வக்ரமும் வன்முறையும்



-மகேஸ்வரி

சமீபத்தில் திரையுலகினரை மட்டுமல்லாது அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது நடிகை பாவனாவிற்கு நடந்த பாலியல் தாக்குதல். தகவல் தொழில்நுட்பத் துறை சார்ந்த மென்பொருள் நிறுவனங்களில் இரவுப் பணியில் வேலை செய்யும் பெண்களை, இரவுப் பணி நிமித்தமாக, நிறுவனங்களிலிருந்து வீடு திரும்பும் பெண்களுக்கு பல நேரங்களில் பாதுகாப்பற்ற சூழல் நகர்ப்புறப் பெண்களுக்கு உண்டு. ஆனால் திரைத்துறையைச் சார்ந்து, பல்வேறு மொழிகளில்  நடித்த ஒரு முன்னணி கதாநாயகிக்கு இவ்வாறு நிகழ்ந்திருப்பது திரைத் துறையினரை மட்டுமின்றி அனைத்துத் தரப்பினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

கடந்த 2012ம் ஆண்டு தலைநகர் டெல்லி யில் பிசியோதெரபி மாணவி நிர்பயா ஓடும் பேருந்தில் கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாகி கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். இந்நிகழ்வு இந்தியாவெங்கும் அதிர்வலைகளை உண்டு பண்ணியதுடன், நிர்பயா நிகழ்வுக்குப் பின், சட்டங்கள் கடுமையாக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட நபர்களுக்கும் தண்டனைகளும் வழங்கப்பட்டுவிட்டன.

அதைத் தொடர்ந்து இரவு நேரத்தில் தனியாக பயணிக்கும் பெண்கள் பெறவேண்டிய விழிப்புணர்வு குறித்த குறும்படங்களும் வெளியாகின. அதில் இரவு நேரத்தில் தனியாக செல்லும் பெண்கள், தாங்கள் வைத்திருக்கும் ஸ்மார்ட் போன் அலைபேசியில் பயணம் செய்யும் காரின் பதிவு எண் குறித்த தகவல்களை நெருங்கிய நண்பர் அல்லது உறவினருக்கு தெரியப்படுத்த வேண்டும்.

ஆபத்துக்காலத்திற்கு உதவும் அவசர எண்களை கைவசம் வைத்திருக்க வேண்டும் போன்ற தகவல்களும் விழிப்புணர்வு வாசகங்களும் இடம்பெற்றிருந்தன. 2016ம் ஆண்டு ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் சுற்றுலாவிற்காக இந்தியா வந்தபோது தலைநகர் டெல்லியில் ஓலா கால் டாக்ஸி ஓட்டுநரால் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகி அந்தப் புகாரும் காவல் நிலையத்தில் பதிவாகி டாக்ஸியின் பதிவு எண்ணை வைத்து ஓட்டுநர் பல்ராம் கைது செய்யப்பட்டார்.

கடந்த பிப்ரவரி மாதம் கால் சென்டரில் பணியாற்றிய குர்கானைச் சேர்ந்த இளம்பெண்ணை உபர் கால்டாக்சி டிரைவர் சிவ் குமார் யாதவ் என்பர் பாலியல் பலாத்காரம் செய்ததாக கைது செய்யப்பட்டார். ஓடும் காரில் பலவந்தமாக அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த அவர், வெளியில் சொன்னால் கொன்றுவிடுவதாகவும் மிரட்டியுள்ளார்.

இவர் ஏற்கனவே பாலியல் பலாத்காரம், ஆயுதம் கடத்தல், வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களில் ஈடுபட்டதால், கைதாகி குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டவர் என்ற அதிர்ச்சி தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, சென்னை ஈஞ்சம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பெண் மருத்துவர் இரவு நேரப் பணியை முடித்து விட்டு ஓலா காரை புக் செய்துள்ளார். அந்த காரை வெங்கடேசன் என்பவர் ஓட்டி வந்துள்ளார். பெண் மருத்துவர் பின் இருக்கையில் அமர்ந்திருந்தார்.

கார் சிறிது தூரம் சென்றதும், இரண்டு நபர்கள் காரில் ஏறியுள்ளனர். வெங்கடேசன் அந்தப் பெண்ணிடம் ‘‘இருவரும் எனது நண்பர்கள்தான், பாதி வழியில் இறங்கி விடுவார்கள்” என்று கூறியுள்ளார். பின் இருக்கையில் அமர்ந்த அந்த இருவரும் பெண் மருத்துவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடத் துவங்கியுள்ளனர். உடனே அம்மருத்துவர் சத்தம் போட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து, இவர்களின் காரின் பின்னால் மற்றொரு காரில் வந்த சிலர் ஓலா காரை வழி மறித்து பிடித்தனர். அப்போது காரில் வந்த இரண்டு பேரும் தப்பிச் சென்றுள்ளனர். ஓட்டுநர் வெங்கடேசனை பிடித்த அவர்கள் நீலாங்கரை போலீசில் ஒப்படைத்தனர். இந்த நிகழ்வை தொடர்ந்து கால் டாக்ஸி வாகனங்களிலும் எச்சரிக்கை மணி பொருத்தப்படவேண்டும். ஓட்டுநர்கள் பற்றிய அனைத்து தகவல்களையும் தெரிந்து கொண்ட பிறகே கால் டாக்ஸி நிறுவனங்கள் ஓட்டுநர்களைப் பணியில் அமர்த்த வேண்டும்.

