லதா லலிதா லாவண்யா



அமெரிக்காவிலுமா இப்படி?

- ஜென்னி

சேத்துப்பட்டு போட் ஹவுஸுக்கு மூவரும் வந்து சேர்ந்தனர். அரை மணி நேரக் காத்திருப்புக்குப் பிறகு படகில் ஏறினர். ‘‘தண்ணீரில் மிதந்து போறது ரொம்ப ஜாலியா இருக்குல்ல! சின்ன ஏரியில் லைஃப் ஜாக்கெட் எல்லாம் போட்டு, பாதுகாப்பாக அனுப்பறாங்க... வெரி குட்’’ என்று பேச்சை ஆரம்பித்து வைத்தாள் லலிதா.



‘‘24 பார்த்தாச்சா லதா?’’
என்றாள் லாவண்யா. ‘‘பார்த்தேன்... டைம் மிஷின் கான்செப்ட். ஹாலிவுட்டில் எங்கேயோ போயிட்டாங்க... நாம இப்போதான் டைம் மிஷின் கான்செப்ட்டைப் பயன்படுத்த ஆரம்பிச்சிருக்கோம். என்னைப் பெரிசா கான்செப்ட் அட்ராக்ட் பண்ணலை. பட், சூர்யா ஆக்டிங் இன்ட்ரஸ்டிங்... ரொம்ப போர் அடிக்கலை லாவண்யா’’ என்றாள் லதா.

‘‘நான் ஒரு குறும்படம் பார்த்தேன்... சான்ஸே இல்லை... சீரியஸ் விஷயத்தை ரொம்ப பிரமாதமாக, பொட்டில் அறைந்தது போலச் சொல்லிருக்காங்க...’’ என்று சற்று நிறுத்தினாள் லாவண்யா. ‘‘அப்படி என்னடி குறும்படம்?’’ ‘‘How I Raped Your Mother என்பது தான் குறும்படத்தின் தலைப்பு...’’

‘‘இரு... இரு... தலைப்பே பயங்கரமா இருக்கு...’’ ‘‘வெயிட்...  முழுசா கேட்டுட்டு சொல்லுங்கடி. Marital rape பத்தின கான்செப்ட். ரேப் என்றால் பதறும் சமூகம், ‘கணவன் ரேப் செய்தான்’ என்றால் ஜஸ்ட் லைக் தட் ஆக எடுத் துக் கொள்கிறது. இளம்பெண் தன் குடும்பத்தினரிடம் தான் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதாக வருத்தத்துடன் சொல்கிறாள்.

வீட்டில் இருந்த அனைவரும் அதிர்ந்து போய், ‘யாரால்’ என்று கேட்கிறார்கள். அவள் தன் கணவனின் பெயரைச் சொன்னதும் எல்லோருக் கும் நிம்மதியாக இருக்கிறது. ஏதோ பிரமாதமான ஜோக் சொன்னது போல ஒவ்வொருவரும் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள். அவள் மட்டும் சீரியஸாக, ‘ரேப் என்றால் உங்களுக்கு காமெடியாக இருக்கிறதா’ என்று கேட்கிறாள். ‘அப்படின்னா, நான் உன் அம்மாவை ரேப் செய்தேன், மாமா அத்தையை ரேப் செய்தார், பாட்டியைத் தாத்தா ரேப் செய்தார்’ என்று சொல்லி, அனைவரும் சிரிக்கின்றனர். அவளது கணவரும் வந்து தன் மனைவி மீதே புகார் கொடுக்கிறார்.

தான் அவளுக்காக எவ்வளவு செய்கிறேன், தனக்காக அவள் எதையும் செய்யவில்லை என்கிறார்... இறுதியில் தன் மீதுதான் தவறு என்று அந்தப் பெண்ணும் கணவனிடம் மன்னிப்புக் கேட்டு, அவன் விருப்பப்படி நடப்பதாகக் கூறுகிறாள். ஒட்டுமொத்தக் குடும்பமும் நிம்மதியடைகிறது’’ என்று மூச்சு விடாமல் பேசி முடித்தாள் லாவண்யா.

