விதைகளில் வித்தியாச நகைகள்



நீங்கதான் முதலாளியம்மா - II

-உஷா


களிமண் நகைகள், நூல் நகைகள், பேப்பர் நகைகள் என நகைகளில் என்னென்னவோ வெரைட்டிகளை பார்த்து விட்டோம். அந்த வரிசையில் லேட்டஸ்ட் விதை நகைகள். விதைகளில் நகைகளா? என விழிகளை விரிக்கிறீர்களா? சென்னை, வேளச்சேரியைச் சேர்ந்த உஷா ரமேஷ் கைவண்ணத்தில் உருவாகிற அவற்றை நேரில் பார்த்தால் உங்கள் வியப்பு இன்னும் கூடும்.



``விதைகள்ல செய்யற நகைகள் நமக்குத்தான் புதுசு. ஆனா, அது ராமாயண காலத்துலயே இருந்திருக்கு. பழங்குடியின மக்களுக்கும் இது மாதிரி காய், பழம், இலை, விதைகள்ல நகைகள் செய்து அணியறது எப்பவோ வழக்கத்துல இருந்திருக்கு. கைவினைக் கலைஞரான எனக்கு எத்தனையோ விதமான நகைகள் செய்யத் தெரியும்.

ஒரு ஸ்டூடன்ட் என்கிட்ட வந்து தான் எங்கேயோ பார்த்த நெல் தோடு மாதிரி பண்ணித் தர முடியுமானு கேட்டாங்க. பண்ணிப் பார்க்கலாமேனு ஆரம்பிச்சேன். ஆனா, அது எதிர்பார்த்த மாதிரி வரலை. நெல் மற்றும் தானியங்களை, விதைகளை பதப்படுத்தற டெக்னிக்குகளை அந்தந்த துறை சார்ந்த நிபுணர்கள்கிட்ட கேட்டுக் கத்துக்கிட்டேன்.

பிறகு முயற்சி பண்ணினதுல நல்லா வந்தது. இன்னிக்கு நெல், கோதுமை, சீத்தாப்பழ விதை, சப்போட்டா விதை, காராமணி, ராஜ்மா, பேரீச்சம் பழ விதை, பூசணி, பரங்கி விதைனு எல்லாத்துலயும் நகைகள் பண்றேன். தோடு, நெக்லஸ், வளையல், நெத்திச்சூட்டினு எல்லாமே பண்ண முடியும்...’’ என்கிற உஷா, வெறும் 200 ரூபாய் மூலதனத்தில் இந்த விதை நகைகளைச் செய்ய அழைக்கிறார்.

கால் கிலோ நெல் அல்லது கோதுமை 25 ரூபாய். அதுல 10 செட் நகைகள் பண்ணலாம். ரெண்டே ரெண்டு ராஜ்மாவை எடுத்து ஒரு செட் தோடு பண்ணிடலாம். கொஞ்சம் கற்பனையும் நிறைய பொறுமையும் இருந்தா இந்த சீட் ஜுவல்லரி பிசினஸ்ல கலக்கலாம்’’ என்பவர், இந்த நகைகளை பெரும்பாலும் அப்படியே அவற்றின் இயல்பான நிறங்களில் விடுவதே அழகு என்றும், உடைக்கு மேட்ச்சாக அணிய விரும்பு வோர் மட்டும் கலர் கொடுத்துக் கொள்ளலாம் என்றும் சொல்கிறார்.

இந்த நகைகள்ல சருமத்துக்கு அலர்ஜி வராது. வெயிட் இருக்காது. விதைகளோட வடிவத்துக்கேத்தபடி வெரைட்டியா எத்தனை டிசைன் வேணாலும் பண்ணலாம். சிம்பிளான நகைதான்... ஆனாலும், போட்டுக்கிட்டா ஆடம்பரமான தோற்றம் தரும்’’ என்பவரிடம் 3 முதல் 5 நாள் பயிற்சியில் இந்த நகைகளைச் செய்யக் கற்றுக் கொள்ளலாம். 8 செட் தோடு, 2 செட் வளையல், 4 செட் நெக்லஸ் மற்றும் ஒரு நெத்திச்சூட்டி செய்யக் கற்றுக் கொள்ளக் கட்டணம் 2,500 ரூபாய்.

- ஆர்.வைதேகி
 படங்கள்: ஆர்.கோபால்