ரக்பி விளையாடு பாப்பா



-ஜெ.சதீஷ்

துரைப்பாக்கம் அரசுப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் மக்கள் திரளாக நின்று ஆர்ப்பரித்துக்கொண்டிருந்தார்கள். என்னவாக இருக்கும் என்று எண்ணி மைதானத்தில் சுற்றியிருந்த கூட்டத்தினுள் நுழைந்து பார்த்தேன். அங்கு மாணவ, மாணவிகள் தர்பூசணி வடிவத்தில் பந்தொன்றை கையில் எடுத்துக்கொண்டு ஓடிக்கொண்டிருந்தார்கள்.

அந்தப் பந்தை உற்று பார்த்தபோது, திரைப்படங்களில் இந்தப் பந்தை வைத்து விளையாடுவது போன்ற காட்சிகளை பார்த்த ஞாபகம். விளையாட்டு முடிந்தவுடன் இவ்விளையாட்டின் பயிற்சியாளரான அருள் வெங்கடேசனை சந்தித்து விசாரித்தபோது பல சுவாரஸ்யமான தகவல்களை சொன்னார்.

‘‘இந்த விளையாட்டின் பெயர் ரக்பி. கால்பந்து விளையாட்டில் இருந்து உருவானது. இங்கிலாந்து நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட மேலை நாட்டு விளையாட்டான ரக்பி, இந்தியாவை தவிர மற்ற நாடுகளில் வெகு விமர்சையாக விளையாடப்படுகிறது. இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் இவ்விளையாட்டு பற்றிய போதிய தெளிவு இல்லாததால், இவ்விளையாட்டில் வீரர்களின் பங்களிப்பு குறைவாக இருந்தது.

ஆனால் தற்போது ஆண்-பெண் அனைவரும் கலந்துகொண்டு தேசிய அளவில் விளையாடி வெற்றி பெற்று தமிழகத்திற்கு பெறுமை சேர்த்துள்ளார்கள். தற்போது இந்தியன் ரக்பி கால்பந்து சங்கம் ஒவ்வொரு மாநிலத்திலும் ரக்பி கால்பந்து டெவலப்மென்ட் அதிகாரிகளை நியமித்து அகில இந்திய அளவிலான விளையாட்டு வீரர்களை உருவாக்கி வருகிறது. 

மற்ற விளையாட்டுகளில் உள்ள அரசியல் தலையீடு இந்த விளையாட்டில் இல்லை. ஆர்வமும் திறமையும் இருந்தால் மட்டும் போதும் இந்த விளையாட்டில் சாதித்து விடலாம். தற்போது பெண்களின் எண்ணிக்கை இந்த விளையாட்டில் அதிகரித்து வருகிறது. மற்ற விளையாட்டுகளை போலவே பள்ளி மற்றும் கல்லூரிகளில் இந்த விளையாட்டை கற்றுக்கொடுத்து வருகிறோம்.

கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஜூனியர் தேசிய அளவிலான ரக்பி போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த வீரர்கள் வெற்றிப் பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்’’ என்று கூறும் அருள் வெங்கடேசன் ரக்பி கால்பந்து போட்டியின் இந்திய அணி பிரிவில் விளையாடி வருகிறார். தேசிய அளவில் விளையாடிய ரக்பி கால் பந்தாட்ட வீராங்கனை செல்வ ேஜாதி கூறுகையில், ‘‘13 வயது முதல் ரக்பி விளையாடி வருகிறேன்.

நான் உயர்நிலைக் கல்வியை அரசுப் பள்ளியில் முடித்தேன். புவியியல் பாடத்தில் மாநிலத்தில் முதல் இடம் பிடித்தேன். அதே பள்ளியில்தான் ரக்பி விளையாடத் தொடங்கினேன். சில மாணவர்கள் ரக்பி பந்தை வைத்து விளையாடிக் கொண்டிருந்ததைப் பார்த்தேன். இந்தப்பந்தினுடைய வடிவம் சற்று வித்தியாசமாக இருந்தது. அதுவே எனக்கு ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தியது.

