ஒரு தோழி பல முகம்



ஸ்டார் தோழி

ரஞ்சனி நாராயணன்


* நான் ஒரு மனுஷியாக...
நமக்குக் கிடைத்திருக்கும் நல்லவைகளை நினைத்துப் பார்த்து சந்தோஷப்படுவது, அடுத்தவர்களுக்காக இரங்குவது, அவர்களின் நிலைமை தெரிந்து உதவுவது, மற்றவர்களை நம் சொற்களால் துன்பப்படுத்தாமல் இருப்பது, யாருக்கும் உபத்திரவம் இல்லாமல் இருப்பது... இவை ஒரு நல்ல மனுஷியின் அடையாளங்கள். எனக்கும் இவையே அடையாளங்கள்.



* தாயாக... மனைவியாக...
சாதாரண இல்லத்தரசியாக பெங்களூரு வந்த நான், கிடைத்த வேலைவாய்ப்புகளை ஏற்றுக்கொண்டு சிறப்பாகவே செய்தேன். குழந்தைகளுடன் சேர்ந்து கன்னடம் படித்தேன். என் பெண் எஸ்.எஸ்.எல்.சி. படிக்கும்போது, நான் திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. தேர்வு எழுதினேன். கணவர் தொழிற்சாலை ஆரம்பித்த போது அதற்குத் தேவையான பயிற்சிகளை எடுத்து, மற்ற பெண்களுக்கும் சொல்லிக் கொடுத்தேன். இந்த நிகழ்வுகள் எல்லாமே எனது 40 வயதுக்கு மேல் நடந்தவை. என் பெண், என் பிள்ளை இருவருக்குமே நான் ஒரு முன்னுதாரணமாக இருக்கிறேன் என்பதில் எனக்குப் பெருமை அதிகம்.

* பள்ளி...
புரசைவாக்கம் லேடி எம்.சி.டி.முத்தையா செட்டியார் பெண்கள் உயர்நிலைப்பள்ளி... தலைமையாசிரியர்  ஷாந்தா கம்பீரமான தோற்றம் கொண்டவர். எப்போதுமே உடல் ஒரு வண்ணத்திலும் அகலமான பார்டர் வேறு வண்ணத்திலும் இருக்கும் பூக்கள் இல்லாத புடவைகளைத் தான் கட்டுவார். தினமும் அவர் பள்ளிவளாகத்தின் உள்ளே வருவதைப் பார்க்கக் காத்திருப்போம்.

இன்று நான் பேசும் ஆங்கிலத்துக்கு அடிக்கல் நாட்டியவர் அவர்தான். லீலாவதி டீச்சர், சர்மா ஸார், மேரி ஸ்டீபன் டீச்சர் எல்லோருமே என்வாழ்க்கையை நல்வழிப்படுத்தியவர்கள். ஆ... இன்னொரு விஷயம் சொல்ல மறந்துவிட்டேனே! எனக்கு சீனியராக, எங்கள் பள்ளிக்கு அடுத்த கட்டிடத்தில் இருந்த சர். எம்.சி.டி.எம். ஆண்கள் உயர்நிலைப்பள்ளியில் படித்தவர் உலகநாயகன் கமலஹாசன்!

* கற்றதும் பெற்றதும்...
புது ஊர், புது மனிதர்கள், புதிய மொழி. மிக மிக ஆர்வத்துடன் கன்னட மொழி எழுதப் படிக்கக் கற்றுக்கொண்டேன். சில வருடங்கள் கழித்து நாங்கள் தும்கூரில் இருந்தபோது, அங்கு டிவிஎஸ் பள்ளியில் கன்னட ஆசிரியை ஆக பணியாற்ற இது உதவியது. பள்ளிக் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்கும்போது நான் இன்னும் அதிகம் கற்றேன். எனது வாழ்வில் இன்னொரு மைல்கல் என்றால் ஆங்கிலம் சொல்லித்தரும் ஆசிரியை ஆக பணியாற்றியதுதான்.

திருமணம் ஆகி கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் இல்லத்தரசியாக இருந்த நான் ஸ்போக்கன் இங்கிலீஷ் பயிற்சியாளர் ஆக மாறி, ஆயிரக்கணக்கானவர்களுக்கு ஆங்கிலப் பேச்சு திறன் வளர உதவினேன். இன்னும் பலர் என்னை நினைவில் வைத்துக்கொண்டு ஆசிரியர் தினத்தன்று வாழ்த்து சொல்கிறார்கள். 3 நிறுவனங்களில் கார்பரேட் பயிற்சியாளர் ஆகவும் இருந்தேன். ஒரு நிறுவனத்தில் பேச்சு வழக்குக் கன்னடமொழி கற்றுத்தரச் சொன்னார்கள். நிறுவனத்தின் மேலாளர் சொன்னார்... ‘தமிழ் பேசும் ஒருவர் வடமாநிலங்களிலிருந்து வந்திருக்கும் யாதவ், ஜாதவ், த்ரிபாதி, முகர்ஜிகளுக்கு கன்னடம் சொல்லித் தருகிறார். இதுவல்லவோ தேசிய ஒருமைப்பாடு!’ என்று.