‘‘கணவனாகவே இருந்தாலும், மனைவியின் விருப்பம் இல்லைன்னா அது ரேப்தான் என்பதை ஏற்றுக்கொள்கிற அளவுக்கு நம் சமூகம் இன்னும் முன்னேறலை...  நம்ம வீடுகளில் ஒரு பொண்ணு இப்படிச் சொன்னால், ‘அவளுக்குப் பைத்தியம் பிடிச்சிருச்சு’ன்னுதான் சொல்வாங்க... குட் கான்செப்ட்... ஒரு விவாதத்தை ஆரம்பிச்சு வச்சிருக்கு!’’ என்றாள் லலிதா. ‘‘இதை உருவாக்கியவர்களுக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ் சொல்லணும்! நானும் பார்க்கறேன்’’ என்றாள் லதா. (இக்குறும்படத்தை Youtubeல் Girliyapa’s How I Raped Your Mother என்ற தலைப்பில் காணலாம்.)

‘‘லலிதா... ஒரு ஆர்ட் எக்ஸிபிஷனுக்குப் போனீயே... எப்படி இருந்ததுடி?’’ ‘‘நான் ரொம்ப எதிர்பார்ப்போடு போனேன்... ஆனால், அது அவ்வளவு பிரமாதமா இல்லை...’’ என்றாள் லலிதா. ‘‘டிமிட்ரா மிலனின் ஓவியங்களைப் பார்த்தால் அப்படியே மெய்மறந்து போயிடுவே லலிதா... ஓவியங்களைப் பத்தி சொல்ல வார்த்தைகளே இல்லை! இவ்வளவுக்கும் அந்தப் பொண்ணுக்கு 15 வயசுதான் ஆகுது! எங்கே இருந்துதான் அத்தனை திறமை இருக்கோன்னு தெரியலை! வண்ணங்கள் எல்லாம் டிமிட்ராவின் விரல்களுக்குக் கட்டுப்பட்டு, ஒத்துழைப்புக் கொடுப்பதால்தான் இவ்வளவு பிரமாதமாக வரைய முடியுது!’’

‘‘அட... லதா இப்படிப் பாராட்டி நான் பார்த்ததே இல்லையே! உண்மையிலேயே பெரிய ஆர்டிஸ்ட்தான் போல! எங்கே இருக்காங்க?’’ ‘‘அமெரிக்காவில் வசிக்கிறாங்க. அவங்க குடும்பத்தில் எல்லோருமே ஓவியர்கள்! சின்ன வயதிலேயே டிமிட்ரா ஓவியம் பழக ஆரம்பித்துவிட்டார். அரிசோனாவில் உள்ள மிலன் ஆர்ட் இன்ஸ்டிடியூட்ல படிச்சாங்க. 15 வயதுக்குள் உலகப் புகழ் பெற்றுட்டாங்க! இங்கே பாருங்க அவங்களோட ஓவியங்கள்’’ என்று, மொபைலில் சில படங்களை காட்டினாள் லதா.

‘‘லதா சொன்னதில் கொஞ்சம் கூட மிகை இல்லை... பார்த்துட்டே இருக்கலாம் போல இருக்குப்பா’’ என்றாள் லாவண்யா. லலிதாவும் படங்களைப் பார்த்துக்கொண்டே தலை ஆட்டினாள். (facebook.com/dimitramilanart)


‘‘இங்கே பாத்ரூம் இருக்கான்னு தெரியுமா லாவண்யா?’’ ‘‘இருக்கும்னுதான் நினைக்கிறேன்... அதுக்காகப் பாதியில் எல்லாம் திரும்பிப் போக முடியாதுடி... அடக்கிக்க...’’ ‘‘ஒன் பாத்ரூம், டூ பாத்ரூம் எல்லாம் ரொம்ப நேரம் அடக்கினால் ஹெல்த் பிராப்ளம்ஸ் வரும்’’ என்றாள் லலிதா. ‘‘எனக்கு அர்ஜென்ட் இல்ல... சும்மா ஜெனரல் நாலேட்ஜுக்குத்தான் கேட்டேன்... அமெரிக்காவில் ஒரு கோழிப் பண்ணையில் பெண் தொழிலாளர்கள் அதிகம் வேலை செய்யறாங்க. அவர்களுக்குப் போதுமான டாய்லெட்ஸ் கிடையாது.

