மாடுலர் ஹோம்



எது ரைட் சாய்ஸ்?

ஒரு முழுமையான பர்ச்சேஸ் வழிகாட்டி!


சமையல் அறை போலவே எல்லா அறைகளுக்கும் உள் அலங்காரம் தேவை. நாம் பார்த்த மரங்களின் வகைகள் மற்றும் கதவு வகைகள், தரம் போன்றவை அதேதான். சமையல் அறை, வார்ட்ரோப் எனப்படும் அலமாரிகள், பூஜை அறைகள், டி.வி. வைக்கும் அலங்கார அலமாரிகள் மற்றும் கோப்பைகள் வைக்கும் கண்ணாடி அலமாரிகள் எல்லாவற்றுக்குமே பலகை, லேமினேஷன் எல்லாம் ஒன்றுபோலவே தேர்ந்து எடுக்கலாம். இல்லாவிடில் சமையல் அறைக்கு வாட்டர் புரூஃப் அதிகம் உள்ளவையும், மற்ற அறைகளுக்கு வேறு வகைகளும் தேர்ந்து எடுக்கலாம்.



மாடுலர் கிச்சனில் மேலும் ஒரு விஷயம் சொல்ல வேண்டியுள்ளது... அதுதான் ஸ்கர்டிங் எனப்படும் புஷ்ஷை மறைத்து அடிக்கப்படும் பலகைகள். கீழே தரமான புஷ் மிக அவசியம். அதை மறைக்கும் ஸ்கர்டிங் இல்லாவிடில் அமைப்பு பார்க்க அழகாக இருக்காது. அதைத் தவிர அந்த இடங்களில் குப்பை சேரும். புஷ் போடாமல் நேரடியாக வைத்தாலோ, கதவு திறக்கும் போதும், தரை துடைக்கும் போகும் வீணாகும் பிரச்னைகள் வரும். இப்போது பி.வி.சி. தயாரிப்பில் பிளாஸ்டிக் பொருளில் ஸ்கர்ட்டிங் கிடைக்கிறது. அதிகம் துடைக்கும் இடங்களில் மரம் வீணாகப் போகாமல் இருக்க இதைப் போடலாம். படத்தில் உள்ளது பி.வி.சி. ஸ்கர்ட்டிங். நம் பட்ஜெட்டுக்கு தகுந்தவாறு தேர்ந்து எடுக்கலாம்.

படுக்கையறை கதவு திறந்தவுடன் படுக்கை கண்ணில் படாமல் இருப்பது நல்லது. படுக்கையறையில் நன்றாக வெளிச்சம் படும்படி பெரிய ஜன்னல்கள் வைப்பது அழகு தரும். நடுவில் கட்டில் போடும்போது சைடு டேபிள் எனப்படும் இரு சிறு மேஜைகள் இருப்பின், அதற்கு மேலே உள்ள இடத்தை வீணாக்காமல் புத்தகம் வைக்க உபயோகிக்கலாம். பத்துக்கு பத்து அறையாக இருந்தாலும் முக்கியப் பங்கு வகிப்பது படுக்கை. இது பெரிதாகவும் தாராளமாகவும் செய்ய வேண்டியது அவசியம். அதே போல குளிர் கால போர்வைகளை தனியாக வைக்க இடம் முன்பே முடிவு செய்வது உத்தமம்.

இடம் இல்லாவிடில் ஸ்லைடிங் கதவுகள் நல்லது. துணிமணிகள், போர்வைகள் எல்லா முக்கியப் பொருட்களும் படுக்கையறையில் உள்ள அலமாரியில்தான் வைப்போம். எனவே, தாராளமாக வேண்டிய அளவுக்கு அலமாரிகள் வடிவமைப்பது அவசியம். இல்லாவிடில் பொருட்கள் வைக்க இடமில்லாமல் வெளியே வைத்துவிட்டால் வீட்டின் அழகு கெட்டுப்போகும். இப்போது பொதுவாக கான்க்ரீட் பரண் அமைப்பதில்லை. எனவே வார்ட்ரோப் செய்யும் போதே சீலிங் வரை செய்துவிட்டால் சூட்கேஸ்களையும் வேறு பொருட்களையும் மேலே வைக்கலாம். டிராயர்கள் வைப்பது மிக நல்லது.