* பிடித்த புத்தகங்கள்
கி. ராஜநாராயணன் எழுதிய கோபல்ல கிராமம், கோபல்லபுரத்து மக்கள். தி.ஜானகிராமனின் மோகமுள், அம்மா வந்தாள்.  சாவியின் விசிறி வாழை. ஜெயகாந்தனின் கருணையினால் அல்ல. அலுக்காமல் சலிக்காமல் திரும்பத் திரும்பப் படிப்பது ‘பொன்னியின் செல்வன்’. அம்பை, எஸ்ரா எழுத்துகள் ரொம்பவும் பிடிக்கும். ஆங்கிலப் புத்தகங்களில் ‘தி அல்கெமிஸ்ட்’, ‘டாவின்சி கோட்’. இப்போது படித்துக்கொண்டிருப்பது டாக்டர் பால் கலாநிதி எழுதிய ‘When breathe becomes air’ என்கிற மனதைப் பிழியும் சுயசரிதை. தமிழில்
எஸ்ராவின் ‘எனதருமை டால்ஸ்டாய்’.

* என் குடும்பம்
ஒரு பெண், ஒரு பிள்ளை. இருவருக்கும் திருமணம் ஆகி பேரன்கள் இருக்கிறார்கள். கணவர் டிவிஎஸ் நிறுவனத்தில் மேலாளர் ஆக இருந்து ஓய்வு பெற்றவர்.

* பிறந்த ஊர் / சொந்தங்கள்
பிறந்த ஊர் ஸ்ரீரங்கம் என்பதில் மிகுந்த பெருமிதம் எனக்கு. வளர்ந்தது, படித்தது, திருமணம் எல்லாம் சென்னையில்தான். புகுந்த வீடு திருக்கண்ணபுரம் என்பதிலும் பெருமையே.

* ஓவியம் & பிற கலைகள்
ஒருகாலத்தில் நிறைய ஓவியங்கள் வரைந்திருக்கிறேன். ‘பொன்னியின் செல்வனில் வரும் நந்தினியும் குந்தவையும்தான் என் ஓவியப் பெண்கள். அதுவும் வினுவின் படங்களைப் பார்த்து நிறைய வரைந்திருக்கிறேன். க்ராஸ் ஸ்டிச் போடுவது ரொம்பவும் பிடித்த வேலை. கோலம் போடுவதும் பிடிக்கும். புள்ளிக்கோலங்களை விட எனது கற்பனைக்குத் தோன்றியபடி போடுவது பிடிக்கும். புள்ளிக்கோலங்கள் என்றால் புள்ளிகளுக்குள் அடக்க வேண்டும். கற்பனை என்றால் அப்படியில்லையே!

* சினிமா
திருமணத்திற்கு முன் சினிமா என்றாலே அப்பாவிற்குப் பிடிக்காது. அதுவும் எம்ஜிஆர் சினிமா பார்க்க அனுமதி கிடைக்கவே
கிடைக்காது. திருமணம் ஆனபின் தான் ‘நான் எங்க வீட்டுப்பிள்ளை’ படமே பார்த்தேன்! இப்போதும் அதிகம் பார்ப்பது இல்லை. மலையாளப் படங்கள் பார்ப்பேன். பெங்களூரு வந்தபின் கன்னடப்படங்கள் பார்க்க ஆரம்பித்தேன். சமீபத்தில் இறுதிச்சுற்று, சேதுபதி பார்த்தேன். சேதுபதி அதிகம் பிடித்திருந்தது.

* நான் எழுதியதில் பிடித்தவை
என்னை எழுத்தாளராக அடையாளம் காட்டிய எனது முதல் கதை ‘அத்தையும் ராகி முத்தையும்’, இணையத்தில் நான் எழுதிய முதல் கட்டுரை ‘நானும் என் ஸ்னுஷாவும்’. ‘நான்கு பெண்கள்’ இணையதளத்தில் எழுதிய ‘செல்வகளஞ்சியமே’ குழந்தை வளர்ப்புத் தொடர் நூறு பகுதிகள் எழுதியிருக்கிறேன். அதே தளத்தில் எழுதிய மருத்துவ விழிப்புணர்வுத்தொடர் ‘நோய்நாடி நோய்முதல் நாடி’. இவை இரண்டையும் எழுத நிறைய தேடித் தேடிப் படித்தேன். கடுமையான உழைப்புக்குப் பின் வரும் வெற்றி இனிமைதானே!

* இசை
ஒருகாலத்தில் வீணை, வாய்ப்பாட்டு கற்றுக்கொண்டு ஜூனியர் பரீட்சையும் பாஸ் செய்தேன். இப்போது பாடுவதில்லை. பி.லீலா குரல் மிகவும் பிடிக்கும். பி.சுசீலாவின் ‘மாலைப்பொழுதின் மயக்கத்திலே நான்’, ‘சொன்னது நீதானா?’ முதலிய பாடல்கள் எத்தனை முறை கேட்டாலும் அலுக்காதவை. இந்தத் தலைமுறை பாடகிகளில் சைந்தவியின் குரல் ரொம்பவும் பிடித்திருக்கிறது.

* வாழ்க்கை...
வாழ்க்கை ஒரு ஆசிரியர். தினம் தினம் புதுப்புதுப் பாடங்களைக் கற்றுக் கொடுத்துக்கொண்டே இருக்கிறது.

* எழுத்தும் வாசிப்பும்...
அம்மாவின் கையெழுத்து முத்து முத்தாக இருக்கும். ஒரே சீராக எழுத்துகள். சமமான இடைவெளிகளுடன் கோர்வையான வார்த்தைக் கட்டுகளுடன் அம்மாவின் கடிதங்கள் பொக்கிஷம். என்னுடைய  எழுத்தும் வாசிப்பும் எனக்கு என் அம்மா தந்த சீதனம்!