மண்ணின் மகள்



விமானத்தில் ஏறி பறந்தாலே சொந்த மண்ணையும், பிறந்த ஊரையும் மறந்து, குடும்பத்தோடு அந்நிய நாட்டில் குடியேறுவதும், சொந்த ஊரையும் உறவையும் மறந்து நகர வாழ்க்கைக்குள் தங்களை திணித்துக்கொள்வதுமான இன்றைய நாகரிக உலகில், தன்னுடைய கணவரும், ஒரே மகனும் வெளிநாட்டில் கைநிறைய சம்பளத்தில் வேலையில் இருந்தும், அங்கே சென்று வாழ சாத்தியக் கூறுகள் இருந்தும், இந்த மண்ணும் மக்களும்தான் என் வாழ்க்கை என வாழ்ந்துகொண்டிருக்கிறார் ராஜேஸ்வரி.

சிவகங்கையில் இருந்து திருப்பத்தூர் செல்லும் சாலையில் மதகுப்பட்டிக்கு அருகே உள்ளது அலவாக்கோட்டை ஊராட்சி ஒன்றியம். இதில் 55 ஏக்கர் நிலத்தை தனி ஒரு பெண்ணாக ஆளுமை செய்து விவசாயம் செய்கிறார் இவர். நிலத்தில் இறங்கி அவரே டிராக்டரை இயக்குகிறார். கூடவே ஸ்கார்பியோ, பொலிரோ போன்ற கார்களும் ஓட்டத் தெரியும்.

தன்னுடைய மொத்த விளை நிலத்தில் நான்கு ஏக்கரை பறவைகளுக்காக ஒதுக்கி உணவு தருவதுடன், இரை தேடிவரும் பறவைகளை விரட்டாமல் தானியத்தோடு, தண்ணீரையும் கொடுத்து சுதந்திரமாய் விளைநிலங்களில் சுற்றித் திரிய அனுமதிக்கிறார். இவரது பண்ணையில் எப்போதும் 15 பெண்களுக்கு மேல் பணியில் இருக்கிறார்கள்.

“நான் திருமணம் செய்து வந்த ஊர் இந்த அலவாக்கோட்டை. என் கணவர் திருமணத்திற்கு முன்பு மலேசியாவில் மெக்கானிக் வேலையில் இருந்தார். திருமணத்திற்கு பிறகு மஸ்கட்டில் வேலை கிடைத்து, கடந்த 30 ஆண்டுகளுக்கு மேல் அங்கிருக்கிறார். அவர் வெளிநாட்டில் சம்பாதித்ததை வைத்து முதலில் இந்த 55 ஏக்கர் நிலத்தை வாங்கினேன். காடு மாதிரி இருந்த இந்தப் பகுதியை முனைப்புடன் முன் நின்று சீராக்கி, இதை ஒரு பண்ணையாக மாற்றி விட்டேன்.

எங்களின் இந்த கே.வி.ஆர். விவசாயப் பண்ணையில் நெல், கடலை, கரும்பு, மா, கொய்யா, தென்னை மரங்களை உருவாக்கி மிகப்பெரிய தோட்டத்தை பண்ணையாக உருவாக்கி வைத்துள்ளேன். தென்னை, மா, கொய்யா, கரும்பு, நெல் என மாற்றி மாற்றி ஏதாவது ஒன்று விளைச்சல் இங்கே தொடர்ந்து இருந்துகொண்டே இருக்கும். திராட்சை தோட்டம் கூட இருந்தது.

என் கணவர் வெளிநாட்டில் வேலையில் இருந்த நிலையில், பிள்ளைகளின் படிப்பிற்காக குழந்தைகளை காரைக்குடியில் வீடு எடுத்து படிக்க வைத்துக்கொண்டே, தினமும் அங்கிருந்து ஒன்றரை மணி நேரம் பேருந்தில் பயணம் செய்து காலை 9 மணிக்கெல்லாம் இந்தப் பண்ணைக்கு வந்துவிடுவேன். மாலையில் திரும்பவும் 7 மணிக்கு கிளம்பிச் செல்வேன். அவர்கள் படித்து பெரியவர்கள் ஆனதும், மேல்படிப்பிற்காக கல்லூரி விடுதிகளில் தங்க வைத்துவிட்டு, நான் எனது இருப்பிடத்தை இங்கேயே முழு நேரமாக மாற்றிக்கொண்டு விட்டேன்.

