சன் கிரீம் ஆபத்தானதா?



-ஜெ.சதீஷ்

விளக்கம் தருகிறார் தோல் மருத்துவர் வானதி திருநாவுக்கரசு... இப்போதைய காலகட்டத்தில் சன் கிரீம் பயன்பாடு மக்களிடையே அதிகரித்து உள்ளது. ஆனால் பெரும்பாலானவர்கள் வெயில் காலங்களில் மட்டுமே சன் கிரீம் பயன்படுத்துகிறார்கள். மழைக் காலங்களில் பயன்படுத்துவது இல்லை. சன் கிரீம் என்பது புற ஊதா கதிர் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கக் கூடிய ஒன்று. எனவே இரண்டு கால நிலை மாற்றத்திலும் சன் கிரீமை பயன்படுத்த வேண்டும்.

தோல் பிரச்னைகளை கொடுக்கக்கூடிய தரமில்லாத சன் கிரீம்களை பயன்படுத்த கூடாது. ஒரு சிறந்த சன் கிரீம் என்பது UVA மற்றும் UVB புற ஊதா கதிரின் தாக்குதலில் இருந்து நம் தோலை பாதுகாப்பதாக இருக்க வேண்டும். நாம் பயன்படுத்தும் சன் கிரீமி னால் ஒவ்வாமை ஏற்பட்டால் அதை பயன்படுத்தக்கூடாது. இயற்கையாகவே நம்முடைய  தோலில் எதிர்ப்பு சக்தியை கொடுக்கக்கூடிய லேகரன்ஸ் செல்கள் இருக்கிறது.

வெயிலில் இருந்து வரக் கூடிய புற ஊதா கதிர்கள் அந்த செல்களை குறைத்து விடும். எனவே தரமான சன் கிரீம் பயன்படுத்துவதே சிறந்தது. வெள்ளைக்காரர்கள் சன் கிரீம் பயன்படுத்தாமல் வெயிலில் சுற்றினால் தோல் புற்றுநோய் வரக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. இயற்கையாகவே நம் தோல் கருப்பு நிறம் கொண்டது. கருப்புத் தோல் நமக்கு அதிகமான பாதுகாப்பை தருகிறது.

சன் கிரீம் 2 மில்லி கிராம், சென்டி மீட்டர் ஸ்கொயர் அளவிற்கு தடிமனாக பயன் படுத்த வேண்டும். முகம் மட்டுமல்லாமல் கழுத்து, கை பகுதிகளில் 3 மில்லி கிராம் அளவு பயன்படுத்த வேண்டும். கால் மற்றும் முதுகுப் பகுதிக்கு 6 மில்லி கிராம் பயன்படுத்த வேண்டும். இரண்டு அல்லது 3 மணி நேரத்திற்கு ஒரு முறை சன் கிரீம் பயன்படுத்தலாம். முறையாக பயன் படுத்தாவிட்டால் முகம் கருத்து போகவும் வாய்ப்பு இருக்கிறது.

சன் கிரீமில் ஆர்கானிக் மற்றும் ஆர்கானிக் அல்லாத கிரீம் என இரண்டு வகை உள்ளது. ஆர்கானிக் அல்லாத  சன் கிரீம் என்பது நம் தோலில் சில கெமிக்கல் மாற்றங்களை ஏற்படுத்தி புற ஊதா கதிரிடம் இருந்து பாதுகாக்கும். ஆனால் இதிலிருக்கக்கூடிய கூறுகள் தோலில் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புகள் இருக்கிறது. ஆர்கானிக் சன் கிரீம் எந்த விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாது. முறையாக பயன்படுத்தினால் தோலுக்கு இது முற்றிலும் பாதுகாப்பே.