சானியாவுக்கு நோட்டீஸ்



-ஜெ.சதீஷ்

கடந்த சில ஆண்டுகளாகவே பிரபலங்கள் சிலர் மீது வழக்குகள் பாய்ந்துகொண்டிருக்கிறது. அந்த வரிசையில்  இப்போது சேர்ந்திருப்பவர் இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா. பல்வேறு சர்வதேசப் பட்டங்களை வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்தவர் சானியா. இந்த நிலையில் வரி ஏய்ப்பு செய்ததாக சானியா மிர்சாவுக்கு, மத்திய சேவை வரித்துறையின் ஐதராபாத் மண்டல தலைமை கமிஷனர் சம்மன் அனுப்பி இருக்கிறார்.

அதில் “பணம் செலுத்த தவறியது மற்றும் சேவை வரி ஏய்ப்பு செய்த விவகாரம் தொடர்பாக உங்களுக்கு எதிராக விசாரணை நடத்தப்பட வேண்டி இருக்கிறது. எனவே நீங்களோ (சானியா மிர்சா) அல்லது உங்களது அங்கீகாரம் பெற்ற பிரதிநிதியோ  எங்கள் அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்; விசாரணையின் போது தகுந்த ஆவணங்களை கொண்டு வர வேண்டும். ஆஜராக தவறினால் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2014 ம் ஆண்டில் தெலுங்கானா அரசின் தூதராக இருக்க சானியா மிர்சா ரூ.1 கோடி பெற்றார். அதற்கு அவர் 14.5 சதவீதம் சேவை வரி செலுத்த வேண்டும். ஆனால் அவர் அதற்கு சேவை வரி எதுவும் செலுத்தவில்லை. இதனால் உரிய காலத்தில் வரியைக் கட்டாததால் வட்டி மற்றும் அபராதத்துடன் வரித் தொகையை செலுத்த வேண்டும் என்று கூறி அவருக்கு இந்த சம்மன் அனுப்பப்பட்டு இருக்கிறது.

தனக்கு பதிலாக பிரதிநிதி ஒருவர் ஆஜராக அனுமதி அளிக்க வேண்டும் என்றும் சானியா மிர்சா தரப்பில் மத்திய சேவை வரித்துறைக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகியது. இருக்கிற பிரச்சனையில இது வேறா என்று புலம்புகிறாராம் சானியா மிர்சா.