பணியின்போது ஓட்டுநர்கள் அடையாள அட்டையைக் கண்டிப்பாக அணிய வேண்டும். மேலும், அனைத்து வாகனங்களிலும் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்படவேண்டும். ஜிபிஎஸ் கருவிகளை முறையாகப் பராமரிக்க வேண்டும். கால் டாக்ஸி பயணத்தின் போது வழியில் வேறு நபர்களை ஏற்றக்கூடாது போன்ற பல்வேறு உத்தரவுகள் கால் டாக்ஸி உரிமையாளர்களுக்குப் பிறப்பிக்கப்பட்டன.

இருந்தாலும் கால் டாக்ஸியில் பெண்களின் பயணம் உத்தரவாதமில்லாத நிலையே தொடர்கிறது. பாவனா மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகை. தமிழில்  சித்திரம் பேசுதடி, தீபாவளி, அசல் ஆகிய படங்கள் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். கேரளா, அங்கமாலியில் உள்ள அதானி என்ற ஊரில் இருந்து கொச்சிக்கு சென்று கொண்டிருக்கும்போது, அங்கமாலியில் காரை மறித்து ஏறிக்கொண்ட சிலர், அவரிடம் தகாத முறையில் நடந்து கொண்டிருக்கிறார்கள்.

காரில் ஏறிய அவர்கள், கார் ஓட்டுநரை மிரட்டி தொடர்ந்து ஓட்டிச் செல்ல வற்புறுத்தியுள்ளனர். அதானிக்கும் பலரிவட்டம் என்ற ஊருக்கும் சுமார் 25 கிலோ மீட்டர் தூரம். கிட்டத்தட்ட 40-45 நிமிடங்கள் அவர்கள் காரில் இருந்து பாவனாவை துன்புறுத்தி, அவரிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக தெரிகிறது. புகைப்படங்கள் மற்றும் வீடியோவும் எடுத்துள்ளனர்.

வழியில் பலரிவட்டம் என்ற ஊரில் இறங்கி, வேறு வாகனத்தில் தப்பித்துச் சென்றிருக்கிறார்கள். பலரிவட்டத்தில் இருந்து அருகில் உள்ள காக்கிநாட் என்கிற ஊரில் உள்ள இயக்குநர் ஒருவரது வீட்டிற்குச் சென்று நடந்த சம்பவங்களை விளக்கியுள்ளார் பாவனா. அவர் உடனே காவல்துறையை தொடர்பு கொண்டு புகார் அளித்ததன் பேரில், போலீஸார் உடனடியாக விசாரணையில் இறங்கினர். போலீஸார் விசாரணைக்குப் பிறகு அதிர்ச்சிகரமான திருப்பமாக, பாவனாவை ஏற்றிக் கொண்டு வந்த டிரைவரும் சம்பவத்திற்கு உடந்தை என தெரிய வந்துள்ளது.

பாவனா வந்த வாகனம், அவர் கலந்து கொண்ட ஷூட்டிங்கிற்குப் பிறகு, படப்பிடிப்புக்குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட வாகனம். அதானி அருகே டெம்போ டிராவலர் ஒன்றில் வந்தவர்கள், அதிலிருந்து இறங்கி, காரை மறித்து ஏறி இந்தக் குற்றச்செயலில் ஈடுபட்டுள்ளனர். பாவனாவிடம் விசாரித்தபோது சம்பவத்தில் ஈடுபட்டவர்களில் சுனில் என்பவரும் இருந்ததாகக் கூறியுள்ளார்.

சுனில், வழக்கமாக நடிகர், நடிகைகளுக்கு வாகனங்கள் ஏற்பாடு செய்கிற பணியில் இருக்கிறார். பாவனாவின் வாகனத்தை ஓட்டிவந்த டிரைவர் மார்ட்டினையும் சுனில்தான் அனுப்பியுள்ளார். இதன் அடிப்படையில், போலீஸார், கார் டிரைவர் மார்ட்டினின் அழைப்புகளை பரிசோதித்தபோது அவரிடம் இருந்து சுனிலுக்கு அழைப்புகள் சென்றுள்ளதாக தெரிந்தது. கிட்டத்தட்ட 20 அழைப்புகளுக்கு மேல் அவர்கள் இருவருக்கும் இடையில் நிகழ்ந்திருப்பது ஊர்ஜிதமானது.

