இன்னும் மிச்சமிருக்கும் மனிதம்



-ஸ்ரீதேவிமோகன்

மருத்துவர்கள் கைவிரித்த நிலையில், நாளிதழில் ஒரு பத்திரிகையாளர் எழுதிய செய்தியை அடுத்து, ஐஏஎஸ் அதிகாரி முதல் ஊரின் சாதாரண மனிதர் வரை உதவியதால், கொடிய நோயிலிருந்து மீண்டெழுந்த இளம்பெண்ணின் கதை இது. துன்பம் நேர்கையில் யாழெடுத்து மீட்டும் கரங்கள் போல பலர் ஒன்றிணைந்து மீட்டெடுத்த நிவேதிதாவை தொடர்பு கொண்டபோது நெகிழ்ச்சியோடு தன் கதையை பகிர்ந்துகொண்டார்.

“என் சொந்த ஊர் திருவாரூர் மாவட்டம், தம்பிக்கோட்டை. அம்மா திலகவதி. அப்பா ராஜேந்திரன். கூலித்தொழிலாளி. ஆனாலும் அப்பா கஷ்டப்பட்டு என்னை ஆங்கில மீடியத்தில் படிக்க வைச்சாங்க. எனக்கு இரண்டு தம்பிங்க. பள்ளிப் படிப்பு முடிஞ்சதும் எனக்கு கட் ஆஃப் மார்க் கிடைச்சதால நான் இன்ஜினியரிங் காலேஜில் சேர்ந்தேன். கல்விக்கடன் வாங்கி படிச்சேன். மற்ற செலவுகளை அப்பா பார்த்துக்கிட்டார். நல்லா படிச்சிட்டு இருந்தேன். நல்ல மாணவி என்பதால் பேராசிரியைகளுக்கும் என்னைப் பிடிக்கும்.

பொருளாதார நிலைமை கொஞ்சம் சுமாராக இருந்தாலும் வாழ்க்கை நல்லா போய்க்கிட்டு இருந்தது. ஆனால் 2012ம் ஆண்டு இன்ஜினியரிங் மூன்றாம் ஆண்டு படிக்கும் போது எனக்கு ஒரு சோதனை வந்தது. வயிறு ரொம்ப பிரச்னை பண்ண ஆரம்பிச்சது. அப்பப்ப வலி, இரைச்சல் என கஷ்டப்படுத்தியது. அருகே உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்தோம். அப்ப ஒரு டாக்டர் குடல் பிபி இருக்குன்னு சொல்லி மாத்திரைகள் கொடுத்தார். அது கொஞ்சம் ஓவர் டோஸாகிடுச்சிப் போல. முன்பை விட நிலைமை மோசமாக ஆரம்பித்தது.

அடிக்கடி மெடிக்கல் செக்கப்புக்காக காலேஜுக்கு லீவ் எடுத்தேன். கொஞ்சம் கொஞ்சமாக சாப்பாடு எடுத்துக்கொள்வது குறைந்தது. தஞ்சாவூர், திருவாரூர் என்று பல இடங்களில் வைத்தியம் பார்த்தோம். ஸ்கேன், எக்ஸ்ரே என எல்லா டெஸ்ட்டும் எடுத்தோம். ஒவ்வொருத்தரும் ஒரு பிரச்னையை சொன்னார்கள். யாருமே எனக்கு என்ன பிரச்னைன்னு சரியா சொல்லல. கட்டி இருக்கு, நீர்கட்டி இருக்குன்னு என்னென்னமோ சொன்னாங்க.

யாராலும் சரியா கண்டுபிடிக்க முடியல. அப்புறம் சாப்பிட முடியாமல் போனதோடு எதைச் சாப்பிட்டாலும் வாந்தி எடுக்க ஆரம்பித்தேன். பால் சாப்பிட்டாக் கூட வாந்தி வந்துரும். நடக்க முடியாமல் எப்போதும் படுத்தே கிடந்தேன். நாளுக்கு நாள் நிலைமை மோசமாகியது. மருத்துவமனைக்குக் கூட என்னை யாராவது தூக்கிட்டுத்தான் போகணும். கிட்டதட்ட 50 கிலோ எடை இருந்த நான் 21 கிலோவாக எடை குறைந்தேன்.

