கலை இயக்கம்கிறது செட் போடுறது மட்டுமல்ல!



-கி.ச.திலீபன்

கலை இயக்குனர் ஜெயஸ்ரீ

2015ம் ஆண்டு வெளியான மலையாளத் திரைப்படம் ‘சார்லி’. விட்டேத்தியான மனநிலை கொண்ட நில்லாத பயணிதான் சார்லி. அவன் தங்கியிருந்த அறைக்குப் புதிதாக குடிபுகும் நாயகி டெஸ்ஸா அவனை தேடிச்செல்வதற்கான சூழல் வருகிறது. அவளது தேடலில் அவன் குறித்தான கதைகளைக் கேட்ட பின் அவன் மீது காதல் கொள்கிறாள் என்பதுதான் இப்படத்தின் ப்ளாட்.

‘ஜங்க் கார்ட்’ பொருட்களால் நிரம்பியிருக்கும் சார்லியின் அறை, உஸ்மான் இக்கா வீட்டு சுவரோவியம், ஓவியங்களாலேயே அலங்கரிக்கப்பட்டிருக்கும் அவனது ஸ்கூட்டர் மற்றும் வண்ணமயமான புறச்சூழல்கள் என தனது கலை இயக்கத்தின் மூலம் படத்துக்கு வலு சேர்த்தவர் ஜெயஸ்ரீ லஷ்மிநாராயணன். இதற்காக 2015ம் ஆண்டின் சிறந்த கலை இயக்குனருக்கான கேரள மாநில விருதைப் பெற்ற இவரது சொந்த ஊர் சென்னை.

தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் தற்போது தீவிரமாக செயல்பட்டு வரும் இவரை சென்னையில் ஒரு தேநீர் விடுதியில் சந்தித்தேன்... ‘‘எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரியில் பிராட்காஸ்ட் அண்ட் கம்யூனிகேஷன் படிச்சேன். திரைப்படக் கல்லூரியில் படிக்கணும்னு ஆர்வம் இருந்தாலும் வீட்டில் அதை அனுமதிக்காததால அதோட தொடர்புடைய இந்தப் படிப்பைத் தேர்ந்தெடுத்தேன்.

அதில் திரைப்படப்படிப்புகள் ஒரு பாடமா இருந்தது. ஒளிப்பதிவு, இயக்கம், படத்தொகுப்பு, கலை இயக்கம்னு சினிமாவுடைய அடிப்படையை படிக்க முடிஞ்சுது. அப்பதான் ஒளிப்பதிவு மற்றும் கலை இயக்கத்தின் மேல் எனக்கு ஆர்வம் வந்தது. படிப்பு முடிஞ்சதும் கலை இயக்குனர் ராஜீவன் சார்கிட்ட உதவியாளராய் சேர முயற்சி பண்ணேன்.

‘ஏழாம் அறிவு’ படத்தில் உதவி கலை இயக்குனரா ராஜீவன் சார்கிட்ட வேலை செஞ்சேன். பெண்ணாக இருந்ததால் படப்பிடிப்புத் தளத்தில் சில நெருக்கடிகளை சந்திக்க வேண்டியிருந்தது. ராத்திரியும் பகலுமா படப்பிடிப்பு நடக்கும். வெளிப்புறப் படப்பிடிப்பு தளங்கள்ல எல்லா வசதிகளும் இருக்காது. அது போக பெண்ணுக்கான பாதுகாப்புக்காக யோசிக்க வேண்டியதெல்லாம் இருந்தது.

அதையெல்லாம் தாண்டிதான் நான் வேலை செஞ்சேன். இன்னும் நிறைய கத்துக்கணும்னு தோணுச்சு. பாலிவுட் நம்மைக் காட்டிலும் பெரிய இண்டஸ்ட்ரி. பல பத்து கோடிகளை பட்ஜெட்டா போட்டு படம் பண்ற இண்டஸ்ட்ரியில வேலை செய்யணும்னு மும்பை போனேன். கலை இயக்குனர் சாபுசிரில் சார்கிட்ட  ரா 1, தேஸ், அக்னிபத், சன் ஆஃப் சர்தார் ஆகிய படங்கள்ல 2 ஆண்டு காலம் வேலை செஞ்சேன்.

அங்க கத்துக்கிட்டது நிறைய. நாமதான் கலை இயக்குனர்னு சொல்றோம். பாலிவுட், ஹாலிவுட்லயெல்லாம் இதுக்குப் பெயர் ‘ப்ரொடக்‌ஷன் டிசைனர்’. நம்ம மக்கள் ஆர்ட் டைரக்‌ஷன்னா செட்டு போடுற வேலைன்னு நெனைச்சுக்கிட்டிருக்காங்க. வெறும் செட் போடுற வேலை மட்டும் கலை இயக்கம் இல்ல. ஒரு படத்தில் இடம்பெறும் உயிரற்றவைகள் எல்லாத்துக்கும் கலை இயக்குனர்தான் பொறுப்பு.

