தை உணரவேண்டும் என்று புட்டிசமூகம் விரும்பியிருக்கிறது. குழந்தை மட்டுமல்ல, தந்தைக்கும்கூட இந்தப் புரிதல் அவசியம் என்று அவர்கள் நினைத்திருக்கவேண்டும்.

இன்னொன்றையும் கவனிக்கலாம். ஆண்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படவேண்டும் என்று ஆண்களோடு சேர்த்து பெண்களும் அப்போது நினைத்திருக்கிறார்கள். அதனால்தான் இந்த ஏற்பாடு சாத்தியமாகியிருக்கிறது. ஆப்பிரிக்காவாக இருந்தாலும் சரி, ஐரோப்பாவாக இருந்தாலும் சரி. வரலாற்றுக்கு முந்தைய தொன்மையான சமூகங்களில் பெண்களுக்கு சிறப்பான இடம் அளிக்கப்பட்டிருந்தாலும் அவர்கள் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆண்கள் மீது ஆதிக்கம் செலுத்தியதில்லை. ஆண்களை இரண்டாவது பாலினமாகக் கருதி ஒதுக்கியதில்லை.

ஆண்களை ஒடுக்குவதற்கான தத்துவ, அரசியல், சமூகக் கோட்பாடுகள் எதையும் பெண்கள் உருவாக்கவும் இல்லை. அது அவர்களுடைய நோக்கமாக இருந்ததில்லை. தங்களுடைய அதிகாரத்தைக் கொண்டு தங்கள் வாழ்வையும் சுற்றத்தாரின் வாழ்வையும் மேம்படுத்துவதில்தான் அவர்கள் கவனம் செலுத்தினார்கள். பின்னர் அதிகாரத்தைக் கைப்பற்றிய ஆண்களாலும்கூட இதே போல் இருந்திருக்கமுடியும். தங்களுக்குக் கிடைத்த  அதிகாரத்தை ஒடுக்கும் கருவியாக அல்லாமல் ஆக்கப்பூர்வமான கருவியாக அவர்களால் பயன்படுத்தியிருக்கமுடியும். 

அதிகாரத்துடன் திகழ்ந்த பெண்கள் ஆண்களை நடத்தியதைப் போலவே அவர்களும் பெண்களை நடத்தியிருக்கமுடியும். ஆனால், ஏனோ அது சாத்தியப்படவேயில்லை. அதனால் தானோ என்னவோ, ஆதிகால பெண்களின் கரங்களில் குவிந்திருந்த அதிகாரம் இன்றும் கம்பீரமாக பளிச்சிடுகிறது.பொருள் 11: என் உரிமை
 
‘நீ அறிவாளி என்றால் வீட்டில் இரு. மனைவியைக் காதலி. அவளுடன் சண்டையிடாதே, வாதம் புரியாதே. அவளுக்கு உண்ணக் கொடு. அவளை அலங்கரி. உடம்பு பிடித்துவிடு. அவளுடைய அத்தனை விருப்பங்களையும் நிறைவேற்று. அவள் மனத்தில் என்ன இருக்கிறது என்பதில் கவனம் செலுத்து. அவளை உன்னுடனேயே வைத்திருக்கும்படி சமாதானம் செய்ய இது ஒன்றுதான் வழி. ஒருவேளை அவளை நீ எதிர்த்தால், அது உன் அழிவுக்கு இட்டுச்செல்லும்.’

ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்த Maxims of Ptah Hotep என்னும் நூலில் காணப்படும் அறிவுரை இது. தன் மனைவியை ஒரு கணவன் எப்படி நடத்த வேண்டும் (அல்லது நடத்தக் கூடாது) என்பதை இது அறிவுறுத்துகிறது. அப்போதைய எகிப்திய அரசரின் முக்கிய ஆலோசகராகத் திகழ்ந்த ஒருவர் தன் மகனுக்கு எழுதி வைத்த அறிவுரைகள் அடங்கிய குறிப்புகள் இவை. உன் மனைவி உன்னைவிட உயர்ந்த நிலையில் இருக்கிறாள்; அவளுடன் ஒத்துப்போவதைத் தவிர உனக்கு வழியில்லை; அவளின்றி உன் மீட்சி சாத்தியப்படாது என்று தெளிவாக வரையறுக்கிறது இந்நூல்.
  
பண்டைய சமூகங்களில் பெண்கள் வியக்கத்தக்க உரிமைகளைப் பெற்றிருந்ததற்கான விரிவான ஆதாரங்களை வழங்குகிறார் ரோசாலிண்ட் மைல்ஸ். அவற்றுள் சிலவற்றை மட்டும் பார்ப்போம். கிரேக்க நகரமான ஸ்பார்ட்டாவில் மூன்றில் இரண்டு பங்கு நிலம் பெண்களிடம் இருந்தது. அரபுப்  பெண்கள் பறவைகளுக்கு உரிமையாளர்களாக இருந்தனர். அந்தப் பறவைகளுக்கு தானியம் அளிக்கும் பணி அவர்களுடைய கணவர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தன. எகிப்தில் கணவன் தன் மனைவியிடம் பண உதவி கேட்கும் வழக்கம் இருந்தது.

