கலைத்துறையில் தொடர்ந்து இயங்கணும்!



-கி.ச.திலீபன்

பூஜா தேவரையா

நாடகத் துறையிலிருந்து திரைத்துறைக்கு கிடைத்திருக்கும் நல்வரவு பூஜா தேவரையா. ‘மயக்கம் என்ன’ படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் அறிமுகமாகி, ‘இறைவி’ படத்தின் மூலம் பரவலான கவனத்துக்கு ஆளாகினார். ‘குற்றமே தண்டனை’யில் தன்னை அழுத்தமாய் நிறுவியவர், தனக்கான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சினிமா, நாடகம் ஆகிய இரண்டு தளங்களிலும் சரி வரப் பயணிக்கும் பூஜாவை நாடக ஒத்திகைக்கு நடுவே சந்தித்தேன்.

உங்களுக்குப் பூர்வீகமே சென்னைதானா?  
என்னோட அப்பா தமிழ்நாடு, அம்மா கர்நாடகா. பெங்களூர்லதான் பிறந்தேன். என்னோட சின்ன வயசுலயே சென்னைக்குக் குடிபெயர்ந்துட்டோம். பிறந்தது பெங்களூரா இருந்தாலும் என் பூர்வீகம் சென்னைனுதான் சொல்வேன். நான் பக்கா சென்னைப் பொண்ணுதான்.

நடிப்புதான் உங்க எதிர்காலம்னு நீங்க உணர்ந்தது எப்போ?
நடிப்பை என்னோட எதிர்காலமா நான் நினைச்சதில்லை. ‘Rowing’ என்கிற துடுப்புப் படகு விளையாட்டில் ஆர்வமா இருந்தேன். அந்த விளையாட்டில் சாதிக்கணும்ங்கிறது தான் என் லட்சியமா இருந்துச்சு. அந்த விளையாட்டு எனக்கு நிறைய கற்றுக் கொடுத்தது. நேரத்தின் மதிப்பையும், குழு பணியினுடைய அவசியத்தையும் அதன் மூலம்தான் கத்துக்க முடிஞ்சுது. என் வாழ்க்கையை ஒரு ஒழுங்கமைப்புக்குள்ள கொண்டு வந்தது அந்த விளையாட்டுதான்.

எதிர்பாராத விதமா விளையாட்டின்போது கால் முட்டியில் அடிபட்டது. அதனால ஓர் ஆண்டு காலம் ஓய்வுல இருக்க வேண்டியதாப்போச்சு. ஆனா என்னால ‘Rowing’ ஐத் தொடர முடியாதுனு மருத்துவர்கள் சொல்லிட்டாங்க. ரொம்பவும் கலங்கித்தான் போனேன். இருந்தாலும் ‘Rowing’ இல்லாம வேற என்ன பண்ண முடியும்னு யோசிச்சப்பதான் நாடகத்துறையை தேர்ந்தெடுத்தேன். சின்ன வயசுல இந்திப் படப் பாடல்களைக் கேட்டு நானும் டான்ஸ் ஆடியிருக்கேன். அப்படியா எல்லோர்க்கும் வர்ற மாதிரியான ஒரு ஆர்வம்தான் எனக்கும் நடிப்பு மேலயும் சினிமா மேலயும் இருந்தது.

நாடகங்களில் நடிக்கலாம்னு முடிவு செஞ்சதும் பகுதி நேரமா பல ஆங்கில நாடகக் குழுக்களின் நாடகங்கள்ல நடிக்க ஆரம்பிச்சேன். வசனமே இல்லாம இசையால் மட்டுமே நிகழ்த்தப்படுவது ‘இசை நாடகம்’ (musical theatre), நடனத்தை அடிப்படையாகக் கொண்டது நடன நாடகம் (dance theatre). இப்படியா நவீன நாடகங்கள்ல பல ஜானர்கள் இருக்கு. ஆரம்பத்துல ‘இசை நாடகம்’ பண்ணினப்போ எனக்கான ஜானர் அது இல்லைனு புரிஞ்சுது.

உடலியல் நாடகம் (physical theatre)தான் எனக்கேற்ற ஜானர். மதிவாணன் ராஜேந்திரன் நடத்தி வந்த  ‘stray factory’ என்கிற குழுவில் இணைஞ்சு தீவிரமா இயங்க ஆரம்பிச்சேன். அக்குழுவுடன் இணைந்து நடிச்ச ‘my name is cinema’ எனக்கு பெரிய கவனம் கொடுத்த நாடகம். சித்ராகதாபூரைச் சேர்ந்த ‘சினிமா’ என்கிற பெண்  சினிமா மேல் வெச்சிருக்கிற தீராக்காதல்தான் அந்த நாடகத்தோட பேஸ்.