படத்துடைய ஸ்க்ரிப்டை முழுசா படிச்சு அதுக்குத் தகுந்த மாதிரி படத்துக்கான வண்ணத்தைக் கொடுக்கணும். மணிரத்னம் சார் படங்கள் எல்லாமே விஷுவலா ரொம்ப நல்லாருக்கும். அதுக்குக் காரணம் அந்த சீனுக்கு ஏத்த மூடுக்குத் தகுந்த மாதிரியான நிறங்களைக் கொடுக்கிறதாலதான். உளவியலுக்கும் நிறத்துக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருக்கு.

இயற்கையை குறிக்கனும்னா பச்சை, நீலம். அபாயத்தைக் குறிக்க சிவப்பு. இது மாதிரி ஒவ்வொரு உணர்ச்சிக்கும் தகுந்த நிறங்கள் இருக்கு. அதனாலதான் பழைய படங்கள்ல கோபமாய் இருக்கக் கூடிய வில்லனுடைய முகத்தில் சிவப்பு நிற விளக்கை ஒளிர செஞ்சிருப்பாங்க. ஒரு படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் கதாப்பாத்திரங்களின் உடை, லைட்டிங் எந்த மாதிரியான வண்ணங்களில் பண்ணலாம்னு ஒளிப்பதிவாளர் மற்றும் ஆடை வடிவமைப்பாளருடன் இணைந்து செயல்பட வேண்டும்.

ஒரு திரைப்படத்தின் உருவாக்கத்தில் ஒவ்வொரு ஃப்ரேம்லயும் கலை இயக்குனருடைய பங்கு இருக்கு. செட் போட்டிருக்காங்கன்னே தெரியாம இருக்கிறதுதான் திறமையான கலை இயக்கத்துக்கான வெற்றின்னு சாபு சிரில் சார் சொல்வார். ஒரு அறையை வடிவமைச்சா அது யாருடைய அறை? அவங்களுடைய குணாதிசயம் எப்படிப்பட்டதுங்குறதை அந்த அறையே பார்வையாளருக்கு சொல்றபடியா இருக்கணும்.

ஒளிப்பதிவும், கலை இயக்கமும் ஒரு வண்டியை இழுத்துட்டுப் போற இரண்டு மாடுகள் மாதிரின்னு சொல்லலாம்’’ என்றவர் தனது கலை இயக்குனராக தனது அறிமுகம் குறித்துக் கூறுகிறார். சாபு சிரில் சார்கிட்ட வேலை செஞ்சதுக்குப் பிறகு ஒரு பெண் கலை இயக்குனர்கிட்ட வேலை செய்யலாம்னு ‘ப்ரியா சஹாஸ்’ மேடம்கிட்ட சேர்ந்தேன்.

‘Once upon a time in Mumbai 2’, போலீஸ் கிரி அப்புறம் இன்னும் சில படங்கள்ல அவங்க கூட வேலை செஞ்சேன். ஒளிப்பதிவாளர் வைட் ஏங்கிள் ரவிசங்கர் சார் பரிந்துரையின் பேர்ல ‘பிசாசு’ படத்தின் மூலமா அறிமுகமாகிற வாய்ப்பு கிடைச்சுது. எந்த அறிமுக கலை இயக்குனருக்கும் முதல் படத்துலயே செட் போடுற வாய்ப்பெல்லாம் கிடைக்காது. ஆனா எனக்கு கிடைச்சுது. வீடு, ஐஸ் ஃபேக்டரி எல்லாமே செட் போட்டு பண்ணது நல்ல அனுபவமா இருந்துச்சு.

‘பிசாசு’ பண்ணி முடிச்சதுமே ஒளிப்பதிவாளர் அபிநந்தன் மூலமா மலையாளத்துல ‘டபுள் பேரல்’ படம் பண்ற வாய்ப்பு வந்தது. அடுத்ததா ஒளிப்பதிவாளர் ஜோமோன் டி ஜான் மூலமா இயக்குனர் ‘லால் ஜோஸ்’ இயக்கத்தில் nee-na படத்தில் வாய்ப்பு கிடைச்சுது. அந்தப் படத்தில் வேலை செய்யும்போது ஜோமோனுக்கும் எனக்கும் நல்ல ஒத்திசைவு இருந்தது. அடுத்ததா ஜோமோன் மார்டின் ப்ரக்காட் படத்துக்கு ஒளிப்பதிவு செய்யும்போது எனக்கான வாய்ப்பையும் வாங்கிக் கொடுத்தார்.