என் பிள்ளைகளோடு, என் கணவரின் உடன் பிறந்தவர்களின் பிள்ளைகளும் என்னோடு தோட்ட வேலைகளில் இருப்பார்கள். ஒரு கட்டத்திற்கு மேல் அவர்களெல்லாம் படித்த வேலை தொடர்பாக வேறு வேறு இடங்களுக்கு செல்ல நேர்ந்தபோது, டிராக்டரை இயக்க ஆள் கிடைக்கவில்லை. எனவே நானே களத்தில் இறங்கி டிராக்டரை ஓட்டக் கற்றுக் கொண்டேன். எந்த சூழ்நிலையிலும் சொந்தக் காலிலே நிற்க வேண்டும். யாராலும், எதற்காகவும் வேலை தடைபடக் கூடாது என்ற எண்ணம் எனக்கு எப்போதும் உண்டு.

விதைப்பு மற்றும் அறுவடை நேரங்களில் பண்ணை வேலைக்காக சுற்றி உள்ள கிராமங்களில் இருந்து நிறைய பெண்கள் வேலைக்கு என் பண்ணைக்கு வருவார்கள். சில நேரங்களில் நூற்றுக்கும் அதிகமான ஆட்கள் இங்கு வேலை செய்வார்கள். ஒரு நாளைக்கு 250ல் இருந்து 300 வரை அவர்களுக்கு கூலி. பெரும்பாலும் அவர்களை வேலைக்கு அழைத்துவரவும், எனது பிள்ளைகளை ஊரிலிருந்து அழைத்துவர, மறுபடியும் அழைத்து சென்று விட, இவற்றுக்காக சைக்கிளில் துவங்கி, பைக், கார், விவசாயத்திற்காக டிராக்டர் என ஒவ்வொன்றையும் கற்றுக்கொண்டு ஓட்டத் துவங்கினேன்.

சூழலும், தேவையும்தானே எல்லாவற்றையும் தீர்மானிக்குது” எனும் ராஜேஸ்வரி படித்திருப்பது ஐந்தாவது வகுப்பு வரை மட்டுமே. வருடம் முழுவதும் எதாவது ஒரு பயிரை நாங்கள் மாற்றி மாற்றி இங்கே விளைவித்துக்கொண்டே இருப்போம்.  கரும்பை சர்க்கரை ஆலைக்கு அனுப்பி வைப்பேன். கரும்பை விளைவித்து 92 டன் வரைக்கும்கூட ஏற்றி அனுப்பி இருக்கிறேன். சர்க்கரை ஆலையில் இருந்து எனக்கு விருதெல்லாம் கொடுத்து பாராட்டினார்கள். பத்திரிகைகளில் எனது நேர்காணல் வந்தது.

என் மாமியார் மிகவும் அன்பானவர். என் கணவர் நான்கு வயதாக இருக்கும்போதே அவரின் அப்பா காலமாகிவிட, அடுத்தடுத்து இருந்த நான்கு குழந்தைகளோடு என் மாமியார் மிகவும் கஷ்டத்தை வெளியில் சொல்ல முடியாத நிலையில் அனுபவித்திருக்கிறார். சாப்பாட்டிற்கே கஷ்டப்பட்டுதான் தன் பிள்ளைகளை வளர்த்திருக்கிறார். ஒருநாள் அவர் என்னை கட்டி அணைத்து, ‘நான் என் பிள்ளைகளை சாப்பாட்டுக்கே மிகவும் கஷ்டப்பட்டு, கூலி வேலை செய்துதான் வளர்த்தேன்.