இடம் குறைவு என்றால் ஸ்லைடிங் கதவு (தள்ளு கதவு) வைக்கலாம். இப்போது  வால்க் இன் க்ளோசட் எனப்படும் அலமாரியை உள்ளே வைத்து ஒற்றைக் கதவுடன் கட்டுவது  அதிகமாகி வருகிறது. செலவும் குறைவாகும். ஒற்றைக் கதவு என்பதால் எளிதாகச் செய்யலாம். அதிக அளவில் பொருட்கள் வைக்க இடம் கிடைக்கும். குளியல் அறை, படுக்கை அறைக்குள் இடைவெளி வைத்து கூட இதை செய்து கொள்ளலாம். பெரிய அறை அளவுக்கே செய்பவர்களும் உண்டு. அவரவர் செலவு விகிதத்தை பொருத்து வடிவமைப்பு செய்யலாம். இதுவும் கட்டும் முன்பே தீர்மானிக்க வேண்டிய விஷயம். இன்டீரியர்தானே என்று அலட்சியம் செய்யாமல் இருப்பது நல்லது.

லேப்டாப் எல்லார் வீட்டிலும் புழங்குவதால், அதை சார்ஜ் செய்ய வேண்டி வரும். அதற்கான இடம் வீட்டில் இருந்து வேலை செய்யும் பலருக்கு தனி அறை வசதி கிடைக்காது. அப்போது படிக்கிற / வேலை செய்கிற இடம் அவசியம். குழந்தைகளும் சத்தமில்லாமல் வீட்டுப்பாடம் செய்ய, வேறு வேலைகள் செய்ய ஒரு மேஜையும் அதற்கான இழுப்பறைகளும் முக்கியம். அவற்றுக்கு முன்பே இடம் வைத்துக் கொள்வது நல்லது. டிரெஸ்ஸிங் டேபிள் வைக்க முடியாத இடங்களில் அலமாரியில் கண்ணாடி பதித்துக்கொள்வது நல்லது.

இடம் மிச்சப்படுத்த படுக்கையறை படம்-2ல் உள்ளது போல உருவாக்கி இருக்கின்றனர். இங்கு MDF, HDF, மேம்பரைன், லேமினேட்டட் போர்டு அல்லது மரம் போன்றவற்றில் தேவைக்கு ஏற்ப வடிவமைக்கலாம். படுக்கை அறைக்குள் வைக்கும் குளியலறை அமைப்பை முன்பே முடிவு செய்வது நல்லது. அதுவும் ஈரப்பகுதி, உலர் பகுதி என்று இரு பகுதிகளாக பிரித்து அமைத்தால் சுத்தம் செய்வது எளிது. குளிக்கும் இடத்தில் தொட்டி அல்லது ஜாக்குசி அல்லது அறை வைத்து கட்டுவது பலர் விருப்பமாக உள்ளது. ஃப்ளஷ் அமைப்பையும் கவனிக்க வேண்டியது அவசியம்.

குளியல் ஈரப்பகுதி அறை தனியாக கிடைக்கிறது. அவற்றை ஷவர் ரூம் என்று பொருத்துகிறார்கள். பல்வேறு அளவுகளில் உண்டு. இப்போது பலவித ஃப்ளஷ்கள் வந்துள்ளது. அவற்றில் ஒன்று நேரடியாக மேல் தொட்டி  நீரை கட்டுப்படுத்தும் வகை. அது சரியாக, தரமானதாக போடாவிடில் நீர் கசிந்து தொட்டி  காலியாகும். இந்தப் படத்தில் உள்ளது தான் மொத்த அமைப்பே. இதில் நீர் நன்றாக இல்லாவிடில் அழுக்கு போய் சேர்ந்து அடைத்துக்கொள்ளும் பிரச்னை வரும். அவ்வப்போது சரி செய்ய வேண்டும். தரமானவை என்றால் நீடித்து உழைக்கும்.