பல நேரங்களில் என்னைச் சுற்றி என்ன நடக்கிறது எனத் தெரியாமல் மயக்க நிலையில் கிடப்பேன். என்ன தேதி, என்ன கிழமை என எதுவுமே தெரியாது. அப்பா கடன் வாங்கி மருத்துவச்செலவு பார்த்தார். கடைசியாகப் பார்த்த டாக்டர் இனி தாங்காது, உயிர் பிழைப்பது கஷ்டம்தான் எனச் சொல்லிவிட்டார். எனக்கு என்ன நடந்தது என்றெல்லாம் தெரியாது. நியூஸ் பேப்பரின் உதவியால் இஸ்லாமிய நண்பர்கள் சென்னை செல்வதற்கு ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து தந்தார்கள்.

என்னை சென்னையில் உள்ள அரசுமருத்துவமனைக்கு அழைத்துப் போனார்கள். வண்டியில் ஏற்றியது வரைக்கும்தான் எனக்கு ஞாபகம் இருந்தது. அவ்வப்போது மயக்கத்திலே இருந்தேன். 2013ம் ஆண்டு சென்னை வந்த பிறகு ‘எங்களால் முடிஞ்ச வரைக்கும் முயற்சி பண்றோம். ஆனா உறுதியாக சொல்ல முடியாது’ என்று சொல்லி தான் டாக்டர்கள் சிகிச்சை ஆரம்பித்தார்கள்.

என் உடல் நிலையைத் தேற்ற முதலில் ரத்தம் ஏற்றினார்கள். அதற்குப் பிறகு மருந்துகள் என முதலில் இரண்டு மாதங்கள் என் உடம்பை கொஞ்சம் கொஞ்சமாக தேற்றினார்கள். அதற்குப் பிறகுதான் எனக்கு என்ன பிரச்னை என்று தீவிர பரிசோதனையில் இறங்கினார்கள். இல்லாத நோய்க்கு மருந்துகள் சாப்பிட்டதாலதான் இப்படி ஆயிருச்சி என்று சொன்னார்கள். பிறகு பலவிதமான டெஸ்ட் எடுத்தார்கள். பல மருத்துவர்கள் வந்து பார்த்தார்கள்.

கேன்ஸராக இருக்குமோ என பயாப்ஸி டெஸ்ட் எல்லாம் எடுத்துப் பார்த்தார்கள். ஆனால் அதெல்லாம் இல்லை. அமெரிக்காவுக்கு எல்லாம் ப்ளட் சாம்பிள்ஸ் அனுப்பி டெஸ்ட் செய்தார்கள். முடிவில் மஞ்சள் காமாலையால் கல்லீரலுக்குச் செல்லும் வால்வு பழுதாகி இருந்திருந்ததும், குடல் ஒட்டி இருந்ததும் கண்டறியப்பட்டது. அதனால் உணவு எடுக்க முடியாமல் போய்விட்டது என்று சொன்னார்கள். அதற்குப் பிறகு 9 மாதங்கள் தொடர் சிகிச்சை நடைபெற்றது. ஊசி குத்துனா கூட வலி தெரியாது... அந்த அளவுக்கு இருந்தேன்.

அப்பா என்னுடன் இருந்தார். என்னை கவனித்துக் கொண்டார். ரொம்ப அழுவார். அம்மா தம்பிகளை பார்த்துக்கொண்டு ஊரில் இருந்தார். ஆஸ்பிட்டலில் என்னை வெகு ஜாக்கிரதையாகக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொண்டார்கள். கொஞ்சம் கொஞ்சமாக 6 மாதக் குழந்தைக்குக் கொடுப்பது போல் எளிதாக ஜீரணிக்கும் உணவைப் பார்த்து பார்த்துக் கொடுத்தார்கள்.