பாத்ரூம் வர்றப்ப எல்லாம் போகவும் முடியாது. பிரேக் விடும்போது, நீண்ட வரிசையில் பெண்கள் நிற்பாங்க. அதற்குள் பிரேக் டைம் முடிஞ்சிடும். பெண்கள் ரொம்பவும் அவஸ்தைப்படறாங்க. அடிக்கடி பெண்கள் பாத்ரூம் போனால், வேலை பாதிப்பதாக அந்த நிறுவனம் சொல்கிறது. ஆனால், இது பொறுத்துக் கொள்ளக்கூடிய விஷயமில்லையே... பெண்கள் எதிர்ப்பைக் காட்டியிருக்காங்க... அதனால் குறைவாகச் சாப்பிடவும் குடிக்கவும் சொல்லியிருக்குது நிர்வாகம்.

அதற்கும் எதிர்ப்பு வரவே, பெண்களுக்கு டயாபர் கொடுத்திருக்காங்க... நாள் முழுவதும் டயாபரில் இருப்பதால் பலருக்கும் யூரினரி இன்ஃபெக்‌ஷன் வர ஆரம்பிச்சிருச்சு... இதில் பீரியட்ஸ், பிரெக்னன்சி பெண்களின் நிலைமை ரொம்ப மோசம்...’’ என்றாள் வருத்தத்துடன் லதா.

‘‘என்னடி சொல்ற... அமெரிக்காவிலா இந்த நிலைமை?’’ ‘‘ஆமாம் லாவண்யா. நூறு வருஷங்களுக்கு முன்னால இதுபோல ஆலைகளில் வேலை செய்த பெண்கள்தான் 8 மணி நேரம் வேலை கேட்டுப் போராட்டம் நடத்தினாங்க...  அதைத்தான் நாம் இன்றும் ‘வுமன்ஸ் டே’ ஆகக் கொண்டாடறோம்... இப்போ மறுபடியும் உரிமை கேட்டுப் போராட வேண்டிய நிலை உருவாகி இருக்கு...’’ ‘‘ஆமாம் லதா... போராடிப் பெற்ற ஒவ்வொரு உரிமையும் ஒருகட்டத்தில் நீர்த்துப் போகுது... மறுபடியும் பழைய நிலைக்குப் போயிடுது...’’ என்றாள் லலிதா.

‘‘போராடிப் பெற்ற உரிமைகள் பத்தி இப்ப இருக்கிறவங்க தெரிஞ்சுக்கிட்டு, அதைத் தக்க வச்சிக்கிற முயற்சியும் போராடற குணத்தையும் வளர்த்துக்கிட்டால்தான் எந்த நல்ல விஷயமும் காலத்துக்கும் நிலைக்கும்... இல்லைன்னா இப்படித்தான்...’’ மூவரும் பெருமூச்சு விட்டனர். சற்றுநேரம் அமைதியாக இருந்தனர். துடுப்பு போடுகிறவர் திரும்பிப் பார்த்தார்.

‘‘நம்ம பேசாமல் இருக்கிறது இவருக்கே ஆச்சரியமா இருக்கு போல! லலிதா, நீ பெரியார் திடலில் நடந்த புக் ஃபேருக்குப் போனியே... என்ன புக்ஸ் வாங்கின?’’ என்று மீண்டும் பேச்சை ஆரம்பித்தாள் லதா. ‘‘நான் நிறைய வாங்கினேன். பாதி விலையில் கிடைத்தது... நீங்க ரெண்டு பேரும் மிஸ் பண்ணிட்டீங்க! அதில் அலெக்சாண்ட்ரா கொலோண்டை பத்தி ஒரு புத்தகம் படிச்சேன்... சான்ஸே இல்லைடி... நீங்களும் அவசியம் படிக்கணும்...’’

‘‘ரஷ்யாவில் லெனின் அமைச்சரவையில் இருந்தவங்கதானே?’’ என்று லதா ஆர்வத்துடன் கேட்டாள். ‘‘ஆமாம். லெனின் அமைச்சரவையில் இருந்த ஒரே பெண் அமைச்சர். உலகிலேயே பெரிய குடியரசில் அமைச்சராக இருந்த முதல் பெண்ணும் அலெக்சாண்ட்ராதான்! பிரமாதமான ஆளுமை. ரஷ்யப் புரட்சியில் கலந்துகிட்டாங்க. லெனின் அமைச்சரவையில் சமூக நலத்துறை அமைச்சரானாங்க. அவங்களுக்கு வழிகாட்டியாக யாரும் இல்லை.