அதில் நான் ‘சினிமா’ கதாபாத்திரத்தைப் பண்ணியிருந்தேன். ஆங்கிலம் மட்டுமல்ல பல மொழிகள் கலந்தும் ஒரு நாடகத்தைப் பண்ணுவோம். எந்தெந்த பகுதிகளில் நாடகம் பண்றமோ அந்தப் பகுதியின் மொழியை இணைச்சுக்குவோம்.  ‘டுய்டா’ங்குற தென் கொரிய நாடகக் குழுவில் இணைந்து ஓராண்டு காலம் வேலை செஞ்சேன். தென் கொரியாவில் கலைகள் செழித்திருக்கக் காரணம் அதுக்கு அரசு பெரும் உதவிகரமாக இருக்குங்கிறதுதான்.

கலைகளை வளர்த்தெடுக்க எல்லா விதமான முன்னெடுப்புகளையும் அரசு மேற்கொள்ளணும். ஏன்னா கலைகள்தான் நம்ம சமூகம், கலாசாரம் மற்றும் பண்பாட்டை பிரதிபலிக்கிற கருவி. ‘டுய்டா’வுல இணைஞ்சு பங்காற்றினதுல உடலியல் நாடகத்தில் உடல் அசைவுகள், உடல் மொழி ஆகியவற்றில் என்னை மேம்படுத்திக்க முடிஞ்சுது. உடல் மொழி மற்றும் உடல் அசைவுகள் குறித்த பயிற்சிகளையும் நான் கொடுத்துக்கிட்டிருக்கேன். 

தமிழ்நாட்டில் முழுநேர நாடகக் கலைஞராக பொருளாதார சிக்கல் இல்லாமல் நீடிக்க முடியுமா?
நிச்சயம் பொருளாதார நெருக்கடிகளை சந்திக்க வேண்டி வரும். நாடகத்துறையில் இருக்கிற பலரும் பொருளாதாரத் தேவைக்காக வேற வேலை செஞ்சிக்கிட்டே இயங்குறவங்களாத்தான் இருக்காங்க. வேலை முடிஞ்சதும் மிச்சம் இருக்கிற நேரத்துல நாடக ஒத்திகை, நாடக நிகழ்த்துதல்னு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் இந்தத் துறையை நேசிக்கிறதாலதான் இருக்க முடியுது.  

நாடகத்துறையில் உங்களுக்கான தனித்துவம்னு எதைச் சொல்வீங்க?
உடலியல் நாடகத்தில் நான் ரொம்பவும் ஆக்டிவா இருப்பேன். நான் பேசிக்கலா அத்லெட்ங்கிறதால அதன் மூலம் கிடைச்ச ஃபிட்னெஸ் நாடகத்தில் எனக்கு பெரும் உதவியா இருக்கு. மேடை நாடகங்கள் மட்டுமல்ல வீதி நாடகங்களும் நிறைய பண்ணியிருக்கேன். மலேசியாவில் வீதி நாடகத் திருவிழா ஆண்டுதோறும் நடக்கும். உலக அளவிலான நாடகக் குழுக்கள் பலவும் கலந்துக்கிட்டு வீதியிலேயே நாடகங்களை நடத்துவாங்க.

அதில் நானும் பங்கேற்றிருக்கேன். பாரம்பரியமான பரத நாட்டிய உடையில் சிலம்பாட்டம் ஆடுவேன். பார்க்குறவங்களுக்கு அது வித்தியாசமாகவும் ரசிக்கிற மாதிரியும் இருக்கும். ஒவ்வொரு நாடகத்துலயும் புதுசா எதாவது பண்ணணும்னு யோசிப்பேன். ‘my name is cinema’ நாடகத்தைப் பத்தி இயக்குனர் சொன்னப்ப எனக்கு சிலம்பத்துல ஆர்வம் இருக்கு... என் கதாப்பாத்திரத்துல சிலம்பத்தைக் கொண்டு வரலாம்னு சொன்னேன். இதுக்காகவே பாண்டியன்ங்கிற சிலம்ப மாஸ்டர்கிட்ட சிலம்பம் கத்துக்கிட்டேன். நடிப்பு மேல நாம செலுத்துற அக்கறையும் அதுக்கான உழைப்பும்தான் நமக்கான இடத்தை உருவாக்கும்.

நடிகராக மட்டுமில்லாம நாடகங்களை இயக்கவும் செஞ்சிருக்கீங்களே?
‘Maya from Madhurai’ங்கிற நாடகம்தான் நான் இயக்கிய முதல் நாடகம். மதுரையைச் சேர்ந்த மாயாங்குற ஒரு இளைஞனுடைய பயணம்தான் அந்த நாடகமே. பயண நாடகம்ங்கிறதால பயணம் பண்ற பகுதிகளுடைய மொழிகளும் சேர்ந்து பன்மொழி நாடகமாக இருக்கும். என் நண்பர் நரேன் வைஸ் எழுதிய அந்த நாடகத்தில் மாயா கதாபாத்திரத்தில் ‘வெங்கடேஷ் ஹரிநாதன்’ நடிச்சிருந்தார். கூடிய சீக்கிரமே சென்னையில் அதை நிகழ்த்தப் போறேன். இதை சினிமாவாகப் பண்ணணும்ங்கிற திட்டமும் இருக்கு.