ஊர் ஏக்கம் வந்ததால் 9 மாதங்கள் முடிந்த பிறகு தீபாவளிக்கு ஊருக்குப் போய் அம்மாவையும் தம்பிகளையும் பார்க்க வேண்டும் என அடம்பிடித்தேன். என் வற்புறுத்தலுக்குப் பின் அனுப்பி வைத்தார்கள். ஆனால் ஊருக்குப் போய் ஒரு வாரத்திற்குள் மறுபடி அதே மாதிரி ஆக ஆரம்பித்தது. மறுபடி சென்னை வந்து 3 மாதங்கள் தொடர் சிகிச்சை எடுத்தேன்.

நாங்களா அனுப்பினாத்தான் போகணும் என்று சொல்லி என்னை கவனித்துக்கொண்டார்கள். சாவிலிருந்து என்னை மீட்டார்கள். அதன் பிறகு மாத்திரைகள் சாப்பிடச் சொன்னார்கள். 9 மாதங்கள் சாப்பிட்டேன். மறுபடி ஒரு முறை சென்னை சென்று வந்தேன். பிறகு முழுமையாக குணமாகி விட்டதாக தெரிவித்தார்கள். கிட்டதட்ட இரண்டு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் கல்லூரியில் சேர்ந்தேன்.

நல்ல ஸ்டூடன்ட் என்பதால் என்னை மறுபடி சேர்த்துக்கொண்டார்கள். படிப்பை ‘முதல் வகுப்பில்’ முடித்தேன். அங்கேயே கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்வானேன். ஆனால் சென்னைக்கு நான் வந்து தனியாக தங்கி வேலை பார்ப்பதில் அப்பாவுக்கு உடன்பாடில்லை. அதனால் போகவில்லை. என் கனவான ஐஏஎஸ் படிக்க நினைத்தேன். ஆனால் போதிய அளவு வசதி இல்லாததால் என்னால் தொடர முடியவில்லை.

என் கனவுகளை மூட்டைக்கட்டி வைத்துவிட்டு ஊரிலே ஒரு தனியார் நிறுவனத்தில் குறைந்த வருமானத்தில் வேலை செய்கிறேன். பேங்க் எக்ஸாமிற்கு தேர்வு எழுதி இருக்கேன். இன்னும் நிறைய எக்ஸாம் எழுதலாம் என்று பார்த்தாலும் அதற்கும் பணம் கட்ட வேண்டி இருக்கு. சும்மா சும்மா அப்பாவுக்கு செலவு வைக்க மனமில்லாமல் வேலைக்குப் போய்கிட்டு இருக்கேன்.

நான் மீண்டதற்கு பத்திரிகை நண்பர்களும், இஸ்லாமிய நண்பர்களும், ஊர் மக்களும், ஊர் பேர் தெரியாத நிறைய பேரும் உதவினார்கள். அவர்கள் எல்லாருக்கும் என் நன்றி. முகைதீன் சார் இல்லன்னா என் வாழ்க்கை முடிஞ்சிப் போய் இருக்கும். நான் இன்னிக்கு உங்க கூட பேசிட்டு இருந்திருக்க முடியாது” - நெகிழ்ச்சியுடன் பேசுகிறார்.

படங்கள்: மு.முகைதீன் பிச்சை

ராஜேந்திரன், நிவேதிதாவின் தந்தை
 
“நல்லா படிச்சிட்டிருந்த பொண்ணுங்க. வயிற்று வலின்னு சொல்லிட்டே இருந்ததால பல டாக்டர்களை பார்த்தோம். அல்சர் மாதிரியான சாதாரண வயிற்று வலிக்கு குடல்ல பிபி இருக்குன்னு சொல்லி மாத்திரைகள் கொடுத்தார் ஒருத்தர். அந்த மாதிரி தேவையில்லாத மாத்திரைகளை கொடுத்ததால் பல பிரச்னைகளுக்கு ஆளாகி, சுத்து வட்டாரத்துல இருக்கிற டாக்டர்கள் எல்லாரையும் பார்த்தோம். ஆனா நிலைமை மோசமாகி சாகிற நிலைமைக்கு வந்துடுச்சிங்க எம் பொண்ணு.