அவர்களும் நன்றாக வந்துவிட்டார்கள். அதனால், வாயில்லாத ஜீவன்களுக்கு காலாகாலத்திற்கும், தடையில்லாமல் பசியாறுகிற மாதிரி நீ எதையாவது தயார் செய்து வைத்து விடும்மா’ என்று சொன்னார்கள். அதனால் அவர்கள் விரும்பியபடி இந்த பரந்து விரிந்த பண்ணையின் ஒதுக்குப்புறத்தில் ஒரு நான்கு ஏக்கர் நிலத்தை பறவைகளுக்காக ஒதுக்கி உள்ளோம். அதில் நெல், கம்பு, சோளம், கேழ்வரகு போன்ற தானியங்களை பறவைகளுக்காக பயிரிடுகிறோம். அவைகளை நாங்கள் அறுவடை செய்வதில்லை.

அப்படியே விட்டுவிடுவோம். தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் பச்சைக் கிளியில் துவங்கி, மயில், காகம், கொக்கு, குருவி, மைனா, புறா இன்னும் பேர் சொல்லத் தெரியாத பலவிதமான பறவைகள் எங்கெங்கு இருந்தோ வந்து, வயிறார உண்கின்றன. இந்தப் பகுதியில் மயில்கள் ஏராளம் உண்டு. பறவை தவிர கால்நடைகளுக்காக ஒரு குளத்தை வெட்டி அதில் நீர் நிறைத்து வைத்திருக்கிறோம்.

அவற்றில் ஆடு, மாடு, மான்கள் முதல் மலைப்பாம்புகள் வரை வந்து தண்ணீர் அருந்துகின்றன” என்கிறார் வாயில்லா ஜீவன்களுக்கு அன்னமிட்ட தாயாக. “இங்கு 100 மாடுகளுக்கு மேல் முன்பு இருந்தன. என்னுடைய ஒவ்வொரு மாட்டிற்கும் பெயர் வைத்து விடுவேன். ஒவ்வொரு கன்றுக்குட்டிக்கும் ஒரு பெயர் வைத்து அழைப்பேன். அந்தப் பெயரைச் சொன்னால்தான் அவை திரும்பிப் பார்க்கும். அவ்வளவு அன்பானவை மாடுகள். என்னுடைய நாய்களும் அப்படித்தான். எல்லாவற்றிற்கும் பெயர் உண்டு.

இவை தவிர கோழி, வாத்து போன்ற பறவைகளும் என் பண்ணையில் உள்ளன.” நாம் அவரது கே.வி.ஆர். பண்ணைக்குள் நுழைந்தபோதே, நம்மை நோக்கி பாசத்தோடு பாய்ந்து வந்தன அவரின் வளர்ப்பு நாய்களான ‘பீமா, மித்ரா, வர்ணா, டாமி.’ இவர்களை தன் அன்பால் அடக்கி, அவர் அருகில் அமர வைத்துக்கொண்டே, நம்மிடம் பேசிக் கொண்டிருந்தார் ராஜேஸ்வரி.

“என் கணவர் அவரின் வெளிநாட்டு வருமானத்தில் இந்த நிலத்தை வாங்கினார். நான் அதை சீர்படுத்தி பண்ணையாக்கினேன். இந்தப் பண்ணையில் உள்ள தோப்பின் ஒவ்வொரு மரமும் என் முயற்சியால் உருவானதுதான். என் குடும்பத்தினர் அனைவரும் இதில் வேலை செய்கிறோம். அவர் வெளிநாட்டிலிருந்து வந்துவிட்டால் விவசாயம் தொடர்பான வேலைகளிலே முழு நேரமும் இருப்பார்.

என் மகனும் அவரோட மஸ்கட்டில்தான் பொறியாளராக வேலை செய்கிறான். இரண்டுபேரும் அங்கிருப்பதால், நான் விரும்பினால் அங்க போய் இருக்க முடியும். ஆனால் இந்த மண்ணில் கிடைக்கிற மகிழ்ச்சி… சிங்கப்பூர், மலேசியா, மஸ்கட், ஓமன் இதெல்லாம் போனாக்கூட எனக்குக் கிடைக்காது. எனக்கு இந்த மண்ணுதான் பிடிச்சிருக்கு” என்கிறார்.

கட்டுரை மற்றும் படங்கள்: மகேஸ்வரி