அவங்களே அந்தத் துறைக்கு முன்மாதிரியாக ஒவ்வொரு விஷயத்தையும் கொண்டு வந்தாங்க. ஒரே வேலை செய்யும் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரே சம்பளம், பெண்கள் பணிபுரியும் இடங்களில் பாதுகாப்பு, பிரசவத்துக்கு 4 மாத சம்பளத்துடன் கூடிய விடுமுறை, தேவாலயம் தவிர அரசாங்க அலுவலகத்திலும் திருமணத்தைப் பதிவு செய்துகொள்ளலாம்... இதோடு, விவாகரத்தையும் எளிமையாக மாற்றினார். பெண்ணின் விருப்பப்படி அப்பா அல்லது கணவன் பெயரைச் சேர்த்துக்கொள்ளலாம்... இப்படி நிறைய சீர்திருத்தங்களை அப்பவே கொண்டு வந்தாங்க... நடைமுறைப்படுத்தினாங்க அலெக்சாண்ட்ரா!’’

‘‘வாவ்... சூப்பர் வுமன்! ஆனா, இன்னிக்கும் இந்த உரிமைகள் எல்லாம் எல்லோருக்கும் கிடைச்சிடலை. வேலை செய்யும் இடத்தில் பாத்ரூம் போகக் கூட வழியில்லை...’’ ‘‘அப்புறம் பல்வேறு நாடுகளில் தூதுவராகவும் வேலை செய்தாங்க. இதிலும் இவங்கதான் முதல் பெண் என்ற பெருமையும் பெற்றாங்க...’’

‘‘மீதியை நாங்களே படிச்சுக்கறோம்... அந்தப் புத்தகத்தைக் கொண்டு வந்து கொடு’’ என்ற லாவண்யா வாட்ச் பார்த்தாள். ‘‘ஆ... நேரம் ஆயிருச்சு...’’ ‘‘நீங்க இறங்க வேண்டிய நேரமும் வந்துருச்சு... இதுவரை உங்களை மாதிரி யாரையும் நான் சந்திச்சதில்லை... ரொம்ப வித்தியாசமா பேசறீங்க!’’ என்றார் துடுப்புப் போட்டவர்.

‘‘நீங்க எங்களை எப்படி எடுத்துக்குவீங்களோன்னு நினைச்சேன்.. நல்லவேளை’’ என்று சிரித்தாள் லலிதா. ‘‘அடுத்த தடவை எங்கே மீட் பண்ணலாம் லாவண்யா?’’ ‘‘ஜூன் 1 புக் ஃபேர் ஆரம்பிச்சிடுதுப்பா. இந்தத் தடவை தீவுத்திடலில் நடக்குது. நாம ரெண்டு தடவையாவது அங்கே போகணும். அதனால் அங்கே மீட் பண்ணுவோம்...

நேரமாச்சு... பை’’ என்று கிளம்பினாள் லாவண்யா.லதாவும் லாவண்யாவும் கரும்பு ஜூஸ் குடித்துவிட்டு, கிளம்பினார்கள். ஒரே வேலை செய்யும் ஆணுக்கும்  பெண்ணுக்கும் ஒரே சம்பளம், பெண்கள் பணிபுரியும் இடங்களில் பாதுகாப்பு, பிரசவத்துக்கு 4 மாத சம்பளத்துடன் கூடிய விடுமுறை, பெண்ணின் விருப்பப்படி அப்பா அல்லது  கணவன் பெயரைச் சேர்த்துக் கொள்ளலாம்...

ஓவியங்களைப் பத்தி சொல்ல வார்த்தைகளே  இல்லை! இவ்வளவுக்கும் அந்தப் பொண்ணுக்கு 15 வயசுதான் ஆகுது! எங்கே  இருந்துதான் அத்தனை திறமை இருக்கோன்னு தெரியலை!

(அரட்டை அடிப்போம்!)