இனி பிழைக்காதுன்னு டாக்டர்ங்க கைவிரிச்சதுக்கப்புறம் பல உதவிகளை செய்து வரும் ஒரு பத்திரிகையாளரைப் பற்றி ஒரு நண்பர் சொல்லக்கேட்டு அவர் மூலமாகவே பத்திரிகையாளர் முகைதீன் அவர்களை தொடர்பு கொண்டோம். அவர் வந்து பார்த்து விட்டு இது குறித்த செய்தியை தினகரன் திருச்சி எடிசனில் பெரிதாக வெளியிட்டார்.

அதைப் பார்த்துவிட்டு தமிழக சுகாதாரத் துறை இயக்குனராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி ராதாகிருஷ்ணன் சார் தொடர்பு கொண்டு சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு பாப்பாவை கொண்டு வரும் படி சொன்னார். பத்திரிகை மூலமாக பலர் எங்களை தொடர்பு கொண்டனர். பல உதவிகள் செய்தனர். முகைதீன் அவர்களின் மூலமாக த.மு.மு.க இயக்க நண்பர்கள் ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து போக்குவரத்துச் செலவு எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டனர். மேலும் பலரும் பண உதவி செய்தனர்.

சென்னைக்கு வந்துட்டு 15 நாள்ல போயிடுவோம்னுதான் வந்தோம். சென்னைக்கு சென்ற பிறகு நல்ல சிகிச்சை செய்தார்கள். ஆனால் சிகிச்சை மாதக்கணக்கில் தொடர்ந்தது. அப்போது மறுபடி பணம் தீர்ந்து போனதால் முகைதீன் அவர்களை தொடர்பு கொண்டேன். அவர் மூலம் மறுபடி சிலர் தொடர்பு கொண்டு பணம் கொடுத்தார்கள். அது எனக்குப் பேருதவியாக இருந்தது. சென்னையின் மேயராக இருந்த மா.சுப்பிரமணியம் வந்து பார்த்துவிட்டு 10,000 ரூபாய் பண உதவி செய்தார். சைதை துரைசாமி 10,000 ரூபாய் கொடுத்தார்.

வீட்டுச் செலவுக்கு எங்க ஊர் பிரசிடெண்டுக்கு போன் செய்து கேட்டேன். அவரும் ஊர்மக்களும் உதவினார்கள். என் பெண் எப்படி இருக்கிறாள் என தினகரனில் தொடர்ச்சியாக செய்தி வெளியிட்டார்கள். என் மகள் குணமாகும்வரை அவர்கள் செய்தி வெளியிட்டு வந்தார்கள். இன்று என் பெண் நல்லபடியாக இருக்கிறாள். அவளுக்கு சென்னையில் நல்ல வேலை கிடைத்தும் தனியாக அனுப்ப மனமில்லாமல் இங்கேயே நிறுத்திவிட்டேன்.

அவளுக்கு ஐஏஎஸ் படிக்க வேண்டும் என்று ஆசை இருந்தது. என்னிடம் பணமில்லை. ஆஸ்பிட்டலில் இருந்த போது ஒரு வருடம் வேலைக்குப் போகாமல் பாப்பாவை பார்த்துக்கொண்டேன். அதனால் கொஞ்சம் கடன் இருக்கிறது. எனவே ஐஏஎஸ் கனவை விட்டுவிட்டு இங்கேயே வேலைக்குச் செல்கிறாள். அவள் ஐஏஎஸ் ஆகிறாளோ, நல்ல வேலைக்குப் போகிறாளோ இல்லையோ எல்லாரையும் போல கல்யாணம் பண்ணிட்டு சந்தோஷமா இருக்கணும்னு ஒரு சாதாரண தந்தையா நினைக்கிறேன்.