ரசிக மனநிலையை அடிப்படையா வெச்சு எழுதப்பட்ட ‘first day first show’. ‘காக்கா சுட்ட வடை’ ஆகிய நாடகங்களையும் இயக்கியிருக்கேன். ‘காக்கா சுட்ட வடை’ நாடகத்தை குழந்தைகளுக்காக இயக்கினேன். ஆயா வடை சுட்ட கதைக்குள்ள இன்றைய அரசியல், சமூகம் பத்தின உரையாடல்களையும் இணைச்சு பண்ணினேன். அந்த நாடகம் குழந்தைகள் மத்தியில நல்ல வரவேற்பைப் பெற்றது.

திரைத்துறை வாய்ப்பு எப்படி சாத்தியப்பட்டது?
என்னோட ஒரு நாடகத்துக்கு இயக்குனர் செல்வராகவன் மனைவி கீதாஞ்சலி வந்திருந்தாங்க. அவங்கதான் ‘மயக்கம் என்ன’ படத்தில் நடிக்க முடியுமான்னு கேட்டாங்க. எனக்கும் சினிமாவுல நடிக்கிற ஆர்வம் இருந்தது. அதுக்கான சரியான வாய்ப்புக்காக காத்துக்கிட்டிருந்த நேரம்தான் கீதாஞ்சலி என்னை அணுகினாங்க. அப்படி வந்ததுதான் ‘மயக்கம் என்ன’ பட வாய்ப்பு.

நடிச்சது சின்ன கதாபாத்திரமா இருந்தாலும் அதுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் இருந்தது. அதைப் பார்த்துட்டு சில வாய்ப்புகள் வந்தது. அப்ப நான் M.O.P வைஷ்ணவ் கல்லூரியில் விஸ்காம் படிச்சிக்கிட்டிருந்தேன். அதனால் அந்த வாய்ப்புகளை ஏத்துக்கல. என்னோட ஒரு நாடகத்துக்கு இயக்குனர் மணிகண்டனும், நடிகர் விதார்த்தும் வந்திருந்தாங்க. அப்பக் கிடைச்ச அறிமுகத்தின் மூலமாதான் ‘குற்றமே தண்டனை’ பட வாய்ப்பு கிடைச்சுது. அந்தப் படம் பண்ணி முடிச்சதுமே ‘இறைவி’ பட வாய்ப்பு வந்தது.  இதெல்லாம் வேகவேகமா நடந்துச்சு.

அடுத்து என்ன படம் பண்ணிக்கிட்டிருக்கீங்க?
நான் பண்ணதுல ‘ஆந்திரா மெஸ்’, ‘வல்லவனுக்கு வல்லவன்’ ஆகிய படங்கள் வெளியாகப் போகுது. இப்போதைக்கு சுதந்திரப் படங்கள் சிலதுல நடிச்சிக்கிட்டிருக்கேன். எல்லா வாய்ப்புகளையும் நான் ஏத்துக்கிறதில்லை. எனக்கு எது ஒத்து வருமோ அதை மட்டுமே பண்றேன்.

நீங்க ஒரு ஓவியரும் கூட... ஓவிய ஆர்வத்துக்கான பின்னணி என்ன?
காலில் அடிபட்டு ஓய்வெடுத்துக்கிட்டிருந்த நாட்கள்லதான் ஓவியம் கத்துக்கிட்டேன். ஓவியமும் ஒரு கலைதானே? நான் ஒரு ஓவியம் வரைஞ்சுக்கிட்டிருந்தப்பதான் ‘இறைவி’ பட வாய்ப்புக்கான அழைப்பு வந்தது. கதையைக் கேட்டு நடிக்க ஒத்துக்கிட்டதும் அந்த ஓவியத்தை ‘இறைவி’ படத்தின் கதையை கருவா வெச்சு வரைந்தேன். ‘இறைவி’ படத்தில் சிலைகள் விற்பனை செய்யுற கூடத்தில் என்னோட ஓவியங்கள் மாட்டப்பட்டிருக்கும். படத்துல அது ரொம்பப் பெரிய அளவுக்கு ரிஜிஸ்டர் ஆகியிருக்காது.

எதிர்கால வேலை திட்டங்கள் பற்றி...
தொடர்ந்து கலைத்துறையில் இயங்கிக்கிட்டிருக்கணும். சினிமா, நாடகம், ஓவியம்னு நான் பிரிச்சுப் பார்க்குறதே இல்லை. சினிமா வேற மீடியம், நாடகம் வேற மீடியம். இந்த இரண்டிலயும் அந்தந்த மீடியத்துக்கு ஏத்தபடியாக நடிக்க வேண்டியிருக்கு. நாடகத்தை விடவும் சினிமாவுக்கு நான் புதுசு. இன்னும் சினிமாவுல நிறைய பண்ண வேண்டியிருக்கு. பண்ணுவேன்.

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்