இந்தத் தொகையும்கூட கடனாகவே கொடுக்கப்பட்டது. அவன் அதனைக் கட்டாயம் திருப்பிச் செலுத்தியாகவேண்டும்.  தேவைப்பட்டால் மனைவி தான் அளிக்கும் பணத்துக்கு வட்டியும் வசூலித்துக்கொள்ளமுடியும். பாபிலோனில் கி.மு. 1700  வாக்கில் ஆதிக்கம் செலுத்திய ஹமுராபி சட்டத்தில் உள்ள ஒரு பகுதி இது. ‘ஒரு பெண்ணுக்கான வரதட்சணை தொகை அவளுடைய கணவனிடம் ஒப்படைக்கப்படக்கூடாது.

அவளிடம்தான் ஒப்படைக்கப்பட வேண்டும். திருமணத்துக்கு முன்பு அவள் வைத்திருந்த நிலம், சொத்து அனைத்தும் திருமணத்துக்குப் பிறகு அவளிடமே தங்கியிருக்கும். மரணத்துக்குப் பிறகு அந்தச் சொத்துகள் அவளுடைய குழந்தைகளுக்குப் போய் சேரும்.’ இதே பாபிலோனில் ஓர் ஆண் தன் மனைவியை அவமானப்படுத்தினால், அவள் தன் கணவன்மீது வழக்கு தொடுக்க முடியும்.  தன் கணவனின் எந்தச் செய்கை அல்லது சொல் தன்னை அவமானப்படுத்துகிறது என்பதை பெண்ணே நிர்ணயம் செய்கிறார். இதையே ஒரு வாதமாக வைத்து அவளால் தன் கணவனிடம் இருந்து பிரிந்து செல்லவும் முடியும்.

சட்டப்படி விவாகரத்து பெற்ற பிறகு அந்தப் பெண் தன் குழந்தைகளையும் தன்னுடன் அழைத்துச் செல்ல அனுமதிக்கப்படுவார். கணவன் தன் மனைவிக்கும் குழந்தைகளுக்கும் ஜீவனாம்சம் கொடுத்தாகவேண்டும். கி.மு. 1ம் நூற்றாண்டைச் சேர்ந்த டிடோரஸ் சிகுலஸ் என்னும் கிரேக்க தத்துவஞானி ஒரு எகிப்திய திருமண உறுதிமொழியைப் பதிவு செய்திருக்கிறார். இப்போது படித்தாலும் வியப்பை ஏற்படுத்தும். அந்த உறுதிமொழி கீழ்வருமாறு.  தான் திருமணம் செய்யப்போகும் மணமகளை நோக்கி மணமகள் கூறும் வாசகங்கள் இவை.

‘மனைவி என்பதற்கு உனக்குள்ள உரிமைகள் முன்பாக நான் தலைவணங்குகிறேன். இன்று முதல், உன்னை ஒரு வார்த்தை கூட நான் மறுத்துப் பேச மாட்டேன். அனைவரின் முன்நிலையில் உன்னை என் மனைவியாக அங்கீகரிக்கிறேன். அதே சமயம், நீ என்னுடையவள் மட்டும்தான் என்று சொல்வதற்கான உரிமை எனக்கு இல்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். நான் மட்டும்தான் உன் கணவன் என்றோ இணை என்றோ நான் சொல்லமாட்டேன்.

விலகிச் செல்வதற்கு உனக்கு மட்டுமே உரிமை இருக்கிறது... நீ எங்கே செல்ல விரும்பினாலும், அதை என்னால் தடுக்கமுடியாது.’ இதைச் சொல்லிமுடித்தும் தனக்கு மனைவியாக வருபவருக்கு தான் அளிக்கவிருக்கும் வரதட்ணைப் பொருட்களை அவன் பட்டியலிட வேண்டும். பண்டைய கிரேக்க நாகரிகத்தில் பெண்கள் கட்டுக்கோப்பான உடல் வாகைப் பெறுவதற்காக கடுமையான உடல் பயிற்சிகளை மேற்கொண்டனர். காற்றோட்டமான திறந்தவெளியில் அத்லெடிக், ஜிம்னாஸ்டிக் பயிற்சிகள் அவர்களுக்கு அளிக்கப்பட்டன.

காட்டுப்பன்றிகளை வேட்டையாடும் போட்டிகளில் பெண்கள் உற்சாகமாகக் கலந்துகொண்டனர். ஸ்பார்டாவில் திருமணமாகாத இளம் பெண்கள் அனுபவித்த சுதந்திரமும் பெற்றிருந்த உரிமைகளும் அப்போதே விமர்சனங்களை சந்தித்தன. அவற்றுள் சிலவற்றைப் பார்ப்போம். ‘ஸ்பார்டாவின் இளம்பெண்கள் வீடு தங்குவதேயில்லை. அவர்கள் அணியும் ஆடைகள் குறைவாக உள்ளன. மல்யுத்தப் போட்டிகளில் இளைஞர்களுடன் அவர்களும் கலந்துகொண்டு சண்டையிடுகிறார்கள்.