அந்தப் படம்தான் சார்லி’’ என்றவர் சார்லி படத்தில் பணியாற்றிய அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். ‘‘கலை இயக்குனருக்கு நல்ல தீனி போடுற மாதிரியான ஸ்க்ரிப்ட் சார்லி. எதுக்குள்ளயும் சுருங்காம பரந்து விரிஞ்ச உலகத்துல பல மனிதர்களைத் தேடி போற கதாப்பாத்திரம். எல்லோரோடவும் நட்பு பாராட்டுற, புதுப்புது அனுபவங்களாலேயே தன்னுடைய வாழ்க்கைய வாழ்றவனுடைய அறைக்கு நாயகி டெஸ்ஸா குடி வர்றா.

அந்த அறையை அவ பார்க்கும்போது இதுக்கு முன்னாடி இங்க குடியிருந்த சார்லி யார்னு தெரிஞ்சிக்கிற ஆவல் வரணும். கொச்சின்ல ஒரு சின்ன ரூமைக் காட்டி இதுல பண்ணலாம்னு இயக்குனர் மார்டின் சொன்னார். ஆனா அவ்ளோ சின்ன ரூம்ல ஷூட் பண்ண நெருக்கடியா இருக்கும்னு நான் சொன்னேன். ஆனா ஜோமோன் அது ஒன்னும் பிரச்னையில்லை பண்ணிக்கலாம்னு அதுக்கு ஒத்துழைச்சார். அந்த அறையில் ஓவியங்களை காட்டாம புதுசா வேற ஏதாவது பண்ணலாம்னு தோணுச்சு.

ஏன்னா ஓவியங்கள் பல படங்கள்ல காட்டப்பட்டிருச்சு. அதனாலதான் சார்லியின் ரூம் முழுவதும் ஜங்க் கார்ட் வெச்சேன். ஜங்க் கார்ட்ங்குறது பயன்படுத்தப்பட்டு எறியப்பட்ட பொருட்களிலிருந்து செய்யுற கலைப்பொருள். சார்லியோட ஸ்கூட்டர்ல அவன் பார்த்த மனிதர்களுடைய ஓவியங்கள் வரையப்பட்டிருக்கும். பிரபல ஓவியர் ‘மரியம் மிரண்டா’தான் அந்த ஓவியங்களுக்கு இன்ஸ்பிரேசன்.

அவர்தான் தன்னுடைய வாழ்க்கையில தான் பார்த்த மனிதர்களையெல்லாம் ஓவியமா வரைஞ்சார். சார்லி ஒரு பயணிங்கிறதால ஹெல்மெட்ல உலக வரைபடம் வரையப்பட்டிருக்கும். இப்படியா ஒவ்வொன்னும் அந்த ஸ்க்ரிப்டுக்கு தகுந்த மாதிரிதான் வடிவமைக்கப்பட்டிருக்கும்’’ என்றவர் தற்போது ஜெயம் ரவி நடிப்பில் விஜய் இயக்கத்தில் ‘வனமகன்’ படத்தில் பணியாற்றி முடித்திருக்கிறார்.

‘‘ஒவ்வொரு கலை இயக்குனரும் படத்துடைய ஸ்க்ரிப்டை முழுமையா படிக்கணும். ப்ரீ ப்ரொடக்‌ஷனில் அந்த ஸ்க்ரிப்டுக்குத் தகுந்த விசயங்களுக்கான ஆராய்ச்சியில் இறங்குறது முக்கியமானது. முதலில் கதை நடக்கிற களம் எது காலம் எதுங்கிறதையெல்லாம் கூர்ந்து அவதானிக்கனும். ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமான கலாச்சாரம், வாழ்க்கை முறை, சடங்குகள் மாறுபட்டிருக்கு.

தமிழ்நாட்டில் உள்ள வீடுகளுக்கும் ஆந்திராவில் உள்ள வீடுகளுக்கும் பல வித்தியாசங்கள் இருக்கு. அதையெல்லாம் நல்லா ஸ்டடி பண்ணணும். கதைக்களத்துல நாம வாழ்ந்துருக்கனும்கிற அவசியம் இல்லை. அதைப்பத்தி தெரிஞ்சுக்க இன்னைக்கு நிறைய வசதிகள் இருக்கு.  கதைக்கேத்தபடியான களம், காலத்துக்கான ஆராய்ச்சிகளை பண்ணணும். அது மாதிரியான உழைப்புதான் நமக்கான அடையாளத்தைக் கொடுக்கும். கலை இயக்குனருக்கு எல்லாத் துறை சார்ந்தும் அடிப்படையான அறிவு அவசியம்’’ என்கிறார் ஜெயஸ்ரீ.