விளையாடித்தான் பார்ப்போமே என்று தான் விளையாட துவங்கினேன். அதன் பிறகு மற்ற விளையாட்டுகளை மறந்தே விட்டேன்.  ரக்பி விளையாட்டு சற்று கடினமான விளையாட்டு. இதற்கு உடற் தகுதியும், வேகமும் கட்டாயம் தேவை. சீனியர் லெவல் சற்று கடுமையாக இருக்கும். இதனால் மன உறுதியை இந்த விளையாட்டு தந்தது. கல்லூரியிலும் தொடர்ந்து விளையாடி வந்தேன். 

2009 முதல் 2013ம் ஆண்டுகளில் டெல்லி, மும்பை, கேரளா, பீகார் மாநிலங்களில் நடைபெற்ற தேசியப் போட்டிகளில் விளையாடினேன். இப்போது கல்லூரி முடித்து ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் ஐஏஎஸ் தேர்வு எழுதியிருக்கிறேன். நான் எதிர்பார்க்காத நிலையை என்னுடைய வாழ்வில் ஏற்படுத்தியிருக்கிறது ரக்பி விளையாட்டு.

அனைத்துத் தரப்பு பெண்களும் விளையாடக்கூடிய ரக்பி கால்பந்து விளையாட்டு இன்னும் பல திறமைசாலிகளை உருவாக்கி வருகிறது’’ என்கிறார் செல்வ ஜோதி. மாவட்ட அளவில் நடைபெற்ற ரக்பி கால்பந்தாட்டப்  போட்டியில் பங்குபெற்ற மாணவிகளை சந்தித்தபோது. ‘‘என்னுடைய பெயர் அனு. நான் துரைப்பாக்கம்  அரசு உயர்நிலைப்பள்ளியில் 7ம் வகுப்பு படிக்கிறேன்.

எங்க பள்ளியில் ஒரு நாள் கோகோ விளையாடிக் கொண்டிருந்தோம். அப்போது வித்தியாசமான பந்தை வைத்து பசங்க விளையாடிக்கொண்டிருந்தார்கள். வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். ஒரு நாள் எங்க பி.டி சார் கிட்ட கேட்டு நானும் விளையாடப் போனேன். நல்லா பயிற்சி கொடுத்தாங்க. நானும் நல்லா விளையாடக் கத்துக்கிட்டேன். திடீர்னு ஒரு நாள் எங்க டீம்ல இருந்து மூணு பேர செலக்ட் பண்ணி காஞ்சிபுரம் கூட்டிட்டுப் போய் விளையாட வைத்தார்கள்.

சென்னை அணியில் நானும் ஒரு ஆளா விளையாடப் போறேன்னு அப்பதான் தெரியும் எனக்கு. ரொம்ப சந்தோஷமா இருந்தது. எங்க வீட்ல எல்லாரும் பாராட்டினாங்க’’ என்கிறார் அனு. அதே பள்ளியில் 7ம் வகுப்பு படிக்கும் மாணவி லோகேஷ்வரி. ‘‘முதல் முறையா சென்னையை தாண்டி வெளியூர் போய் விளையாட கொஞ்சம் பயமா இருந்தது. இங்க ஸ்கூல் பசங்க கூட ஜாலியா விளையாடினேன்.

வேறொரு இடத்துல விளையாடும்போது, கொஞ்சம் பதட்டமா இருந்துச்சு. திறமை இருந்தா ஈசியா ஜெயிக்கலாம், உடல் ஆரோக்கியமா இருக்கலாம்னு பயிற்சியாளர் கற்றுக்கொடுத்தாங்க, அப்பா, அம்மாவும் ரொம்ப ஊக்குவிச்சாங்க”. மாணவி லாவண்யா பேசுகையில், ‘‘நான் 9ம் வகுப்பு படிக்கிறன். இந்த விளையாட்டைப் பற்றி பயிற்சியாளர்கள் எனக்கு தெளிவுபடுத்தினார்கள். 
டிவிகளில் பார்க்கும்போது கடினமாகவும் முரட்டுத்தனமாகவும் இருந்தது. ஆனால் ஜூனியர்களுக்கான விளையாட்டு, சீனியர்களுக்கான விளையாட்டு என்று இரண்டாக இருக்கிறது. இப்போது நாங்கள் விளையாடுவது ‘டச் கேம்’. பந்தை எடுத்துக்கொண்டு யாரிடமும் சிக்காமல் கொண்டுபோய் கோல் பாய்ன்டில் போடவேண்டும். இதில் வேகமாகவும் விவேகமாகவும் செயல்படவேண்டும் என்பதை கற்றுக்கொண்டேன்.

மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டிகளில் கலந்துகொள்ளும்போது மகிழ்ச்சியாக இருந்தது. எல்லா விளையாட்டிலும் அடிபடத்தான் செய்யும், இந்த விளையாட்டிலும் அப்படியே. ஆனால் ஆர்வமும் வேகமும் இருந்தால் எளிமையாக வெற்றி பெற்று விடலாம். மற்ற விளையாட்டுகளில் தேசிய அளவில் விளையாடக்கூடிய வாய்ப்புகள் கிடைக்காது. இந்த விளையாட்டில் சீக்கிரமாகவே இந்திய அணிக்கு விளையாடக் கூடிய வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன்.

எங்களது பள்ளியில் இருந்து சர்வதேச அளவில் விளையாடிய மாணவர்கள் அதற்கு உதாரணம்’’  என்கிறார்  லாவண்யா. பள்ளி மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கும் பயிற்சியாளர் சந்தியா பேசுகையில், ‘‘பள்ளி படிக்கும்போதிலிருந்தே ரக்பி விளையாட்டை ஆர்வமாக விளையாடி வருகிறேன். ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் கல்லூரியில் சேர்ந்தேன். ரக்பி விளையாட்டுதான் என்னை கல்லூரியில் சேர்த்தது என்றே சொல்ல லாம். மற்ற விளையாட்டில் எனக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இந்த விளையாட்டில் வாய்ப்பு கிடைத்தது. கல்லூரியில் சேர்ந்த பிறகும் ரக்பி விளையாடி வந்தேன். மற்ற விளையாட்டுகளில் இருக்கக்கூடிய விதிமுறைகளும், இதில் இருக்கக்கூடிய விதிமுறைகளும் சற்று வித்தியாசமாக இருக்கும். ரக்பி பந்தும் வித்தியாசமாக இருப்பதை பார்க்க முடியும். இவையெல்லாம் இந்த விளையாட்டில் ஈடுபட ஆர்வத்தை ஏற்படுத்தியது.

2015ம் ஆண்டு கேரளா மாநிலத்தில் நடைபெற்ற  தேசிய அளவிலான போட்டியில் விளையாடினோம். பீகார் மாநிலத்தில் நடைபெற்ற போட்டியில் விளையாடி 7ம் இடத்தை பிடித்தோம். நான் சென்று வந்த மாநிலங்களில் எல்லாம் ரக்பி விளையாட்டில் பெண்கள் அதிகமாக ஈடுபட்டு பயிற்சி எடுத்து வந்தார்கள். தமிழகத்தில் மட்டுமே பெண்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது.

இப்போது வைஷ்ணவா கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வருகிறேன். பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பயிற்சியாளராகவும் பணியாற்றி வருகிறேன். தமிழ்நாட்டில் ரக்பி விளையாட்டில் பெண்கள் பங்களிப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறேன். குறிப்பாக பள்ளிப் பருவத்திலே ரக்பி விளையாடி வருபவர்கள் கல்லூரி படிப்பை முடிப்பதற்குள் தேசிய அளவிலான போட்டிகளில் விளையாடி இந்திய அணிக்கு செல்வதற்கான வாய்ப்புகள் இந்த விளையாட்டில் அதிகமாக இருக்கிறது.

வசதி வாய்ப்புகளை வைத்து விளையாடக் கூடிய விளையாட்டுகளில், ஏழை எளிய குடும்பத்தை சேர்ந்த பிள்ளைகள் விளையாட்டு வீரராக தங்களை பதிவு செய்வது கடினமான விஷயமாக இருக்கிறது. ரக்பி கால்பந்தாட்டத்தை பொறுத்தவரை திறமை மட்டுமே போதுமானது’’ என்கிறார் பயிற்சியாளர் சந்தியா.

கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளில் ஒரு சாமானியர் இந்திய அணியில் இடம்பிடிப்பது குறித்து யோசித்துக்கூட பார்க்க முடியாத சூழலில் ரக்பி எளிய மக்களுக்கு ஓர் அருமையான வாய்ப்பு என்பதை அவருடைய பேச்சு உணர்த்துகிறது. மேலும் அவர், ‘‘இந்தியன் ஒலிம்பிக் சங்கம் 2015ம் ஆண்டு ரக்பி கால்பந்தாட்டத்தில் பெண்கள் அணியை அங்கீகரித்து உள்ளது.

அடுத்து நடைபெறப்போகும் ஒலிம்பிக் விளையாட்டில், ரக்பி கால்பந்து போட்டியில் இந்தியாவின் பெண்கள் அணி பங்குபெறுவதற்காக, வீராங்கனைகளை தயார்படுத்தி வருகிறோம். ரக்பி கால்பந்து போட்டி, ஸ்போர்ட்ஸ் கிளப்புகளில் பல ஆண்டுகளாகவே விளையாடப்பட்டு வருகிறது. அதனால் பாமரக் குடும்பத்தைச் சேர்ந்த திறமைசாலிகள் இதில் பங்கு பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே இருந்தன.

ஆனால் தற்போது பள்ளி, கல்லூரிகளிலிருந்தும் விளையாட்டு வீரர்களை உருவாக்கி வருகிறோம். பெண்கள் அனைவரும் ஆர்வமாக கலந்து பயிற்சி எடுத்து வருகிறார்கள். ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்த வீராங்கனைகளும் இதில் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்கள். வருகின்ற மே மாதம் பெண்களுக்கான சிறப்பு முகாம் அமைத்து அவர்களுக்கு பயிற்சி அளிக்க ரக்பி விளையாட்டுக் குழு தீர்மானித்திருக்கிறது.

கடந்த ஜனவரி மாதம் குஜராத்தில் நடைபெற்ற 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான தேசிய அளவிலான  தேசிய ரக்பி கால்பந்து போட்டியில் சாம்பியன் ஷிப் பட்டம் வென்ற தமிழக அணியை சேர்ந்த அனைத்து மாணவர்களும், ஏழை எளிய குடும்பத்தை சேர்ந்தவர்கள். இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் அனைவருமே அரசுப் பள்ளியில் படிக்கக்கூடிய மாணவர்கள் என்ற பெருமை இந்த விளையாட்டையே சேரும்.

தமிழக அரசு அவர்களுக்கு பாராட்டு விழா நடத்தி கௌரவித்தது குறிப்பிடத்தக்கது. சிறப்பாக விளையாடி வெற்றியை பெற்றுத்தந்த சென்னையை சேர்ந்த மூன்று வீரர்கள், தமிழக அணியின் சார்பாக இந்திய அணிக்கு தேர்வு பெற்றுள்ளனர். டிசம்பர் மாதம் பிரான்சில் நடைபெறும் சர்வதேச ரக்பி கால்பந்துப் போட்டிகளில்  பங்கேற்க உள்ளனர்.

தமிழகத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் சர்வதேச அளவில் விளையாடுவதற்கு தேர்வாகி இருப்பது அனைத்து ரக்பி வீரர், வீராங்கனைகளிடையே பெறும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. பெண்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால் ரக்பி விளையாட்டானது தமிழ்நாட்டில் பிரபலமாகி வருகிறது. திருச்சி, மதுரை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து வீராங்கனைகளை தேர்வு செய்ய உள்ளோம்.

பெண்களுக்கான அணியை உருவாக்கி வருகின்ற ஒலிம்பிக் போட்டியில் விளையாட வைக்கும் வேளையில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது இந்தியன் ரக்பி கால்பந்து சங்கம். இதற்கான சிறப்புப் பயிற்சியாளர்களை நியமித்து தீவிரமான பயிற்சி அளித்து வருகிறது’’ என்கிறார் தென்னிந்திய ரக்பி கால்பந்து மேம்பாட்டு அதிகாரி நோயல் மேத்யூ சாம்.

படங்கள்: ஏ.டி.தமிழ்வாணன்