அதுக்கு ஒரு வாழ்க்கை அமைச்சுக்கொடுத்திட்டேன்னா என் கனவு முடிஞ்சிரும். அதுக்குதான் போராடிக்கொண்டிருக்கிறேன். இன்று என் மகள் உயிரோடு எங்கள் முன் நிற்கிறாள் என்றால் மனித உருவில் வந்த தெய்வங்கள்தான் காரணம். தினகரன் பத்திரிகைக்கும், பத்திரிகையாளர் முகைதீன் பிச்சை அவர்களுக்கும்தான் என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்”.

பத்திரிகையாளர் முகைதீன் பிச்சை
 
“டாக்டர்கள் அந்தப் பெண் இன்னும் இரண்டு மூன்று நாள்தான்  உயிரோடு இருப்பாள் எனச் சொல்லி அவர்கள் என்னை தொடர்பு கொள்ளும் போதே இரண்டாவது நாள் ஆகிடுச்சி. போய்ப் பேசினேன். அந்த பொண்ணால எழுந்து உட்காரக் கூட முடியல. ஆனால், ‘நான் நல்லா படிக்கணும். இந்த நாட்டுக்கு எதாவது செய்யணும்’ என்று பேசியதைக் கேட்டு நெகிழ்ந்து போனேன். உடனே எங்கள் எடிட்டர் மற்றும் சீஃப் ரிப்போர்ட்டரிடம் சொல்லி அதனை செய்தியாக்கினேன். எங்கள் எடிட்டர் அந்த ஸ்டோரியை விரிவாக வெளியிட்டார்.

அதைப் பார்த்துவிட்டு பலர் எங்கள் பத்திரிகை மூலம் என்னை தொடர்பு கொண்டார்கள். அப்போதைய தமிழக சுகாதாரத் துறை இயக்குனர் ராதாகிருஷ்ணன் சார் தொடர்பு கொண்டு ‘ராஜிவ் காந்தி மருத்துவமனை டீனிடம் பேசிவிட்டேன். அந்தப் பெண்ணை இங்கு கூட்டி வாருங்கள்’ என்றார். அங்கிருந்த ஜமாத்தின் தலைவர் பாஸ்கர் அலி சாகித் உதவிசெய்ய முன் வந்தார். அவர் மூலம் த.மு.மு.க உதவியோடு சென்னைக்குக் கொண்டு போனோம். ராதாகிருஷ்ணன் சார் சொல்லி வைத்ததால் அங்கே எங்களுக்காகக் காத்திருந்தார்கள்.

சிகிச்சை ஆரம்பித்தது. வெளிநாட்டில் இருந்தெல்லாம் உதவி வந்ததால் நிவேதிதாவின் அப்பாவுக்கு பேங்க் அக்கவுன்ட் தொடங்கிக் கொடுத்தேன். எங்க எடிட்டர் அந்த நியூஸை ஃபாலோ அப் செய்யச்சொன்னதால் தொடர்ந்து செய்தி வெளியிட்டோம். ராதாகிருஷ்ணன் அவர்களையும் பேட்டி எடுத்து வெளியிட்டோம்.

கடைசியாக உடல் தேறி அந்தப் பெண் பிறந்தநாள் கொண்டாடிய செய்தியையும் வெளியிட்டோம். தனியாளா நான் சிறு உதவி செய்திருந்தாலும் இதில் எங்கள் எடிட்டரும், எங்கள் பத்திரிகை நண்பர்கள், இஸ்லாமிய நண்பர்கள் அனைவரும் எனக்கு உதவியாக இருந்தார்கள். அவர்கள் உதவுவதைப் பார்த்துவிட்டு ஊர் மக்களும் உதவி செய்ய ஆரம்பித்தார்கள். அந்தப் பெண் இப்போது எல்லாரையும் போல நார்மலாகி விட்டாள். மகிழ்ச்சியாக இருக்கிறது.