கேள்விக்குறியாகும் குழந்தைகள் பாதுகாப்பு



-ஜெ.சதீஷ்

தமிழகத்தில் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் எதிராக நடைபெறும் கொடுமைகள் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. அரியலூர் நந்தினி, சென்னை ஹாசினியின் துயர சம்பவங்களின் வடு மறைவதற்குள்ளேயே,சென்னை எண்ணூரில் அரங்கேறியிருக்கிறது 3 வயது சிறுமி ரித்திகாவின் கொலை சம்பவம். இச்சம்பவம் தொடர்பாக வழக்குகள் பல போடப்பட்டு, குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டாலும் இம்மாதிரியான கொலை சம்பவம் குறித்து உளவியல் காரணங்களை சொல்கிறார் மனநல மருத்துவர் கவிதா.

‘‘குழந்தைகளுக்கான பிரச்சனை குடும்பத்திலிருந்தே தொடங்கி விடுகிறது. குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு. பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த குழந்தையின் உறவினர் கைது என்று செய்திகளில் பார்க்கிறோம். அடுத்து நம்பிக்கைக்குரியவர் என்று நாம் நினைக்கும் நபர்கள், பக்கத்து வீட்டுக்காரர், பழகிய நண்பர் என யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்.

பகை காரணமாக, பழிவாங்க வேண்டும் என்ற வஞ்சக எண்ணத்தில் திட்டமிட்டு கடத்தி கொலை செய்பவர்கள் ஒரு வகை. பணத்திற்காக குழந்தையை கடத்தி பணம் சம்பாதித்து குறுகிய நாட்களில் பணக்காரர் ஆகி விடலாம் என்று எண்ணுபவர்கள் ஒரு வகையினர். நம்பிக்கைக்குரியவர் என்று விட்டு விடுவதும், வயதானவர், நீண்ட நாட்களாக பழகியவர் என்று குழந்தைகளை அவரிடம் பழக விடுவதும் ஆபத்தான விஷயம்தான்.

குழந்தைகளின் பாதுகாப்பு என்பது முழுக்க முழுக்க பெற்றோர்களிடமே இருக்கிறது. எண்ணூரில் நடந்த சிறுமி ரித்திகாவின் கொலை பணம், நகையை அடைய வேண்டும் என்ற நோக்கத்தோடு நடந்திருக்கிறது. பணம் மட்டுமே குறிக்கோளாக இருந்திருந்தால் நகையை பிடுங்கிக்கொண்டு குழந்தையை ஒன்றும் செய்யாமல் விரட்டி இருக்கலாம். ஆனால் நாளை நம்மை அடையாளம் காட்டி விடும் என்ற எண்ணத்திலே கொலை செய்யத் துணிந்துவிடுகிறார்கள்.

என்னதான் பழகியவராக இருந்தாலும் தனிமை, புது இடம், இவை குழந்தைக்கு பயத்தை ஏற்படுத்தும். குறிப்பிட்ட ஒரு சில மணி நேரத்திற்குப் பிறகு குழந்தை அழத் தொடங்கிவிடும். இதைக் கட்டுப்படுத்த முடியாத கடத்தல்காரர் கொலை செய்யும் அளவிற்கு சென்று விடுகிறார். நல்ல சிந்தனை உடையவர்கள் தங்களது கோபத்தை வெளிப்படையாகக் காட்டி விடுவார்கள். வஞ்சக குணம் படைத்தவர், தவறு செய்து அந்த தவறை மறைப்பதற்கு மற்றொரு தவறை செய்து விடுகிறார்கள்.

தனது நோக்கம் வேறாக இருந்தாலும் தான் செய்கின்ற தவறை மறைத்து விடவே கொலை செய்யும் அளவிற்கு தள்ளப்படுவது ஒரு மன நோய்தான். குழந்தைகளுக்கு 3 வயதிலிருந்தே யாரிடம் இருக்கிறார்கள், அவர்களின் செயல்பாடு குழந்தையிடத்தில் எப்படிஇருக்கிறது என்று கண்காணிப்பது இது போன்ற பிரச்சனைகளில் இருந்து காத்துக்கொள்வதற்கான சிறந்த வழி” என்கிறார் மனநல மருத்துவர் எம்.கவிதா.