மார்ட்டின், சுனிலுக்கு சில மெசேஜ்களும் அனுப்பியது தெரியவந்தது. பாவனாவும், வாகனம் ஓட்டும்போது மார்ட்டின் போனில் யாருக்கோ மெசேஜ் அனுப்பியதை கவனித்ததாகக் கூறினார்.  இதன் அடிப்படையில் மார்ட்டினை கைது செய்தனர். இதுகுறித்து போலீஸார் தரப்பில் கூறும்போது, ‘பாவனா பயந்துபோய் விடுவார், இதைப்பற்றிப் பேசமாட்டார். இந்த விஷயத்தை காவல்துறை வரை கொண்டு செல்வார் என்று குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் எதிர்பார்க்கவில்லை’ என்று கூறியுள்ளனர்.

சம்பந்தப்பட்ட சுனில் தலைமறைவாகி உள்ளார். அவரையும் போலீஸார் தேடி வருகின்றனர். பெரும்பாலும் திரைத் துறையில் இயங்கும் பெண்கள், படப்பிடிப்பு தொடர்பான வேலைகளை முடித்து, இரவு நேரங்களிலே பயணம் செய்ய வேண்டிய நிலை இருக்கும். இந்நிலையில் முன்னணி நடிகை பாவனாவிற்கு ஏற்பட்ட இச்சம்பவம் குறித்த பின்னணியும், படப்பிடிப்புக் குழுவினர் ஏற்பாடு செய்யும் வாகனங்கள், அதை இயக்கும் டிரைவர்கள் மீதான நம்பிக்கை குறித்து தென்னிந்திய திரையுலகத்தினர் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களையும் இந்நிகழ்வு பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.  

பாவனாவுக்கு ஏற்பட்ட சம்பவத்திலிருந்து திரையுலகம் வெளிவராத நிலையில், பிரபல நடிகர் சரத்குமாரின் மகளும்,  நடிகையுமான வரலட்சுமி சமீபத்தில் வெளிப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒரு பிரபல தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்புக் குழுவின் தலைவரை சந்தித்துள்ளார் வரலட்சுமி. அந்த சந்திப்பில் வரலட்சுமியிடம் தவறாக நடப்பதற்கு வழிவகுக்கும் வார்த்தைகளை அந்த நபர் பயன்படுத்தியதாக நடிகை வரலட்சுமி குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் இந்த சம்பவம் குறித்து விரிவாக அவருடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது, சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. சினிமாவின் மூலம் திரையில் கவர்ச்சியாக தோன்றி நடிக்கும் நடிகை என்பதற்காக அவருடைய உடல் மீது ஓர் ஆண் எப்படி வேண்டுமானாலும் ஆதிக்கம் செய்யலாம் என நினைப்பது மிக மிக கண்டிக்கத்தக்கது என்றும் மேலும் பெண்களை இவ்வாறு இழிவாக நினைப்பது ஆணாதிக்கத்தின் உச்சம் என்றும் கடுமையாக தன் ட்விட்டர் பக்கத்தில் அவர் சாடியுள்ளார்.

திரைத்துறை மட்டுமின்றி எல்லா இடத்திலுமே பெண்களுக்கு பாலியல் தொல்லை ஏற்படுகிறது. பொதுவாக சமூகத்தில் பெண்களை ஒரு பொருளாக மட்டுமே பார்க்கின்றனர். இந்த எண்ணம் முழுவதுமாக மாற வேண்டும். நமது சமூகத்தில் பெண்களை பாதுகாக்க தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் நடிகை வரலட்சுமி கூறியுள்ளார்.

“பெண்களிடம் ஆண்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை ஒவ்வொரு பெற்றோரும் அவர்களது குழந்தைகளுக்கு வீட்டிலேயே கற்றுக் கொடுக்க வேண்டியது அவசியம் எனவும் கூறியுள்ளார். மேலும் பெண்கள் எப்படி உடை அணிய வேண்டும், பொது இடங்களில் எப்படி பேச வேண்டும், எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று கூறுவதை விட்டுவிட்டு, பெண்கள் குறித்த ஆண்களின் எண்ணங்களும் சிந்தனையும் மாற வேண்டும்” எனவும் மிகவும் காட்டமாக, சாட்டையடி வார்த்தைகளால் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

பெண்கள் மீது அத்துமீறி நடத்தப்படும் இம்மாதிரியான நிகழ்வுகள், பெண்ணை அவள் மனநிலையினை கருத்தில் கொள்வதில்லை. பெண் என்பவள் உடல் என்பதைத் தாண்டி வேறு சிந்தனையில்லாதவர்களின் செயலாகவே இது உள்ளது. இந்தியாவெங்கும் 25,000 பாலியல் வல்லுறவு மற்றும் பாலியல் சீண்டல்கள் குறித்த வழக்குகள் நிலுவையில் உள்ளது. காவல்துறை, நீதிமன்றம் என்று வெளியில் வந்த கணக்கு இது. ஆனால், மான, அவமானங்களுக்கு ஆட்பட்டு வெளியில் சொல்லாமல் மறைத்தவை எவ்வளவோ?