அடுத்து எப்பொழுதும் வைக்கும் ஒரு டப்பா போன்ற அமைப்பு. விலை மிகக்குறைவு. ஆனால், அடிக்கடி பழுது ஏற்படும். நல்ல பிராண்டாக வாங்குவது அவசியம். இங்குதான் இன்னொரு விஷயம் இருக்கிறது. சுவருக்குள் பொருத்தும் ஃப்ளஷ் டாங்குகள் பிரபலமாகி வருகிறது. 9 அங்குல  சுவராக இருந்தால் தொட்டியை அதற்குள் கன்சீல்ட் முறையில் பொருத்தி விடலாம். 6 அல்லது 4 அங்குல சுவர் என்றால் வெளியே ஸ்டாண்ட் வைத்து அதில் தொட்டி வைக்க வேண்டும். இதை குழாய் வேலை  செய்யும்போதே செய்ய வேண்டிய அவசியம் உண்டு.

அபார்ட்மென்ட் என்றால் அவர்களிடமும் சொல்லி அதே போல கட்டி வாங்கிக்கொள்ள வேண்டும். இதில் கேர்பிட் போன்ற நிறுவனங்கள் தரமான கன்சீல்ட் ஃப்ளஷ் டாங்குகள் விற்கின்றன. அவற்றை ஸ்டாண்ட்டோடு பொருத்தும் போது வெளியே கொஞ்சம் மேடை போன்ற அமைப்பு வரும். ஃப்ளஷ் தொட்டி... வெளியே இரு பொத்தான்கள் மட்டுமே. சிறிய பட்டன் குறைந்த அளவு நீரையும், பெரிய பட்டன் கொஞ்சம் அதிக அளவு நீரையும் வெளியேற்றும். இங்கு சுவருக்குள் பதித்த டாய்லெட்டை காணலாம். சுவரில் பதித்து உள்ளதால், கீழே சுத்தம் செய்வது எளிது. இந்த வகையையே இப்போது அதிகம் விரும்புகின்றனர்.

கீழே சுவருக்குள் பொருத்திய தொட்டி யைக் காணலாம். இங்கு டாய்லெட் தரையோடு பதிக்கப்பட்டு இருக்கிறது. குழாய் அமைப்பை சுவரில் கொடுக்க முடியாவிடில், இப்படித்தான் செய்ய வேண்டும். பல மாடல்கள் கிடைக்கின்றன.  வடிவத்துக்கு ஏற்ப விலையும் அதிகம். மேலே... சுவரில் பொருத்தாமல் சுவருக்கு வெளியே கட்டை கட்டி உள்ளனர். வெறும் கிரானைட் போட்டு அவர்களே மூடி கொடுப்பது 75 ஆயிரம் கூட ஆகும். ஸ்டாண்ட் மற்றும் ஃப்ளஷ் டாங் கன்சீல்ட் முறையில் 8 ஆயிரம் வரை ஆகும். வெறும் ஃப்ளஷ் தொட்டிகள் விலை மிகக்குறைவு என்பதும் நமக்குத் தெரியும்.

இவை தவிர  தானியங்கி டாய்லெட் சீட் கவரும் வந்துவிட்டது. அதுவே ஃப்ளஷ் செய்யும். தண்ணீர் பீய்ச்சும். அடுத்து குளியல் தொட்டி அமைப்பு, ஜாக்குசி அமைப்பு எல்லாவற்றையும் வீடு கட்டும் முன் அல்லது அபார்ட்மென்ட் வாங்கியவுடன் உள் அலங்கார விற்பன்னருடன் கலந்து விவாதித்து வரைபடம் தயாரித்துக் கொள்வதும், குழாய் வேலைகளை முன்பே முடித்துக்கொள்வதும் நல்லது. ஜாக்குசி என்பது பல்வேறு குழாய்கள் வைத்து தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் தொட்டி அமைப்பு. நீரால் மசாஜ் செய்வதுபோல அருவி சுகம் கிடைக்கும். விலை ரூபாய் 75 ஆயிரம் முதல் 5 லட்சம் வரை.