இவையெல்லாம் அவமானகரமானவை, இல்லையா?’ ஆனால், இதனாலெல்லாம் பெண்கள் பின்வாங்கிவிடவில்லை. மேலதிக உற்சாகத்துடன் தங்கள் உரிமைகளை மேலும் மேலும் நீட்டித்துக்கொண்டார்கள். வீர விளையாட்டுகளோடு திருப்தியடையாத பல பெண்கள் போர்க்களப் பயிற்சிகளையும் எடுத்துக்கொண்டு போர்களில் பங்கேற்கத் தொடங்கினார்கள். பல படைகள் பெண்களை முன் வரிசையில் நிற்க வைத்து போரிட வைத்ததற்கு ஆதாரங்கள் உள்ளன.

செல்டிக் பிரிட்டனில் சாதாரண மகாராணிகளைவிட போரிடத் தெரிந்த மகாராணிகளுக்கு அதிக மரியாதையும் மதிப்பும் வழங்கப்பட்டன. வீரத்துடன் போரிட்டு மடிந்த பெண்கள், எதிரிகளைத் தவிடுபொடியாக்கிய பெண்கள், தன் கணவனைக் (அல்லது மகனை) கொன்ற எதிரிகளைப் பழிவாங்கிய பெண்கள் என்று பல சாகசக் கதைகள் பண்டைய வரலாற்றுப் பக்கங்களில் புதைந்துள்ளன.

ஒரே ஒரு உதாரணம். கால் என்னும் பண்டைய மேற்கு ஐரோப்பாவைச் சேர்ந்த ரோமானிய வரலாற்றாசிரியர் ஒருவரின் குறிப்பு இது. ‘நம் ரோமானிய வீரர்களால் சுலபமாக கால் வீரர்களை வீழ்த்திவிட முடியும். ஆனால், ஒரே ஒரு கால் வீரன் தன் மனைவியையும் உதவிக்கு போர்க்களத்துக்கு அழைத்துவந்துவிட்டால் அவ்வளவுதான். ஒட்டுமொத்த ரோம வீரர்கள் ஒன்றுதிரண்டு போரிட்டாலும் அவனை வீழ்த்தமுடியாது.’

எகிப்திய கடவுளான ஐசிஸ் பூரிப்புடன் முன்வைத்த இந்த முழக்கத்தைப் பாருங்கள். ‘நான் ஐசிஸ்! இந்த உலகில் உள்ள நிலங்கள் அனைத்தையும் ஆள்பவள். இந்த உலகில் உள்ள எல்லா சட்டத்திட்டங்களையும் நானே வகுத்துள்ளேன். பெண்களில் நானே தெய்வீகமானவள். சொர்க்கத்தில் இருந்து பூமியைப் பிரித்து வைத்தவள் நான். சந்திரனின் பாதையையும் நட்சத்திரங்களின் பாதையையும் வகுத்தவள் நான். ஆண்களையும் பெண்களையும் ஒன்றிணைத்தவள் நானே. நான் சட்டமாக வகுத்த எதையும் எந்தவோர் ஆணாலும் மாற்றவோ திருத்தவோ முடியாது.’
  
வரலாறு தொலைத்த எண்ணற்ற செல்வங்களில் ஒன்று, இந்தப் பெருமிதம். பழங்கால ஐரோப்பிய நகரங்களிலும் பெண்கள் வழிபாட்டுக்குஉரியவர்களே. பெண்களின் தனி ஓவியங்கள், விலங்குகளுடன் காணப்படும் பெண்கள், பாம்பு அல்லது பட்டாம்பூச்சியுடன் காணப்படும் பெண்கள் ஆகிய ஓவியங்கள் இங்கெல்லாம் காணப்படுகின்றன. 

பசி என்றால் தாய் மட்டுமல்ல, தந்தையும் கவனித்துக்கொள்வார்... ஒரு தாயால் மட்டுமல்ல, ஒரு தந்தையாலும்கூட அன்பாக இருக்க முடியும் என்பதை அந்தக் குழந்தை உணரவேண்டும் என்று புட்டிசமூகம் விரும்பிஇருக்கிறது.

ஆப்பிரிக்காவாக இருந்தாலும் சரி, ஐரோப்பாவாக இருந்தாலும் சரி... வரலாற்றுக்கு முந்தைய தொன்மையான சமூகங்களில் பெண்களுக்கு சிறப்பான இடம் அளிக்கப்பட்டிருந்தாலும் அவர்கள் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆண்கள் மீது ஆதிக்கம் செலுத்தியதில்லை.

(வரலாறு புதிதாகும்!)