சோலார் ஹீட்டர் பொறுத்த முடிவு செய்தால் அதற்கான குழாய் அமைப்பை தீர்மானம் செய்துவிடலாம். முன்பெல்லாம் 50 ரூபாய்க்கு குழாய் வாங்கிய காலம் போய் குறைந்தபட்சமே மூவாயிரம் ஆகிறது. ஜாகுவார், எஸ் எஸ், சிரா என்று பல பிராண்ட்டுகளோடு லோக்கல் நீர் குழாய்களும் கிடைக்கின்றன. மேல் ஷவர், ஹேண்ட் ஷவர் என்று பல வகைகள் உள்ளன. எந்தக் குழாய் தேவையோ அதை குழாய் வேலை செய்யும் முன்பே ஒன்று வாங்கிக்கொடுத்து விடுவது நல்லது. ஏன் என்றால் ஒவ்வொரு நிறுவன குழாய்களும் ஒவ்வொரு அளவில் வருகிறது.  வீடு பூசும் முன்பே இவற்றை வாங்கி வைப்பது நல்லது.



ஷவருடன் கூடிய மிக்சர் குழாய்... இதை வாங்கி அளவு பார்த்து செய்ய வேண்டும். கன்சீல்ட் ஷவர் மற்றும் குழாய். இது மிக்சருடன் இருக்கும். மூன்றிலுமே வெந்நீர், குளிர் நீர் தனித்தனியாகவும் கலந்தும் வரும். மேலே இருப்பது சுவரில் பொருத்திய ஷவர் அமைப்பு. ஷவர் வாங்குவது எப்படி என்று ஒரு பர்ச்சேஸ் தொடர் எழுதுமளவுக்கு அவற்றில் வகைகள் வந்துவிட்டன. ஆனால், ஷவரில் குளிக்க நேரம் இருக்கிறதா? கொடுத்த காசுக்குப் பலன் தருமா என்று யோசித்து வாங்குது நல்லது.

பேனல்களுடன் உள்ள  அமைப்பு... இதில் முழு செட் வந்துவிடும். நேரடியாக இணைத்துக்கொள்ள முடியும். இவற்றை வாங்கிவிட்டே குழாய் வேலை ஆரம்பிக்க வேண்டும். அடுத்து வாஷ்பேசின் வைக்கும் இடத்தில் வெந்நீர், தண்ணீர் குழாய் என்றால் குழாய் வேலையை முன்பே யோசித்து சொல்லிவிடுவது நலம். அங்கும் சூரிய ஒளி வெந்நீர் வசதி வேண்டும் என்றால், அதற்கு ஏற்ற வேலைகள் செய்ய வேண்டும். இதற்கு சென்சார் குழாய் கிடைக்கும்.

காலால் அமுக்கும் குழாய் கூட கிடைக்கிறது. இப்போது டைவர்டர் பொருத்திய கன்சீல்ட் குழாய்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகின்றன. டைவர்டர் அமைப்பு என்றால் மிக தரமானதாக வாங்க வேண்டும். கன்சீல்ட் - அதாவது, உள்ளே இருப்பதால்  பழுது பார்ப்பது கடினம். டைவர்டர் அமைப்பும் குழாயின் கைப்பிடியும் கீழே... மேடை மேல் வைக்கும் பேசின் வகைகள்... டேபிள் டாப் வாஷ் பேசின் கிடைக்கிறது.

அல்லது கிரானைட் மேடை அமைப்பில் வெட்டி அதனுள் பொருத்தும் வாஷ் பேசின் மற்றும் இரண்டு நீண்ட  கம்பிகளில் பொருத்தும் பேசின் என்று வகைகள் பல உண்டு. கீழே அறை செய்ய வேண்டுமா? இல்லை அப்படியே வேண்டுமா? முடிவு செய்துகொண்டால் அதற்கு ஏற்றவாறு குழாய் வேலை செய்து கொள்ளலாம். இவை போல வெந்நீர், தண்ணீர் மிக்சர் குழாய்கள் பல வகைகளில் கிடைக்கின்றன.



(திட்டமிடுவோம்!)

- கிர்த்திகா தரன்